சுழற்சி முறையில் பயிர் சாகுபடிக்கான தேர்வு முறைகள்!

விவசாயிகள் தங்களது விளை நிலங்களில் ஆண்டு முழுவதும் ஒரே மாதிரியான பயிரை சாகுபடி செய்வதைத் தவிர்த்து, சுழற்சி முறையில் பயிர்களைத் தேர்வு செய்து சாகுபடி செய்தால் கூடுதல் மகசூலும், அதிக லாபமும் பெறலாம்.

பயறு வகைகளுக்குப் பிறகு:
பயறு வகைகள் பயிரிடும் விவசாயிகள் அதன் பிறகு பயறு அல்லாது வேறு பயிர்களை தேர்வு செய்ய வேண்டும் கோதுமை, மக்காச் சோளம், முதலில் செய்த பயிர் அல்லது தானியங்களை ஊடுபயிராக பயிரிடலாம்.

சில வகைப் பயிர்கள் மண்ணில் உள்ள சத்துகள் அனைத்தையும் உறஞ்சிவிடும் தன்மை கொண்டவை. எள், கடலை ஆகியவை இத்தகையத் தன்மை கொண்டவை. எனவே, இத்தகையப் பயிர்களைப் பயிரிட்ட பிறகு பயறு வகைகளைப் பயிரிட்டால் சத்துக்களை மண்ணில் நிலை நிறுத்தும்.

இலைகள் மண்ணில் உதிர்வதற்கு:
அவ்வப்போது இலைகள் மண்ணில் உதிரும் வண்ணம் உள்ள செடிகளையும் பயிரிடலாம்.

 • பருத்தி,
 • நெல்,
 • கோதுமை,
 • பயறு வகைகள்

இதற்கு சிறந்த உதாரணமாகும்.

தானியப் பயிர்களுக்குப் பிறகு:
மானாவாரியாகவோ, இறவைப் பயிராகவோ தானியங்களை பயிரிடும் விவசாயிகள், தானிய விளைச்சலுக்குப் பிறகு பசுந்தாள் உரத் தாவரங்களைப் பயிரிடலாம். சனப்பை, நெல், துவரம் பருப்பு, பச்சைப் பயறு, மக்காச்சோளம் ஆகியவற்றைத் தேர்வு செய்யலாம். நல்ல அதிக ஊட்டச்சத்து தேவையுடைய பயிர்களுக்குப் பிறகு குறைந்த ஊட்டச்சத்து தேவையுடைய பயிர்களைப் பயிரிட வேண்டியது அவசியம். மக்காச் சோளம்,  உளுந்து, பூசணி வகைகளை சாகுபடி செய்யலாம்.

பருவம் சார்ந்தவை:
பருவம் சார்ந்த பயிர்களை பயிரிட்ட பிறகு ஓராண்டுக்கு தாவரங்களைப் பயிரிட வேண்டும். நேப்பியர், கரும்பு பயிரிட்ட பிறகு நிலக்கடலை, தட்டைப் பயறு பயிரிடலாம்.

காய்கறி சாகுபடி செய்த பிறகு:
காய்கறி வகைகளை சாகுபடி செய்த பிறகு தீவனப் பயிர்களைப் பயிரிடலாம்.

 • சோளம்,
 • தட்டைப் பயறு,
 • உருளைக்கிழங்கு,
 • முட்டைகோஸ்,
 • வெங்காயம்

என சுழற்சி முறையில் பயிர் செய்தால் கூடுதல் வருவாய் கிடைக்கும். விதைத் தவாரங்களுக்குப் பிறகு வேர்த் தாவரங்களைப் பயிரிடலாம்.

மறுதாம்புப் பயிர்களுக்குப் பிறகு:
மறுதாம்புப் பயிர்களுக்குப் பிறகு ஆழமான வேர்கள் செல்லக் கூடிய பயிர்களை சாகுபடி செய்யலாம்.

 • உருளைக் கிழங்கு,
 • மஞ்சள்,
 • பீட்ரூட்,
 • கேரட்,
 • நெல்,
 • வெங்காயம்,
 • காய்கறி

என சுழற்சி முறையை கடைப்பிடிக்கலாம்.

ஆழமான வேர்களைத் தொடர்ந்து:
ஆழமான வேர்களைத் தொடர்ந்து மேலோட்டமான வேருள்ன பயிர்களை விதைக்கலாம். இதற்கு

 • பருத்தி,
 • ஆமணக்கு,
 • துவரம்பருப்பு,
 • உருளைக் கிழங்கு,
 • பச்சைப் பயறுகள்

சிறந்தவை.
கோடை உழவுக்குப் பிறகு:
அதிக ஆழமான உழவு தேவைப்படும் பயிர்களை, கோடை உழவு முடிந்த பின்னர் சாகுபடி செய்வது அவசியம். சற்று இறுகிய மண்ணிலும் வளரக் கூடிய தாவரங்களைப் பயிரிடலாம்.

 • உருளைக் கிழங்கு,
 • முள்ளங்கி,
 • சர்க்கரைவள்ளிக் கிழங்கு,
 • கரும்பு,
 • உளுந்து,
 • பசுந்தாள் உரம்

என சுழற்சி முறையில் வகைப்படுத்திக் கொள்ள வேண்டும்.

இரு விதையிலைத் தவார சாகுபடிக்குப் பிறகு:
இரு விதையிலைத் தவாரங்களை சாகுபடி செய்த விவசாயிகள் அடுத்தபடியாக ஒரு விதையிலைத் தாவரங்களைப் பியிரட வேண்டும். ஊடுபயிர் இல்லாத தனிப் பயிர்களை சாகுபடி செய்யும் விவசாயிகள் அரிதாள் கட்டை விடும் பயிர்களை சாகுபடி செய்வது சிறந்தது.

பூச்சித் தாக்குதலில் இருந்து காக்க:
சில வகை பூச்சிகள்  குறிப்பிட்ட பயிர்களைத் தாக்கும் ஆற்றல் கொண்டவை. எனவே, அத்தகையப் பயிர்களைப் பயிரிடும் விவசாயிகள் அடுத்த முறை அதற்கு மாற்றாக உள்ள பயிர்களைத் தேர்வு செய்ய வேண்டும். சில பயிர்களில் குறிப்பிட்ட வகை களைச் செடிகள் தொர்ந்து முளைத்த வண்ணம் இருக்கும். இதனைக் கட்டுப்படுத்த சுழற்சி முறை பயிர் சாகுபடி அவசியமானது. மேய்ச்சல் பயிர்களுக்குப் பிறகு தீவனம் அல்லது விதைப் பயிர்களை சாகுபடி செய்ய வேண்டும்

 • பாராபுல்,
 • சோளம்,
 • அவரை,
 • நெல்

என வரிசைப்படுத்திக் கொள்ளலாம்.

சுத்தப்படுத்தும் தாவரங்களுக்குப் பிறகு:
சுத்தப்படுத்தும் தாவரங்களுக்குப் பிறகு விதைத் தாவரங்களை தேர்வு செய்ய வேண்டும். மக்காச் சோளம், நிலக்கடலை, வெங்காயம், அவரை, கம்பு என திட்டமிடல் வேண்டும். ஒரே வகை பயிர்களை சாகுபடி செய்யாமல் மேற்கண்டபடி சுழற்சி முறையில் பயிர்களை சாகுபடி செய்தால் விவசாயிகளுக்கு மிகுந்த லாபத்தை ஈட்டித் தரும். மண் வளமும் பாதுகாக்கப்படும். மேலும், விவரங்களுக்கு அருகில் உள்ள வட்டார வேளாண்மை விரிவாக்க அலுவலகங்களைத் தொடர்பு கொள்ளலாம்.

தினமணி செய்தி

கரும்பு சாகுபடி நிலம் தயார் செய்யும் முறைகள்

கரும்பு விளைவிக்கப்படும் நிலங்களில் தொடர்ந்து கரும்பு மட்டுமே சாகுபடி செய்யக் கூடாது என்று வேளாண்துறை தெரிவித்துள்ளது. ஒரு முறை கரும்பு சாகுபடி செய்தவுடன் அதை வெட்டி எடுத்த பிறகு ஒரு முறை கட்டை கரும்புக்குப் பின் அந்த நிலத்தில் மாற்றுப் பயிர் ஒன்றை சாகுபடி செய்ய வேண்டும். அதன் பின்னரே கரும்பை மீண்டும் பயிரிட வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நெல், வாழை, மஞ்சள், நிலக்கடலை, சணப்பை, தக்கைப்பூண்டு போன்றவற்றை கரும்பு சாகுபடி செய்யும் நிலங்களில் சுழற்சி முறையில் பயிர்களை சாகுபடி செய்யலாம் என்றும் வேளாண் துறை யோசனை தெரிவித் துள்ளது.

நிலம் தயாரித்தல்

ஓராண்டுப் பயிரான கரும்பின் வேர்கள் நன்றாக வளர்ந்து நீர் மற்றும் ஊட்டச் சத்துகளை மண்ணில் இருந்து பெற வேண்டுமானால் வயலில் குறைந்தது 30 செ.மீ. ஆழம் வரை மண் மிருதுவாக இருக்க வேண்டும்.

டிராக்டர் மூலம் உழவு செய்வதாக இருந்தால், முதல் உழவை சட்டிக் கலப்பை அல்லது இறக்கை கலப்பை மூலமும் 2-வது மற்றும் 3-வது உழவை கொத்துக் கலப்பை மூலம் செய்ய வேண்டும்.

மேடு, பள்ளங்கள் அதிகம் இல்லாத நிலமாக இருந்தால், 3-வது உழவுக்குப் பின் சமன் செய்யும் கருவி கொண்டு நிலத்தை சமன் செய்து பின்னர் பார் பிடிக்கும் கலப்பை கொண்டு பார்களைப் பிடிக்கலாம்.

எருதுகளைக் கொண்டு உழவு செய்வதாக இருந்தால் முதல் உழவை இறக்கைக் கலப்பை மூலம் செய்யலாம். 2-வது மற்றும் 3-வது உழவுக்கு நாட்டுக் கலப்பையை உபயோகிக்கலாம்.

மண் நன்றாக மிருதுவாகும் வரை நாட்டுக் கலப்பையை கொண்டு உழ வேண்டும். பின்னர் பார் பிடிக்கும் கலப்பை மூலம் பார் பிடிக்கலாம்.

உரம் நிர்வாகம்

இயற்கை உரங்களான தொழுஉரத்தை ஹெக்டேருக்கு 25 டன்கள் வரை கடைசி உழவுக்கு முன் இட வேண்டும். இதனால், மண் வளம் மேம்படுவதுடன் மண் நலமும் பாதுகாக்கப்படுகிறது.

பசுந்தாள் உரப் பயிர்களான தக்கைப்பூண்டு அல்லது சணப்பை பயிரிடப்பட்டிருந்தால் இறக்கை கலப்பையை கொண்டு மடக்கி உழுது பின்னர் 2 வாரங்களுக்குப்பின் உழவு செய்து நிலத்தை தயார் செய்ய வேண்டும். மண் பரிசோதனை முடிவுக்கேற்ப அடி உரமாக ரசாயன உரங்கள் இட வேண்டும்.

பார் அமைத்தல்

சாகுபடி செய்யும் ரகம், நீர் பாய்ச்சுவதற்கு வசதி மற்றும் நிலத்தின் வளம் ஆகியவற்றுக்கு ஏற்ப தகுந்த இடைவெளியில் பார்களை அமைக்க வேண்டும். நல்ல வளமான மண்ணில் நன்கு தூர்விட்டு வளரும் ரகம் பயிரிடுவதாக இருந்தால் 90 செ.மீ. பாருக்கு பார் இடைவெளி இருக்க வேண்டும்.

நல்ல வளமான மண்ணில் குறைந்த தூர்விடும் ரகமாக இருந்தால் 75 செ.மீ. இடைவெளிவிடுதல் வேண்டும். இயந்திரங்கள் மூலம் நடவு, அறுவடை செய்ய 150 செ.மீ. அகலப் பார்கள் அமைக்க வேண்டும்.

கரும்புப் பயிர் நன்கு வேர் ஊன்றி வளரவும், கரும்பு வளர்ந்தப் பின்னர் சாயாமல் இருக்கவும், பார்களுக்கு இடையே 20 செ.மீ. முதல் 30 செ.மீ. வரை ஆழத்தில் சால் அமைக்க வேண்டும்.

ஆழமான சாலில் கரும்பு நடவு செய்தால் நன்கு மண் அணைக்க ஏதுவாக இருப்பதுடன், அறுவடை செய்யும் வரை கரும்பு சாயாமல் நல்ல மகசூல் கொடுக்கும்.

கரும்பு பயிரிடப்படும் பட்டங்கள்

தமிழகத்தில் பொதுவாக டிசம்பர் முதல் மே மாதம் வரை 3 பட்டங்களில் கரும்பு சாகுபடி செய்யப்படுகிறது.

 • டிசம்பர், ஜனவரியில் முதல் பட்டமாகவும்,
 • பிப்ரவரி, மார்ச்சில் நடுப்பட்டமாகவும்,
 • ஏப்ரல், மே மாதத்தில் பின்பட்டமாகவும் பயிரிடப்படுகிறது.

சிறப்புப் பட்டமாக ஜூன், ஜூலையில் கோவை, திருச்சி, பெரம்பலூர், கரூர், சேலம், நாமக்கல் ஆகிய மாவட்டங்களில் கரும்பு நடவு செய்யப்படுகிறது.

இது குறித்து கூடுதல் விவரம் அறிய தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி:

இயக்குநர்,

கரும்பு இனப்பெருக்கு நிறுவனம், கோவை-641007.

தொலைபேசி எண்:0422-2472621.

தினமணி தகவல்

விவசாயம் செய்கிறோம். ஆனால் லாபம் கிடைக்கவில்லை என்று பேசுபவர்களுக்கான தொழில்நுட்பம்

வேரைப் பாதுகாத்தால் விளைச்சல் அதிகரிக்கும்
விவசாயம் செய்கிறோம். ஆனால் லாபம் கிடைக்கவில்லை. விவசாயிகள் இப்படிதான் பேசிக் கொள்கிறார்கள். ஒரு சில தொழில்நுட்பங்களைப் பின்பற்றினால் விளைச்சல் அதிகரித்து லாபம் ஈட்ட முடியும்.

 • மனிதனுக்கு இதயம், நுரையீரல் எப்படி முக்கியமோ பயிருக்கு அந்த அளவு வேர் முக்கியம். வேர் திடமாக இருந்தால்தான் பயிர் செழித்து வளரும்.
 • மனிதன் ஆக்ஸிஜனை சுவாசித்து கார்ப்பன்- டை-ஆக்ஸைடை வெளியிடுகிறான். பயிர்களின் வேர் கார்ப்பன்-டை- ஆக்ஸைடை சுவாசித்து ஆக்ஸிஜனை வெளியிடுகின்றன. வேர் வலிமையாக இருந்தால்தான் சுவாசிக்கும் திறன் நன்றாக இருக்கும்.

வேரைப் பாதுகாத்து விளைச்சலை அதிகரிக்கும் தொழில்நுட்பங்களை புதுச்சேரி காமராஜர் வேளாண் அறிவியல் நிலையத்தின் பூச்சியியல் நிபுணர் என். விஜயகுமார் கூறியது:

வேர் வலிமையாக இருக்க அங்ககப் பொருள்களை அதிகமாகப் பயிர்களில் பயன்படுத்த வேண்டும். வேர் சுவாசம் நன்றாக இருந்தால் கண்டிப்பாக வேர் கிளைக்கும். அதிகமான கிளைப்பு காரணமாக மகசூல் அதிகரிக்கும்.
ஆடி, தை ஆகிய 2 பட்டங்களில் காய்கறிகள் சாகுபடி செய்யப்படுகின்றன. காய்கறிகளுக்குத் தொழு உரத்துக்குப் பதிலாக தேங்காய்நார் கழிவு உரத்தை அதிகம் பயன்படுத்த வேண்டும். ஏனென்றால் அங்ககக் கரிமசத்து இதில் அதிகமாக இருக்கிறது. இந்த உரத்தைப் பயன்படுத்தினால் வேர் திடமாக இருக்கும்.

கிளைப்பு நிறைய வரும். சுவாசம் நன்றாக இருக்கும். ஈரம் காக்கும் தன்மையும் கூடவே கைக்கூடும். மேலும் நன்மை தரும் நுண்கிருமிகள் வேர்ப்பகுதியில் எண்ணிக்கையில் அதிகமாகப் பெருகும். கத்தரி, வெண்டை, மிளகாய், தக்காளி, கீரைவகைகள் மற்றும் தோட்டப் பயிர்களான தென்னை, வாழை, மா, பலா, கொய்யா, சப்போட்டா, நெல்லி ஆகிய பயிர்களுக்கு தேங்காய் நார் உரத்தைப் பயன்படுத்தலாம்.

எந்தப் பயிராக இருந்தாலும் வேர்ப் பகுதியில் ஓர் ஏக்கருக்கு 80 முதல் 100 கிலோ வரை வேப்பம்புண்ணாக்கு இடவேண்டும். வேப்பம்புண்ணாக்கில் அசாடி ரக்டின் என்ற வேதிப்பொருள் இருப்பதால் கசப்புத்தன்மை இருக்கிறது.

இத்தன்மை காரணமாக வேரில் அழுகல் நோய், வேர் வாடல் நோய், வேரைத் தாக்கும் நூல் புழு வராமல் தடுக்க முடியும். இந்தப் புண்ணாக்கு நோயை உருவாக்கும் கிருமிகளை விரட்டி வேரைச் சுத்தமாக வைத்திருக்கவும் உதவும்.

தரிசு களர் உவர் நிலங்களை மேம்படுத்தும் வழிமுறைகள்

களர் உவர் நிலங்களில் நுண்ணுயிர்களின் எண்ணிக்கையும், அவற்றின் செயல் திறனும் குறைந்து காணப்படும். நுண்ணுயிர்கள் போதிய எண்ணிக்கையில் இருந்தால்தான் இடப்படும் கம்போஸ்ட் மற்றும் தழை உரங்கள் சிதைக்கப்பட்டு வளரும் பயிர்களுக்கு கிடைக்கும்.

மேலும், இம் மண்ணில் இடப்படும் ரசாயன உரங்களும், பயிர்களுக்கு கிடைக்க வேண்டுமானால் நுண்ணுயிர்களின் எண்ணிக்கை பெருமளவில் இருத்தல் வேண்டும்.

களர் நிலங்களில் நெல் சாகுபடி செய்யும் போது நெல் நடவு செய்த 10 நாள்களில் நீலப்பச்சைப்பாசி என்னும் ஒரு வகைப் பாசியை இடுவதால் நெல் பயிர் நன்கு வளரும்.  இப் பாசி களர் உவர் தன்மையைத் தாங்கி வளரும் திறன் கொண்டது. மண்ணின் இயக்கம்  (டஏ) 7.5 முதல் 10 வரை உள்ள நிலங்களில் இது நன்கு வளரும்.  இந்தப் பாசியை மண்ணில் இடும்போது மண்ணிலுள்ள தழைச்சத்து, மணிச்சத்து மற்றும் ஈரப்பதம் ஆகியவை பாதுகாக்கப்படுகின்றன. இப் பாசி ஆக்சாலிக் அமிலம் எனப்படும் ஒரு வகை அமிலத்தை வெளியிடுகிறது.

இந்த அமிலம் மண்ணின் காரத்தன்மையைக் குறைக்க உதவுகிறது. ஒரு ஏக்கருக்கு 4 கிலோ நீல பச்சைப்பாசியை இடுவதால், அது 10 கிலோ தழைச்சத்தை மண்ணில் சேர்ப்பித்து, அதில் வளரும் நெல் பயிருக்கு கிடைக்கச் செய்கிறது. இதன் மூலம் விவசாயிகள் அதிக மகசூலைப் பெறலாம்.

தினமணி தகவல் – திரு சரவணன், வேளாண்மை அலுவலர், நடமாடும் மண் பரிசோதனை நிலையம், கோவில்பட்டி

தரிசு, களர், உவர் நிலங்களை மானிய உதவியுடன் சீரமைக்கலாம்

வேலூர் மற்றும் திருவண்ணாமலை மாவட்டங்களில், ஒருசில கிராமங்களில், சாகுபடி செய்யும் நிலங்களில் களர் மற்றும் உவர் நிலப் பிரச்னைகள் காணப்படுகின்றன.

அதனால் பயிர் எண்ணிக்கை பராமரிக்க முடியாமலும், இடப்படும் எரு, உரங்கள் மற்றும் நீர் வேரினால் உறிஞ்ச முடியாத தன்மையாலும் பயிர் வளர்ச்சி குன்றியும், நுண்ணூட்டச் சத்து பற்றாக்குறையால் பெரும் மகசூல் இழப்பும் ஏற்படுகிறது.

என்ன செய்ய வேண்டும்?

களர் மற்றும் உவர் நிலச் சீர்திருத்தம் செய்ய நிலம் 25 முதல் 30 சென்ட்  பரப்புக்குட்பட்டதாக இருக்க வேண்டும்.

பெரிய நிலமாக இருந்தால் நடுவில் வாய்க்கால் அமைக்கலாம். நிலத்தின் சரிவுக்கு ஏற்ப வடிகால்கள் அமைக்க வேண்டும்.

வயலின் பரப்பிற்கேற்ப ஜிப்சத்தை கணக்கிட்டு பரவலாக இட்ட பிறகு சுமார் 10 செ.மீ. நீர் தேக்கி நன்கு உழவு செய்ய வேண்டும்.

நிலத்தில் தேக்கிய நீர் தானாகவே மண்ணில் ஊறி வடிகாலில் சேரும்படி செய்ய வேண்டும். இதற்கு ஓரிரு நாள்களாகலாம். மீண்டும் குறைந்தபட்சம் இதை 4 முறையாவது செய்ய வேண்டும்.

பிறகு மண்ணில் ஈரம் காய்வதற்கு முன் சணப்பு அல்லது தக்கை பூண்டை விதைத்து பூக்கும் சமயத்தில் மடக்கி உழ வேண்டும். பின்னர் வழக்கம்போல் விவசாயிகள் விரும்பும் பயிரை சாகுபடி செய்யலாம்.

மானியம்

தமிழக அரசு களர், உவர் நிலச் சீர்திருத்த திட்டத்தின் மூலம் களர், உவர் நிலங்களால் பாதிக்கப்பட்ட வயல்களில் மண் மாதிரி எடுத்து அதன் பரிந்துரை அடிப்படையில் ஜிப்சம் மற்றும் ஜிங் சல்பேட் உரங்கள் 50 சதவீத மானியத்தில் வழங்குகிறது.

மேலும் வடிகால் அமைக்க ஊக்கத் தொகையாக ஒரு ஏக்கருக்கு ரூ.1,000 மானியம் வழங்கப்படுகிறது.

வேலூர்

தற்போது 2010-11-ம் ஆண்டில் இத்திட்டம் வேலூர் மாவட்டத்தில் காவேரிப்பாக்கம் ஒன்றியத்தில் புதுப்பட்டு, வேடல், அன்வர்திகான்பேட்டை, கைலாசபுரம் சாலை, மின்னல், வையலாம்பாடி, சேரி ஐயம்பேட்டை, தச்சம்பட்டறை மற்றும் பெருவளையம் கிராமங்களில் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

திருவண்ணாமலை

திருவண்ணாமலை மாவட்டத்தில் கலசப்பாக்கம், ஒன்றியத்தில் லாடாவரம், சிறுவள்ளூர், வீரளூர், கிடாம்பாளையம், காம்பட்டு, படாகம் மற்றும் அனையாலை, சேத்துப்பட்டு ஒன்றியத்தில் பிலாசூர், கொரல்பாக்கம், கரைப்பூண்டி, மட்டப்பிறையூர் மற்றும் ராந்தம் ஆகிய கிராமங்களில் செயல்படுத்தப்பட்டு வருகிறது என சிவகுமார் சிங் தெரிவித்துள்ளார்.

தினமணி தகவல் – திரு சிவகுமார் சிங், வேளாண்மை உதவி இயக்குநர், வேலூர்