சிறுதானியங்கள் அறுவடைக்குப்பின் செய்நேர்த்தி முறைகள்

விழுப்புரம் வட்டத்தில் கோலியனூர், சோழனூர், ஆசாரங்குப்பம், மேல்பாதி, கல்லப்பட்டு ஆகிய கிராமங்களிலும், விக்கிரவாண்டி வட்டம், காணை வட்டம், கண்டமங்கலம் வட்டம் உள்ளிட்ட பகுதிகளில் கம்பு, ராகி போன்ற சிறு தானியங்கள் அறுவடை நடைபெற்று வருகிறது.

சிறு தானியங்களாகிய கம்பு, ராகி ஆகியவற்றில் உள்ள மாவுச்சத்து மற்றும் புரதச் சத்தின் அளவைப் பொறுத்தே கூடுதல் விலை கிடைக்கிறது. சிறுதானியங்களை கூடுதல் விலைக்கு விற்றிட கீழ்க்காணும் அறுவடைக்குப் பின் செய்நேர்த்தி முறைகளை கடைப்பிடிக்க கேட்டுக் கொள்ளப்படுகிறது.

கதிர்கள் முதிர்ந்து இலைகள் பழுப்பு நிறமாக மாறியவுடன் கதிர்களை மட்டும் தனியாக அறுவடை செய்ய வேண்டும். மழை நேரங்களில் அறுவடை செய்தால் பூஞ்சாணம் தாக்கிய கதிர்களை தனியே பிரித்து காயவைக்க வேண்டும். காயவைத்த கதிர்களிலிருந்து மணிகளை பிரித்து எடுக்க கதிர் அடிக்கும் கருவிகள் அல்லது கல் உருளைகளை பயன்படுத்தி தானியத்தைப் பிரிக்க வேண்டும்.

பிரித்து எடுக்கப்பட்ட மணிகளை காற்றில் தூற்றிவிட்டு அதில் கலந்துள்ள இலைகள், சருகுகள் ஆகியவற்றை நீக்க வேண்டும். விதைகளில் கல் மண் இதர தானியங்கள் மற்றும் உடைந்த தானியங்களை தனியாகப் பிரித்து நீக்கிவிட வேண்டும்.

சிறு தானியங்களை நன்கு காயவைத்து நிழலில் உலரவிட்டு, பின்னர் சுத்தமான கோணிப்பைகளில் நிரப்பி சேமிக்க வேண்டும். உட்பக்கம் சவ்வுத்தாள் பொருத்திய சாக்குப் பைகளில் தானியங்களை சேமித்தால் மழைக்காலங்களில் ஈரக்காற்றினால் பாதிப்பு ஏற்படாமல் இருக்கும்.

அதிக காலம் சேமிக்க வேண்டியிருப்பின், தானியங்களை சேமிப்பு கலன்களில் இட்டு சேமிக்க வேண்டும். காய வைத்த தானியங்களை, சேமித்து வைக்கும்போது மாதம் ஒரு முறை வெயிலில் காயவைத்து ஆறவிட்டு சேமிப்பது முக்கியம், இல்லாவிடில், வண்டுகள் தாக்கி தரம் பாதிக்கப்படும். இதனால் நல்ல விலை கிடைக்காது என்று பெரியசாமி தெரிவித்துள்ளார்.

தினமணி தகவல் : திரு. இரா. பெரியசாமி, வேளாண் அலுவலர், விழுப்புரம்