காரமான கிராம்பு சாகுபடி

கிராம்பு ஒரு வெப்ப மண்டலப் பயிராகும். நல்ல வெதுவெதுப்பான, ஈரப்பதம் உள்ள சூழ்நிலையில் நன்கு வளரும். மழையின் அளவு ஆண்டுக்கு 150 முதல் 200 செ.மீ. வரை தேவைப்படுகிறது. வெப்பநிலை 20 -30 டிகிரி செல்சியஸ் இருக்கும் நிலையில் இது நன்றாக வளரும். கடல் மட்டத்திலிருந்து 1000 மீட்டர் உயரம் வரை நன்கு வளரும். நல்ல வடிகால் வசதி கொண்ட மணல் கலந்த களிமண் இதன் சாகுபடிக்கு மிகவும் ஏற்றது.

நடவு

 • முதலாவதாக மேட்டுப்பாத்திகள் அமைக்க வேண்டும்.
 • விதைகளை 2 செ.மீ. இடைவெளி விட்டு விதைக்க வேண்டும். விதைகள் முளைத்து நான்கு அல்லது ஐந்து இலைகள் வரும் வரை நிழலில் இருக்கும்படி பார்த்துக்கொள்ள வேண்டும்.
 • பத்து முதல் பதினைந்து நாட்களில் எல்லா விதைகளும் முளைத்துவிடும். முளைத்த விதைகளைச் சிறிய பாலிதீன் பைகளில் ஒரு பைக்கு ஒன்று வீதம் நடவு செய்ய வேண்டும்.
 • ஓர் ஆண்டுக்குப்பிறகு மீண்டும் நாற்றுக்களைப் பெரிய பாலிதீன் பைகளுக்கு மாற்றி நடவு செய்ய வேண்டும்.
 • 18 முதல் 24 மாத வயது உடைய நாற்றுக்களை ஆறு மீட்டர் இடைவெளி விட்டு 75 x 75 x 75 செ.மீ. குழிகளில் நடவேண்டும். பருவகால மழை தொடங்கிய உடன் நாற்றுக்களை நடவு செய்துகொள்வது நலமாகும்.
 • நிழலில் வளரக்கூடிய இந்தப் பயிரை, தென்னை, காப்பி, தேயிலை ஆகிய பயிர்களின் இடையில் ஊடுபயிராகவும் பயிர் செய்யலாம்.
 • ஒரு வயது நிரம்பிய இளம் செடிகளின் விஷயத்தில் செடி ஒன்றுக்கு 15 கிலோ மக்கிய தொழு உரம், 20 கிராம் தழைச்சத்து, 20 கிராம் மணிச்சத்து, 60 கிராம் சாம்பல்சத்து கொடுக்கக்கூடிய ரசாயன உரங்களை இரண்டு பகுதிகளாகப் பிரித்து செப்டம்பர், அக்டோபர் மாதங்களில் இடவேண்டும்.

ஏழு வயதான மரத்திற்கு 50 கிலோ தொழு உரம், 300 கிராம் தழைச்சத்து, 300 கிராம் மணிச்சத்து, 960 கிராம் சாம்பல் சத்து கொடுக்கக் கூடிய ரசாயன உரங்களை இடவேண்டும். மழை இல்லாத காலகட்டங்களில் இளம் செடிகளுக்குத் தேவை ஏற்படுகின்றபொழுது தண்ணீர் பாய்ச்சுவது அவசியமாகும். வளர்ச்சிபெற்ற மரங்களுக்கு அவ்வப்போது நன்கு நீர் பாய்ச்ச வேண்டும். இவ்வாறு செய்வதன் மூலம் காய்ப்புத்திறன் அதிகமாகும்.

கிராம்பு மரத்தில் அடர்ந்து வளர்ந்த, பக்கவாட்டுக் கிளைகளில் சிலவற்றைக் கவாத்து செய்ய வேண்டும். மரத்தைச்சுற்றி களை எடுத்து, காய்ந்த இலைச் சருகுகளை மேலாகப்பரப்பி, மண்ணின் ஈரத்தன்மையைக் காக்க வேண்டும். நான்காவது ஆண்டிலிருந்து அறுவடை செய்யலாம். பூக்கள் நவம்பர் மாதம் முதல் ஜனவரி மாதம் வரை தோன்றத் தொடங்கும்.

பூ பூத்த ஆறு மாதங்களில் பூ மொக்குகள் பச்சை நிறத்திலிருந்து இளம் சிவப்பு நிறமாக மாறும். அச்சமயம் பூக்கள் இதழ் விரியத் தொடங்குவதற்கு முன்பு பறித்துவிட வேண்டும். கொத்து கொத்தாகத் தோன்றும் எல்லா மொட்டுகளையும் அறுவடை செய்ய வேண்டும். அறுவடை செய்த அடுத்த நாள் இளம் வெயிலில் ஆறு நாட்கள் நன்கு உலரும் வரை காயவைக்க வேண்டும். மரம் ஒன்றுக்கு மூன்று கிலோ வரை உலர்ந்த கிராம்பு கிடைக்கும்.

தினமலர் தகவல்: ஸ்பைசஸ் இந்தியா மாத இதழ், கொச்சி.
மூலம்: தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகம் வ.ஆறுமுகம், கு.கோவிந்தன, வே.தொண்டைமான்)
எஸ்.நாகரத்தினம், விருதுநகர்

வேளாண் அரங்கத்தில்

தொடர்புகள்
நிறுவனங்கள்
வேளாண் பொருட்கள்

செம்மை கரும்பு சாகுபடி – குறைந்த செலவு – அதிக லாபம்

உலக அளவில் பிரேஸிலுக்கு அடுத்தபடியாக, கரும்பு உற்பத்தியில் இந்தியா 2-வது இடம் வகிக்கிறது. இந்தியாவில் 571 சர்க்கரை ஆலைகள் உள்ளன.

குறிப்பாக, தமிழகத்தில் ஹெக்டேருக்கு சராசரியாக 106 டன் கரும்பு உற்பத்தி செய்யப்படுகிறது. இந்தியாவின் மொத்த சர்க்கரை உற்பத்தியில் தமிழகத்தின் பங்களிப்பு 10 சதவீதம்.

கடந்த 10 ஆண்டுகளில் கரும்பு விவசாயம் பெரும் ஏற்ற இறக்கங்களைச் சந்தித்து வருகிறது. தமிழகத்திலும் கரும்பு உற்பத்தி ஆண்டுக்கு ஆண்டு ஏற்ற இறக்கங்களைக் கொண்டதாக மாறிவிட்டது.

எனவே, கரும்பு உற்பத்தியை பெருக்குவதில், சாகுபடி செலவைக் குறைப்பதில், அதிக கவனம் செலுத்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டு இருக்கிறது.  எனவே செம்மை நெல் சாகுபடியைப் போல், செம்மைக் கரும்பு சாகுபடி முறை, விவசாயிகளுக்கு வேளாண் விஞ்ஞானிகளால் பரிந்துரைக்கப் படுகிறது.

கரும்பு சாகுபடியில் புதிய அணுகுமுறையான, செம்மைக் கரும்பு சாகுபடி மூலம்  நீர் சேமிப்பு, விளைச்சல் அதிகரிப்பு அம்சங்கள் அதிகரிக்கிறது. குறைந்த விதை நாற்றைப் பயன்படுத்தி, குறைந்த தண்ணீரில், சரியான ஊட்டச்சத்து அளித்து, சரியான பயிர் பராமரிப்பையும் பயன்படுத்தி, அதிக மகசூல் பெறமுடியும் என்கிறார்கள் வேளாண் விஞ்ஞானிகள்.

கரும்பு விதைக் கரணைகள் மூலம் புதிய கரும்பை உற்பத்தி செய்வதற்குப் பதில், கரும்பில் உள்ள விதைப் பருக்கள் சீவல்களைக் கொண்டு பாலித்தீன் பைகள் அல்லது பிளாஸ்டிக் டிரேக்களில் நாற்றங்கால் தயாரித்து, பின்னர் வயலில் நடவு செய்யும் முறை அறிமுகப்படுத்தப்படுகிறது.

7 முதல் 9 மாதங்கள் முதிர்ந்த கரும்பில் இருந்து விதைப் பருக்களின் சீவல்கள் வெட்டுக் கருவிகள் மூலம் வெட்டி எடுக்கப்படுகிறது. இதற்கான  இயந்திரங்கள் பயன்பாட்டுக்கு வந்துவிட்டன. விதை நேர்த்தியும் செய்யப்பட வேண்டும். 25 முதல் 35 நாள்கள் ஆன நாற்றுகள் வயல்களில் நடப்படும்.   நடவு செய்யும்போது வரிசைக்கு 5 அடி இடைவெளியும், நாற்றுக்கு நாற்று 2 அடி இடைவெளியும் விட்டு நடவு செய்யப்பட வேண்டும். இதன்மூலம் ஊடுபயிர் செய்தல், இயந்திரம் மூலம்  களையெடுத்தல், அறுவடை போன்ற பணிகளும் எளிதாகிறது.

ஊடுபயிராக 3 மாதங்கள் வரை தட்டைப் பயறு, கொண்டைக் கடலை, உருளைக் கிழங்கு, கோதுமை, தர்பூசணி, போன்றவற்றைப் பயிரிடலாம். ஊடுபயிர்கள் கரும்பு வளர்ச்சிக்கும் உதவுகின்றன. விதைக் கரணைகள் மூலம் புதிய கரும்பை உற்பத்தி செய்ய, ஏக்கருக்கு 4 டன்கள் வரை கரும்பு தேவைப்படுகிறது. ஆனால் செம்மைக் கரும்பு சாகுபடியில் 500 கிலோ (5 ஆயிரம் விதைச் சீவல்கள்) போதும்.

தேவையான அளவுக்கு மட்டும் ஈரப்பதம் இருக்கும் வகையில் நீர்ப்பாசனம், இயற்கை உரங்களைப் பயன்படுத்துதல், பராமரிப்புக்கு போதிய முக்கியத்துவம் அளித்தல், பயிருக்கு  நல்ல காற்றோட்டம், சூரிய வெளிச்சம் ஆகியவற்றை அதிகரித்தல் மூலம் சாகுபடி காலத்தையும், செலவை குறைக்கவும், மகசூலை அதிகரிக்க முடியும் என்கிறார்கள்  வேளாண் விஞ்ஞானிகள்.

இதுகுறித்து நெல்லிக்குப்பம் சர்க்கரை ஆலை அதிகாரி ஒருவர் கூறுகையில், செம்மைக் கரும்பு சாகுபடி மூலம், சாகுபடிச் செலவைக் குறைக்க முடியும். ஒரே மாதிரியான, தரமான கரும்பு நாற்றுகளை விவசாயிகளுக்கு வழங்க முடியும்.

இதனால் உற்பத்தி அதிகரிக்கும். நாற்று தயாரிக்க விவசாயிகளுக்குப் பயிற்சி அளித்து வருகிறோம். 4 இடங்களில் விளக்கப் பண்ணைகளும் அமைத்து இருக்கிறோம். கரும்பு நாற்றுகளை பிளாஸ்டிக் டிரேக்களில் வளர்க்கிறோம் என்றார்.

இதுகுறித்து நெல்லிக்குப்பம் அருகே எய்தனூரைச் சேர்ந்த விவசாயி நிரஞ்சன் கூறுகையில், செம்மை கரும்பு சாகுபடி குறித்து ஆந்திர மாநிலத்திலும், தஞ்சை மாவட்டம் காட்டுத் தோட்டத்திலும் பயிற்சி பெற்றேன். நான், எய்தனூரில் 12 ஏக்கரில் செம்மைக் கரும்பு சாகுபடி முறையில் கரும்பு உற்பத்தி செய்ய திட்டமிட்டு இருக்கிறேன்.

செம்மைக் கரும்பு சாகுபடி மூலம் சாகுபடிச் செலவு குறைவு, ஊடுபயிர் செய்யலாம். தண்ணீர் செலவு குறைவு. மகசூல் அதிகரிக்கிறது போன்ற விவரங்களை ஆந்திர மாநில விவசாயிகள் மூலம் நேரடியாகத் தெரிந்து கொண்டேன். இந்தியா முழுவதும் செம்மைக் கரும்பு சாகுபடி முறை அறிமுகப்படுத்தப்பட்டு வருகிறது என்றார்.

தகவல் – தினமணி கடலூர்.

இயற்கை முறை கறிப்பலா சாகுபடி : நவீன தொழில்நுட்பம்

இதனுடைய பழங்கள் 25 சதம் மாவுச்சத்தும், கால்சியம், வைட்டமின் ஏ, பி, போதுமான அளவிலும் இருப்பதால் ஆங்கிலேயர்கள் இதனை “பிரெட் புரூட்’ என்று அழைத்தனர். தென்னிந்தியாவில் இப்பழம் சமையலுக்கு பயன்படுகிறது. வீட்டு தோட்டங்களில் இதனை வளர்க்கலாம். மண், தட்பவெப்ப நிலை: மேற்கு கடற்கரை ஓரம் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளான நீலகிரி, கீழ்பழநிமலை, வயநாடு, குற்றாலம், ஆனைமலை பகுதிகளில் காணப்படுகிறது. கரிமச்சத்து நிறைந்த செம்பொறை மண் ஏற்றது. காற்றின் ஈரப்பதம் மிகுந்தும், சூடான தட்பவெப்பமும் இதன் வளர்ச்சிக்கு ஏற்றது. ஆண்டு மழையளவு 2000-2500 மி.மீ. உள்ள இடங்களில் நன்கு வளர்கிறது.

வகைகள்:

 1. விதையுள்ளது
 2. விதைஅற்றது.

விதையுள்ள வகைகள் சமையலுக்கு ஏற்றதல்ல. விதைகளை வேகவைத்தோ, சுட்டோ சாப்பிடலாம். விதையற்ற வகைகளே பொதுவாக சாகுபடி செய்யப்படுகிறது. விதையில்லா வகைகள் 20 செ.மீ. நீளம், 2.5 செ.மீ. விட்டம் கொண்ட வேர்த்தண்டுகள் மூலமாக பயிர் பெருக்கம் செய்யப்படுகிறது. வேர்த்தண்டுகளை செங்குத்தாக இல்லாமல் படுக்கை முறையில் நடவு செய்ய வேண்டும். நடவின்போது ஒரு மரத்திற்கு 10 கிலோ நன்கு மக்கிய தொழுஉரம் இடவேண்டும்.

நீர்பாசனம்:

நடவு செய்த முதல் 2 மாதங்களுக்கு தினமும் 8-10 லிட்டர் தண்ணீரும், அதன்பிறகு 2 வருடம் வரை 10-20 லிட்டர் தண்ணீரும் தேவைப்படும். மழைக்காலங்களில் நீர் பாய்ச்ச வேண்டிய அவசியமில்லை.

உரமிடுதல்:

வீட்டுத் தோட்டங்களில் வளர்க்கும்போது ஒரு மரத்திற்கு 10 கிலோ நன்கு மக்கியதொழு உரம் இட்டால் போதுமானது.

பின்செய் நேர்த்தி:

களைகளை அவ்வப்போது நீக்க வேண்டும். மரத்தின் அருகே ஆழமாக செலுத்தினால் வேர்கள் பாதிக்கப்படும்.

ஊடுபயிர்:

காற்றின் ஈரப்பதம் அதிகமாக உள்ள இடங்களில் ஊடுபயிராக இஞ்சி, மிளகு, வெனிலா ஆகியவற்றை பயிரிடலாம்.

நோய்:

பழங்களைத் தாக்கும் மென்மையழுகல் நோயானது பழங்களை அழுகச் செய்து மரத்திலிருந்து உதிரச் செய்கிறது. இதனைக் கட்டுப்படுத்த தசகவ்யா என்ற இயற்கை கலவையை தெளிக்க வேண்டும்.

அறுவடை:

நடவு செய்த 5 முதல் 6 வருடங்களில் காய்களை அறுவடை செய்யலாம். காய்பிடிப்பை அதிகரிக்க கையால் மகரந்த சேர்க்கை செய்ய வேண்டும். காலை 7 மணி முதல் 10 மணி வரை பூவடிச் செதிலிலிருந்து பெண் மஞ்சரியானது விரிகிறது. அதிலுள்ள ஒவ்வொரு பூக்களும் படிப்படியாக திறக்க 72 மணி நேரம் எடுத்துக் கொள்கின்றன.

ஒரு ஆண் மஞ்சரியை ஒரு பெண் மஞ்சரியின் அருகே எடுத்துச் சென்று மகரந்தத்தைப் பெண் மஞ்சரியின் சூல்முடியின்மீது வைத்து மென்மையாகத் தேய்க்க வேண்டும். பெண் பூ திறந்த 3 நாட்களுக்குள் மகரந்தச் சேர்க்கை செய்துவிட வேண்டும். பெண் மஞ்சரியில் உள்ள அனைத்துப் பூக்களும் ஒரே சமயத்தில் திறப்பதில்லை. எனவே மகரந்தச் சேர்க்கையை திரும்பவும் 4 முதல் 5 நாட்களுக்குத் தினமும் செய்துவர வேண்டும். மஞ்சரி விரிந்த 60 முதல் 90 நாட்களில் காய்கள் கிடைக்கின்றன. பழத்தின் நிறமானது பச்சையிலிருந்து மஞ்சள் கலந்த பச்சையாக மாறும்போது பழம் முதிர்ச்சி அடைகிறது. பழங்களை பழுப்பதற்கு முன் அறுவடை செய்தால் சமையலுக்கு பயன்படுத்தலாம்.

ஒரு மரமானது ஒரு வருடத்தில் 50-100 பழங்கள் (25-50 கிலோ) வரை கொடுக்கிறது. நீளமான கம்புடன் கூடிய கொக்கியைக் கொண்டு பழங்களை அறுவடை செய்ய வேண்டும். ஒரு கிலோ பழத்தின் விலை சராசரியாக ரூ.10 என்று எடுத்துக்கொண்டால் ஒரு மரத்திலிருந்து ஒரு வருடத்திற்கு ரூ.250முதல் ரூ.500 வரை மொத்த வருமானமாகப் பெறலாம்.

தகவல்:

க.வி.ராஜலிங்கம்,
ந.அசோக ராஜா,
மு.ப.திவ்யா,
வேளாண் காடுகள் துறை, வனக்கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம், தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகம், மேட்டுப்பாளையம்-641 301, 04254-222 010, 225 064

விவசாயிகளின் நண்பன் – அசோலா

தென்னைக்கு அசோலாவின் தேவை பற்றி ஏற்கனவே ஒரு பதிவு இட்டு இருந்தோம். இது மற்றொரு பதிவு.

ரசாயன உரங்களால் பாதிக்கப்பட்டுள்ள மண் வளம் மற்றும் மகசூல் குறைபாடுகளைத் தவிர்க்க விவசாயிகள் அசோலா உயிர் உரத்தை பயன்படுத்தி அமோக விளைச்சல் பெறலாம் என திரூர் நெல் ஆராய்ச்சி மையத் தலைவர் கோ.வி.இராமசுப்பிரமணியன் தெரிவித்தார்.

பொதுவாக நவீன யுகத்தில் விவசாயத்துக்கும் பசுமை புரட்சி என்ற பெயரில் அதிகளவில் ரசாயன உரங்கள் பயன்படுத்தப்படுகின்றன. மேலும் அதிக பூச்சிக் கொல்லிகளை  பயன்படுத்துவதால் பயிர்களுக்கு தீமை விளைக்கும் பூச்சிகள் அழிவதுடன் விவசாயத்துக்கு துணைபுரியும் நுண்ணுயிர்களும் அழிந்துவிடுவது வருந்தத்தக்கது. ரசாயன உரங்களால் மண் வளம் மாசுபடுவதோடு சுற்றுச் சூழலும் பாதிக்கப்படுகிறது. ரசாயன உரத்தால் விளைவிக்கப்படும் பொருள்களை உட்கொள்ளும் மனிதனுக்கும் மறைமுக தீங்குகள், பக்க விளைவுகள் ஏற்படலாம்.

எனவே விவசாயிகள் இயற்கை உரங்களாகிய தொழு உரம் மற்றும் உயிர் உரங்களை பயன்படுத்துவது மிகவும் அவசியம். அசோஸ்பைரில்லம், பாஸ்போபாக்டீரியா, நீலப்பச்சை பாசி, அசோலா ஆகிய உயிர் உரங்களை விவசாயிகள் பயன்படுத்தினால் மண் வளம் செழிப்பாக இருப்பதுடன் சுற்றுச்சூழலும் பாதிக்கப்படாது. அசோலா என்பது உயிர் உரங்களில் முக்கியமானதும், விவசாயிகளின் நண்பன் என்று அழைக்கப்படுவதுமாகும்.

அசோலாவின் தன்மைகள்:

 • தழைச்சத்தை நிலை நிறுத்துகிறது.
 • பசுந்தாள் உரமாக பயன்படுகிறது.
 • பயிர் உற்பத்தியை அதிகரிக்கிறது.
 • நாற்றங்கால் விடப்பட்ட 2-3 நாள்களில் இரு மடங்காக பெருகும்.
 • உற்பத்தி பெருக்கமும் சுலபம்.
 • அசோலா அதிக புரதச்சத்து நிறைந்தது. ஆகையால் மீன், கோழி போன்றவற்றுக்கு தீவனமாகவும் பயன்படுத்தலாம்.
 • நீர் நிலைகளில் படர்ந்து வளரும் தன்மை உடையதால் களைகள் மற்றும் கொசுக்களையும் கட்டுப்படுத்துகிறது.

எனவே விவசாயிகள் தங்களது மண் வளத்தைப் பாதுகாக்க அசோலா உயிர் உரத்தை பயன்படுத்தலாம் என்றார் கோ.வி.ராமசுப்பிரமணியன்.

கரும்பில் அதிக மகசூல் பெற எளிய தொழில்நுட்பம்: விவசாயத்துறை யோசனை

கரும்பு

கரும்பு

First Published : 25 Jun 2010 11:54:12 AM IST
Last Updated : 25 Jun 2010 05:33:43 PM IST

தேனி, ஜூன் 24: கரும்பு சாகுபடியில் எளிய தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி அதிக  மகசூல் பெறலாம் என ஆண்டிபட்டி வேளாண்மை உதவி இயக்குநர் பெ. கோவிந்தராஜன் விவசாயிகளுக்கு ஆலோசனை வழங்கி உள்ளார்.

இதுகுறித்து, அவர் கூறியதாவது:

கரும்பு பயிரின் மகசூல் திறனை நிர்ணயிக்கும் முக்கியக் காரணி மண்வளம். இயற்கை வேளாண்மை முறைகளான பயிற்சுழற்சி, பசுந்தாள் உரமிடுதல், இயற்கை எருக்கள், பயிர் உழவு முறை, இயற்கை முறையில் களை மற்றும் பூச்சிகளைக் கட்டுப்படுத்துதல்  ஆகியவை மண் வளமாக மாற உதவுகின்றன.

விவசாயத்திற்கு பயிர் வளர்ச்சிக்குத் தேவையான சத்துகள் மற்றும் நச்சுத்தன்மை இல்லாதிருக்கும் மண் வளம் அமைந்திருக்க வேண்டும். கரும்பு எல்லாவகை மண்களிலும் பயிரிடப்பட்டாலும், நல்ல வடிகால் வசதியுள்ள மண் சாகுபடிக்கு ஏற்றது.

கரும்பு வளர்ச்சிக்கு 6.5 முதல் 7.5 சதவீதம் வரை உள்ள கார அமில நிலை மிகவும் உகந்தது. ஒன்றரை அடி ஆழம் வரை மண் இறுக்கம் இல்லாமல் மிருதுவாக இருக்க வேண்டும். கரிமச் சத்து, ஊட்டச் சத்துகள் போதிய அளவில் இருக்க வேண்டும்.

தொழு உரம், கம்போஸ்டு எரு, பசுந்தாள் உரம், கரும்பாலை ஆலைக் கழிவு, கரும்புத் தோகை ஆகியவற்றை இட்டு மண்ணின் இயல்பு குணங்களை சீர்படுத்தலாம்.

கரும்பு பயிரிடப்படும் நிலம் களர் நிலமாக இருப்பின், இரும்புச் சத்து பற்றாக்குறை ஏற்பட்டு மகசூல் குறைந்து காணப்படும். இலைகள் மஞ்சள் நிறத்தில் வெளுத்து, பயிர் வளர்ச்சி பாதிக்கப்படும். அமிலகார நிலை (பி.எச்.,) 9-க்கு மேல் இருந்தால், எல்லா கரும்புகளும் காய்ந்துவிடும். களர் நிலத்தில் 0.1 யூனிட் பி.எச்., குறைப்பதற்கு ஏக்கருக்கு 400 கிலோ ஜிப்சம் இட வேண்டும். தொழு எரு, கம்போஸ்டு அல்லது கரும்பு ஆலை அழுக்கு 10 முதல் 15 டன்கள் இட வேண்டும்.

கரும்பு பயிரின் வளர்ச்சிக்கு 16 ஊட்டச் சத்துக்கள் தேவைப்படுகின்றன. இவற்றில் ஒன்றில் பற்றாக்குறை ஏற்பட்டாலும், பயிர் வளர்ச்சி பாதிக்கப்படும். கடந்த பல ஆண்டுகளாக தழை, மணி, சாம்பல் சத்து உரங்களாகவே இடுவதாலும், தொழு உரம், கம்போஸ்டு, பசுந்தாள் உரங்கள் இடாததாலும் நிலத்தின் உற்பத்தி திறன் வெகுவாகக்  குறைந்துவிட்டது. அங்ஙக உரங்கள் இடுவதால் மகசூல் அதிகரிப்பதுடன், நுண்ணுயிர் பெருக்கம் ஏற்பட்டு மண்ணிலுள்ள சத்துகளை பயிர்கள் எடுத்துக்கொள்வதற்கு எளிதாகிறது.

கரும்பு நடவுசெய்த 20 முதல் 30 நாள்களுக்கு பார்களுக்கு இடைப்பட்ட பகுதியில், வரிசையாக தக்கைப்பூண்டு அல்லது சணப்பை ஊடுபயிராக நடவு செய்யலாம். இவற்றை பூ பிடிக்கும் பருவத்தில் பிடுங்கி பாரின் இருபுறமும் அமுக்கி மண் அணைக்கலாம். இதனால் களைகள் கட்டுப்படுத்தப்படுவதுடன் தழைச்சத்து மற்றும் நுண்ணுயிர்கள் மண்ணில் அதிகரிக்கும்.

நடவுசெய்த மூன்றரை மாதம் முதல் 10 மாதம் வரை 2 அல்லது 3 முறை தோகைகளை உரித்து பார்களின் இடைப்பட்ட பகுதிகளில் பரப்பலாம். தோகை பரப்புவதால் வறட்சி தாங்கும் தன்மை ஏற்படுகிறது. களைகள் கட்டுபடுத்தப்படுகின்றன. தோகை எரிக்கப்படும் போது, மண்ணில் பயன் தரும் நுண்ணுயிர்கள், மண் புழுக்கள் மடிந்து விடுகின்றன. இதனால் மறுதாம்பு பயிர்கள் மகசூல் வெகுவாக பாதிக்கப்படும்.

கரும்புத் தோகையைப் பயன்படுத்தி, மண்புழு உரம் தயாரித்து மண்ணின் கரிம மக்கை மேம்படுத்தலாம். பயிர் சாகுபடிக்கு முன், மண் பரிசோதனை செய்து மண்ணில் உள்ள சத்துக்களின் அளவுகளை அறிந்து உரம் இட வேண்டும்.

சொட்டுநீர் உரப் பாசனம் மூலம் தேவையான நேரத்தில் தேவையான அளவு தண்ணீர் மற்றும் உரங்களை பயிர்களுக்கு அளிக்க முடிகிறது. மேலும் சொட்டுநீர் பாசன முறையில் களைகள் முளைப்பது குறைவு. எனவே கரும்பு சாகுபடிக்கு சொட்டுநீர் பாசன முறையை பயன்படுத்தி அதிக மகசூல் பெறலாம்.

கரும்பு பயிருக்கு நுண்ணுயிர் உரங்கள் இடுவதால், வேர்களை சுற்றி மண்ணில் தங்கி வளர்ந்து காற்றிலுள்ள தழைச் சத்தை கிரகித்து பயிருக்கு அளிக்கும். நுண்ணுயிர் உரங்களான அசோஸ் பைரில்லம், பாஸ்போ பாக்டீரியா ஆகியவறை, ஏக்கருக்கு 4 கிலோ அளவில் ஒரு கிலோ கம்போஸ்டு அல்லது தொழு உரத்துடன் கலந்து பாஸ்பேட் உரத்தை இட்ட பிறகு, நடவுகால்களில் கரும்பு நடுவதற்கு முன் இட வேண்டும்.

துத்தநாகச் சத்து, இரும்புச் சத்து பற்றாக்குறையினால் பயிர்களின் இலை மஞ்சளாகி வெளுத்து காணப்படும். இதற்கு ஹெக்டேருக்கு 2 கிலோ பெரஸ்சல்பேட், ஒரு கிலோ துத்தநாக சல்பேட், 2 கிலோ யூரியா ஆகியவற்றை 200 லிட்டர் தண்ணீரில் கரைத்து கைத்தெளிப்பான் மூலம் கரும்புப் பயிர் நன்கு நனையும்படி தெளிக்க வேண்டும்.

இத்தகைய எளிய தொழில்நுட்ப முறைகளைக் கடைபிடித்து, அதிகமான உரம், பூச்சி, களை, பூசானக்கொல்லி மருந்துகளை தவிர்த்து, மண் வளத்தை பெருக்கி கரும்பு மகசூலை அதிகரிக்கலாம் என வேளாண்மை உதவி இயக்குநர் பெ.கோவிந்தராஜன் தெரிவித்துள்ளார்.