சோற்று கற்றாழை பயிரிட்டு அதிக லாபம் பெறலாம்

மூலிகை பயிரான சோற்றுக்கற்றாழையை இங்கிலாந்து உள்ளிட்ட வெளிநாடுக்கு ஏற்றுமதி செய்ய வாய்ப்புள்ளது. எனவே சோற்றுக்கற்றாழை பயிரிட்டு அதிக லாபம் ஈட்டலாம்.

சோற்றுகற்றாழை வறட்சியான பகுதிகளுக்கு ஏற்ற பயிராகும். பல்வேறு அழகுசாதனங்கள், மருந்து பொருள்கள் தயாரிப்பதற்கு இது பெரிதும் பயன்படுகிறது. இந்தியாவில் ராஜஸ்தான், ஆந்திரம், குஜராத், தமிழ்நாட்டில் சேலம் மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களில் இது பெருமளவில் பயிரிடப்படுகிறது.

3 வகை கற்றாழை:

குர்குவா கற்றாழை, கேப் கற்றாழை, சாகோட்ரின் கற்றாழை என கற்றாழையில் மூன்று வகைகள் சாகுபடி செய்யப்பட்டு வருகின்றன. இந்தியாவில் பயிரிடப்பட்டு வருவது குர்குவா கற்றாழை.

வறட்சிப் பிரதேசங்கள் மற்றும் கடல் மட்டத்தில் இருந்து 4 ஆயிரம் அடி உயர மலைபிரதேசங்களிலும் இது பயிரிடப்படுகிறது. இதன் இலைகள் தடிமனாகவும், சிறிது சிவப்பு கலந்து பச்சை நிறத்தில், 30 முதல் 60 செ.மீ. நீளமாக சிறிய முட்களுடன் இருக்கும்.

தரிசுமண், மணற்பாங்கான நிலம், பொறைமண் போன்றவை இதற்கு ஏற்றது. எனினும் எல்லா வகையான மண்ணிலும் கற்றாழையை சாகுபடி செய்யலாம். நல்ல வடிகால் வசதியுடன் கூடிய மணற்பாங்கான நிலம் மிகவும் ஏற்றது.

நடவு:

தாய்ச்செடியில் இருந்து ஒன்று அல்லது இரண்டு வயதுடைய பக்கக்கன்றுகளை பிரித்து நடவுக்கு பயன்படுத்த வேண்டும். ஒரே அளவுள்ள கன்றுகளை தேர்ந்தெடுத்தல் முக்கியம். இதனால் செடிகள் சீராக வளர்வதுடன் ஒரே சமயத்தில் அறுவடைக்கு வரும்.

கற்றாழையை தனிப்பயிராக பயிரிடும்போது ஹெக்டேருக்கு 10 ஆயிரம் கன்றுகள் தேவைப்படும்.    இப்பயிரை வருடத்துக்கு இரண்டு பருவங்களில் பயிரிடலாம். ஜூன் மற்றும் செப்டம்பர் மாதங்களில் நடவு செய்யலாம். இலைகள் முற்றும் தருவாயில் ஓரளவு வறட்சியான தட்பவெப்பம் இருக்க வேண்டும். இதனால் இலையில் தரமான கூழ் கிடைக்கும்.

நிலத்தை இரணடு முறை உழுது, ஹெக்டேருக்கு 10 டன் தொழு உரம் இட்டு, சமன் செய்து சிறிய பாத்திகளை அமைக்க வேண்டும். செடிகள் வாளிப்பாக வளர்வதற்கு செடிகளுக்கிடையே 3 அடி இடைவெளி விட்டு நடவேண்டும்.

இப்பயிருக்கு ரசாயன உரங்கள் தேவைக்கேற்ப இட வேண்டும். வளமான நிலங்களுக்கு தொழு உரம் இட்டால் போதுமானது. தரிசு மற்றும் வளமில்லாத மண்ணுக்கு செடிகளை நட்ட 20-வது நாளில் ஹெக்டேருக்கு 30 கிலோ தழைச்சத்து இடுவது அவசியம். ஹெக்டேருக்கு 120 கிலோ ஜிப்சத்தை அடியுரமாக இடுவது அவசியம். இதனால் கூழ் அதிக அளவில் கிடைக்கும்.

கற்றாழையில் அதிக பூச்சித் தாக்குதல், நோய்கள் தோன்றுவதில்லை.

நீர்த் தேங்கும் நிலத்தில் அழுகல் நோய் ஏற்படும். இதற்கு நிலத்தில் வடிகால் வசதியை ஏற்படுத்த வேண்டும்.

அறுவடை:

நட்ட ஆறு முதல் ஏழு மாதங்களில் அறுவடைக்கு தயாராகிவிடும். செடிகளை வேரோடு பிடுங்கி எடுத்து, இலைகளை ஆறு மணி நேரத்திற்குள் பக்குவபடுத்துவதற்கு எடுத்துச் செல்ல வேண்டும்.

ஹெக்டேருக்கு 15 டன் கற்றாழை இலை கிடைக்கும். இலைகளில் 80 முதல் 90 சதவீதம் நீர் உள்ளதால் விரைவாக கெட்டுவிடும். இதனால் அறுவடை செய்த உடனே இலைகளை பக்குவப்படுத்தி அவற்றில் இருந்து கூழை பிரித்தெடுக்க வேண்டும்.

அரக்கோணம் வட்டம், தண்டலம் ஊராட்சி கேசவபுரத்தை சேர்ந்த சுரேந்தர்பாபு முதன் முதலாக 4 ஏக்கர் நிலத்தில் சோற்றுகற்றாழையை பயிரிட்டுள்ளார். கற்றாழை பயிரிட விரும்புவோர் அவரிடம் ஆலோசனை பெறலாம்.

தினமணி தகவல்