சிக்கன நீர் நிர்வாகம்

கரும்பிற்கு 2000 முதல் 2500 மி.மீ. அளவு நீர் தேவைப்படுகிறது. கரும்பு ஓர் ஆண்டு பயிர் என்பதால் பருவமழை போக எஞ்சியுள்ள மாதத்தில் நீர் பற்றாக்குறை ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே நிலத்தடி நீர்ப்பாசனம் அல்லது அடிப்பரப்பு நீர் பாசனம் முறையை மேற்கொண்டு நீர் பற்றாக் குறையை சமாளிப்பதுடன் மொத்த விளைச்சலையும் அதிகரிக்கலாம். மேலும் நமது மொத்த நீர்ப்பாசனப் பரப்பையும் அதிகரிக்கலாம்.

நிலத்தடி நீர்ப்பாசனம் அல்லது அடிப்பரப்பு நீர்ப்பாசனம் என்பது வழக்கத்தில் உள்ள சொட்டு நீர்ப்பாசனம் போல் அல்லாமல் பயிருக்கு மிகத்துல்லியமான அளவு நீரினை சரியான அளவு உரம், பூச்சிக்கொல்லி மருந்துடன் வேருக்கு நேரடியாகக் கொடுப்பதாகும்.

முக்கிய நோக்கம்:

 • பக்கவாட்டில் நீர் பரவுதல் மண்ணில் கீழ்நோக்கிய நீர்க்கசிவை குறைத்தல்,
 • பயிரின் வேரைச்சுற்றி நீர் இருத்தல்.
 • வேரின் நான்கு புறமும் வட்டவடிவில் நீரைப் பரவச்செய்து மண்ணில் கீழ்நோக்கிய நீர்க்கசிவு,
 • பக்கவாட்டில் நீர் பரவுவதைக் குறைப்பதே இதன் முக்கிய குறிக்கோளாகும்.
 • மேலும் உரம், பூச்சிக்கொல்லி மருந்தினை நீருடன் கலந்து கொடுப்பதன் மூலம் அதிக, தரமான விளைச்சல் கிடைக்கிறது.

சொட்டு நீர்ப்பாசனம் / நிலத்தடி நீர்ப்பாசனம் வேறுபாடுகள்:

சொட்டு நீர்ப்பாசனத்தில் சொட்டுவான் கீழ்நோக்கி இருப்பதால் கீழ்நோக்கிய நீர்க்கசிவு பக்கவாட்டில் நீர்பரவுதல் அதிகமாக இருக்கும். ஆனால் நிலத்தடி நீர்ப்பாசனத்தில் சொட்டுவான் மேல்நோக்கி இருக்குமாறு அமைப்பதால் வேரின் நான்குபுறமும் வட்டவடிவில் நீர் பரவி பயிரின் வேரை எப்பொழுதும் ஈரத்துடன் வைத்துக்கொள்கிறது. இதனால் பயிர் எப்பொழுதும் செழிப்பாக இருக்கும். மேலும் மண்ணில் காற்றோட்டத்தை அதிகரிக்கச் செய்து மண்ணில் நீர் நுண்புழை நீர் பரவும் விதத்தை அதிகரிக்கச் செய்கிறது. இதனால் மண்ணில் நுண்ணுயிர் பெருகி மண்வளம் கூடுகிறது.

நீர்ப்பாசனம் அமைக்கும் முறை:

25 முதல் 30 செ.மீ. அளவு அதாவது முக்கால் அடி முதல் ஒரு அடி வரை ஆழமும், 40 செ.மீ. அகலமும் உள்ள அகழியை நீளவாக்கில் எடுக்க வேண்டும். வரிசைக்கு வரிசை 5 அடி முதல் ஐந்தரை அடி வரை இருக்கு மாறு பார்த்துக்கொள்ள வேண்டும். குறைந்த செலவு உள்பக்கவாட்டு குழாய்களை அகழியின் நடுவில் 25-30 செ.மீ. ஆழத்தில் வைத்து சொட்டுவான் மேல்நோக்கி இருக்குமாறு அமைக்க வேண்டும். பின் அதன்மேல் 2.5 செ.மீ. அளவு மண்ணைப்போட்டு மறைத்தல் வேண்டும். இரு பரு கரணைகளைப் பக்கவாட்டு குழாய்களுக்கு இரு பக்கமும் ஒன்றரை கரணையாக அடுக்கி, பின் கரணை மூடும் அளவிற்கு மண்ணைப் பரப்பி மூடுதல் வேண்டும். மீதமுள்ள அகழியினைப் பயிர் நன்கு முளைத்தபின் (40-45வது நாள்) மூடி பயிருக்கு மண்ணை அணைக்க வேண்டும்.

நன்மைகள்:

ஒரே சீராக இருக்கும். பயிர் வளர்ச்சி குறைந்த அளவு கீழ்நோக்கிய நீர்கசிவு பக்கவாட்டில் நீர் பரவுதல் குறைய வாய்ப்பு உள்ளது. காற்று சூரிய வெப்பத்தினால் மண் மேற்பரப்பிலுள்ள ஈரப்பதம் வீணாதல் குறையும். பயிருக்கு தேவையான அளவு நீரினை மிகச்சரியான அளவு நீருடன் உரம், பூச்சிக்கொல்லி மருந்தினைக் கொடுப்பதன் மூலம் பயிரின் தரமும் விளைச்சலும் அதிகரிக்கிறது. நோய், பூச்சி தாக்குதல் குறைவு. வரிசைக்கு வரிசை பயிரின் இடையே களை முளைத்தல் குறையும். பரந்த மிக துரிதமாக வேர் வளர்ச்சியடையும். அனைத்தையும்விட சொட்டுநீர்ப்பாசனத்தைவிட நீர் சிக்கனமாக செலவாகும்.

(தினமலர் தகவல்: முனைவர் எம்.விஜயகுமார், வேளாண்மை ஆராய்ச்சி நிலையம், பவானிசாகர்-638 451. போன்: 04295-240 244)
டாக்டர் கு.சௌந்தரபாண்டியன்

வேளாண் அரங்கம் மார்க்கெட்டில்

பவானிசாகர் வேளாண்மை ஆராய்ச்சி நிலையம்

பாசனக் கருவிகள்

தமிழகத்திற்கு ஏற்ற கரும்பு ரகங்கள்

தமிழகத்தில் பயிரிடப்படும் பணப்பயிர்களில் கரும்பு ஒரு முக்கிய பயிராகும். சராசரி மகசூல் உலகளவில் எக்டருக்கு 70 டன், தமிழகத்தில் 108 டன், இந்திய அளவில் 71 டன் என்ற அளவில் இருக்கிறது. இந்த மகசூலை எக்டருக்கு 175 டன் வரை உயர்த்தும் வாய்ப்பு உள்ளது. கரும்பில் நல்ல மகசூல் பெற கரும்பு சாகுபடி செய்யும் இடத்திற்கு தகுந்த நல்ல ரகத்தை தேர்வு செய்து சாகுபடி செய்ய வேண்டும். தமிழகத்திற்கு ஏற்ற முக்கிய புதிய கரும்பு ரகங்கள் பற்றிய குறிப்புகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.

கோ86032 (கோ62198 x கோ671):

இது 1990ல் வெளியிடப்பட்ட ரகம். கடந்த 15 ஆண்டுகளாக தமிழகத்தில் இந்த ரகம் பயிரிடப்பட்டு வருகிறது. இந்த ரகம் எல்லா பட்டங்களுக்கும் ஏற்றது. எக்டருக்கு 120 டன் மகசூல் மற்றும் 15.09 டன் சர்க்கரை கட்டுமானமும் தரவல்லது. செவ்வழுகல் நோயை மிதமாக எதிர்க்கும் தன்மையுடையது. இது அகல பார் நடவிற்கு ஏற்ற ரகமாகும். இந்த ரகம் அதிக எண்ணிக்கையில் தூர்களை கொடுப்பதுடன் அதிக கரும்பு மற்றும் சர்க்கரை மகசூல் திறன் கொண்டது. மறுதாம்பு பயிரிலும் அதிக சர்க்கரை மற்றும் கரும்பு மகசூல் தரக்கூடியது. தண்ணீர் தேங்கி நிற்கும் நிலத்திற்கு ஏற்றதல்ல.

கோ 94008 (சியாமளா) (கோ7201 x கோ 775):

இந்த ரகம் நேராக வளரும். சாயா தன்மையுடையது. செவ்வழுகல் நோயை தாங்கும் சக்தி கொண்டது. நடவு செய்த 12 மாதங்களில் அறுவடை செய்தால் 125 டன் கரும்பு தர வல்லது. இந்த ரகம் முன்பட்டம் (மார்கழி – தை) மற்றும் நடுப்பட்டம் (மாசி – பங்குனி) மாத நடவிற்கு ஏற்ற ரகம். குறுகிய கால ரகமாக வெளியிடப்பட்ட இந்த ரகம் வறட்சியை தாங்கி வளரக்கூடியது. இது 19.21% சர்க்கரைச்சத்து மற்றும் 15.51 டன் சக்கரை கட்டுமானம் கொடுக்கக்கூடியது.

கோ99004 (தாமோதர்):

இந்த ரகம் கோ62175 மற்றும் கோ86250 இன கலப்பு செய்யப்பட்டு உருவாக்கப் பட்ட ரகமாகும். இது தமிழகத்திற்கு ஏற்றது. இது 2007ல் வெளிவந்த ரகம். அதிக கரும்பு மகசூல் (115 டன்), 19.21% சர்க்கரைச்சத்து மற்றும் 16.09டன் சர்க்கரை கட்டுமானம் கொடுக்கக்கூடிய ரகமாகும். வாடல், செவ்வழுகல், கரிப்பூட்டை நோய்களுக்கு எதிர்ப்புத்தன்மை உடையது. அதிக வறட்சி மற்றும் உவர் நிலங்களில் வளரக்கூடியது. கரும்பு நல்ல உயரமாகவும் பருமனாகவும் எடையுள்ளதாகவும் இருக்கும். வெல்லம் தயாரிக்க இது மிகவும் ஏற்றதாகும். கரும்பு வேகமாகவும் உயரமாகவும் வளரும். இந்த ரகம் சாயாத தன்மையுடையது. சிறிய பரு கொண்ட இந்த ரகம் எல்லா பட்டங்களுக்கும் ஏற்றதாகும். மஞ்சள் கலந்த பச்சை நிறமுடையது. இடைக்கணுக்களிலும் வெடிப்பு இல்லாமல் பார்ப்பதற்கு அழகாக இருக்கும். மறுதாம்பு பயிரிலும் இந்த ரகம் அதிக மகசூல் கொடுக்கக்கூடியது.

கோ 2001-13:

இது கோ 7806 என்ற ரகத்தில் திறந்தவெளி இனக்கலப்பு செய்து தேர்ந்தெடுக்கப்பட்ட ரகம். நடுப்பட்ட நடவுக்கு ஏற்றதாகும். எக்டருக்கு 110 டன் மகசூலும் 14.73 டன் சர்க்கரை சத்தும் மற்றும் 19.00 டன் சர்க்கரை கட்டுமானம் தரவல்லது. அதிக தூர் எண்ணிக்கை கொண்ட ரகமாகும். செவ்வழுகல், கரிப்பூட்டை நோயை தாங்கி வளரக்கூடியது. அதிக வறட்சி மற்றும் உவர் நிலங்களில் வளரக்கூடியது. நடவு பயிரைப்போல் கட்டைப்பயிரிலும் நல்ல மகசூல் கொடுக்க வல்லது. வெல்லம் தயாரிக்க ஏற்ற ரகமாகும். முள் மற்றும் வெடிப்பு இருக்காது. குறைவாக பூக்கும் தன்மையுடையது. நல்ல உயரமாக வளர்ந்து குறைந்து சாயும் தன்மை கொண்டது.

கோ 2001-15:

இந்த ரகம் கோ85002 மற்றும் கோ 775ஐ இனக்கலப்பு செய்யப்பட்டு உருவாக்கப்பட்ட ரகமாகும். இது நடுப்பட்ட நடவிற்கு ஏற்றது. இந்த ரகம் 110-115 டன் மகசூல் தரக்கூடியது. மற்றும் 14-15 டன் சர்க்கரை கட்டுமானம் தரக்கூடியது. கரும்பு நல்ல உயரமாகவும், வேக மாகவும் வளரும். செவ்வழுகல், கரிப்பூட்டை நோயை தாங்கி வளரக்கூடியது. அதிக வறட்சி மற்றும் உவர் நிலங்களிலும் வளரக்கூடியது. எல்லா பகுதிகளுக்கும் ஏற்றது. குறைவாக பூக்கும். இந்த ரகம் கட்டைப்பயிருக்கு ஏற்றது. உயரமாக வளரும் ஆனால் சாயாத தன்மையுடையது. வெல்லம் தயாரிப்பதற்கு ஏற்ற ரகம். சிவப்பு நிறமுடைய கரும்புகள் நீளமாக கணுக்கள் மற்றும் சிறிய அளவு பருமன் கொண்டது.
மேற்கூறிய கரும்பு ரகங்களிலிருந்து மண்ணின் தரம், கரும்பு ரகத்தின் முதிர்ச்சி காலம், பூக்கும் தன்மை முதலிய குணாதிசயங்களுக்கு ஏற்ப தரமான விதைக்கரணைகளைக் கொண்டு அந்த ரகத்தை நடவு செய்து அதிக மகசூலைப் பெறலாம்.

விரிவாக்க வெளியீடு எண் 203(2011)

தினமலர் செய்தி – முனைவர்கள் சீ.அலர்மேலு, ஆர்.மா.சாந்தி, ஹேமபிரபா, த.ரஜுலா சாந்தி, என்.விஜயன் நாயர்; வெளியீடு: முனைவர் என்.விஜயன் நாயர், இயக்குநர், கரும்பு இனப்பெருக்க நிறுவனம், கோவை-641 007; 0422-247 2621, 247 2723. தொலைநகல்: 0422-247 2923.

மின்னஞ்சல்: sugaris@vsnl.com, http://www.sugarcane.res.in, http://www.caneinfo.nic.in.
-எம்.ஞானசேகர்,
தொழில் மற்றும் விவசாய ஆலோசகர்.

வேளாண் அரங்கம் மார்க்கெட்டில்

விவசாயிகள் வாழ்வை வளமாக்கும் செம்மை கரும்பு சாகுபடி

கரும்பு விளைச்சலை அதிகரிக்கவும், விவசாயிகளுக்கு நல்ல லாபம் கிடைக்கவும் செம்மை கரும்பு சாகுபடி முறை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

செம்மை கரும்பு சாகுபடியானது கரும்பு சாகுபடியில் புதிய அணுகுமுறை மற்றும் நீர்சேமிப்பு வழிகளில் புதிய முயற்சியாகும். இதில் விளைச்சலை அதிகப்படுத்தும் உத்தியோடு தண்ணீர் சேமிப்பு குறித்தும் முக்கியத்துவம் தரப்பட்டுள்ளது. இதனால் உற்பத்தி அதிகரிப்பதோடு நீர் நிலை ஆதாரங்கள் மற்றும் சுற்றுச்சூழல் மேம்பாட்டுக்கும் உறுதுணையாய் இவை இருக்கும்.

செம்மை கரும்பு சாகுபடியானது குறைந்த அளவு விதை நாற்றுகள் மற்றும் குறைந்த அளவு தண்ணீரை உபயோகிப்பது, சரியான அளவு ஊட்டச்சத்து, பயிர் பராமரிப்பின் மூலம் அதிக மகசூல் பெற வழிவகை செய்யும் ஒரு முறையாகும்.

முக்கிய கோட்பாடுகள்:

 • ஒரு விதைப்பரு சீவல்களில் இருந்து நாற்றங்கால் அமைத்தல்,
 • இளம் (25-35 நாள்கள் வயதான) நாற்றுக்களை நடவு செய்தல்,
 • வரிசைக்கு வரிசை 5 அடி இடைவெளியும், நாற்றுக்கு நாற்று 2 அடி இடைவெளியும் பராமரித்தல்,
 • சொட்டுநீர்ப்பாசனத்தின் கீழ் உரமிடுதல்,
 • இயற்கை சார்ந்த உரங்கள், பயிர்பாதுகாப்பு, மற்றும் பராமரிப்பு முறைகளுக்கு முக்கியத்துவம் அளித்தல்,
 • ஊடு பயிரிட்டு மண் வளம் மற்றும் மகசூல் அதிகரிக்க வழி செய்தல்.

சாகுபடியின் பயன்கள்:

 • தண்ணீர் உபயோகிப்பு திறன் கூடுகிறது,
 • சரியான அளவு உரங்களை உபயோகிப்பதின் மூலம் பயிர்களுக்கு ஊட்டச்சத்து பராமரிப்பு அமைக்கிறது,
 • காற்று மற்றும் சூரிய ஒளி அதிகளவு பயிர்களுக்கு கிடைக்கிறது,
 • அதனால் கரும்பில் சர்க்கரை கட்டுமானம் அதிகரிக்கிறது,
 • மொத்த சாகுபடி செலவு குறைகிறது,
 • ஊடுபயிர் மூலம் இரட்டை வருவாயுடன் மகசூலும் அதிகரிக்கிறது

விதை நேர்த்தி – நாற்று தயார் செய்ய கடைப்பிடிக்க வேண்டியவை:

6 மாத வயதுள்ள உயர் விளைச்சல் தரும் ரகங்களில் இருந்து மொட்டுக்களை சேகரிக்க வேண்டும், விதை மொட்டுக்களின் முளைப்புத் திறனை தூண்டும் வகையில் 1 கிலோ யூரியா 50 கிராம் கார்பென்டாசிம் 200 மி.லி மாலத்தியான் 100 லி. நீரில் கலக்க வேண்டும். அதில் 5000 மொட்டுக்களை நன்கு நனையும்படி 15 நிமிடம் ஊறவைத்து பின் நிழலில் உலர வைக்க வேண்டும்.

ரசாயனமுறை தவிர்த்து உயிரியல் முறையிலும் விதை நேர்த்தி செய்யலாம், இதற்கு டிரைக்கோ டெர்மா விரிடி 2 கிராம் ஒரு லிட்டர் தண்ணீரில் கலந்து பின்விதை மொட்டுக்களை 15 நிமிடம் ஊற வைத்து பின் நிழலில் 15 நிமிடம் உலர வைக்கலாம்.

விதை நேர்த்தி செய்ய விதை மொட்டுக்களை கோணிப்பையில் இறுக கட்டி நிழலில் அடுக்கி வைக்க வேண்டும். இவற்றை காற்று புகா வண்ணம் நன்கு மூடி இருக்குமாறு பார்க்க வேண்டும். நன்கு மூடிய கோணிப்பைகளின் மீது பாரம் ஏற்றி 5 நாள்கள் அப்படியே இருத்தல் வேண்டும். இடையில் தண்ணீர் தெளிக்கத் தேவையில்லை.

முதலில் குழி தட்டுக்களின் பாதியளவில் கோகோபீட் கொண்டு நிரப்ப வேண்டும். பின் விதை மொட்டுக்களை மேல் நோக்கி இருக்குமாறு சற்று சாய்வாக அடுக்கி மீதி குழிகளை கோகோ பீட் கொண்டு நிரப்ப வேண்டும்.

குழி தட்டுக்களை வரிசையாக தண்ணீர் தெளிக்க வசதியாக வைக்க வேண்டும். தினசரி தண்ணீர் தெளிப்பது அவசியம். 1 ஏக்கருக்கு 300 சதுர அடி தேவை நிழல்வலை அல்லது மர நிழலிலோ நாற்றுக்கள் வைக்க வேண்டும்.

நடவு செய்தல் மற்றும் இதர பராமரிப்புகள்:

நாற்றுக்களை 5-2 அடி இடைவெளியில் நடவு செய்ய வேண்டும். நட்ட 10, 20-வது நாள் சிறிதளவில் மேலும் இட்டு மண் அணைக்க வேண்டும். (யூரியா அல்லது அம்மோனியம் சல்பேட்) பிறகு களை எடுத்தல், மண் அணைத்தல், உரம், தண்ணீர் நிர்வாகம் போன்ற பராமரிப்பு வேலைகளையும் முறையாக செய்ய வேண்டும். 15-க்கு மேற்பட்ட தூர்கள் 2 மாதத்துக்குள் உருவாகும்.

2 அல்லது 3 தூர்கள் வந்தவுடன் முதலில் வந்த தாய்ச்செடியை வெட்டி நீக்க வேண்டும். அவ்வாறு நீக்கினால் அதிக பக்க தூர்கள் வெளிவரும் மற்றும் அனைத்து பயிர்களும் ஓரே சமயத்தில் கரும்பாக மாறும்.

செம்மை கரும்பு சாகுபடியில் அதிக இடைவெளியில் இருப்பதால் ஊடு பயிராக காய்கறிகள், பயறுவகைகள், வெள்ளரி, தர்பூசணி, பசுந்தாள் உர பயிர்களை பயிர் செய்ய முடிகிறது. மேலும் ஊடுபயிர் செய்வதால் அதிக லாபம், களை கட்டுப்பாடு, மண் வளம் பெருக்க முடியும்.

மண் அணைத்தல், சோகை உரித்தல்:

நடவு செய்த 45- வது நாள் மற்றும் 90-வது நாள் மண் அணைப்பு செய்ய வேண்டும், ஒளிச்சேர்க்கைக்கு மேற்புறமுள்ள 8-10 இலைகளே தேவைப்படுகின்றன. எனவே கீழ்புறமுள்ள காய்ந்த மற்றும் சில காயாத இலைகளை 5 மற்றும் 7-வது மாதத்தில் உரித்து பார் இடைவெளியில் இட வேண்டும்.

சோகை உரிப்பு பயன்கள்:

சுத்தமான பயிர் பராமரிப்பு, பயிர்களுக்குகிடையே காற்றோட்டம் அதிகரிப்பு, பூச்சி தாக்குதல் குறைவு, மற்ற பயிர் பராமரிப்பு பணிகள் எளிதாகின்றன.

சொட்டுநீர் உரப்பாசனம்:

செம்மை கரும்பு சாகுபடியின் மகசூல் அதிகரிக்க சொட்டுநீர் உரப்பாசனம் சாலச்சிறந்தது. மண்ணின் தன்மைக்கேற்ப நாள்தோறும் அல்லது அதிகபட்சமாக 3 நாள்களுக்கு ஒருமுறை சொட்டு நீர்பாசனம் அளிக்கலாம். 10 நாள்களுக்கு ஒருமுறை உரப்பாசனம் செய்ய வேண்டும். இவ்வகையில் 45 சதவீதம் பாசன நீரை (1200 மி.மீ) சேமிக்க இயலும்.

மேலே குறிப்பிட்டுள்ள அனைத்து தொழில்நுட்பங்களையும் முறையாகக் கடைப்பிடித்தால் ஒரு மொட்டில் இருந்து குறைந்தது 30 கிலோ கரும்பு கிடைக்கும் வாய்ப்புள்ளது. ஒரு ஏக்கருக்கு 5000 மொட்டுக்கள் என கணக்கிடும்போது 150 டன் மகசூல் பெற முடியும்.

மேலும் விவரங்களுக்கு திரூர் வேளாண் அறிவியல் நிலையத்தை அணுகலாம்.

தினமணி தகவல் –  திரூர் வேளாண்மை அறிவியல் நிலையத் தலைவர் மு.தேவநாதன், பேராசிரியை ம.நிர்மலாதேவி

வேளாண் அரங்கம் மார்க்கெட்டில்

 

நீடித்த நிலைத்த கரும்பு சாகுபடியில் தாய்க்கரும்பு பயிரை அறுக்கும் கருவி

கரும்பில் அதிக மகசூல் எடுப்பதற்கான தொழில்நுட்பம் “நீடித்த நிலைத்த கரும்பு சாகுபடி’ தொழில்நுட்பமாகும். இதற்கு 500லிருந்து 650 கிலோ விதைக்கரும்பு போதுமானதாகும். பருக்களுடன் சிறிது கரும்புத் தண்டும் பெயர்த்து எடுத்து பிளாஸ்டிக் குழித்தட்டில் மக்கிய தென்னை நார்க்கழிவு அல்லது மண்புழு எரு இட்டு பருவை குழியில் நட்டு வைத்து இத்தட்டுக்களை பசுமைக்குடிலில் வைத்து நாற்று உற்பத்தி செய்து தரமான நாற்றுக்களை வளர்க்க வேண்டும். ஒரு மாத வயதுடைய நாற்றுக்களை / வயலில் 5 அடிக்கு 2 அடி இடைவெளியில் நட்டு சாகுபடி செய்ய வேண்டும். இதற்கு ஏக்கருக்கு 4450 நாற்றுக்கள் வேண்டும். நாற்று முளைக்காத போக்கிடம் நடுவதற்கு அந்த மாதிரி சூழல் வராது. வந்தால் மொத்தமாக 4600 நாற்றுக்கள் போதுமான தேவையாகும்.

கரும்பு நாற்றை வரிசையில் 2அடி இடைவெளி விட்டு நடும்போதே தாய்ப்பயிரோடு பக்கத்தூரும் இரண்டு அல்லது ஒன்று குறுகிய நீளத்தில் வளர்ந்திருக்கும். வயலில் நட்ட ஒரு மாதத்திற்குப் பிறகு தாய்ப்பயிரை பூமிமட்டத்திலிருந்து இரண்டு அங்குலம் விட்டு அறுத்துவிட வேண்டும். இதனால் மேலும் அதிக தூர்கள் வளரும். இது பக்கத்தூரையும் புழு குருத்தையும் சேதப்படுத்துவதால் நமக்கு கரும்பின் எண்ணிக்கை குறையும். ஆனால் தாய்ப்பயிரை அறுத்துவிடுவதால் மேற்கண்ட செயல்பாடு நடக்காது. இளங்குருத்துப் புழுவால் இயற்கையாக நடப்பது, அறுத்துவிடுவதால் செயற்கையாக இங்கு செய்கிறோம். இயற்கையாக புழுவால் நடப்பது பக்கத்தூரையும் தாக்கி அழிக்கும். அதனால் அது நமக்கு நல்லதில்லை.

சில ரக இளங்கரும்புப் பயிரின் தண்டில் முசுமுசு என்று முள்ளு மாதிரி சொணை இருக்கும். அது ஆட்களைக் கொண்டு அறுத்துவிடும்போது கையில் குத்தும். வேலையாட்கள் கீழே குனிந்துதான் அரிவாள் கொண்டு அறுத்துவிட வேண்டும். இந்த இடையூறுகளினால் வேலை ஆட்களின் வேலை பாதிக்கும். இதைக்கருத்தில் கொண்டு சுலபமாக வேலை நடக்கவும், வேலைஆட்களின் கைகளில் எந்தவித பாதிப்பும் இல்லாமல் செய்யவும் ஒரு கருவி உருவாக்கப்பட்டது. படத்தில் உள்ளவாறு இருக்கும் கருவியைக் கொண்டு இளங்கரும்புப் பயிரின் தாய்ப்பயிரை ஆட்களின் உதவியால் அறுத்துவிடலாம். இக்கருவியை உபயோகிக்கும்போது கீழே குனியவும், தண்டை பிடிக்கவும் வேண்டாம். எந்தப்பயிரை அறுத்துவிட வேண்டுமோ அந்தப் பயிரை கருவியால் நின்றுகொண்டே அறுத்துவிட்டு நடந்துசெல்லலாம். நாமே காலை வேளை இரண்டு நாட்களில் ஒரு ஏக்கர் பயிரை அறுத்துவிட்டு வேலையை முடிக்கலாம். அறுத்த பயிரை மாட்டிற்கு தீனமாகக் கொடுக்கலாம். இளம் பயிராக இருப்பதால் மாடும் நன்கு சாப்பிடும்.

அதற்குப்பிறகு சொட்டு நீர்ப் பாசனத்தோடு உரக் கலவையையும் பயிருக்கடியில் கொடுக்கும் போது பயிர் சத்தையும் நீரையும் எடுத்துக் கொண்டு அதிக எண்ணிக்கையில் பக்கத்தூரை வளரச் செய்யும். பக்கத் தூர்களின் வயதும் ஏறத்தாழ ஒரே சீராக இருக்கும். அதனால் ஒவ்வொரு தூரும் கரும்பாய் மாறும். கரும்பின் உயரமும் தடிமனும் அதிகரிப்பதால் ஒரு கரும்பின் எடையானது அதிகரிக்கும். இப்படி ஒவ்வொரு கரும்பின் எடை கூடுவதால் ஒரு குத்தின் எடை அதிகரிக்கும். இதனால் வயலின் இருக்கிற ஒட்டுமொத்த கரும்பின் மகசூல் அதிகரிக்கும்.

தினமலர் தகவல்: முனைவர் கு.கதிரேசன், இயக்குனர் (திட்டமிடல் மற்றும் கண்காணிப்பு), டி.என்.ஏ.யு.,கோவை. 0422-661 1310.
-கே.சத்தியபிரபா, உடுமலை.

வேளாண் அரங்கம் மார்க்கெட்டில் TNAU: http://www.market.grassfield.org/Tamil%20Nadu%20Agricultural%20University/vendorDetail/65.html

ஜனவரி மாதத்திற்கான பூச்சி நோய் கண்காணிப்பு மற்றும் கட்டுப்பாட்டு முறை – TNAU

ஜனவரி மாதத்திற்கான பூச்சி நோய் கண்காணிப்பு மற்றும் கட்டுப்பாட்டு முறைகளை, தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ளது.

நெல்:

நெற்பயிரில் இலைச்சுருட்டுப்புழு மற்றும் தண்டுத் துளைப்பான் தாக்குதல் தருமபுரி, காஞ்சிபுரம், நாகப்பட்டினம், புதுக்கோட்டை, ராமநாதபுரம், சிவகங்கை, தஞ்சாவூர், தேனி, திருவாரூர், திருநெல்வேலி, திருவண்ணாமலை மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் காணப்படுகின்றன.

இலைச் சுருட்டுப் புழுவிற்கு விளக்குப் பொறியும் வேப்பங்கொட்டைச் சாறும்:

இவற்றைக் கட்டுப்படுத்த விளக்குப் பொறிகளை அமைத்து பூச்சிகளைக் கட்டுப்படுத்தலாம். பூச்சிகளின் பாதிப்பு அதிகமாக இருக்கும் நிலையில் வேப்பங்கொட்டை சாறு 5 சதக் கரைசலைத் தயாரித்து பயிர்களில் தெளிக்கவும் அல்லது பாஸ்போமிடான் 40 எஸ்.எல். 600 மி.லி./ ஹெக்டர் (அ) புரோபனோபாஸ் 50 இ.சி. 1,000 மி.லி./ ஹெக்டர் மருந்தினை தெளித்துக் கட்டுப்படுத்தலாம்.

இலைப் புள்ளி:

நெல்லில் இளைப்புள்ளி நோய் தாக்குதல் சிவகங்கை மாவட்டத்தில் பரவலாக காணப்படுகிறது. இதைக் கட்டுப்படுத்த மேங்கோசெப் 2.0 கிராம்/ லிட்டர் (அ) எடிபென்பாஸ் 1 மி.லி./ லிட்டர் என்ற முறையில் கலந்து 2 அல்லது 3 முறை 10-15 நாள்கள் இடைவெளியில் நோய் தாக்குதலுக்கு ஏற்பட தெளிக்குமாறு விவசாயிகளுக்கு அறிவுறுத்தப்படுகிறது.

பாக்டீரியா இலைக்கருகல்:

பாக்டீரியா இலைக் கருகல் நோய் தாக்குதல் தருமபுரி, காஞ்சிபுரம், நாகப்பட்டினம், புதுக்கோட்டை, ராமநாதபுரம், தஞ்சாவூர், திருவாரூர் மாவட்டங்களில் தென்படுகிறது. இதைக் கட்டுப்படுத்த ஸ்ட்ரெப்டோமைசின் சல்பேட் மற்றும் டெட்ராசைக்களின் 300 கிராம் மற்றும் காப்பர் ஆக்ஸிகுளோரைடு 1.25 கிராம்/ ஹெக்டர் என்ற அளவில் தெளித்துக் கட்டுப்படுத்தலாம்.

நெல் குலை நோய்க்கான முன்னறிவிப்பு:

தட்பவெப்ப நிலை சாதகமாக இருப்பதால் கடலோர மாவட்டங்களில் நெற்பயிரை குலை நோய் தாக்குவதற்கு வாய்ப்புள்ளது. அதனைக் கட்டுப்படுத்த 0.1 சதவீதம் (1 மி.லி./ 1 லிட்டர் தண்ணீரில்) டிரைசைகுளோசோல் என்ற மருந்தினை 10 நாள்கள் இடைவெளியில் தெளிக்கவும்.

பருத்தி:

சாறு உறிஞ்சிகள்

தேனி மாவட்டத்தில் சாறு உறிஞ்சும் பூச்சிகள் தென்படுகின்றன. மஞ்சள் நிற ஒட்டும் பொறியை உபயோகித்து இவற்றின் நடமாட்டத்தைக் கண்காணிக்கவும் (அ) இமிடோகுளோபிரிட் 200 எஸ்.எல். என்ற மருந்தினை 100 மி.லி./ ஹெக்டர் (அ) மெத்தில் டெமட்டான் 25 இ.சி. 500 மி.லி./ ஹெக்டர் என்ற அளவில் தெளித்துக் கட்டுப்படுத்தலாம். காய்ப்புழுக்களின் நடமாட்டம் குறைவாகவே தென்படுகிறது. இவற்றை இனக் கவர்ச்சிப் பொறிகளை வைத்துக் கட்டுப்படுத்தவும்.

கரும்பு:

தண்டுதுளைப்பான்

சிவகங்கை தஞ்சாவூர், நாமக்கல் மற்றும் விழுப்புரம் மாவட்டங்களில் தண்டுத்துளைப்பான் தாக்குதல் தென்படுகின்றது. இதைக் கட்டுப்படுத்த டிரைக்கோகிராம்மா முட்டை ஒட்டுண்ணிகளை ஒரு ஏக்கருக்கு 6 சி.சி. என்ற அளவில் வெளியிடவும்.

செவ்வழுகல் நோய்

செவ்வழுகல் நோய் தாக்குதல் தஞ்சாவூர், நாகப்பட்டினம் மற்றும் சிவகங்கை மாவட்டங்களில் காணப்படுகின்றது. இதைக் கட்டுப்படுத்த கரும்புக் கரணைகளை 0.1 சதவீதம் கார்பன்டெசிம் (அ) 0.05 சதவீதம் டிரைட்மெபன் என்ற கரைசலில் 15 நிமிடம் ஊற வைத்து விதை நேர்த்தி செய்து நடவு செய்ய வேண்டும்.

நிலக்கடலை:

இலைச் சுருட்டுப் புழு

நாமக்கல் மாவட்டத்தில் இலைச் சுருட்டுப் புழுவின் தாக்குதல் காணப்படுகிறது. விளக்குப் பொறிகளை வைத்து பூச்சிகளின் நடமாட்டத்தினைக் கண்காணிக்கவும், தேவைப்படின் வேப்பங்கொட்டைச் சாறு 5 சதவீதம் தயாரித்து தெளிக்கவும்.

இலைப்புள்ளி நோய்

தருமபுரி மற்றும் ராமநாதபுரம் மாவட்டங்களில் இலைப்புள்ளி நோய் தென்படுகின்றது. இதைக் கட்டுப்படுத்த கார்பன்டெசிம் 0.1 சதவீதக் கரைசல் (அ) மேங்கோசெப் (0.2) சதவீத கரைசல் (அ) குளோரேதலானில் (0.2) சதவீத கரைசலைத் தெளித்துக் கட்டுப்படுத்தலாம்.

மரவள்ளி, பப்பாளி, மல்பெரி

பப்பாளி மாவுப் பூச்சி:

மரவள்ளி, பப்பாளி, மல்பெரி பயிரிடும் விவசாயிகள் பப்பாளி மாவுப் பூச்சியின் தாக்குதலைக் கண்காணிக்கவும். இவற்றைக் கட்டுப்படுத்த அருகில் உள்ள தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக கல்லூரிகள், ஆராய்ச்சி நிலையங்கள் மற்றும் வேளாண் அறிவியல் நிலையங்களை அணுகி ஒட்டுண்ணிகளை இலவசமாகப் பெற்று மாவுப் பூச்சியினைக் கட்டுப்படுத்தலாம்.

மேலும் விவரங்களுக்கு

பேராசிரியர் மற்றும் தலைவர்,
வேளாண் பூச்சியியல் துறை,
தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம்,
கோவை-641003. தொலைபேசி: 0422-6611214.

பேராசிரியர் மற்றும் தலைவர்,
பயிர் நோயியல் துறை,
தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம்,
கோவை – 641003. தொலைபேசி: 0422-6611226.