விவசாயிகளின் வாழ்க்கையை மாற்றும் தெளிப்பு நீர் பாசனம்!

விவசாயத்தை விட்டு வெளியேறிவருபவர்களை மீண்டும் விவசாயத்துக்கு அழைத்துவரும் வகையில் தெளிப்புநீர் பாசனம் இருப்பதாக விவசாயிகள் தெரிவித்தனர்.

 • காஞ்சிபுரம் மாவட்டத்தில் பாலாறு, செய்யாறு, வேகவதி உள்ளிட்ட ஆறுகள் ஒருகாலத்தில் வற்றாத ஜீவநதியாக திகழ்ந்தன. இதில் செய்யாறு, வேகவதி உள்ளிட்ட ஆறுகள் பாலாற்றில் கலந்து மாவட்டம் முழுவதும் பாசனத்தை பலப்படுத்தியது. ஒரு காலத்தில் காவிரி டெல்டா மாவட்டங்களுக்கு அடுத்த இடத்தில் நெல் உற்பத்தியில் காஞ்சிபுரம் மாவட்டம் சிறந்து விளங்கியது.
 • காலப்போக்கில் காஞ்சிபுரம் மாவட்டம் அந்த பெருமையை படிப்படியாக இழந்து வருகிறது. கடந்த 20 ஆண்டுகளாக பாலாறு உள்ளிட்ட ஆறுகளில் பெயர் அளவுக்குக்கூட தண்ணீரை பார்த்ததில்லை என்று விவசாயிகள் கவலையுடன் தெரிவிக்கின்றனர். இதனால் ஆற்றுப்பாசனம் முற்றிலுமாகத் தடைப்பட்டது.
 • ஆற்றில் நீர்போக்கு தடைபட்டதால், நிலத்தடி நீரும் அதலபாதாளத்துக்குச் சென்றது. இதனால் கிணற்று பாசனமும் கேள்விக்குறியானது. இதில் மின்வெட்டு பிரச்னையும் விவசாயிகளை மிகுந்த கவலையில் ஆழ்த்தியது. இதனால் பெரும்பாலான விவசாயிகள் விவசாயத்தை விட்டு, விளைநிலங்களையும் விற்பனை செய்துவிட்டு காஞ்சிபுரம் மாவட்டத்தில் நாள்தோறும் புதிதுபுதிதாக முளைத்துவரும் பன்னாட்டு நிறுனவங்களுக்கு அடிமையாகி வருகின்றனர்.

 

தெளிப்பு நீர்ப் பாசனம் மூலம் பயிரிடப்பட்ட தோட்டம்.

தெளிப்பு நீர்ப் பாசனம் மூலம் பயிரிடப்பட்ட தோட்டம்.

நுண்ணீர் பாசனம்: இந்த நிலைமை நாடு முழுவதும் இருப்பதாக நபார்டு உள்ளிட்ட வேளாண் சார்ந்த நிறுவனங்கள் மத்திய அரசுக்கு ஆய்வு அறிக்கைகளை சமர்ப்பித்தன. இதைத் தொடர்ந்து முழு மானியத்தில் நுண்ணீர் பாசனங்களான சொட்டுநீர் மற்றும் தெளிப்புநீர் பாசனத்திட்டத்தை அறிமுகம் செய்தது.

இதை அந்தந்த மாநில அரசுகள் நிறைவேற்றும் என்று அறிவித்தது. இதைத் தொடர்ந்து கடந்த ஓராண்டுக்கு மேலாக இந்த நுண்ணீர் பாசனம் இருந்தாலும் அது பெரிய அளவில் விவசாயிகளைச் சென்றடையவில்லை. இப்போது நூண்ணீர் பாசனத் திட்டத்தை முழுவீச்சில் செயல்படுத்த தமிழக அரசு உத்தரவிட்டது.

இந்த நிலையில் காஞ்சிபுரத்தில் இருந்து சுமார் 20 கி.மீ. தொலைவில் உள்ள வாலாஜாபாத் ஊராட்சி ஒன்றியப் பகுதியான புரிசை கிராமத்தில் நூண்ணீர் பாசனமான தெளிப்புநீர் பாசனத்தில் ஈடுபட்டு விவசாயி தனஞ்செயன், மற்றவர்களுக்கு முன் உதாரணமாக திகழ்ந்து வருகிறார்.

இவர் தெளிப்பு நீர் பாசனம் மூலம் சம்பங்கி, ரோஜா, மல்லிகை, கத்தரி, வெண்டை உள்ளிட்ட தோட்டப்பயிர்களை கடந்த ஓராண்டுக்கும் மேலாக பயிரிட்டு வருகிறார். இதில் தண்ணீர் மிச்சப்படுத்தப்படுவதுடன், நல்ல மகசூல் கிடைப்பதாகவும், நல்ல விலை கிடைப்பதாகவும் தெரிவித்தார்.

இதுகுறித்து அவர் மேலும் கூறியது: விவசாயத்துக்கு போதிய அளவு தண்ணீர் இல்லாததால், கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு விவசாயத்தை விட்டுவிட்டு, ஸ்ரீபெரும்புதூரில் உள்ள பன்னாட்டு நிறுவனத்துக்கு வேலைக்குச் சென்றுவிடலாம் என்று வேலை தேடிவந்தேன்.

அப்போது நுண்ணீர் பாசனம் குறித்து தகவல் அறிந்தேன். விவசாயத்துறை அதிகாரிகளிடம் இதுகுறித்து கேட்டு தகவல்களைப் பெற்றேன். அதிகாரிகளும் எனக்கு முழு ஒத்துழைப்பு அளித்தனர். பூக்கள் மற்றும் காய்கறிகள் உள்ளிட்ட தோட்டப் பயிர்களைத் தேர்ந்தெடுத்தேன்.

அதன்படி எனது விளைநிலத்தைப் பார்த்த அதிகாரிகளின் முழு மானியத்தில் தெளிப்பு நீர் பாசன வசதியை ஏற்படுத்திக் கொடுத்தனர். வாய்கால் பாசனத்தின் மூலம் 1 ஏக்கருக்கு பாய்ச்சப்படும் நீரைக் கொண்டு, தெளிப்பு நீர் பாசனத்தின் மூலம் 6 ஏக்கர் வரை பாய்ச்ச முடிகிறது. இதனால் தண்ணீர் சேமிப்பு, மின்சாரம் சேமிப்பு, பணம் சேமிப்பு ஆகியன சாத்தியமாகின்றன.

பயிரிடும் காய்கறிளைப் சென்னை மாம்பலம் காய்கறிச்சந்தையில் இருந்து நேரடியாக வந்து பெற்றுச் செல்கின்றனர். நல்ல விலையும் கிடைக்கிறது. மேலும் காஞ்சிபுரம் மலர்கள் சந்தையில் இருந்து சம்பங்கி, மல்லி ஆகிய பூக்களை பெற்றுச் செல்கின்றனர்.

இதன்மூலம் தெளிப்புநீர் பாசனம் என் வாழ்க்கை பயணத்தையே மாற்றிவிட்டது என்றார். இவரைப் போலவே அதே கிராமத்தைச் சேர்ந்த முருகவேல், சிறுவாக்கம் கிராமத்தைச் சேர்ந்த மகேஷ் ஆகியோர் தெளிப்புநீர் பாசனத்தில் பயனடைந்துள்ளனர்.

தகவல்

வீட்டுத் தோட்டங்களைப் பாதுகாக்க எளிய பாசன தொழில்நுட்பம்

இப்பொழுது மழைபெய்தாலும் கடந்த சில மாதங்களாக தமிழகத்தில் கடும் வெயில் வாட்டி வதைத்தது. மழை போதிய அளவு பெய்யாத நிலையில் கடும் வெப்பம், வீடுகளில் உள்ள தோட்டங்களை கடுமையாக பாதித்து வந்தது.

அடுக்குமாடிக் குடியிருப்புகளில் காய்கறித் தோட்டம் அமைத்திருப்பவர்கள், அலங்காரச் செடிகளை நடவு செய்துள்ள இல்லத்தரசிகள் மற்றும் குழந்தைகள் தங்களது தோட்டங்கள் அழிந்து வருவதை வேதனையுடன் காணும் சூழல் இருந்தது.

மின்வெட்டு பிரச்னை காரணமாக ஏற்படும் நீர் பற்றாக்குறை சூழலும், வீட்டுத் தோட்டங்களுக்கு தேவைப்படும் அதிகளவு நீர்ப் பாசன தேவையை நிறைவு செய்ய உதவுவது கிடையாது.

புதிய பாசன முறையில் நேரடியாகவே நீர்ப் பாசனம் செய்யப்படுவதால், வீட்டுத் தோட்டங்களில் களைகளுக்கு தண்ணீர் வீணாவதும் தடுக்கப்படுகிறது. இப்புதிய எளிய தோட்டக்கலை பாசன முறை வாயிலாக கேரள மாநிலத்தில் வீடுகளில் பல மருத்துவச் செடிகள், மூலிகைகள் அதிகளவில் வளர்க்கப்படுகின்றன.

புதிய பாசன முறையில் நேரடியாகவே நீர்ப் பாசனம் செய்யப்படுவதால், வீட்டுத் தோட்டங்களில் களைகளுக்கு தண்ணீர் வீணாவதும் தடுக்கப்படுகிறது. இப்புதிய எளிய தோட்டக்கலை பாசன முறை வாயிலாக கேரள மாநிலத்தில் வீடுகளில் பல மருத்துவச் செடிகள், மூலிகைகள் அதிகளவில் வளர்க்கப்படுகின்றன.

இத்தகைய நடைமுறை சூழலில் வீட்டுத் தோட்டங்களில் செய்யப்பட்டுள்ள முதலீடுகளைப் பாதுகாக்கவும், வீடுகளின் காய்கறித் தேவைகளை நிறைவு செய்யவும் குறைந்த செலவில், தொழில்நுட்பத் திறனில் பயனில்லாமல் போகும் மருத்துவ பிளாஸ்டிக் கழிவுகள் பெரிதும் உதவி செய்கிறது.

கேரள மாநிலம், கொச்சி மாவட்டத்தில் மருத்துவ பிளாஸ்டிக் கழிவுகளைப் பயன்படுத்தி புதிய மற்றும் எளியப் பாசன தொழில்நுட்பம் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது. இப்புதிய பாசன முறையில் மருத்துவமனைகள், வீடுகளில் மருத்துவத் தேவைகள் முடிந்து கழிவுகளாக எறியப்படும் பிளாஸ்டிக் பாட்டில்கள் அல்லது குடிநீர் பாட்டில்கள் சேகரிக்கப்பட்டு வருகின்றன.

பின்னர் இவை நன்றாக சுத்தம் செய்யப்பட்டு இவற்றில் நல்ல தண்ணீர் அடைக்கப்படுகிறது. பின்னர் இலை சிறிய பிளாஸ்டிக் பாட்டில்களுடன் இணைக்கப்பட்ட குழாய்கள் வாயிலாக செடிகளின் வேர் பகுதிக்குள் செலுத்தப்படுகிறது.

சொட்டு நீர்ப் பாசன முறையில் நாள் முழுவதும் தண்ணீர் சொட்டுகளாக செடிகளின் தேவையை நிறைவு செய்வதால், அவை வெப்பத்தை தாங்கி எளிதாக வளர முடிகிறது. மேலும் நாள் முழுவதும் தண்ணீர் பாசனம் செய்யப்படுவதால் தோட்டங்களில் நல்ல குளிர்ச்சியும் ஏற்படுகிறது.

தற்போதைய புதிய பாசன முறையில் நேரடியாகவே நீர்ப் பாசனம் செய்யப்படுவதால், வீட்டுத் தோட்டங்களில் களைகளுக்கு தண்ணீர் வீணாவதும் தடுக்கப்படுகிறது. இப்புதிய எளிய தோட்டக்கலை பாசன முறை வாயிலாக கேரள மாநிலத்தில் வீடுகளில் பல மருத்துவச் செடிகள், மூலிகைகள் அதிகளவில் வளர்க்கப்படுகின்றன.

இவ்வாறு மிகவும் குறைந்த செலவில் பிளாஸ்டிக் கழிவுகளை பயனுள்ள முறையில் நீர் பாசனத்துக்குப் பயன்படுத்தி அடுக்குமாடிக் குடியிருப்புத் தோட்டங்கள், வீடுகளின் வாயிலாக உள்ள காய்கறித் தோட்டங்களை எளிதாகப் பாதுகாக்க முடியும்.

பிறபயன்கள்: தற்போது கேரள மாநிலத்தில் வீட்டுத் தோட்டங்களில் அமைக்கப்பட்டுள்ள இப்புதிய பாசன முறையில் தண்ணீரில் கரையும் உரங்களை பரிந்துரைக்கப்பட்ட அளவில் பயன்படுத்தி அதிகளவில் மகசூல் பெற முடியும்.

பூச்சி மற்றும் நோய்த் தாக்குதலை கட்டுப்படுத்த எளிய மூலிகைக் கரைசல், பூச்சி விரட்டிகளை இப்புதிய பாசன தொழில்நுட்பத்தின் மூலம் கலந்து பயன்படுத்த முடியும். வீட்டுத் தோட்டங்களில் உள்ள பூக்கள் அதிகமாக பூக்கவும், தேவைப்படும் பயிர் ஊக்கிகளை பயன்படுத்தி செடிகளின் வளர்ச்சி மற்றும் பூக்கும் திறனை அதிகப்படுத்தலாம்.

எனவே அடுக்குமாடிக் குடியிருப்புகள் வீட்டு காய்கறித் தோட்டங்கள், அலங்காரச் செடிகளை வளர்ப்பவர்கள் இப்புதிய பாசன முறை தொழில்நுட்பம் மூலம் கடும் வெப்பம் மற்றும் மின்வெட்டு பிரச்னையில் இருந்து பாதுகாத்து குறைந்த செலவில், குறைந்த நீரைப் பயன்படுத்தி தங்களது தோட்டங்களைப் பாதுகாக்கலாம். அதிக மகசூலையும் பெறலாம்.

தினமணி தகவல் – அண்ணாமலைப் பல்கலைக்கழக வேளாண் விரிவாக்கத் துறை உதவிப் பேராசிரியர் முனைவர் தி.ராஜ்பிரவீண்

வேளாண் அரங்கம் மார்க்கெட்டில்

காய்கறி சாகுபடி விவசாயிகளுக்கு துல்லிய பண்ணையத் திட்டம்

சிவகங்கை மாவட்டத்தில், ஆண்டுதோறும் சராசரியாக 600 ஹெக்டேர் பரப்பில் வெண்டை, கத்தரி, தக்காளி, கொடி வகை காய்கறிகள் பயிரிடப்படுகின்றன.

இதைத் தவிர 5 ஆயிரம் ஹெக்டர் பரப்பில் மிளகாய் சாகுபடி செய்யப்படுகிறது.

இப் பயிர்களில் பாசனநீர், உரங்கள் மற்றும் பயிர் பாதுகாப்பு மருந்துகள் ஆகியவை சாதாரண முறையில் அளிக்கும்போது, செடிகளின் வேர்பகுதிகள் மட்டுமல்லாது சுற்றியுள்ள இடங்களிலும் அளிக்கப்பட்டு வீணாகிறது.

இதனைத் தவிர்த்து, நீர்ப்பாசனம் மற்றும் இடுபொருள்களை துல்லியமாக பயிர்களுக்கு கிடைக்கச் செய்து, குறைந்த செலவில் அதிக விளைச்சல் மற்றும் வருமானம் தரும் திட்டமே துல்லிய பண்ணைத் திட்டமாகும்.

இத் திட்டத்தின் கீழ் 2012-2013 ஆம் ஆண்டு விவசாயிகளின் நிலங்களில் 200 ஏக்கர் பரப்பில் சொட்டுநீர் பாசனம் (உரம் கரைத்து இடும் டேங்க்) உள்பட அமைக்கப்பட்டு காய்கறி பயிர்கள் சாகுபடி செய்யப்படவுள்ளன.

வெண்டை, கத்தரி, தக்காளி மற்றும் மிளகாய் ஆகிய பயிர்களை சாகுபடி செய்யும் விவசாயிகள், இதற்கென தேர்வு செய்யப்பட்டு தற்போது சொட்டுநீர் பாசனக் கருவிகள் அமைக்கப்பட உள்ளன. இதற்கென நுண்ணீர்ப் பாசனத் திட்டத்தின் கீழ் சிறு, குறு விவசாயிகளுக்கு ரூ. 43,816 மானியமும் இதர விவசாயிகளுக்கு 75 சதவீதம் மானியமும் அளிக்கப்படுகிறது.
பயிர் சாகுபடிக்கென வீரிய ஒட்டுரக விதை மற்றும் நீரில் கரையும் உரங்கள் ஒரு ஹெக்டேருக்கு ரூ. 20 ஆயிரம் மானியத்தில் வழங்கப்பட உள்ளது. மேலும், தேர்வு செய்யப்பட்ட விவசாயிகளுக்கு துல்லியப் பண்ணையம் அமைப்பது குறித்து தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகம் மூலம் பயிற்சி அளிக்கப்பட உள்ளது.

எனவே காய்கறி பயிர்களில் துல்லிய பண்ணையம் அமைத்து, அதிக வருமானம் பெற விரும்பும் விவசாயிகள் தங்களது பகுதி வட்டார தோட்டக்கலைத் துறை அலுவலர்களை தொடர்புகொண்டு பயன்பெறலாம் என மாவட்ட தோட்டக்கலைத் துறை துணை இயக்குநர் இருளப்பன் தெரிவித்துள்ளார்.

தினமணி செய்தி – தோட்டக்கலை துணை இயக்குநர் எஸ். இருளப்பன்

வேளாண் பல்கலை இணைய தளத்தில் துள்ளிய பண்ணைத்திட்டம்

 

வேளாண் அரங்கம் மார்க்கெட்டில்

தமிழ்நாடு வேளாண் பல்கலை

வேளாண் அறிவியல் மையம் – குன்றக்குடி

சிக்கன நீர் நிர்வாகம்

கரும்பிற்கு 2000 முதல் 2500 மி.மீ. அளவு நீர் தேவைப்படுகிறது. கரும்பு ஓர் ஆண்டு பயிர் என்பதால் பருவமழை போக எஞ்சியுள்ள மாதத்தில் நீர் பற்றாக்குறை ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே நிலத்தடி நீர்ப்பாசனம் அல்லது அடிப்பரப்பு நீர் பாசனம் முறையை மேற்கொண்டு நீர் பற்றாக் குறையை சமாளிப்பதுடன் மொத்த விளைச்சலையும் அதிகரிக்கலாம். மேலும் நமது மொத்த நீர்ப்பாசனப் பரப்பையும் அதிகரிக்கலாம்.

நிலத்தடி நீர்ப்பாசனம் அல்லது அடிப்பரப்பு நீர்ப்பாசனம் என்பது வழக்கத்தில் உள்ள சொட்டு நீர்ப்பாசனம் போல் அல்லாமல் பயிருக்கு மிகத்துல்லியமான அளவு நீரினை சரியான அளவு உரம், பூச்சிக்கொல்லி மருந்துடன் வேருக்கு நேரடியாகக் கொடுப்பதாகும்.

முக்கிய நோக்கம்:

 • பக்கவாட்டில் நீர் பரவுதல் மண்ணில் கீழ்நோக்கிய நீர்க்கசிவை குறைத்தல்,
 • பயிரின் வேரைச்சுற்றி நீர் இருத்தல்.
 • வேரின் நான்கு புறமும் வட்டவடிவில் நீரைப் பரவச்செய்து மண்ணில் கீழ்நோக்கிய நீர்க்கசிவு,
 • பக்கவாட்டில் நீர் பரவுவதைக் குறைப்பதே இதன் முக்கிய குறிக்கோளாகும்.
 • மேலும் உரம், பூச்சிக்கொல்லி மருந்தினை நீருடன் கலந்து கொடுப்பதன் மூலம் அதிக, தரமான விளைச்சல் கிடைக்கிறது.

சொட்டு நீர்ப்பாசனம் / நிலத்தடி நீர்ப்பாசனம் வேறுபாடுகள்:

சொட்டு நீர்ப்பாசனத்தில் சொட்டுவான் கீழ்நோக்கி இருப்பதால் கீழ்நோக்கிய நீர்க்கசிவு பக்கவாட்டில் நீர்பரவுதல் அதிகமாக இருக்கும். ஆனால் நிலத்தடி நீர்ப்பாசனத்தில் சொட்டுவான் மேல்நோக்கி இருக்குமாறு அமைப்பதால் வேரின் நான்குபுறமும் வட்டவடிவில் நீர் பரவி பயிரின் வேரை எப்பொழுதும் ஈரத்துடன் வைத்துக்கொள்கிறது. இதனால் பயிர் எப்பொழுதும் செழிப்பாக இருக்கும். மேலும் மண்ணில் காற்றோட்டத்தை அதிகரிக்கச் செய்து மண்ணில் நீர் நுண்புழை நீர் பரவும் விதத்தை அதிகரிக்கச் செய்கிறது. இதனால் மண்ணில் நுண்ணுயிர் பெருகி மண்வளம் கூடுகிறது.

நீர்ப்பாசனம் அமைக்கும் முறை:

25 முதல் 30 செ.மீ. அளவு அதாவது முக்கால் அடி முதல் ஒரு அடி வரை ஆழமும், 40 செ.மீ. அகலமும் உள்ள அகழியை நீளவாக்கில் எடுக்க வேண்டும். வரிசைக்கு வரிசை 5 அடி முதல் ஐந்தரை அடி வரை இருக்கு மாறு பார்த்துக்கொள்ள வேண்டும். குறைந்த செலவு உள்பக்கவாட்டு குழாய்களை அகழியின் நடுவில் 25-30 செ.மீ. ஆழத்தில் வைத்து சொட்டுவான் மேல்நோக்கி இருக்குமாறு அமைக்க வேண்டும். பின் அதன்மேல் 2.5 செ.மீ. அளவு மண்ணைப்போட்டு மறைத்தல் வேண்டும். இரு பரு கரணைகளைப் பக்கவாட்டு குழாய்களுக்கு இரு பக்கமும் ஒன்றரை கரணையாக அடுக்கி, பின் கரணை மூடும் அளவிற்கு மண்ணைப் பரப்பி மூடுதல் வேண்டும். மீதமுள்ள அகழியினைப் பயிர் நன்கு முளைத்தபின் (40-45வது நாள்) மூடி பயிருக்கு மண்ணை அணைக்க வேண்டும்.

நன்மைகள்:

ஒரே சீராக இருக்கும். பயிர் வளர்ச்சி குறைந்த அளவு கீழ்நோக்கிய நீர்கசிவு பக்கவாட்டில் நீர் பரவுதல் குறைய வாய்ப்பு உள்ளது. காற்று சூரிய வெப்பத்தினால் மண் மேற்பரப்பிலுள்ள ஈரப்பதம் வீணாதல் குறையும். பயிருக்கு தேவையான அளவு நீரினை மிகச்சரியான அளவு நீருடன் உரம், பூச்சிக்கொல்லி மருந்தினைக் கொடுப்பதன் மூலம் பயிரின் தரமும் விளைச்சலும் அதிகரிக்கிறது. நோய், பூச்சி தாக்குதல் குறைவு. வரிசைக்கு வரிசை பயிரின் இடையே களை முளைத்தல் குறையும். பரந்த மிக துரிதமாக வேர் வளர்ச்சியடையும். அனைத்தையும்விட சொட்டுநீர்ப்பாசனத்தைவிட நீர் சிக்கனமாக செலவாகும்.

(தினமலர் தகவல்: முனைவர் எம்.விஜயகுமார், வேளாண்மை ஆராய்ச்சி நிலையம், பவானிசாகர்-638 451. போன்: 04295-240 244)
டாக்டர் கு.சௌந்தரபாண்டியன்

வேளாண் அரங்கம் மார்க்கெட்டில்

பவானிசாகர் வேளாண்மை ஆராய்ச்சி நிலையம்

பாசனக் கருவிகள்

ஒருங்கிணைந்த பண்ணையம் – பட்டுக்கோட்டை விவசாயி பற்றிய ஒரு கண்ணோட்டம்

ஒருங்கிணைந்த பண்ணையம் மற்றும் இயற்கை வேளாண்மை குறித்து நண்பர்களிடமும் என் குடும்பத்தினரிடமும் சில முறை பேசியிருக்கிறேன். விவசாயத்தின் மீது கொண்ட ஆர்வமின்மையோ அல்லது என் மீது உள்ள அபரிமிதமான நம்பிக்கை(!)யோ யாரும் செவி மடுத்துக் கேட்பாரில்லை. ஏற்கனவே சிறிய அளவிளான ஒரு ஒருங்கிணைந்த பண்ணையம் பற்றி தினமணி செய்தியை இங்கே மீள்பதிவு செய்திருக்கிறேன் (மீன் குழி மற்றும் நெல்). சுட்டிக்கு இங்கே.

பசுமை விகடனின் இந்த பதிப்பில் தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை அருகில் உள்ள நைனான் குளத்தைச் சேர்ந்த விவசாயி திரு வெங்கட்ராமன் செயல்படுத்தியிருக்கும் ஒருங்கிணைந்த பண்ணையம் பற்றிய விரிவான கட்டுரை ஒன்று வந்துள்ளது.  பசு, எருமை, ஆடு மற்றும் கோழி முதலான கால்நடைகள், அவற்றிற்கான தீவனப் புல் வளர்ப்பு, குறுவை மற்றும் சம்பா நெல் அறுவடை, அத்துடன் மீன் குட்டை  அத்துடன் பண்ணையைச் சுற்றி ஆடாதொடை, நொச்சி என்று இயற்கை விவசாயத்தை நம்பி வாழ்ந்து வருகிறார்.

திரும்ப கட்டுரையை மீள் பதிப்பு செய்ய இயலாது என்றாலும் அவர் கூறிய செயல்முறைகளையும் இயற்கை விவசாயம் வழியான பயன்களையும் சொல்ல விரும்புகிறேன்.

வெங்கட்ராமன் பண்ணையம்

பட்டுக்கோட்டை விவசாயி வெங்கட்ராமனின் ஒருங்கிணைந்த பண்ணையம்

நெல்

 • ஒரு ஏக்கரில் நெல் சாகுபடி செய்ய 10 செண்டில் நாற்றங்கால் அமைத்து விதைகளைத் தூவவும்
 • 2 லி பஞ்சகவ்யத்துடன் 60 லிட்டர் தண்ணீரைக் கலந்து 7 மற்றும் 15ஆம் நாள் தெளிக்கவும்
 • விதைத்ததில் இருந்து 25ஆம் நாளுக்குள் நாற்றுகளைப் பறித்து வயலில் நடவும்
 • நடவில் இருந்து 30ஆம் நாள் – நாலரை லிட்டர் பஞ்ச கவ்யத்துடன் 180 லிட்டர் தண்ணீர் கலந்து தெளிக்கவும்
 • கழிவுநீர் குட்டை வழி பாசனம் செய்தால் வேறு எந்த ஒரு இயற்கை இடுபொருட்களும் தேவையில்லை. வாரம் ஒரு முறை பாய்ச்சவும்
 • சாதாரண நடவு முறையில் குறுவை மற்றும் சம்பா நெல் சாகுபடி
 • மதிப்புக் கூட்டி அரிசியாக விற்பனை. தவிடு கால்நடைத் தீவனமாகிறது

பசு மற்றும் எருமை

 • ஆடு மாடுகளுக்கு தினமும் 5 மணிநேர மேய்ச்சல்
 • மேய்ச்சல் மூலம் போதுமான புல் கிடைக்காத நாட்களில் மட்டும் வைக்கோல் மற்றும் தீவனப்புல்
 • 30 சதம் அரிசித் தவிடு – 20 சதம் புண்ணாக்கு – 30 சதம் சோள குருணை – 10 சதம் பாசிப்பருப்பு உமி – 10 சதம் உளுந்து உமி அகியவற்றை ஒன்றாகக் கலந்து லேசாக ஈரம் இருக்கும் அளவுக்கு மட்டும் தண்ணீர் கலந்து புட்டு பக்குவத்தில் அடர் தீவனம் தயாரிக்கவேண்டும்
 • ஒரு மாட்டுக்கு காலை ஒண்ணே கால் கிலோ – மாலை ஒண்ணே கால் கிலோ
 • ஆடுகளுக்கு தனியே தீவனம் தேவையில்லை.
 • கோழிகளுக்கும் தேவையில்லை. குப்பை கூளங்கள் மற்றும் சிதறிய தீவனங்களும் இவைகளுக்குப் போதும்
 • பால் விற்பனையுடன் சாணத்தையும் சாணம் மற்றும் கழிவு நீர் கலந்து பஞ்ச கவ்யத்தையும் விற்றுவிடுகிறார். நெல்லுக்குக் கூட தொழுஉரம் போடுவதில்லை என்கிறார்.
 • சாணத்தின் ஒரு பகுதி இவருடைய பஞ்சகவ்ய தேவைக்கும் மீன் குட்டைக்கும் போய்விடுகிறது
 • மீன் குட்டைக்கும் வயலுக்கும் நீர் கழிவு நீர் குட்டையிலிருந்தே போகிறது.
 • கோழி குஞ்சுகள் மற்றும் கோழி விற்பனை, மீன் குளத்தின் மீன் விற்பனை என்று இவரது வருடாந்திர கல்லா லாபம் – என்னுடைய சம்பளத்தை விட அதிகம் 🙂
 • இயற்கை வழி வேளாண்மை என்பதால் நிறைய மண்புழுக்கள் தோன்றுகின்றன. வேர் பகுதி பூச்சிகளைத் தின்று அழிக்கின்றன.
 • கொக்குகள் வழி பயிரின் நடுப்பகுதி மேல்பகுதி பூச்சிகள் சம்ஹாரமடைகின்றன. அத்துடன் மாடுகளிடம் உள்ள ஒட்டுண்ணிகளைக் காலி செய்து விடுகின்றன.
 • பேன்கள், உன்னிகள், ஈக்கள் இல்லாமல் இருந்தாலே கால்நடைகள் ஆரோக்கியமாக இருக்கும்

விவசாயம் என்பது அனைவருக்கும் பார்முலா மாதிரி அமைவதில்லை. என்றாலும் இவருடைய இயற்கை வேளாண்மை மற்றும் சமயோஜிதம் அவருக்கு பயன்தந்திருக்கிறது.

வாழ்த்துக்கள்.

மண்புழு எருவினை பிரித்தெடுக்கும் முறை

மண்புழு உற்பத்தி முறைகள் – தொட்டிமுறை, குழி முறை, படுக்கை முறை. நன்கு மக்கிய பயிர்க்கழிவுகள் மற்றும் சாணத்தை மண்புழுவிற்கு உரமாக தருவதால் ஒரு மாதத்திலேயே மண்புழு எருவினை எடுத்து பயன்படுத்தலாம். அதே சமயம் பாதியளவு மக்கிய, சரியாக மக்காதநிலையில் உள்ள பொருட்களை உணவாக்கி கொடுத்தால் 2 மாதங்கள் கழித்துத்தான் மண்புழு எருவினைப் பெறமுடியும்.

மண்புழு எருவினை சேகரிக்க முடிவு செய்தவுடன் தொட்டியில் நீர் தெளிப்பதை 2, 3, நாட்கள் நிறுத்தி வைக்க வேண்டும். மண்புழுக்கள் ஈரம் மிகுந்த அடிப்பகுதிக்குச் சென்றுவிடும். இச்சமயத்தில் நாம் மேலே பரப்பியுள்ள சிறுசிறு செங்கற்களின் இடையிடையே காணப்படும் மண்புழுவின் குருணை வடிவ கழிவுகளை சேகரிக்க வேண்டும். இக்கழிவுகளின் மீது நீர் தெளித்து ஈரத்தன்மையை பராமரிக்க வேண்டும். இக்கழிவுகளை நேரடியாக விளைநிலங்களில் இட்டு பயன்படுத்தலாம். மண்புழு எருவினை பைகளில் அடைத்து ஈரம் உலராமல் பாதுகாத்து 6 முதல் 8 மாத காலம் வரை பயன்படுத்தலாம். ஒரு கிலோ எடைக்கு சுமார் 1000 மண்புழுக்கள் இருக்கும். இவை ஒரு நாளில் பயிர்க்கழிவுகளை உண்டு 5-6 கிலோ எருவினைத் தருகின்றன. நன்கு புழுக்களை பராமரித்தால் ஒரு மாதத்திற்கு 150 கிலோ வரை எருவினை பெறலாம். நன்கு வளர்ச்சியடைந்த நிலையில் சுமார் 200 கிலோ வரை எரு கிடைக்கும். கிலோ 6 முதல் 8 ரூபாய் வரை விலை போகும்.

நெல்லுக்கும் சொட்டுநீர் பாசனம் அமைத்து அசத்திக் கொண்டிருப்பவர் சேலம் மாவட்டம், நாகியம்பட்டி அப்புத்தோட்டம் கே.கருப்பணன் என்ற விவசாயி. ஏற்கனவே விவசாயி தன்னிடம் இருந்த சொட்டுநீர்க் குழாய்களை வைத்து 70 சென்ட் நிலத்தில் ஏ.டி.டி.45 ரக நெல்லுக்குதானே சொட்டுநீர் அமைத்துள்ளார். நிலத்தில் பல பயிர் சாகுபடி செய்து அவையெல்லாம் பூத்து வந்ததும் மடக்கி உழவு செய்துவிட்டு பின்னர் தொழு உரம் போட்டு பரம்படித்து நிலத்தை சமன்செய்து, நாற்றங்கால் மூலம் நாற்று தயாரித்து ஒற்றை நாற்று முறையில் ஒரு அடி இடைவெளியில் கயிறு பிடித்து நாற்று நட்டுள்ளார்.

பின்னர் 4 அடி இடைவெளிக்கு ஒரு குழாய் (லேட்ரல்) வருவதுபோல் 18 மி.மீ. குழாயை அமைத்து அதில் இரண்டரை அடி இடைவெளியில் ஒரு துளையிட்டு சிறிய குழாயை (மைக்ரோ டியூப்) சொருகிவைக்க வேண்டும். நடவு செய்த ஒரு வாரத்தில் தலா 2 லிட்டர் சூடோமோனாஸ், டிரைகோடெர்மா விரிடி உயிரி பூஞ்சாணத்தை சொட்டுநீரில் கலந்து நிலத்துக்கு கொடுக்க வேண்டும். இதுதவிர வேறு எந்த இடுபொருளும் கொடுக்கவில்லை. கோனோவீடரை கிழக்கு மேற்காக மட்டும் உருட்டி களை எடுக்க வேண்டும். இப்படிச் செய்வதால் சொட்டுநீர் குழாய்க்கு எந்த பாதிப்பும் வராது. விதை முளைத்ததிலிருந்து சுமார் 50 நாட்களில் பூ கரு உருவாகும். அதிலிருந்து 30 நாட்களில் பூ பூக்கும். அதிலிருந்து கதிர் முதிர்ச்சி அடைய 30 நாட்கள் ஆகும்.

வேர் பிடிக்கும் தருணம், பூக்கரு உண்டாகும் சமயம், பூக்கும் தருணம் நீர் பற்றாக்குறை ஏற்பட்டால் மகசூலில் பெரிய பாதிப்பு இருக்கும். மற்ற சமயங்களில் காய்ச்சலும் பாய்ச்சலும் இருந்தாலே போதுமானது. அரை மணி நேரம் பாய்ந்தாலே நிலம் ஈரமாகிவிடும். வழக்கமான முறையில் ஒரு ஏக்கர் நெல் சாகுபடி செய்வதற்கு தேவைப்படும் தண்ணீரை வைத்து சொட்டு நீர்ப்பாசனம் மூலம் 3 ஏக்கர் சாகுபடி செய்யலாம். வழக்கமான முறையில் 70 சென்டில் 20 மூடை (70 கிலோ) மகசூல் எடுப்பார். சொட்டுநீர் பாசனம் மூலம் கூடுதலாக 9 மூடை நெல் கிடைத்துள்ளது.

அறுவடைக்கு அடுத்த நாளே குழாய்களை சுருட்டி வைத்துவிட்டு உழவு ஓட்டிவிடலாம் என்கிறார் விவசாயி. தொடர்புக்கு: கே.கருப்பண்ணன், 97869 81299 (தகவல்: பசுமை விகடன், 25.6.10)

மா-வில் கூடுதல் லாபம் பெற யோசனை

மா நடவில் புதிய தொழில்நுட்பத்தை பயன்படுத்தினால் கூடுதல் லாபம் பெற முடியும் என்று தோட்டக் கலைத் துறை தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் மா உற்பத்தி பல மாவட்டங்களில் இருந்தாலும், கிருஷ்ணகிரி மாவட்டம்  முதலிடம் வகிக்கிறது. இங்கு 40 ஆயிரம் ஹெக்டேரில் மா சாகுபடி செய்யப்படுகிறது.

ஒரு ஹெக்டேரில் சராசரியாக 8 மெட்ரிக் டன் மாம்பழம் உற்பத்தி செய்யப்பட்டு வந்தது. ஏற்கெனவே 30 அடி இடைவெளியில் மாமரங்கள் நடப்பட்டு வந்தன. இதனால் ஒரு ஹெக்டேருக்கு 100 மரங்கள் மட்டுமே நடப்பட்டு வந்தன.

புதிய தொழில்நுட்பத்தில் 15 அடி இடைவெளியில் மா மரங்களை நடுவதன் மூலம்  ஒரு ஹெக்டேருக்கு அதிக எண்ணிக்கையில் மரங்களை நட்டு 50 சதவீதம் உற்பத்தியை   அதிகரிக்க முடியும். இதன் மூலம் ஹெக்டேருக்கு 12 மெட்ரிக் டன் மாம்பழம் உற்பத்தி செய்ய முடியும். இந்த மா அடர்வு முறை தோட்டக் கலைத் துறை மூலம் பரிந்துரைக்கப்படுகிறது. இதுவரை மா சாகுபடி மானாவாரி பயிராக சாகுபடி செய்து வந்ததை சொட்டு நீர் பாசனம் மூலம் நீர்ப் பாய்ச்சுவதால் மாவில் உற்பத்தி அதிகபட்சமாக இரு மடங்காக உற்பத்தி செய்யலாம்.

இதை கருத்தில் கொண்டு மா நெருக்கு நடவு செய்வோருக்கு மானியத்தில் சொட்டு நீர் பாசனம் அமைக்க தோட்டக் கலைத் துறை விண்ணப்பங்களை வரவேற்கிறது.

இதுகுறித்து தோட்டக்கலைத்துறை உதவி இயக்குநர் பி.காளியப்பன் கூறியது:

மா மரங்கள் சுமார் 35 வகைகள் இம்மாவட்டத்தில் பயிர் செய்யப்பட்டாலும் பெங்களூரா, பாலபாடு, பங்கனப்பள்ளி, செந்தூரா, நீலம், சேலம், மல்லிகா, அல்போன்சா, பையூர்-1 ஆகிய ரகங்களே அதிக அளவு பரப்பில் பயிர் செய்யப்படுகின்றன.

மா நெருக்கு நடவு செய்ய அல்போன்சா, மல்லிகா, பையூர்-1, பசந்த், ரத்னா, பனேசான் ஆகிய ரகங்கள் மிகவும் உகந்தவை. மா நெருக்கு நடவுக்கு அரசு மானியம்

 1. முதலாம் ஆண்டுக்கு ரூ.24,750,
 2. 2-ம் ஆண்டுக்கு ரூ.15,600,
 3. 3-ம் ஆண்டுக்கு ரூ.15,150 என

உரம், சொட்டு நீர்ப்பாசன கருவிகளுக்காக தோட்டக் கலைத்துறை  வழங்குகிறது.
ஆர்வமுள்ள விவசாயிகள் உதவி இயக்குநரின் (ஓசூர்) செல்போன் எண் 94436-32500-ஐ தொடர்பு கொள்ளலாம் என்றார்.