பருத்தி விவசாயிகளின் வருமானத்தைப் பெருக்க ஒருங்கிணைந்த பயிர் பாதுகாப்பு

உழவியல் முறைகள்:

 • கோடையில் உழுதல் – பூச்சிகளின் முட்டை மற்றும் புழுக்கள் வெளிக் கொணரப்பட்டு அழியும்.
 • அமில விதை நேர்த்தி செய்த விதைகளை பயன்படுத்துதல்.
 • பூஞ்சாண உயிர்கொல்லி டிரைக்கோடெர்மா விதைநேர்த்தி செய்தல் (1 கிலோ விதைக்கு 3 கிராம் வீதம்).
 • உயிர் உரமான அசோஸ்பைரில்லம் கொண்டு விதைநேர்த்தி செய்தல் (ஒரு ஏக்கருக்கு தேவையான விதையுடன் 2 பாக்கெட்டுகள் (200கிராம் ஒரு பாக்கெட் எடை)).
 • வேப்பம் புண்ணாக்கு இடுதல் (100 கிலோ/ஏக்).
 • பொறிப்பயிர்கள் முறையே சூரியகாந்தி, சாமந்தி பயிரிடுதல்.
 • உயர் விளைச்சல் மற்றும் நோய் எதிர்ப்புத்தன்மை கொண்ட ரகங்களை பயிரிடுதல்.
 • ஊடுபயிராக உளுந்து மற்றும் பாசிப்பயிர் பயிரிடுதல்.
 • தரம் வாய்ந்த மற்றும் சான்று பெற்ற விதைகளை விதைத்தல்.
 • கிராமம் முழுவதும் ஒரே ரகமான விதைகளை விதைத்தல்.
 • தோட்டக்கால் சால் முறையில் பருத்தி விதையை விதைத்தல்.
 • வரப்பு பயிர்கள் மக்காச்சோளம், சோளம் மற்றும் ஆமணக்கு பயிரிடுதல்.
 • பருத்தி மறுதாம்பு பயிர் விடுதலை தவிர்த்தல்.

கைவினை முறைகள்:

 • விளக்கு பொறி வைத்தல் (5 எண்ணம்/ஏக்கருக்கு).
 • இனக்கவர்ச்சிப்பொறி வைத்தல் (5 எண்ணம்/ஏக்).
 • கருநீலத்துணி விரித்தல் (2 சதுர அடி அளவில் 10 இடங்களில் / ஏக்).
 • முட்டை மற்றும் புழுக்கள் துணியின் அடியில் தங்குவதால் அதை சேகரித்து அழிக்கலாம்.
 • மஞ்சள் வண்ண ஒட்டுப்பொறி வைத்தல் (5 எண்ணம்/ஏக்).
 • “டி’ வடிவ குச்சியை நடுதல் (6 எண்ணம்/ஏக்) இந்த குச்சியில் பறவைகள் அமர்ந்து புழுக்களை கண்காணித்து அதை உண்டுவிடும்.
 • பருத்தியை தாக்கும் பூச்சிகளின் முட்டை, புழு மற்றும் கூட்டுப் புழுக்களை சேகரித்து அழித்தல். பூச்சி மற்றும் நோய் தாக்கப்பட்ட காய்கள், சப்பைகள், பூக்கள் மற்றும் இதர உதிர்ந்த பொருட்களை அகற்றி அழித்துவிடுதல்

உயிரியல் முறைகள்:

 • காய்ப்புழுவை கட்டுப்படுத்த 200மிலி என்.பி.வி. வைரஸ்/ஏக் தெளித்தல்.
 • தூரிசைடு (பாசில்லஸ் துரிஞ்சியன்சிஸ்) ஏக்கருக்கு 300 கிராம் தெளித்தல்.

நன்மை செய்யும் பூச்சிகள்:

 • டிரைக்கோகிரம்மா முட்டை அட்டையைப் பொருத்துதல் (ஏக்கருக்கு 4 சிசி சி40 துண்டு அட்டைகள்).
 • கிரைசோபா ஊன் உண்ணி ஏக்கருக்கு 5000 வெளியிடுதல்.
 • ஊன் உண்ணி ரெடுவிட் நாவாய்பூச்சி ஏக்கருக்கு 2000 வெளியிடுதல்.
 • முட்டை, புழு, ஒட்டுண்ணி சேலோனஸ் பிளாக்பர்னி ஏக்கருக்கு 5000 வெளியிடுதல்.

ரசாயன முறைகள்:

பருத்தி வயலில் பயிரைத் தாக்கும் பல பூச்சிகளின் பொருளாதார சேத நிலையைப் பின்பற்றி அதற்கேற்றவாறு பூச்சிக்கொல்லிகளை தெளித்தல்.

வ.எண். பூச்சிகள் பொருளாதார சேதநிலை
1 இலைப்பேன் இலைக்கு 2 பூச்சிகள்
2 தத்துப்பூச்சி இலைக்கு 2 பூச்சிகள்
3 அசுவினி 15 முதல் 20% வரை தாக்கப்பட்ட செடிகள்
4 பயிர்ச்சிலந்தி 1 சதுர செ.மீ.க்கு 10 சிலந்தி பூச்சிகள்
5 காய்ப்புழு 10% தாக்கப்பட்ட காய்கள்
6 வெள்ளை ஈ ஒரு இலைக்கு 5 முதல் 10 வெள்ளை ஈ
7 புரோடினியா புழு 50 மீட்டர் நீளத்தில் 4 முட்டை குவியல்கள்
8 தண்டுக் கூன்வண்டு 10% தாக்கப்பட்ட செடிகள்

மேற்கண்ட அட்டவணையில் உள்ள பொருளாதார சேதநிலையை தாண்டிவிட்டால் கீழே உள்ள பாதுகாப்பான ரசாயன பூச்சிக்கொல்லிகளை பயன்படுத்தலாம்.

 1. எண்டோசல்பான் 250மிலி மற்றும் பாசலோன் 100மிலி/ஏக். தெளித்தல்.
 2. வேம்பு சார்ந்த பூச்சிக்கொல்லி அசாடிராக்டின் ஏக்கருக்கு 200மிலி தெளித்தல்.
 3. கார்போபியூரான் குருணை ஏக்கருக்கு 12 கிலோ இடுதல்.

பூச்சிக்கொல்லிகளை மாலை நேரங்களில் தெளிக்க வேண்டும். பகல் நேரங்களில் தெளித்தால் சூரிய ஒளியில் பூச்சிக்கொல்லிகள் ஆவியாகிவிடுவதோடு மட்டுமல்லாமல் புழு மற்றும் பூச்சிகள் இலைக்கு அடியில் போய் மறைந்துகொள்ளும். மேலும் மாலை நேரங்களில் புழு மற்றும் பூச்சிகள் வெளியில் வரும். அப்போது தெளித்தால் உடனே அழிந்துவிடும்.

ஒரே பூச்சிக்கொல்லி திரும்பத்திரும்ப பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும். நீங்கள் பயன்படுத்திய பூச்சிக்கொல்லிக்கு கட்டுப்படவில்லை என்றால் மற்றொன்றை பயன்படுத்த வேண்டும்.

-முனைவர் ப.சுதாகர், உதவி பேராசிரியர், சிதம்பரம்-608 002. 99941 97666.

விதை நெல் பராமரிக்க ஆலோசனை

கடலூர் மாவட்டத்தில் கடந்த மாதம் வீசிய புயல் காற்றில் நெல் விதைப் பண்ணை வயல்களில் பயிர்கள் சாயந்ததாலும், நெல் மணிகள் ஒன்றோடொன்று உராய்ந்ததாலும் மணிகளின் நிறம் பழுப்பாகிக் காணப்படுகிறது.

வயல்களில் மூன்றில் ஒரு பங்கிற்கு மேல் சாய்ந்திருந்தால் விதை நெல்லுக்கு ஏற்றுக் கொள்ள இயலாது. சம்ப பருவத்தில் 600 ஹெக்டேரில் நெல் விதைப் பண்ணைகள் அமைத்து சான்று விதை பெற்றிட பதிவு செய்யப்பட்டு உள்ளது.

இப்பருவத்தில் சம்பா மசூரி, அம்பை 16, ஆடுதுறை 38, ஆடுதுறை 39, கோ 43, கோ (ஆர்) 50, மேம்படுத்தப்பட்ட வெள்ளைப் பொன்னி மற்றும் நீண்டகால ரகமான சாவித்திரி ஆகியவை அதிக அளவில் உற்பத்தி செய்யப்படுகிறது.

விதை தரத்தைப் பராமரிக்கும் வழிமுறைகள்:

வயல்களில் 2 அங்குல உயரத்துக்குக் குறைவாகத் தண்ணீர் பாய்ச்சி பராமரிக்க வேண்டும். அறுவடைக்கு 10 நாள்களுக்கு முன் தண்ணீர் முழுவதையும் வடிகட்டிவிட வேணடும். நெல் கதிர்களில் 90 சதம் மணிகள் வைக்கோலின் நிறத்தில் இருந்தால் அது அறுவடைக்கு ஏற்ற தருணம்.

தக்க தருணத்துக்கு முன்னரே அறுவடை செய்து உலர வைக்கும் போது, விதைகள் சுருங்கி சிறுத்து விடுவதுடன் முளைப்புத் திறனும் குறைந்து விடும்.

காலம் கடந்து அறுவடை செய்தால் விதைகளின் நிறம் பனி விழுந்து மங்கி விடுவதுடன் பூஞ்சாணங்களின் தாக்குதலுக்கும் உள்ளாகும். புயல் பாதித்த கதிரில் மகரந்தச் சேர்க்கை பாதிப்பால் பதர் அதிகமாக இருக்கும்.

எனவே அறுவடை செய்த குவியல்களை இயந்திரத்தினாலோ, பணியாளர்களைக் கொண்டோ பதர் முழுவதும் போகும் அளவுக்குத் தூற்றி சுத்தம் செய்ய வேண்டும். பிரித்து எடுத்த விதைகளை சில நாள்கள் குவித்து வைத்தால், விதைகள் சூடேறி, முளைப்புத்திறன் குறையும். எனவே பிரித்தெடுத்த விதைகளை உடனே உலர வைக்க வேண்டும்.

கதிர் அறுவடை செய்யும் இயந்திரங்களை ஒரு ரகத்துக்கு பயன்படுத்தி விட்டு, வேறு ரகத்துக்கு மாற்றும் போது, இயந்திரங்களை நன்கு சுத்தம் செய்ய வேண்டும். இல்லையெனில் மற்ற ரகக் கலப்பினால் விதைகளின் இனத்தூய்மை பாதிக்கப்படும்.

விதை நெல்லின் ஈரப்பதம் 13 சதம் இருக்குமாறு காயவைத்து சுத்திகரிப்பு நிலையத்துக்கு புதிய கோணிப்பைகளில் நிரப்பி அனுப்ப வேண்டும். விதை மூட்டைகளை மரக்கட்டை அட்டகம் அல்லது, தார்ப்பாய்களின் மீது அடுக்கி வைக்க வேண்டும்.

வெறும் தரை அல்லது சுவர் மீது சாய்த்து அடுக்கினால் விதைகளின் முளைப்புத்திறன் பாதிக்கும். விதை நெல் உற்பத்தியில் ஈடுபட்டு இருக்கும் விவசாயிகள் இந்த ஆலோசனைகளைக் கடைப்பிடித்து தரமான விதை நெல்லை உற்பத்தி செய்யலாம்.

தினமணி செய்தி
விதைச்சான்று உதவி இயக்குநர் ஹரிதாஸ். கடலூர் மாவட்ட வேளாண் துறை

தரமான நெல் விதைகளை விவசாயிகளே உற்பத்தி செய்தால் கூடுதல் லாபம்

நமது பாரம்பரிய விதை மேலாண்மை என்பது கிட்டத்தட்ட காணாமல் போய்விடும் நிலையில் உள்ளது.  அத்தகு நிலையிலும் விவசாயிகள் விதை உற்பத்தி செய்தல் வேண்டும் என்று அதிகாரிகள் செய்தி வெளியிட்டுள்ளனர்.

விவசாயிகள் ஆண்டுதோறும் நெல் விதைக்காக வேளாண் துறை அல்லது தனியார் நிறுவனங்களை எதிர்ப்பார்ப்பதை விட, வேளாண் துறையில் ஒரு முறை மட்டும் ஆதார விதைகளைப் பெற்று, தொடர்ந்து 3 ஆண்டுகளுக்கு தாங்களே தரமான நெல் விதைகளை உற்பத்தி செய்து கொள்ளலாம்.

மேலும், மண் பரிசோதனை செய்து, உயர் தர உரங்களைப் பயன்படுத்தி, புதிய தொழில்நுட்பங்கள் மூலம் விவசாயப் பணிகளை மேற்கொண்டால், நிச்சயமாக கூடுதல் லாபம் கிடைக்கும்.

இதேபோல, உளுந்து, பயறு வகை விதை உற்பத்திக்கு தேசிய வேளாண் வளர்ச்சித் திட்டம், தேசிய உணவுப் பாதுகாப்புத் திட்டம் ஆகியவற்றில் வழங்கப்படும் மானியத்தின் மூலமும் விவசாயிகள் நல்ல பயன் பெற முடியும்.

எனவே, இந்த வாய்ப்புகளைப் பயன்படுத்தி விவசாயிகள் பயறு வகைப் பயிர்களையும் சாகுபடி செய்ய முன் வர வேண்டும்.

தினமணி தகவல்.

வேப்பங்குளம் தென்னை ஆராய்ச்சி நிலையத் தலைவர் பேராசிரியர் பி. பார்த்தசாரதி.

மக்காச்சோளத்தில் பூச்சி கட்டுப்பாடு

மக்காச்சோளத்தை பூச்சித் தாக்குதலில் இருந்து காப்பாற்றிவிட்டால் குறைந்த முதலீட்டில், குறைந்த நாளில் அதிக லாபம் பார்க்க முடியும்.

தற்போது தமிழ்நாட்டில் உணவு மற்றும் தீவனத் தேவைக்காக பற்றாக்குறை உள்ளது. விவசாயிகள் இந் நேரத்தில் மக்காச்சோளம் பயிரிடுவதன் மூலம் நல்ல லாபத்தை பெற முடியும். நல்ல மகசூல் கிடைக்க உயர் விளைச்சல் தரும் வீரிய ஒட்டு ரகங்களை விவசாயிகள் பயிர் செய்ய வேண்டும்.

மக்காச்சோளம் 90 முதல் 110 நாள்களிலேயே விளைந்து பலன் கொடுக்கும். மக்காச்சோளத்தை பூச்சித் தாக்குதலில் இருந்து காத்துக் கொண்டால் விவசாயிகள் கூடுதல் லாபம் பெறமுடியும்.

குருத்து காயும் நோய் வகை:
மக்காச்சோளத்தை தாக்கும் பூச்சிகளை பொறுத்தவரை ஒரு வகையான ஈ இலைகளில் முட்டையிடும். முட்டையில் இருந்து வெளிவரும் புழுக்கள் தண்டைக் குடைந்து செல்லும்.

இதனால் நடுக்குருத்தின் அடிப்பாகம் பாதிக்கப்படும். முழுச் செடியும் காய்ந்து போவதற்கான வாய்ப்பும் உண்டு.

இப்பூச்சி பெரும்பாலும் ஒரு மாத பயிரைத் தாக்கும். மீன், கருவாட்டு பொறியை வைத்து இப் பூச்சிகளை கட்டுப்படுத்தலாம். ஒரு ஹெக்டேருக்கு 12 அல்லது 13 என்ற அளவில் அமைக்க வேண்டும்.

இலைகாயும் நோய் வகை:
இந்த நோய் மக்காச்சோளத்தை அதிகம் தாக்கும் நோய் ஆகும். இதை அடிச்சாம்பல் நோய் என்று விவசாயத் துறையினர் கூறுகின்றனர்.

இந்நோய் தாக்கினால் இலைகளின் அடிப்பாகம் வெண்மையாக மாறும். இலைகள் காய்ந்துவிடும். இலைகளின் நரம்புகள் கிழிந்து விடும். இலை நார் போலக் காணப்படும்.

இதைக் கட்டுப்படுத்த இந்நோய் தாக்கிய செடிகளை அகற்றி அப்புறப்படுத்த வேண்டும். 0.2 சதவீத மெட்டலாக்சில் மருந்தைத் தெளிக்க வேண்டும்.

பூச்சித் தாக்குதல்களை கட்டுப்படுத்தும் முறைகள் குறித்து வேளாண்மைத் துறை அதிகாரிகள் சிலரிடம் கேட்டபோது அவர்கள் கூறியது:

பூச்சிகளைக் கட்டுப்படுத்த விதை நேர்த்தி செய்ய வேண்டும். விதை நேர்த்தி குறித்த அப்பகுதி விவசாயத் துறை வல்லுநர்களை கேட்டு தெரிந்து கொள்ளலாம். முன் பருவத்திலேயே விதைக்க வேண்டும்.

பூச்சியால் தாக்கப்பட்டு குருத்து காய்ந்த செடிகளை உடனடியாக அகற்ற வேண்டும். மக்காச்சோளத்தைத் தாக்கும் பூச்சிகளுக்கான எதிர்பூச்சிகளான ஊக்குவிப்பதன் மூலம் பூச்சி தாக்குதலை கட்டுக்குள் கொண்டு வரலாம் என்றனர்.

தினமணி தகவல் – வேளாண் மையம், காஞ்சிபுரம்

பாரம்பரிய விதை நேர்த்தி (பொது)

பயிர்களின் முனைப்புத்திறன் மற்றும் நோய் தாக்குதலில் இருந்து பாதுகாக்கவும்,​​ அதிகளவு மகசூல் பெறவும் விதை நேர்த்தி முறையை வேளாண்துறை மற்றும் ஆராய்ச்சி நிலையங்களின் பரிந்துரையின்படி தமிழக விவசாயிகள் மேற்கொண்டு வருகின்றனர்.

குறிப்பாக வேதியியல் மற்றும் செயற்கை வேளாண் பூஞ்ஞாணக் கொல்லிகள்,​​ பூச்சிக்கொல்லிகள் கொண்டு விதை நேர்த்தி செய்யும் போது பயிர்கள் பூச்சி மற்றும் நோய் தாக்குதலில் இருந்து பாதுகாக்கப்பட்டாலும் நமது உணவும்,​​ நிலமும் விஷத்தன்மை மற்றும் மாசு அடைவது தவிர்க்க முடியாததாகிவிடுகிறது.​ இத்தகைய சூழலில் விவசாயிகள் சுற்றுச்சூழலை பாதுகாக்கவும்,​​ அதிக லாபம் மற்றும் மகசூல் பெறவும் இயற்கை விதை நேர்த்தி செய்வது மிகவும் பயனுள்ளதாக அமையும்.

இயற்கை விதை நேர்த்தி முறை:​

விவசாயிகள் தங்களின் விதைகளை இயற்கை முறையில் தயார் செய்யப்படும் ஆட்டூட்டக்கரைசல் ​(ஆட்டுப்புழுக்கை,​​ ஆட்டு சிறுநீர்,​​ ஆட்டுப்பால்,​​ ஆட்டுத்தயிர்,​​ வாழைப்பழம்,​​ இளநீர்,​​ கடலைப் பிண்ணாக்கு,​​ கரும்புச்சாறு மற்றும் கள் ஆகியவற்றை கொண்டு தயார் செய்யப்படும் கலவை)​ அல்லது பஞ்சகவ்யா கலவையை ​(சாணம்,​​ மாட்டு சிறுநீர்,​​ பால்,​​ தயிர்,​​ நாட்டுச்சர்க்கரை,​​ வாழைப்பழம்,​​ கரும்புச்சாறு,​​ கள்,​​ ஈஸ்ட் மற்றும் கடலைப் பிண்ணாக்கு)​ 300 மில்லி கிராம் என்ற அளவில் 10 லிட்டர் நீரில் கலந்து விதை நேர்த்திக்கு பயன்படுத்தலாம்.

இயற்கை விதை நேர்த்தி முறையில் விதைகளை ஆட்டூட்டக் கரைசலுடன் ஊற வைத்து ​ பதப்படுத்தும் விவசாயி.

இயற்கை விதை நேர்த்தி முறையில் விதைகளை ஆட்டூட்டக் கரைசலுடன் ஊற வைத்து பதப்படுத்தும் விவசாயி.

நெல் மற்றும் கடினமான தோலுடைய விதைகளை 24 மணி நேரம் ஊற வைத்து விதைக்கலாம்.​

இவ்வாறு விதை நேர்த்தி செய்தபின் விதைகளை நிழலில் நன்றாக உலர்த்திய பின்பே விதைக்க வேண்டும்.​ இவ்வாறு இயற்கை முறையில் விதை நேர்த்தி செய்வதால் நாற்றுகள் நன்றாக வாளிப்பாக வளரும்.​ அதிக எண்ணிக்கையில் வேர் பிடிப்பு காணப்படும்.​ பயிர்கள் நன்றாக வறட்சியைத் தாங்கி வளரும் தன்மை பெறும்,​​ பூச்சிகள்,​​ நோய் தாக்குதல்கள் இருக்காது.

அடுத்த பருவத்திற்கு தேவையான விதைகளை பஞ்சகவ்யா அல்லது ஆட்டூட்டக் கரைசலில் நனைத்து நிழலில் காய வைத்து விவசாயிகள் எளிதாக சேமிக்கலாம்.​ இதன் வாயிலாக விதைகளை பூச்சிகளும்,​​ நோயும் தாக்காது.​ முனைப்புத் திறனும் அடுத்த பருவத்திலும் குறையாமல் பாதுகாக்கப்படும்.

பிற பயன்கள்:​​

நெல்,​​ தக்காளி நாற்றுகளை,​​ வாழைக் கன்றுகளை பஞ்சகவ்யா மற்றும் ஆட்டூட்டக் கரைசலில் நனைத்து நடவு செய்யும் போது பூஞ்சானம்,​​ வைரஸ் மற்றும் வேர் புழுக்களின் தாக்குதல் கட்டுப்படுத்தப்படும்.​ குறைந்த செலவில் விவசாயிகள் தங்களிடம் உள்ள இயற்கை வேளாண் பொருள்களை கொண்டு செய்வதால் சுற்றுச்சூழல் மாசுபடுவது தடுக்கப்படும்.​

மேலும் விவசாயிகள் அதிக மகசூல் மற்றும் லாபம் பெற முடியும்.​ எனவே தமிழக விவசாயிகள் இயற்கை விதை நேர்த்தி வாயிலாக அதிக லாபம் பெறலாம் என அண்ணாமலைப் பல்கலைக்கழக வேளாண் விரிவாக்கத்துறை விரிவுரையாளர் தி.ராஜ்பிரவின் தெரிவித்துள்ளார்.

தகவல் – தினமணி