ஜனவரி மாதத்திற்கான பூச்சி நோய் கண்காணிப்பு மற்றும் கட்டுப்பாட்டு முறை – TNAU

ஜனவரி மாதத்திற்கான பூச்சி நோய் கண்காணிப்பு மற்றும் கட்டுப்பாட்டு முறைகளை, தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ளது.

நெல்:

நெற்பயிரில் இலைச்சுருட்டுப்புழு மற்றும் தண்டுத் துளைப்பான் தாக்குதல் தருமபுரி, காஞ்சிபுரம், நாகப்பட்டினம், புதுக்கோட்டை, ராமநாதபுரம், சிவகங்கை, தஞ்சாவூர், தேனி, திருவாரூர், திருநெல்வேலி, திருவண்ணாமலை மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் காணப்படுகின்றன.

இலைச் சுருட்டுப் புழுவிற்கு விளக்குப் பொறியும் வேப்பங்கொட்டைச் சாறும்:

இவற்றைக் கட்டுப்படுத்த விளக்குப் பொறிகளை அமைத்து பூச்சிகளைக் கட்டுப்படுத்தலாம். பூச்சிகளின் பாதிப்பு அதிகமாக இருக்கும் நிலையில் வேப்பங்கொட்டை சாறு 5 சதக் கரைசலைத் தயாரித்து பயிர்களில் தெளிக்கவும் அல்லது பாஸ்போமிடான் 40 எஸ்.எல். 600 மி.லி./ ஹெக்டர் (அ) புரோபனோபாஸ் 50 இ.சி. 1,000 மி.லி./ ஹெக்டர் மருந்தினை தெளித்துக் கட்டுப்படுத்தலாம்.

இலைப் புள்ளி:

நெல்லில் இளைப்புள்ளி நோய் தாக்குதல் சிவகங்கை மாவட்டத்தில் பரவலாக காணப்படுகிறது. இதைக் கட்டுப்படுத்த மேங்கோசெப் 2.0 கிராம்/ லிட்டர் (அ) எடிபென்பாஸ் 1 மி.லி./ லிட்டர் என்ற முறையில் கலந்து 2 அல்லது 3 முறை 10-15 நாள்கள் இடைவெளியில் நோய் தாக்குதலுக்கு ஏற்பட தெளிக்குமாறு விவசாயிகளுக்கு அறிவுறுத்தப்படுகிறது.

பாக்டீரியா இலைக்கருகல்:

பாக்டீரியா இலைக் கருகல் நோய் தாக்குதல் தருமபுரி, காஞ்சிபுரம், நாகப்பட்டினம், புதுக்கோட்டை, ராமநாதபுரம், தஞ்சாவூர், திருவாரூர் மாவட்டங்களில் தென்படுகிறது. இதைக் கட்டுப்படுத்த ஸ்ட்ரெப்டோமைசின் சல்பேட் மற்றும் டெட்ராசைக்களின் 300 கிராம் மற்றும் காப்பர் ஆக்ஸிகுளோரைடு 1.25 கிராம்/ ஹெக்டர் என்ற அளவில் தெளித்துக் கட்டுப்படுத்தலாம்.

நெல் குலை நோய்க்கான முன்னறிவிப்பு:

தட்பவெப்ப நிலை சாதகமாக இருப்பதால் கடலோர மாவட்டங்களில் நெற்பயிரை குலை நோய் தாக்குவதற்கு வாய்ப்புள்ளது. அதனைக் கட்டுப்படுத்த 0.1 சதவீதம் (1 மி.லி./ 1 லிட்டர் தண்ணீரில்) டிரைசைகுளோசோல் என்ற மருந்தினை 10 நாள்கள் இடைவெளியில் தெளிக்கவும்.

பருத்தி:

சாறு உறிஞ்சிகள்

தேனி மாவட்டத்தில் சாறு உறிஞ்சும் பூச்சிகள் தென்படுகின்றன. மஞ்சள் நிற ஒட்டும் பொறியை உபயோகித்து இவற்றின் நடமாட்டத்தைக் கண்காணிக்கவும் (அ) இமிடோகுளோபிரிட் 200 எஸ்.எல். என்ற மருந்தினை 100 மி.லி./ ஹெக்டர் (அ) மெத்தில் டெமட்டான் 25 இ.சி. 500 மி.லி./ ஹெக்டர் என்ற அளவில் தெளித்துக் கட்டுப்படுத்தலாம். காய்ப்புழுக்களின் நடமாட்டம் குறைவாகவே தென்படுகிறது. இவற்றை இனக் கவர்ச்சிப் பொறிகளை வைத்துக் கட்டுப்படுத்தவும்.

கரும்பு:

தண்டுதுளைப்பான்

சிவகங்கை தஞ்சாவூர், நாமக்கல் மற்றும் விழுப்புரம் மாவட்டங்களில் தண்டுத்துளைப்பான் தாக்குதல் தென்படுகின்றது. இதைக் கட்டுப்படுத்த டிரைக்கோகிராம்மா முட்டை ஒட்டுண்ணிகளை ஒரு ஏக்கருக்கு 6 சி.சி. என்ற அளவில் வெளியிடவும்.

செவ்வழுகல் நோய்

செவ்வழுகல் நோய் தாக்குதல் தஞ்சாவூர், நாகப்பட்டினம் மற்றும் சிவகங்கை மாவட்டங்களில் காணப்படுகின்றது. இதைக் கட்டுப்படுத்த கரும்புக் கரணைகளை 0.1 சதவீதம் கார்பன்டெசிம் (அ) 0.05 சதவீதம் டிரைட்மெபன் என்ற கரைசலில் 15 நிமிடம் ஊற வைத்து விதை நேர்த்தி செய்து நடவு செய்ய வேண்டும்.

நிலக்கடலை:

இலைச் சுருட்டுப் புழு

நாமக்கல் மாவட்டத்தில் இலைச் சுருட்டுப் புழுவின் தாக்குதல் காணப்படுகிறது. விளக்குப் பொறிகளை வைத்து பூச்சிகளின் நடமாட்டத்தினைக் கண்காணிக்கவும், தேவைப்படின் வேப்பங்கொட்டைச் சாறு 5 சதவீதம் தயாரித்து தெளிக்கவும்.

இலைப்புள்ளி நோய்

தருமபுரி மற்றும் ராமநாதபுரம் மாவட்டங்களில் இலைப்புள்ளி நோய் தென்படுகின்றது. இதைக் கட்டுப்படுத்த கார்பன்டெசிம் 0.1 சதவீதக் கரைசல் (அ) மேங்கோசெப் (0.2) சதவீத கரைசல் (அ) குளோரேதலானில் (0.2) சதவீத கரைசலைத் தெளித்துக் கட்டுப்படுத்தலாம்.

மரவள்ளி, பப்பாளி, மல்பெரி

பப்பாளி மாவுப் பூச்சி:

மரவள்ளி, பப்பாளி, மல்பெரி பயிரிடும் விவசாயிகள் பப்பாளி மாவுப் பூச்சியின் தாக்குதலைக் கண்காணிக்கவும். இவற்றைக் கட்டுப்படுத்த அருகில் உள்ள தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக கல்லூரிகள், ஆராய்ச்சி நிலையங்கள் மற்றும் வேளாண் அறிவியல் நிலையங்களை அணுகி ஒட்டுண்ணிகளை இலவசமாகப் பெற்று மாவுப் பூச்சியினைக் கட்டுப்படுத்தலாம்.

மேலும் விவரங்களுக்கு

பேராசிரியர் மற்றும் தலைவர்,
வேளாண் பூச்சியியல் துறை,
தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம்,
கோவை-641003. தொலைபேசி: 0422-6611214.

பேராசிரியர் மற்றும் தலைவர்,
பயிர் நோயியல் துறை,
தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம்,
கோவை – 641003. தொலைபேசி: 0422-6611226.

வாழை இலை மஞ்சள் நிறமாகிறதா – வாடல் நோய்

வாழையில் மஞ்சள் நோய் என்பது மரத்தை ஒட்டு மொத்தமாக காலி செய்து நஷ்டம் அடையச் செய்யும்.

இதன் அறிகுறிகள்

ஆரம்பத்தில் அடி இலையின் ஓரங்கள் மஞ்சளாக காணப்படும். நாளடைவில் இந்த மஞ்சள் நிறம் இலையின் மையப்பகுதி அல்லது நடுநரம்புக்குப் பரவி, கடைசியில் இலை முழுவதும் மஞ்சள் நிறமாக மாறுகிறது.பின்னர், இந்த மஞ்சள் நிறமானது அடி இலையிலிருந்து மேல் இலைகளுக்கும் பரவி வாழை மரத்திலுள்ள அனைத்து இலைகளும் மஞ்சள் நிறமாக மாறும்.பாதிக்கப்பட்ட மரத்தின் அடி இலைகள், இலைக்காம்பு பகுதிகள் ஒடிந்து தண்டைச் சுற்றி தொங்கும்.

வாடல்நோய் அறிகுறிகள்

வாடல்நோய் அறிகுறிகள் - Image courtesy http://old.padil.gov.au/pbt/index.php?q=node/13&pbtID=137

தண்டின் நீளவாக்கில் அடியிலிருந்து வெடிப்புகள் காணப்படும். சில நேரங்களில் மரம் இறப்பதற்கு முன்னால் நிறைய பக்க கன்றுகள் தோன்றும்.பொதுவாக நோய் பாதிக்கப்பட்ட வாழை மரத்தில் தார்கள் வருவதில்லை.

அப்படியே தார் வந்தாலும் காய்கள் மிகவும் சிறுத்தும், குறைந்த எண்ணிக்கையிலும் காணப்படும். இக்காய்கள் ஒரே சீராக பழுப்பதில்லை, சதைப் பகுதியும் ருசி இல்லாமல் அமிலச் சுவையாக இருக்கும். அடிக் கிழங்கை குறுக்காக வெட்டிப் பார்த்தால் அதில் நீர் மற்றும் சத்துக்களை கடத்தக்கூடிய சாற்றுக் குழாய்த் தொகுப்பு, மஞ்சள் கறுப்பு போன்ற நிறங்களில் காணப்படும்.

வாடல் நோய்

வாடல் நேய் - image courtesy http://www.doa.sarawak.gov.my/modules/web/page.php?id=145

நீண்டநாள்களுக்கு பிறகு இந்த நோய் பாதிக்கப்பட்ட மரம் அழுகி, வெட்டப்பட்ட தண்டுப் பகுதியிலிருந்து அழுகிய மீன் போன்ற துர்நாற்றம் வீசும்.

இந்த வாடல்நோய் பியூசேரியம் என்று அழைக்கப்படும் ஒருவித பூஞ்சாணமானது ஏற்படுத்துகிறது. இந்த பூஞ்சாணம் பலவித வித்துக்களை உற்பத்தி செய்து அவை மண்ணில் சுமார் 30 ஆண்டுகள் வாழக்கூடியது.

கட்டுப்படுத்தும் முறைகள்:

வாழையைத் தொடர்ந்து சாகுபடி செய்யாமல், நெல், மரவள்ளி போன்ற பயிர்களை ஓரிரண்டு ஆண்டுகள் சாகுபடி செய்தபின் வாழை நடவு செய்யலாம்.

எங்கெல்லாம் இந்த நோயின் தாக்குதல் இருக்கிறதோ, அந்தநிலங்களில் மாற்று ரகங்களான பூவன், பொபஸ்டா, செவ்வாழை ஆகியவற்றை சாகுபடி செய்யலாம்.நோய் பாதிக்கப்பட்ட கிழங்கு அல்லது கன்றுகளை ஓரிடத்திலிருந்து மற்றொரு இடங்களுக்கு கொண்டு சென்று நடவு செய்வதைத் தவிர்க்க வேண்டும்.

வாடல்நோய் தாக்காத வாழைத் தோட்டங்களில் தார் வெட்டும் முன்பே சென்று பார்த்து கன்றுகளைத் தேர்வு செய்ய வேண்டும். கன்றுகளை வாழைத் தோட்டத்திலிருந்து எடுத்தபின் கன்றுகளின் கிழங்குகளின் மேல்தோல் மற்றும் வேர்களை நீக்கி பின் அக்கிழங்கை 0.2 சதவிகிதம் கார்பெண்டாசிம் (ஒரு லிட்டர் நீரில் 2 கிராம்) மற்றும் மோனோகுரோட்டாபாஸ் (ஒரு லிட்டர் நீரில் 14 மில்லி) மருந்துக் கலவையில் 30 நிமிடம் மூழ்க வைத்து பின் நிழலில் உலர வைத்து நடவு செய்ய வேண்டும்.

நடவு செய்த உடன் கிழங்கை சுற்றி 20 கிராம் டிரைகோடெர்மா விரிடி மற்றும் 20 கிராம் சூடோமோனாஸ் ப்ளூரெசென்ஸ் ஆகிய எதிர் உயிர்க் கொல்லிகளை அரை கிலோ மண்புழு உரத்துடன் கலந்து இட்டு நீர் பாய்ச்ச வேண்டும். இந்த முறையை கன்று நட்ட 2, 4 மற்றும் 6-வது மாதங்களில் மீண்டும் செய்ய வேண்டும்.

ஓரிரண்டு வாழைகளில் நோயின் அறிகுறி தென்பட்டதும் அனைத்து வாழை மரத்துக்கும் தலா 2 லிட்டர் மருந்து கலவை வீதம் மரத்தைச் சுற்றி ஊற்றி பியூசேரியம் வாடல் நோயைக் கட்டுப்படுத்தலாம்

தினமணி தகவல் – பாப்பாக்குடி தோட்டக்கலை உதவி இயக்குநர் நா. பாலகிருஷ்ணன்

மஞ்சள் சாகுபடி நோய் தாக்குதலை சமாளிப்பது எப்படி?

நூற்புழுக்களின் தாக்குதல்

பொதுவாக மஞ்சள் வேர் முடிச்சுகளில் நூற்புழுக்களின் தாக்குதல் அதிகம் காணப்படுகிறது. இப்புழுக்கள் செம்மண் கலந்த மணற்பாங்கான நிலங்களில் அதிகம் காணப்படுகின்றன. இப்புழுக்கள் மஞ்சளின் வேர்களைப் பாதிக்கின்றன. எனவே, வேர்கள் மூலம் ஊட்டச்சத்து, தண்ணீர் எடுத்துச் செல்லப்படுவது தடைபடுகிறது.

விதைக்கப்பட்ட 3 மாதங்களில் மஞ்சள் பயிரில் தாக்குதல் உண்டானால் விரலியோட்டம் வெகுவாகப் பாதிக்கப்பட்டு, 70 முதல் 80% வரை இழப்பைச் சந்திக்க வேண்டிவரும். நூற்புழு தாக்கியச் செடிகள் வளர்ச்சி குன்றி, இலைகள் மஞ்சள் நிறமடைந்து காணப்படும்.

தாக்கப்பட்ட மஞ்சளின் வேர்களில் ஆங்காங்கே வீக்கங்கள், மிளகு போன்ற வேர் முடிச்சுகள் காணப்படும். புகையிலை, மிளகாய், கத்தரி, தக்காளி, பெரிய வெங்காயம், வாழை போன்ற பயிர்களை பயிர் சுழற்சியிலோ அல்லது ஊடுபயிராகவோ பயிரிடுவதைத் தவிர்ப்பதன் மூலம் வேர் முடிச்சு நூற்புழுக்களின் தாக்குதலைக் குறைக்க இயலும்.

மேலாண்மை

மஞ்சள் நடுவதற்கு முன் கடைசி உழவின் போது ஏக்கருக்கு 100 கிலோ வேப்பம் புண்ணாக்கு இடுவதால் நூற்புழுக்களின் பெருக்கம் மற்றும் தாக்குதலை ஓரளவு குறைக்கலாம். மீண்டும் யூரியா இடும்போது 5 முதல் 10 கிலோ வரை வேப்பம் புண்ணாக்கு இட வேண்டும்.

தொழு உரம், கம்போஸ்ட் உரம் இடுவதும் இலுப்பைப் புண்ணாக்கு ஏக்கருக்கு 100 கிலோ இடுவதும் பலனளிக்கும். பாதிக்கப்பட்ட பயிரை அடையாளங்கண்டு, ஏக்கருக்கு 13 கிலோ கார்போபியூரான் குருணைகளை பயிரைச் சுற்றி 2 முதல் 3 செ.மீ. ஆழத்தில் இடவைப்பு முறையில் விதைத்த 3-வது மற்றும் 5-வது மாதங்களில் இட்டு நீர் பாய்ச்ச வேண்டும்.

செண்டு மல்லியை ஓரங்களில் பயிரிட்டால் நூற்புழுவைக் கட்டுப்படுத்தலாம்.

மஞ்சள் கிழங்கு அழுகல் நோய்

இந்நோயால் பாதிக்கப்பட்ட செடிகள் வளர்ச்சி குன்றி, இலைகள் மஞ்சள் நிறமடைந்து சுருண்டு காணப்படும். தாக்கப்பட்ட மஞ்சளின் வேர் மற்றும் கிழங்குகளில் அழுகல் காணப்படும்.

வேர்களில் நூற்புழுக்கள் உண்டாக்கிய துளைகள் மூலம் பூஞ்சாணம் உள்ளே செல்வதால் நூற்புழு தாக்கியச் செடிகளில் கிழங்கு அழுகல் நோய் தாக்குதலின் வாய்ப்புகள் கூடுதலாக இருக்கும்.

மேலாண்மை

மெட்டலாக்சில் 2 கிராமை ஒரு லிட்டர் என்ற அளவில் கலந்து, அதில் விதைக் கிழங்கை 30 நிமிடம் ஊறவைத்து நட வேண்டும். நன்கு வளர்ந்த செடிக்கு மெட்டலாக்சில் (அ) மேங்கோசெப் 2 கிராம் (அ) காப்பர் ஆக்ஸிகுளோரைடு 3 கி (அ) காப்பர் ஆக்சைடு 1.5 கிராம் இவற்றை தூர் பகுதியில் நனையும்படி ஊற்றவும்.

இலை தீயல் நோய்

நட்ட வயலில் இலைகளின் இருபக்கமும் வட்ட வடிவ அல்லது ஒழுங்கற்ற வட்ட வடிவமான புழுப்பு நிறப் புள்ளிகள் தோன்றும். பின் கரும்பழுப்பு நிறமாகி இலைப் புள்ளிகளின் அளவு பெரிதாகும். இளம் இலைகளை அதிக அளவு பாதிப்பதால், அவை முதிர்ச்சி அடையாமலே காய்ந்து விடும். அதிகளவில் பாதிக்கப்பட்ட வயல் பார்ப்பதற்கு தீய்ந்து போன தோற்றத்தைத் தரும். இந் நோயின் பாதிப்பால் விளைச்சல் பாதிக்கப்படும்.

இலைப்புள்ளி நோய்

இலையின் மேல் பகுதியில் பழுப்பு நிறப் புள்ளிகள் பல்வேறு வடிவத்துடன் தோன்றும். நோயின் தீவிரம் அதிகரிக்கும்போது, புள்ளிகள் வளர்ந்து நீள்வட்ட வடிவமாக இருக்கும். இலைப் புள்ளிகள் புழுப்பு நிற விளிம்புகளையும், சாம்பல் நிற நடுப் பகுதியையும் கொண்டிருக்கும். நோய் முதிர்ச்சியடைந்த நிலையில் இலைப் புள்ளிகள் ஒன்று சேர்ந்து, இலைகள் காய்ந்து பின் கீழே உதிர்ந்துவிடும்.

மேலாண்மை

பாதிக்கப்பட்ட இலைகளைக் கிள்ளி எடுத்து எரித்து விட வேண்டும். பின்னர் ஒரு ஹெக்டேருக்கு காப்பர் ஆக்சிகுளோரைடு 1,250 கிராம் அல்லது மேன்கோசெப் 400 கிராம் என்னும் அளவில் நோய் கண்டவுடன் தெளிக்க வேண்டும்.

நோயின் தீவிரத்தைப் பொறுத்து, 2 அல்லது 3 முறை 10 அல்லது 15 நாட்கள் இடைவெளியில் தெளிக்க வேண்டும்.

தொடர்பு எண்: 92444-04789

தினமணி செய்தி – பேராசிரியர்கள் கி. பூர்ணிமா, கி. கல்பனா –  பையூர் தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழக மண்டல ஆராய்ச்சி நிலையம் – கிருஷ்ணகிரி மாவட்டம்

மழைக் கால பயிர் பாதுகாப்பு

தமிழகத்தில் பெரும்பாலும் அனைத்துப் பகுதிகளிலும் பரவலாக மழை பெய்துள்ளது. மகிழ்ச்சியான செய்தியே. என்றாலும் என்றாலும் மழைபெய்வதற்கு முன்னரே பயிரிட்ட பயிர்களைப் பாதுகாக்கவேண்டிய தருணம் இது. தேங்கிய நீரில் அழுகி வீணாகிவிடலாம். பூச்சிகளின் தாக்குதல்களுக்கு உள்ளாகலாம். சில சமயங்களில் நீரை வயலிலேயே தேக்கி வைத்தால் பாசனம் செய்வது எளிது. எனவே, மழைக் கால யோசனைகளை வழங்கி சில செய்திகள் வெளியாகி உள்ளன. அவற்றைக் கீழே கொடுத்துள்ளோம்.

பருத்தி

தற்போது தொடர்ந்து பெய்து வரும் பலத்த மழையால், அனைத்துப் பயிர்களின் வயல்களிலும் மழை நீர்த் தேங்கிக் காணப்படுகிறது. இதனால், பாக்டீரியம், பூஞ்சாணம் போன்றவற்றால் பயிர்களுக்கு நோய்த் தாக்குதல் ஏற்பட அதிக வாய்ப்புள்ளது.

குறிப்பாக, பருத்தியில் வெர்டிசீலியம் வாடல் நோய், வேர் அழுகல் நோய், ஆல்டர் நேரியா, இலைப்புள்ளி நோய், இலைக்கருகல் நோய், புகையிலைக் கீற்று வைரஸ் நோய் ஆகிய நோய்கள் தாக்கும் அபாயம் உள்ளது.

பருத்தி

பருத்தி

மேலும், செடிகளிலுள்ள சப்பைகள், காய்கள் அழுகி உதிர வாய்ப்புள்ளது. பருத்தி வயல்களில் தேங்கியுள்ள மழை நீரால், மெக்னீசியம் சத்துப் பற்றாக்குறை ஏற்பட்டு, பருத்தி இழையின் ஓரங்கள் சிவப்பு நிறமாக மாறி உதிர்ந்து விடுகின்றன. இதனால், விவசாயிகளுக்கு மகசூல் இழப்பு ஏற்பட அதிக வாய்ப்புள்ளது.

பருத்தியை மழை நீரிலிருந்து பாதுகாக்க, வயல்களில் தேங்கும் நீரை, ஐந்து பாத்திகளுக்கு இடையே பார் அமைத்து, வயலைச் சுற்றி வடிகால் வசதி செய்து தேங்கிய நீரை வெளியேற்ற வேண்டும்.

பருத்திச் செடிகளில் வேர் அழுகல் நோய் காணப்படும் போது, சூடோமோனாஸ் அல்லது டிரைகோடெர்மா விரிடி உள்ளிட்ட எதிர் உயிர்க் கொல்லிகளில் ஏதாவது ஒன்றை லிட்டருக்கு 2 கிராம் அல்லது கார்பன்டாசிம் அல்லது மேன்கோசெப் பூஞ்சாணக் கொல்லி மருந்துகளில் ஏதாவது ஒன்றை லிட்டருக்கு 2 கிராம் அல்லது காப்பர் ஆக்ஸிகுளோரைடை லிட்டருக்கு 2 கிராமுடன், பாக்டீரியா கொல்லியான ஸ்டிரெப்டோமைசின் சல்பேட்டை பத்து லிட்டர் தண்ணீருக்கு ஒரு கிராம் என்ற அளவில் கலந்து, செடிக்குச் செடி வேர் பகுதிகளில் ஊற்றுவதன் மூலம், வேர் அழுகல் நோயைக் கட்டுப்படுத்தலாம்.

பருத்தி இலைகளில் இலைப்புள்ளிகள் தென்படும் போது, காப்பர் ஆக்ஸிகுளோரைடு 30 கிராம், ஸ்டிரெப்டோமைசின் சல்பேட் ஒரு கிராம் ஆகியவற்றை 10 லிட்டர் தண்ணீரில் கலந்து, 10-15 நாள்கள் இடைவெளியில் இலையின் மீது தெளித்துக் கட்டுப்படுத்தலாம்.

மேலும், மழை நின்ற பிறகு, செடிகள், சப்பைகள் நன்கு செழிப்புடன் இருக்க, வளர்ச்சி ஊக்கி அல்லது டி.ஏ.பி. 2 சதக் கரைசலைத் தெளிக்க வேண்டும். பருத்தியில் இலைகள் சிவப்பாக தென்படும் போது, மெக்னீசியம் சல்பேட் 100 கிராம், ஜிங் சல்பேட் 50 கிராம், யூரியா 10 கிராம் ஆகியவற்றை 10 லிட்டர் தண்ணீரில் கலந்து தெளித்துக் கட்டுப்படுத்தலாம்.

இவ்வாறு செய்வதன் மூலம் மழையிலிருந்து பருத்தியைக் காப்பாற்றி அதிக மகசூலைப் பெறலாம். தற்போது சிறிய வெங்காயப் பயிரைக் குமிழ் அழுகல் நோய் அதிகமாகத் தாக்கியுள்ளது. இந்த நோயானது பூஞ்சை மூலம் பரவுகிறது. இந்தப் பூஞ்சையைக் கட்டுப்படுத்த, குளோரோதலோனில் பூஞ்சாணக் கொல்லியை லிட்டர் தண்ணீருக்கு 2 கிராம் என்ற அளவில் அல்லது மாங்கோசெம் பூஞ்சாணக் கொல்லியை 2.5 கிராம் என்ற அளவில் கலந்து, அதனுடன் ஒட்டும் திரவம் சேர்த்துத் தெளிக்க வேண்டும்.

மஞ்சள் பயிரில் இலைப்புள்ளி, இலைக்கருகல் நோய் காணப்படும் போது, புரபிகோனோசால் 20 மில்லி அல்லது சூடோமைல் 20 கிராம் அல்லது பெவிஸ்டின் 20 கிராம் அல்லது அலைட் 20 கிராம் இதில் ஏதாவது ஒன்றை 10 லிட்டர் தண்ணீரில் 5 மி.லி. ஒட்டும் திரவத்துடன் கலந்து தெளித்துக் கட்டுப்படுத்தலாம்.

மக்காச்சோளம், நெல், மஞ்சள், கரும்பு ஆகியவை பயிரிடப்பட்டுள்ள வயல்களில் தேங்கியுள்ள மழை நீரை, தகுந்த வடிகால் வசதி செய்து வெளியேற்றினால், பயிர்களைக் காப்பாற்றலாம்.

கூடுதல் விவரங்களுக்கு,

ஹேன்ஸ் ரோவர் வேளாண் அறிவியல் மையம், பெரம்பலூர். தொலைபேசி எண் 04328-293251, 293592

நெல்

தண்ணீர் தேங்கியுள்ள பகுதியில் வடிகால் வசதியை ஏற்படுத்த வேண்டும். மேலும், அதிக நாற்றுகள் உள்ள குத்துகளிலிருந்து சில நாற்றுகளை எடுத்து, நாற்றுகள் இல்லாத இடங்களில் நடவு செய்ய வேண்டும். அதே ரக நாற்றுகள் கிடைத்தால் போக்கிடங்களில் நடவு செய்யலாம்.

தண்ணீரில் மூழ்கியுள்ள நெல் பயிருக்கு உடனடியாக 200 லிட்டர் தண்ணீரில் 2 கிலோ யூரியாவும், ஒரு கிலோ ஜிங்க் சல்பேட்டும் கலந்து கைத் தெளிப்பான் மூலம் காலை அல்லது மாலை வேளையில் தெளிக்க வேண்டும்.

தண்ணீர் வடிந்து விட்ட நிலையில், ஊட்டச்சத்து பற்றாக்குறை ஏற்பட வாய்ப்புள்ள நெல் பயிருக்கு ஏக்கருக்கு 22 கிலோ யூரியா, 18 கிலோ ஜிப்சம், 4 கிலோ வேப்பம் புண்ணாக்கு ஆகியவற்றை கலந்து ஒரு நாள் வைத்திருந்து பிறகு 17 கிலோ பொட்டாஷ் கலந்து மேலுரமாக இட வேண்டும். இந்த உரங்களை இடும்போது வயலில் சீராக தண்ணீர் வைத்துக் கொண்டும், தண்ணீர் வெளியே விடாதவாறும் பராமரிக்க வேண்டும். சூல் கட்டும் மற்றும் பூக்கும் பருவத்தில் உள்ள பயிர்களுக்கு 2 கிலோ டி.ஏ.பி. உரத்தை 10 லிட்டர் தண்ணீரில் ஊற வைத்து மறுநாள் தெளிவான கரைசலை வடிகட்ட வேண்டும்.

அத்துடன், ஒரு கிலோ யூரியா, ஒரு கிலோ பொட்டாஷ் உரங்களை கலந்து 190 லிட்டர் தண்ணீர் சேர்த்து கைத்தெளிப்பான் மூலம் தெளிக்க வேண்டும். இதேபோல, ஊட்டச்சத்து மேலாண்மை மேற்கொண்டால் மழை நீரால் பாதிக்கப்பட்ட பயிர்களைக் காப்பாற்றலாம்

தினமணி தகவல்

குருத்து அழுகல் நோயிலிருந்து தென்னையைக் காக்க…

தென்னையில் இளம் பருவத்தில் குருத்துப் பகுதியைத் தாக்கி குருத்து அழுகலை ஏற்படுத்தும் இந்நோய் அனைத்துப் பகுதிகளிலும் பரவலாகக் காணப்படுகிறது. வடிகால் வசதியற்ற நீர் தேங்கும் தன்மையுள்ள நிலங்களிலும், காற்றின் ஈரத் தன்மை அதிகமாக காணப்படும் பருவ மழைக் காலங்களிலும் இந்நோயின் தாக்குதல் பரவலாக காணப்படும்.

இந்நோய் ஃபைட்டோப்தோரா பால்மிவோரா என்ற பூசணத்தால் ஏற்படுகிறது. இது மண்ணில் வாழும் தன்மை கொண்டது. பாதிக்கப்பட்ட மரத்தில் இருந்து நீரின் மூலம் சுற்றி உள்ள ஆரோக்கியமான மரங்களுக்கும் இது பரவி குருத்து அழுகலை ஏற்படுத்தும்.

இந்நோய் தாக்கப்பட்ட கன்றுகளின் குருத்து இலை வறண்டு காணப்படும். நோயின் தாக்குதல் தீவிரமாகும் போது குருத்து முழுவதும் அழுகி அனைத்து இலைகளும் வறண்டு மரம் பட்டுவிடும்.

பாதிக்கப்பட்ட குருத்து இலைகளை இழுத்தால் கையோடு வந்து விடும். அதன் அடிப்பாகம் அழுகி நுர்நாற்றம் வீசும். இந்நோய் முதலில் இலைகளின் வெளிப்புறத்தை தாக்கி, பின்னர் குருத்து இலையை நோக்கி பரவும். அந்த நேரத்தில் தடுப்பு முறைகளை செய்தால் தென்னையை இந்நோயிலிருந்து காப்பாற்றலாம்.

தடுப்பு முறைகள்:

வரும்முன் காக்கும் வழிமுறையாக தோப்புகளில் வடிகால் வசதியை மேம்படுத்தி அதிகப்படியான நீர் தேங்குவதைத் தவிர்க்க வேண்டும்.
பாதிக்கப்பட்ட மரங்களை தனிமைப்படுத்தி அதற்கு தனியாக நீர் பாய்ச்ச வேண்டும். பரிந்துரை செய்யப்படும் உரங்களுடன் ஒரு மரத்திற்கு 5 கிலோ வீதம் வேப்பம் புண்ணாக்கு இட வேண்டும்.

குருத்து அழுகல் நோயால் பாதிக்கப்பட்டு பட்டுபோன மரங்களை வேர்ப் பகுதியுடன் வயலில் இருந்து அகற்றி எரிக்க வேண்டும். அவ்வாறு தோண்டிய குழிகளில் சருகுகளை வைத்து தீயிட்டு கொளுத்த வேண்டும். இவ்வாறு செய்வதால் மற்ற மரங்களுக்கு இந்நோய் உண்டாகும் பூசணம் பரவுவது தடுக்கப்படும்.

மட்டையின் வெளிப்பகுதியில் அழுகல் ஆரம்பித்தவுடன் அந்த அழுகிய பகுதியை வெட்டி அகற்றி விட்டு, வெட்டப்பட்ட பகுதியில் காப்பர் ஆக்ஸிகுளோரைடு பசையை தடவ வேண்டும்.

மரம் முழுவதும் நன்றாக படும்படி காப்பர் ஆக்ஸிகுளோரைடு 0.2 சதவிகிதத்தை ஒரு லிட்டர் தண்ணீரில் அல்லது குளோரோ தலானில் 0.1 சதவிகிதம் ஒரு லிட்டர் தண்ணீரில் பூசணக் கொல்லியை கலந்து தெளிக்க வேண்டும்.

இவ்வாறு செய்தால் குருத்து அழுகல் நோயிலிருந்து தென்னையை காப்பாற்றலாம்

தினமணி செய்தி : 15 Sep 2011 12:00:00 AM IST
திருநெல்வேலி மாவட்ட வேளாண் இணை இயக்குநர் சா. தேவசகாயம்

பயிர்காக்கும் இயற்கை மருந்துகள்

இயற்கையாகக் கிடைக்கும் தாவர இலைச் சாறு, எண்ணெய், உப்புக் கரைசல், சாம்பல் போன்றவற்றைக் கொண்டே, பயிர்களைத் தாக்கும் பூச்சி பூஞ்சாணங்கள் உள்ளிட்ட நோய்களைக் கட்டுப்படுத்த முடியும் என்று வேளாண் துறை தெரிவிக்கிறது.

விதை நேர்த்திப் பணிகளை முறையாகச் செய்யாமல் விட்டாலும், தட்ப வெப்பநிலை மாற்றங்கள் காரணமாகவும், காற்று மற்றும் நீர் மூலமாகவும் பயிர்களை பூச்சிகள் பெருமளவுக்குத் தாக்கி சேதப் படுத்துகின்றன. மிகவும் அபாயகரமான விஷத் தன்மை கொண்ட பூச்சிக் கொல்லி மருந்துகள் பயன்படுத்தப் பட்டாலும், பூச்சிகள் முழுமையாகக் கட்டுப்படுத்தப்படுவது இல்லை.

ரசாயன பூச்சிக் கொல்லி மருந்துகள் மனிதர்களுக்கும், விலங்கினங்களுக்கும் பெருத்த சேதத்தை விளைவிக்கின்றன. பல நேரங்களில் பயிர்களுக்கு நன்மை செய்யும் பூச்சிகளும் சேர்த்து அழிக்கப்பட்டு விடுகின்றன.

எனவே ரசாயன பூச்சிக் கொல்லி மருந்துகளின் மோசமான விளைவுகளால், விவசாயிகள் பரவலாகப் பயன்படுத்தி வந்த, என்டோசல்ஃபான், டெமக்ரான் போன்றவை தடை செய்யப்பட்டு வருகின்றன.

எனவே இயற்கை மருந்துகளைப் பயன்படுத்துமாறு அண்மைக் காலமாக வேளாண் விஞ்ஞானிகள் சிபாரிசு செய்கின்றனர்.

நோய்/பூச்சி தீர்வு
அசுவணி, கம்பளிப்புழு, நெற்கதிர் நாவாய்ப் பூச்சி ஏக்கருக்கு 200 லிட்டர் தண்ணீரில் 2 கிலோ மிளகாய்த்தூள் கலந்து, கரைத்து வடிகட்டித் தெளிக்கலாம்
இலைச் சுருட்டுப் புழு, சாறு உறிஞ்சும் பூச்சி, புரோடினியா 200 லிட்டர் தண்ணீரில் 2 கிலோ வேப்பெண்ணையைக் கலந்து, ஒட்டுதிரவமாக சோப்பு கரைசல் 200 மில்லி கலந்து தெளிக்கலாம்.
நெல் குலை நோய் வேலிக்காத்தான் இலைச்சாறு 20 கிலோவை, 200 லிட்டர் தண்ணீரில் கலந்து தெளிக்கலாம்
அசுவணி, இலைப்பேன், வெள்ளை ஈ 200 லிட்டர் தண்ணீரில் 2 கிலோ மஞ்சள், மற்றும் 200 லிட்டர் தண்ணீரில் 8 கிலோ சாம்பல் கலந்து தெளிக்கலாம்
நெல் இலைச் சுருட்டுப் புழு 200 லிட்டர் தண்ணீரில் 2 கிலோ உப்பு மற்றும் 200 லிட்டர் தண்ணீரில் 8 கிலோ சாம்பல் கலந்து தெளிக்கலாம்
அனைத்து காய் துளைப்பான் பூச்சிகள் 200 லிட்டர் தண்ணீரில், 2 கிலோ பூண்டு மற்றும் 200 லிட்டர் தண்ணீரில் 400 மில்லி மண்ணெண்ணெய் கலந்து தெளிக்கலாம்
வெள்ளை ஈ, இலைப்பேன், மிளகாய்ப்பேன் 200 லிட்டர் தண்ணீரில் 6 லிட்டர் பசுக்கோமியம் மற்றும், 200 லிட்டர் தண்ணீரில் 200 மில்லி புகையிலைச்சாறு கலந்து தெளிக்கலாம்
பாக்டீரியா, பூஞ்சாணம் 200 லிட்டர் தண்ணீரில் 10 கிலோ துளசி இலைச்சாறு கலந்து தெளிக்கலாம். அல்லது 200 லிட்டர் தண்ணீரில் 10 கிலோ பப்பாளி இலைச்சாறு கலந்தும் தெளிக்கலாம்
சாறு உறிஞ்சும் பூச்சி 200 லிட்டர் தண்ணீரில் 2 கிலோ அரைத்த சீத்தாப்பழ விதை மற்றும் 200 லிட்டர் தண்ணீரில் 6 கிலோ சீத்தா இலைச்சாறு கலந்து தெளிக்கலாம்.
கம்பளிப் புழு பாக்டீரீயா 200 லிட்டர் தண்ணீரில் 10 கிலோ சோற்றுக் கற்றாளைச் சாறு கலந்து தெளிக்கலாம்
கம்பளிப்புழு சுருள் பூச்சி, இலை சுருட்டுப் புழு 200 லிட்டர் தண்ணீரில் 10 கிலோ வேப்ப இலைச்சாறு கலந்து தெளிக்கலாம்.
மிளகாய்ப் பேன், வெள்ளை ஈ 200 லிட்டர் தண்ணீரில் 600 கிராம் புகையிலைச் சாறு கலந்து தெளிக்கலாம்
நெல் இலை சுருட்டுப் புழு 200 லிட்டர் தண்ணீரில் 20 கிலோ நெய்வேலி காட்டாமணிச் சாறு கலந்து தெளிக்கலாம்
நெல் தூர்அழுகல், இலை அழுகல் நோய் 200 லிட்டர் தண்ணீரில் 6 கிலோ வேப்பெண்ணெய் கலந்து தெளிக்கலாம்.
பாக்டீரியா இலைக் கருகல் நோய் 200 லிட்டர் தண்ணீரில் 20 கிலோ குன்றிமணி இலைச்சாறு அல்லது வேப்ப இலைச்சாறு கலந்து தெளிக்கலாம்
நிலக்கடலை தூர் அழுகல் நோய் 200 லிட்டர் தண்ணீரில் 6 கிலோ வேப்பெண்ணெயுடன் ஒரு லிட்டர் சோப்புத் திரவம் கலந்து தெளிக்காலம்.
பயறு வகை சாம்பல் நோய் 200 லிட்டர் தண்ணீரில் 6 கிலோ வேப்பெண்ணெயுடன் ஒரு லிட்டர் சோப்புத்திரவம் கலந்து தெளிக்கலாம்
தென்னை வாடல் நோய் 200 லிட்டர் தண்ணீரில் 5 கிலோ வேப்பம் பிண்ணாக்கு கலந்து, மரத்தைச் சுற்றி இட்டு மண்ணால் மூடிவிட வேண்டும்.

 

பூச்சிகளைக் கையாளும் முறை – TNAU அறிவிப்பு

குருத்துப் பூச்சி
நெல்லில் குருத்துப் பூச்சி சேதம் இருந்தால் தழைச்சத்து சிபாரிசு செய்யும் அளவுக்கு மட்டும் பயன்படுத்த வேண்டும். குருத்துப் பூச்சியின் முட்டைகளைத் தாக்கும் டிரைக்கோகிரம்மா ஜப்பானிக்கம் முட்டை ஒட்டுண்ணியை நடவு செய்த 30 மற்றும் 37ஆம் நாட்களில் ஏக்கருக்கு 400 மில்லி அல்லது கார்டாப் குளோரைடு குருணை மருந்து ஏக்கருக்கு 5 கிலோ என்ற அளவில் இட்டு கட்டுப்படுத்தலாம்.
ஏக்கருக்கு வேப்பங்கொட்டைச் சாறு 5 சதம் அல்லது அசாடிராக்டின் 1 சதம் 400 மில்லி, புரஃபனொபாஸ் 50 சதம் 400 மில்லி அல்லது கார்டாப் ஹைட்ரோ குளோரைடு குருணை 5 கிலோ என்ற அளவில் இடலாம்.

இலை சுருட்டுப் புழு
நெல்லில் இலைசுருட்டுப் புழு சேதம் இருந்தால் தழைச்சத்து சிபாரிசு செய்யும் அளவுக்கு மட்டும் பயன்படுத்த வேண்டும். இதன் முட்டைகளைத் தாக்கும் டிரைகோகிரம்மா கைலோனிஸ் முட்டை ஒட்டுண்ணியை நடவு செய்து 37, 55 மற்றும் 51ஆம் நாட்களில் ஏக்கருக்கு 2 சிசி என்ற அளவில் வெளியிட வேண்டும்.

வேப்பங்கொட்டைச் சாறு 5 சதம் அல்லது மோனோ குரோட்டோபாஸ் 400 மில்லி அல்லது புரஃபனோபாஸ் 50 சதம் 400 மில்லி 200 லிட்டர் தண்ணீரில் கலந்து தெளிக்க வேண்டும்.

கூண்டுப்புழு
நெல்லில் கூண்டுப்புழு வேலையைக் காட்டியிருந்தால் 1 லிட்டர் மண்ணெண்ணையை 3 கிலோ காய்ந்த மணலுடன் காந்து சீராக வயலில் தூவவும். பின்பு ஒரு தாம்புக்கயிறைக் கொண்டு வயலின் இரு ஓரங்களிலும் இருவர் வயலின் பாதி உயரத்திற்குப் பிடித்துக் கொண்டு நடக்கவும். இம்முறையில் கூண்டுப் புழுக்கள் அனைத்தும் வயலிலுள்ள நீரில் விழுந்துவிடும். பின்பு மோனோகுரோட்டோபாஸ் 400 மில்லியை 200 லிட்டர் நீரில் கலந்து தெளிக்கவேண்டும்.

ஆனைக் கொம்பன்
விளக்குப் பொறி வைத்து ஆனைக் கொம்பனை கவர்ந்து அழியுங்கள். தாவர பூச்சிக் கொல்லிகளால் வேப்பம் பருப்புச் சாறு 5 சதம் அல்லது அசராக்டின் 1 சதம் எனப்படும் வேம்பு பூச்சிக் கொல்லியை ஒரு லிட்டருக்கு 2 மில்லி என்ற அளவில் கலந்து தெளிக்கவும்.

ரசாயன பூச்சிக்கொல்லியை புரொஃபனோபாஸ் 50 சதம் ஒரு லிட்டர் நீருக்கு 2 மில்லி என்ற அளவில் கலந்து தெளிக்கவும். இத்துடன் அசாராக்டின் 1 சதம் வேம்பு பூச்சிக்கொல்லியை லிட்டருக்கு 1 மில்லி என்ற அளவில் கலந்து தெளிப்பதன் மூலம் ஆனைக் கொம்பன் ஈக்களை நன்கு கட்டுப் படுத்தலாம்.

பூச்சிக் கொல்லிகளைத் தெளிக்கும் முன்பு ஒட்டும் திரவம் 1 லிட்டருக்கு 1 மில்லி என்ற அளவில் கலந்து தெளிப்பதால் பூச்சி மருந்து கலவைச் செடிகளின் மீது நன்கு ஒட்டி பலன் தரும்.

வெட்டுப்புழு
இவருக்கும் விளக்குப் பொறிதான். இதனால் அந்துப் பூச்சிகள் அத்துப் போகும். குளோர் பைரிபாஸ் 50 சதம் ஏக்கருக்கு 500 மில்லி அல்லது தபோடிகார்ப் 75 சதம் ஏக்கருக்கு 250 கிராம் என்கிற அளவில் 200 லிட்டர் தண்ணீரில் ஒட்டும் திரவம் கலந்து தெளிக்கவும்.

வெட்டுப்புழு குலைநோய்
டிரைளைசோல் பூசணக் கொல்லி மருந்தினை ஒரு ஏக்கருக்கு 200 கிராம் என்கிற அளவில் திரவத்துடன் கலந்து மழை இல்லாத நேரங்களில் தெளித்து குலை நோயினைக் கட்டுப் படுத்தலாம். இந்த நோயின் அறிகுறிகள் இல்லை என்றாலும் நெல்சாகுபடி செய்துள்ள மற்ற விவசாயிகள் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சூடோமோனாஸ் எதிர் உயிர் பாக்டீரியத்தைத் தெளித்து பயிரின் நோய் எதிர்ப்பு தன்மையை அதிகரிக்கச் செய்து பயிறினை குலை நோயிலிருந்து பாதுகாக்க வேண்டும்.

இதற்கு சூடோமோனாஸ் எதிர் உயிரியை நட்ட 30ம் நாள் ஏக்கருக்கு ஒரு கிலோ வீதம் நன்கு மக்கிய தொழுஉரம் அல்லது மணலுடன் கலந்து வயலில் தூவ வேண்டும். மேலும் நட்ட 45, 55 மற்றும் 65ம் நாட்களில் ஒரு ஏக்கருக்கு ஒரு கிலோ என்கிற அளவில் இலைகளின் மேல் தெளித்தும் பயிரினை குலை நோயிலிருந்து பாதுகாக்கலாம்.

பொய் கரிபூட்டை நோய்
திருச்சி மற்றும் அரியலூரில் இந்த நோயின் தாக்கம் தென்படுகிறதாம். அதுவும் குறிப்பாக கோ4, கோ43 மற்றும் ஆந்திரப் பொன்னி ரகங்களில்!

இந்நோயைக் கட்டுப்படுத்த காப்பர் ஹைட்ராக்சைடு 2.5 கிராம் அல்லது புரப்பிகோனசால் 1 மில்லி மருந்தை 1 லிட்டர் நீரில் கலந்து தெளிக்கவும்

பாக்டீரியா இலை கருகல் நோய்
ஒரு எக்டேருக்கு ஸ்ட்ரெப்டோமைசின் சல்பெட் 300 கிராம் மற்றும் காப்பர் ஆக்சி குளோரைடு ஆயிரத்து 250 கிராம் என்கிற அளவில் கலந்து இலைகளின் மேல் தெளிக்க வேண்டும்.

என்று TNAU அறிவித்துள்ளது.

தகவல் – திருச்சி தில்லை வில்லாளன், தமிழக விவசாயி உலகம்