கம்பம் பள்ளத்தாக்கு பகுதியில் முதல்போக நெல் சாகுபடி

கம்பம் பள்ளத்தாக்கு பகுதியில் நெற்பயிருக்கு முதல் களையெடுக்கப்பட்டு இரண்டாவது களையெடுக்க இருக்கின்றனர். விவசாயிகள் நெல் நடவினை வரிசையில் செய்துள்ளதோடு பயிர் வரிசைக்கு வரிசை 25 செ.மீ. இடைவெளி விட்டுள்ளனர்.  விவசாயிகள் உடனே தங்கள் பயிரில் கோனோ களைக்கருவியை உபயோகிக்கலாம். கருவி கொண்டு குறுக்கும் நெடுக்குமாக பயன்படுத்த வேண்டும். இவ்வாறு செய்யும்போது சுமார் ஒரு டன் அளவிற்கு களைகள் மண்ணில் அமுக்கப்பட்டு பசுந்தாள் உரமாக மாற்றப்படுகிறது. மண்ணில் காற்றோட்டம் ஏற்பட்டு வேர் வளர்ச்சி அதிகரிக்கும்.

பாசன நீர் அதிகமாக இருக்கின்றதே என்று நினைத்து நீரினை வீணாக்கிவிடக்கூடாது. பாசனம் செய்யும்போது காய்ச்சலும் இருக்க வேண்டும். பாய்ச்சலும் இருக்க வேண்டும். இதனால் மண்ணில் நுண் உயிர்களின் வளர்ச்சி அதிகரித்து, அதோடு காற்றோட்டமும் அதிகரித்து பயிர் நன்கு தூர் கட்டிவிடும். தூர்கள் செழிப்பாக வளர்ந்து பயிர் பசுமையாக வரும்போது பூச்சி, நோய்கள் தாக்கக்கூடும். இதுசமயம் முதல் தாக்குதல் இலை சுருட்டுப்புழுவினால் ஏற்படும். எடுத்த எடுப்பில் ரசாயன பூச்சிக்கொல்லியை அடிக்காமல் வேம்பு மருந்துகள் 200 மில்லி அல்லது வேப்பங்கொட்டை சாறு 5 சதவீதம் இட்டு இதில் ஒட்டும் திரவம் சேர்த்து பயிர்மேல் தெளிக்கலாம். இந்த அளவு கரைசல் தயாரிக்க 10 கிலோ வேப்பங்கொட்டையை இடித்து அதனை 20 லிட்டர் நீரில் ஊறவைத்து உபயோகத்திற்கு எடுத்துக்கொள்ளலாம். இதனை கைத்தெளிப்பான் கொண்டு 20 டேங்குகளில் பயிர்மேல் தெளிக்கலாம். இந்த சிகிச்சைக்கு பலன் கிட்டாவிட்டால் மானோகுரோட்டோபாஸ் 400 மி.லி. அல்லது குளோர்பைரிபாஸ் 500 மி.லி. ஒரு ஏக்கருக்கு தெளிக்கலாம். உயிரியல் முறையில் பூச்சியை கட்டுப்படுத்த டிரைகோகிரம்மா கைலோனிஸ் என்ற முட்டை ஒட்டுண்ணியை ஏக்கருக்கு 40,000 என்ற அளவில் வயலில் தாய் அந்துப்பூச்சிகளின் நடமாட்டம் தெரிந்தவுடன், உடனேயே விடவேண்டும். பேசில்லஸ் துரிஞ்சியன்சிஸ் என்ற பேக்டீரியா நுண்ணுயிரியை ஏக்கருக்கு 400 கிராம் என்ற அளவில் புழுக்களின் சேதம் பொருளாதார சேத நிலையைத் தாண்டும்பொழுது தெளிக்க வேண்டும். இதற்கு தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழக விஞ்ஞானிகள் மேற்கண்ட உயிரியல் முறையில் அதிக பாண்டித்யம் பெற்றவர்கள். அவர்கள் விவசாயிகளுக்கு உதவுவதற்கு சாகுபடி பருவங்களில் தயாராக இருக்கின்றனர். விவசாயிகள் விஞ்ஞானிகளை அணுகி உதவி பெற்றால் மிகக் குறைந்த செலவில் பிரச்னையைத் தீர்த்துக்கொள்ள முடியும். முதல்போக நெல் அறுவடையில் கிடைக்கும் நெல்மணிகள் சவரன்போல் இருக்க வேண்டும். அப்போதுதான் நெல்லுக்கு நல்ல விலை கிடைக்கும். நெல்மணிகளின் தரத்தை பாதிக்கும் வியாதிகளைக் கட்டுப்படுத்த எடிபன்பாஸ் 200 மி.லி. மாங்கோசெப் 400 கிராம், தாமிர ஆக்சிகுளோரைடு 500 கிராம் இவற்றில் ஏதாவது ஒரு பூஞ்சாணக் கொல்லியை 200 லிட்டரில் கலந்து பயிரின் மேல் நன்கு நனையும் படி தெளிக்க வேண்டும்.

மேற்கண்ட முறைகளில் அமோக மகசூலும் கணிசமான லாபமும் கிடைக்கும்.  கம்பம் பள்ளத்தாக்கில் இருக்கும் நிலையைவிட வைகை  பாசன நிலங்கள் வேறு சூழ்நிலையில் உள்ளன. இப்பகுதியில் சுமார் 45 சதவிகித அளவு நிலங்கள் உழவு செய்யப்பட்டு அப்படியே விடப்பட்டுள்ளது. விவசாயிகள் இதுகுறித்து மனக்கவலை கொள்ள வேண்டாம். வெகு சீக்கிரத்தில் இப்பகுதிகளுக்கு மழையினால் பாசன நீர் வரும். அதோடு இப்பட்டத்தில் குறுகிய கால ரகமாகிய ஜே-13 மதுரை பகுதியில் விவசாயிகளுக்கு நல்ல விளைவுகளை ஏற்படுத்தித்தரும். அதனால் விவசாயிகள் நம்பிக்கையோடு இருக்கவும். ஜே-13 சாகுபடியில் பிரபல வல்லுனரான எ.எஸ்.தர்மராஜன் விவசாயிகளுக்கு நம்பிக்கைஊட்டுகிறார்.

எ.எஸ்.தர்மராஜன், விலாசம்: 4/34, மெயின்ரோடு, கருப்பாயூரணி, மதுரை-625 020

தினமலர் தகவல் : எஸ்.எஸ்.நாகராஜன்.

பி.டி.​ பருத்தியில் அதிக மகசூல் பெற ஆலோசனை

களைக் கொல்லிகள் என்பவை,​​ களைச் செடிகளை கட்டுப்படுத்துவதற்கு ​ பயன்படுத்தப்படும் ஒரு வேதியியல் பொருளாகும்.​ இதை

 • முளைப்பதற்கு முன்பு,
 • களைச்செடி வளர்ந்த பின்பு

என இரண்டு வகைகளாகப் பிரிக்கலாம்.​ முளைக்கும் முன்பு ​ செயல்படும் களைக் கொல்லிகள் களை விதை முளைக்கும் போதே,​​ அதன் முளை ​ வேர்கள் வழியே உள்சென்று அவற்றை அழிக்கின்றன.​ இவ் வகை களைக் கொல்லிகளைப் பயன்படுத்தும் போது,

 • மண்ணில் போதுமான ஈரப்பதம் அவசியம்.
 • இந்தக் களைக் கொல்லிகள் குருணையாக இருந்தால்,​​ அதைச் சீராகப் பரப்புவதற்கு மணலுடன் கலந்து சீராக தூவ வேண்டும்.​ தூவப்பட்ட இடங்களை நீரில் மிதக்காமல் தவிர்க்க வேண்டும்.

களைச் செடிகள் முளைத்து வளர்ந்த பின்பு தெளிக்கப்படும் களைக் கொல்லிகள் ​ இலைகள் மூலம் உறிஞ்சப்பட்டு,​​ மற்ற பாகங்களுக்கு ஊடுருவிச் சென்று,​​ களைகளை ​ கொல்கின்றன.​ இந்தச் செடிகள் முளைப்பதற்கு முன்பு தெளிப்பதாக இருந்தால்,​​ ​ ஹெக்டேருக்கு

 • 3.50 லிட்டர் பென்டமெத்தலின் ​(ஸ்டாம்பு)​ அல்லது
 • அளாக்குளோர் 2.50 லிட்டர் அல்லது
 • டையூரான் 1.25 லிட்டர்

உள்ளிட்டவற்றில் ஏதாவது ஒன்றை ​ 200 லிட்டர் தண்ணீரில் கலந்து பருத்தி விதைத்த மூன்றிலிருந்து,​​ ஐந்து நாள்களுக்குள் ​ கைத் தெளிப்பான் மூலம் தெளித்தல் அவசியம்.

தெளித்தப்பின்பு தெளிப்பானை நன்றாகக் கழுவ வேண்டும்.​ தண்ணீரை மட்டும் ​ நிரப்பி ஒரு டேங்க் தரிசாக உள்ள நிலங்களில் அடிப்பதால் தெளிப்பான் உள்பகுதியில் உள்ள களைக் கொல்லி நஞ்சை சுத்தமாக நீக்கலாம்.​ இல்லையெனில்,​​ பிறகு மருந்து கலந்து அடிக்கும்போது,​​ களைக் கொல்லியின் மீதமுள்ள நஞ்சினால் பயிர்க் கருகுவதைத் தவிர்க்கலாம்.

களைச் செடி வளர்ந்த பிறகு தெளிப்பான் இருந்தால்,​​ பாராக்குவாட் அல்லது ​ டைக்குவாட் என்னும் களைக் கொல்லியைப் பயன்படுத்தி,​​ களைகளை ​ கட்டுப்படுத்தலாம்.​ ​

குறிப்பாக,​​ களைக் கொல்லிகளைப் பயன்படுத்தும் போது,​​ பருத்தியில் ஊடு பயிராக பயறு ​ வகைகள் இருந்தால்,​​ பென்டமெத்தலின் ஸ்டாம்பு உபயோகிப்பதை ​ தவிர்ப்பதோடு,​​ களைகளை அழிக்க களை எடுக்கும் கருவியை பயன்படுத்த வேண்டும்.​ ​ இவ்வாறு செய்தால் பி.டி.​ பருத்தியில் அதிக மகசூல் பெறலாம்.

தினமணி தகவல் – திரு. இரா. மாரிமுத்து, திட்ட ஒருங்கிணைப்பாளர், ஹேன்ஸ் ரோவர் வேளாண் அறிவியல் மையம், வாலிகண்டபுரம், பெரம்பலூர்

மண்புழு எருவினை பிரித்தெடுக்கும் முறை

மண்புழு உற்பத்தி முறைகள் – தொட்டிமுறை, குழி முறை, படுக்கை முறை. நன்கு மக்கிய பயிர்க்கழிவுகள் மற்றும் சாணத்தை மண்புழுவிற்கு உரமாக தருவதால் ஒரு மாதத்திலேயே மண்புழு எருவினை எடுத்து பயன்படுத்தலாம். அதே சமயம் பாதியளவு மக்கிய, சரியாக மக்காதநிலையில் உள்ள பொருட்களை உணவாக்கி கொடுத்தால் 2 மாதங்கள் கழித்துத்தான் மண்புழு எருவினைப் பெறமுடியும்.

மண்புழு எருவினை சேகரிக்க முடிவு செய்தவுடன் தொட்டியில் நீர் தெளிப்பதை 2, 3, நாட்கள் நிறுத்தி வைக்க வேண்டும். மண்புழுக்கள் ஈரம் மிகுந்த அடிப்பகுதிக்குச் சென்றுவிடும். இச்சமயத்தில் நாம் மேலே பரப்பியுள்ள சிறுசிறு செங்கற்களின் இடையிடையே காணப்படும் மண்புழுவின் குருணை வடிவ கழிவுகளை சேகரிக்க வேண்டும். இக்கழிவுகளின் மீது நீர் தெளித்து ஈரத்தன்மையை பராமரிக்க வேண்டும். இக்கழிவுகளை நேரடியாக விளைநிலங்களில் இட்டு பயன்படுத்தலாம். மண்புழு எருவினை பைகளில் அடைத்து ஈரம் உலராமல் பாதுகாத்து 6 முதல் 8 மாத காலம் வரை பயன்படுத்தலாம். ஒரு கிலோ எடைக்கு சுமார் 1000 மண்புழுக்கள் இருக்கும். இவை ஒரு நாளில் பயிர்க்கழிவுகளை உண்டு 5-6 கிலோ எருவினைத் தருகின்றன. நன்கு புழுக்களை பராமரித்தால் ஒரு மாதத்திற்கு 150 கிலோ வரை எருவினை பெறலாம். நன்கு வளர்ச்சியடைந்த நிலையில் சுமார் 200 கிலோ வரை எரு கிடைக்கும். கிலோ 6 முதல் 8 ரூபாய் வரை விலை போகும்.

நெல்லுக்கும் சொட்டுநீர் பாசனம் அமைத்து அசத்திக் கொண்டிருப்பவர் சேலம் மாவட்டம், நாகியம்பட்டி அப்புத்தோட்டம் கே.கருப்பணன் என்ற விவசாயி. ஏற்கனவே விவசாயி தன்னிடம் இருந்த சொட்டுநீர்க் குழாய்களை வைத்து 70 சென்ட் நிலத்தில் ஏ.டி.டி.45 ரக நெல்லுக்குதானே சொட்டுநீர் அமைத்துள்ளார். நிலத்தில் பல பயிர் சாகுபடி செய்து அவையெல்லாம் பூத்து வந்ததும் மடக்கி உழவு செய்துவிட்டு பின்னர் தொழு உரம் போட்டு பரம்படித்து நிலத்தை சமன்செய்து, நாற்றங்கால் மூலம் நாற்று தயாரித்து ஒற்றை நாற்று முறையில் ஒரு அடி இடைவெளியில் கயிறு பிடித்து நாற்று நட்டுள்ளார்.

பின்னர் 4 அடி இடைவெளிக்கு ஒரு குழாய் (லேட்ரல்) வருவதுபோல் 18 மி.மீ. குழாயை அமைத்து அதில் இரண்டரை அடி இடைவெளியில் ஒரு துளையிட்டு சிறிய குழாயை (மைக்ரோ டியூப்) சொருகிவைக்க வேண்டும். நடவு செய்த ஒரு வாரத்தில் தலா 2 லிட்டர் சூடோமோனாஸ், டிரைகோடெர்மா விரிடி உயிரி பூஞ்சாணத்தை சொட்டுநீரில் கலந்து நிலத்துக்கு கொடுக்க வேண்டும். இதுதவிர வேறு எந்த இடுபொருளும் கொடுக்கவில்லை. கோனோவீடரை கிழக்கு மேற்காக மட்டும் உருட்டி களை எடுக்க வேண்டும். இப்படிச் செய்வதால் சொட்டுநீர் குழாய்க்கு எந்த பாதிப்பும் வராது. விதை முளைத்ததிலிருந்து சுமார் 50 நாட்களில் பூ கரு உருவாகும். அதிலிருந்து 30 நாட்களில் பூ பூக்கும். அதிலிருந்து கதிர் முதிர்ச்சி அடைய 30 நாட்கள் ஆகும்.

வேர் பிடிக்கும் தருணம், பூக்கரு உண்டாகும் சமயம், பூக்கும் தருணம் நீர் பற்றாக்குறை ஏற்பட்டால் மகசூலில் பெரிய பாதிப்பு இருக்கும். மற்ற சமயங்களில் காய்ச்சலும் பாய்ச்சலும் இருந்தாலே போதுமானது. அரை மணி நேரம் பாய்ந்தாலே நிலம் ஈரமாகிவிடும். வழக்கமான முறையில் ஒரு ஏக்கர் நெல் சாகுபடி செய்வதற்கு தேவைப்படும் தண்ணீரை வைத்து சொட்டு நீர்ப்பாசனம் மூலம் 3 ஏக்கர் சாகுபடி செய்யலாம். வழக்கமான முறையில் 70 சென்டில் 20 மூடை (70 கிலோ) மகசூல் எடுப்பார். சொட்டுநீர் பாசனம் மூலம் கூடுதலாக 9 மூடை நெல் கிடைத்துள்ளது.

அறுவடைக்கு அடுத்த நாளே குழாய்களை சுருட்டி வைத்துவிட்டு உழவு ஓட்டிவிடலாம் என்கிறார் விவசாயி. தொடர்புக்கு: கே.கருப்பண்ணன், 97869 81299 (தகவல்: பசுமை விகடன், 25.6.10)

அவசர சாகுபடிக்கு சேற்றில் நெல்லினை நேரிடை விதைப்பு செய்தல்

மதுரை பகுதியில் நெல்லினை நாற்றுவிடாமல் இருப்பவர்கள் உடனே சேற்றினில் நேரிடையாக விதைக்கலாம். ஆடுதுறை 43, ஆடுதுறை 45, ஆடுதுறை 36 மற்றும் ஜே 13 நெல் ரகங்களை அவைகளின் விதைகளை முளைகட்டி சேற்றில் நேரிடையாக விதையுங்கள்.

தொழில்நுட்பம்:

நிலம் தயாரிப்பு:

விதைப்பு செய்ய இருக்கும் நிலத்திற்கு தவறாமல் வழக்கமாக இடக்கூடிய இயற்கை உரங்களான பசுந்தழை உரம் அல்லது கலவை உரம் அல்லது தொழு உரம் இட்டு நிலத்தை நன்கு உழுது சேற்றினைக் காய்ப்பதமாக ஒரு வாரம் விட்டுவைக்க வேண்டும். சேற்றில் அதிகம் தண்ணீர் வைக்காமல் இருக்க வேண்டும். இம்மாதிரி விடும்போது களைச்செடிகள் அனைத்தும் முளைத்துவிடும். உடனே வயலுக்கு நீர் கட்டி உழுதோமானால் நேரிடை விதைப்புப் பயிரில் களைச்செடிகளின் ஆரம்பகால வீரியத் தாக்குதலை கட்டுப்படுத்த இயலும்.

அடியுரம் மணிச்சத்து மட்டும்:

நேரிடை விதைப்புப் பயிருக்கு அடியுரமாக மணிச்சத்து கொடுக்கக்கூடிய ரசாயன உரமான சூப்பர் பாஸ்பேட் உரத்தை மட்டும் இட்டால் போதும். 20 கிலோ மணிச்சத்து கொடுக்க ஏக்கருக்கு கடைசி உழவின்போது 135 கிலோ சூப்பர் பாஸ்பேட் இடவேண்டும். நிலத்தை உழுது பரம்படித்து ஏக்கருக்கு பொடி செய்யப்பட்ட பன்னிரண்டரை கிலோ ஜிங்க் சல்பேட்டினை மணலுடன் கலந்துவயலில் தூவ வேண்டும். தழைச்சத்து ரசாயன உரங்களை இடாமல் இருக்கும்போது களைச்செடிகள் வீரியமாக வளருவதற்கு வழி இல்லை.

சமப்படுத்தி பாத்தி அமைத்தல்:

சேறு செய்த நிலத்தை மேடு பள்ளம் இல்லாமல் ஒரே சீராக சமன்செய்ய வேண்டும். விவசாயிகளுக்கு இப்பணியைச் செய்வதில் கடும் சிரமமாக இருக்கும். அவர்கள் மன தைரியத்தை வரவழைத்துக் கொண்டு நம்பிக்கையோடு உழைத்து நிலத்தை நன்கு சமப்படுத்த வேண்டும். பிறகு 10-12 அடி அகலப் பாத்திகள் உண்டாக்க வேண்டும். இரண்டு பாத்திகளுக்கு இடையே ஒரு அடி அகலத்தில் ஒரு சர்வே கல்லினை கயிறு கட்டி இழுக்க வேண்டும். இது இரண்டு பாத்திகளுக்கு இடையில் ஒரு சிறிய வடிகால் வாய்க்காலினை உண்டாக்கித்தரும். இது பாத்தியிலிருந்து நீரினை வடிக்க உதவும்.

மூன்றாங்கொம்பு விதை விதைத்தல்:

நிலத்தில் களைச்செடிகள் முளைப்பதற்கு முன் நெல் நாற்று முளைக்க வேண்டும். இதற்கு மூன்றாங்கொம்பு விதை விதைக்க வேண்டும். ஒரு ஏக்கருக்கு விதையளவு 30 முதல் 35 கிலோ வரை தேவைப்படும். விதையினை விதைக்கும் முன் பாத்தியில் 3-5 செ.மீ. ஆழம் உள்ளபடி நீரினை வைத்துக்கொண்டு வடிகால் கால்வாயில் நின்றுகொண்டு (இரண்டு பாத்திகளுக்கு இடையில் உள்ள பகுதியில்) முளைகட்டி விதையினை பாத்தியில் ஒரே சீராகத் தூவ வேண்டும். பிறகு பாத்தியில் ஒரு செ.மீ. ஆழம் உள்ளபடி நீரினை வைத்துக்கொண்டு அதிகமாக உள்ள நீரினை வடித்துவிட வேண்டும். இம்மாதிரியான செயல், விதைகள் பழுதில்லாமல் முளைக்க வழி செய்கின்றது. பாத்தியில் நீர் வற்றிப் போகாமல் கவனித்துக் கொள்ள வேண்டும்.

விதைத்த 7-ம் நாள் சாட்டர்ன் களைக்கொல்லி:

நேரிடை விதைப்பு செய்த வயலில் களைகளை அகற்ற தையோபென்கார்ப் எனக்கூடிய (சாட்டர்ன்) களைக்கொல்லி, நல்ல பலனைத் தருகின்றது. இந்தக் களைக்கொல்லி களைச்செடிகளை அழிக்கின்றது. ஆனால் நெல் பயிருக்கு தீங்கு விளைவிப்பதில்லை. விதை விதைத்த ஏழாம் நாள் வயலில் 2 செ.மீ. ஆழம் நீர் வைத்துக் கொண்டு களைக்கொல்லி மணல் கலவையை தூவ வேண்டும். 800 மி.லி. சாட்டர்ன் திரவத்தினை 25 கிலோ ஆற்று மணலுடன் கலந்து வயலில் சீராக தூவி விடவேண்டும். களைக்கொல்லி இட்ட வயலில் நீர் ஒரு வாரம் வடியாமல் இருக்க வேண்டும்.

பயிரைக் கலைத்தல், வெற்றிடம் நிரப்புதல்:

நேரிடை விதைப்பு செய்த வயலில் விதைத்த 20 அல்லது 25ம் நாள் அடர்த்தியாக வளர்ந்துள்ள பயிரினைக் கலைத்துவிட வேண்டும். இதுசமயம் பயிர் எண்ணிக்கையை மனதில் வைத்துக்கொண்டு பயிரினைக் கலைக்க வேண்டும். குறிப்பிட்ட அளவு நெல் பயிரை விடாமல் அடர்த்தியாக விட்டால் நெல் கதிர்கள் வாளிப்பாக வராமல் நீளம் குறைந்துவிடும். கலைத்து எடுத்த பயிர்களை வெற்றிடங்களை நிரப்புவதற்கு வைத்துக்கொள்ள வேண்டும். வயலில் வெற்றிடங்களை நிரப்பும் சமயம் தேவைப்படின் ஒன்று அல்லது இரண்டு கைக்களை எடுத்துவிடலாம்.

தழைச்சத்து, சாம்பல்சத்து ரசாயன உரங்கள் இடுதல்:

ஏக்கருக்கு

 • 40 கிலோ தழைச்சத்து (88 கிலோ யூரியா),
 • 20 கிலோ சாம்பல் சத்து (33.33 கிலோ மூரியேட் ஆப் பொட்டாஷ்)

இவைகளைக் கீழ்க்கண்டபடி இடவேண்டும்.

 • விதைத்த 15ம் நாள் 30 கிலோ யூரியாவுடன் 6 கிலோ வேப்பம் புண்ணாக்கு கலந்து இடவேண்டும்.
 • விதைத்த 30ம் நாள் 29 கிலோ யூரியாவுடன் 17 கிலோ மூரியேட் ஆப் பொட்டாஷ் கலந்து இடவேண்டும்.
 • விதைத்த 45ம் நாள் 29 கிலோ யூரியாவுடன் 17 கிலோ மூரியேட் ஆப் பொட்டாஷ் கலந்து இடவேண்டும்.

குறிப்பு: ரசாயன உரங்களை இடும் முன் வயலில் உள்ள நீரினை வடித்துவிட்டு உரமிட வேண்டும். பின்னால் பாசனம் செய்யலாம்.

பாசன நிர்வாகம்:

நடவுப்பயிரைப் போலவே பாசன நிர்வாகம் செய்ய வேண்டும். ஆனால் நடவுப் பயிரில் சற்று வறட்சி ஏற்பட்டாலும் களைத்தொல்லை அதிகமாகாது. நேரிடை விதைப்புப் பயிரில் பயிர் தூர் கட்டிவளர்ந்துவயலில் நிழல் தரும் வரை வறட்சி ஏற்படாமல் வயலில் தண்ணீர் இருந்து கொண்டிருக்க வேண்டும். இதுசமயம் தண்ணீர் இல்லாத நிலை ஏற்பட்டால் களை மண்டிவிடும். நேரிடை விதைப்புப் பயிரை கவனமாக செய்தால் பயிரின் வயது குறையும். நல்ல மகசூலும் லாபமும் கிட்டும்.

-எஸ்.எஸ்.நாகராஜன்

கரும்பு சாகுபடியில் வறட்சி நிர்வாகம்

கரும்பு

கரும்பு

தண்ணீர் பற்றாக்குறையை சமாளிக்க முதலில் மண்ணிலிருந்து நீர் ஆவியாகி விரயமாவதை தடுக்க வேண்டும். இதற்கு கரும்பு சோகைகளை பயன்படுத்தலாம். கரும்பு சோகை ஒரு எக்டரிலிருந்து 10 டன் வரை கிடைக்கும். இதை மக்கவைத்து இயற்கை உரமாக பயன்படுத்தலாம். அல்லது அப்படியே கரும்பு நட்ட பார்கள் மேல் சீராக பரப்பி வைக்கலாம். இதனால் நீர் ஆவியாகி விரயமாவது தடுக்கப்படும். மேலும் கரும்பு சோகைகளை பார்களின் மேல் பரப்புவதால் களைகள் வளர்வதும் கட்டுப் படுத்தப்படும். மேலும் கரும்பு சோகை மக்கி எருவாகவும் மாறி மண் வளத்தை பெருக்கும். கரும்பிற்கு பார் கட்டும்பொழுது சோகைகளையும் சேர்த்து அணைத்துக்கொடுப்பதால் வளரும் கரும்பிற்கு ஒரு அங்கக உரமாக பயன்படும். கரும்பு சோகைகளை இரு பார்களுக்கு இடையிலேயும் பரப்பலாம். இந்த முறையில் முலை வரும் கரும்பை மூடி சேதப் படுத்தாமல் கவனமாக செய்ய வேண்டும்.

தண்ணீர் பற்றாக்குறையை சமாளிக்க பயிர் வளர்ச்சி ஊக்கிகளில் கரணை நேர்த்தி செய்யலாம். அதாவது கரணைகளை நடவு செய்வதற்கு முன்னால் எத்ரல் வளர்ச்சி ஊக்கி 200 பிபிஎம் என்றால் பார்ட்ஸ் பெர் மில்லியன் அதாவது பத்து லட்சத்தில் ஒரு பங்கு என்று அர்த்தம். 200 பிபிஎம் எத்ரல் தயாரிக்க, 200 மில்லி மருந்தை 400 லிட்டர் தண்ணீரில் கலந்து கரணைகளை ஒரு மணி நேரம் ஊறவைத்து நடவுசெய்யலாம். இதனால் நல்ல முளைப்பு திறனும் வறட்சியைத் தாங்கும் தன்மையும் உண்டாகும். மேலும் எத்ரல் கரணை நேர்த்தி செய்வதால் அதிக தூர்கள் விட்டு மகசூல் அதிகரிக்கும். வறட்சி தாங்கும் தன்மையை அதிகரிக்க நீர்த்த சுண்ணாம்பு நீரையும் பயன்படுத்தலாம். இதற்கு 80 கிலோ நீர்த்த சுண்ணாம்பை 400 லிட்டர் தண்ணீரில் கலந்து கரணைகளை ஊறவைத்து நடலாம். இதனால் வறட்சி தாங்கும் தன்மை அதிகரிக்கும்.

கரணைகளை நடும்பொழுது 30 செ.மீ. ஆழக்கால் அமைத்து நடவு செய்வதன் மூலம் வறட்சி தாங்கும் தன்மையை அதிகரிக்கலாம். ஆழக்கால் நடவு முறையில் கரணைகளின் வேர்கள் நன்கு ஊடுருவி பாய்ந்து நிலத்தடி நீரை உறிஞ்சுவதால் வறட்சியை சமாளிக்கும் திறன் பெறும். மேலும் கரும்பு வளர்ந்த பின் காற்றில் சாய்வதையும் வெகுவாக குறைக்க இயலும். ஆழக்கால் நடவு முறையில் தற்போது சில மாற்றங்கள் செய்யப்பட்டு குழி நடவு முறை பரிசீலிக்கப்பட்டு வருகிறது.

தண்ணீர் பற்றாக்குறையின் போது பயிர்கள் பூமியிலிருந்து ஊட்டச்சத்துக்களை உறிஞ்ச இயலாத சூழ்நிலை ஏற்படும். இதை தவிர்க்க யூரியா 2.5 சத கரைசலை கோடையில் இலை வழியாக தெளிக்கலாம். இத்துடன் பொட்டாஷ் 2.5 சத கரைசலையும் சேர்த்து தெளிப்பதால் வறட்சியை தாங்கி வளரும். இதற்கு 12.5 கிலோ யூரியா மற்றும் 12.5 கிலோ பொட்டாஷை 500 லிட்டர் தண்ணீரில் கலந்து ஒரு எக்டர் கரும்புக்கு இலை வழியாக தெளிக்கலாம்.

இந்த முறையினை ஒரு மாத இடைவெளியில் கோடை காலங்களில் செய்வதால் பயிர் பட்டுப்போகாமல் ஊக்கமுடன் வளர உதவும். பொட்டாஷ் இலை வழியாக கொடுப்பதால், நீர் இலை துளிகள் வழியே நீராவி போக்காக வெளியேறி விரயமாவதை குறைக்க உதவும். இத்துடன் கோடை காலங்களில் ஒரு பார் விட்டு நீர் பாய்ச்சுவதால் ஒரு முறை நீர் பாசனத்திற்கு தேவையான தண்ணீரை பாதியாக குறைக்க முடியும். அடுத்த முறை தண்ணீர் பாய்ச்சும்போது ஏற்கனவே விட்டுப்போன பார்களுக்கு நீர் பாய்ச்ச வேண்டும்.

சமீப காலமாக நீர் மேலாண்மையில் ஏற்பட்டுள்ள முன்னேற்றத்தின்படி சொட்டுநீர் பாசனம் ஆகியவற்றையும் பின்பற்றலாம். சொட்டுநீர் பாசனத்தால் கரும்பிற்கு தேவையான தண்ணீரின் அளவை பாதியாக குறைக்க இயலும் என்று கண்டறியப் பட்டுள்ளது. இதனால் தண்ணீரை சிக்கனமாக பயன் படுத்துவது அல்லாமல் விளைச்சலும் எந்த விதத்திலும் பாதிக்கப்படாது. சொட்டு நீர்பாசனம் செய்யும் பொழுது கரும்பிற்கு தேவையான உரச் சத்துக்களையும் பாசன நீர் வழியே கொடுக்க இயலும். இந்த முறைதான் பெர்டிகேஷன் என்று அழைக்கப்படுகிறது.

இதனால் ஒரு எக்டருக்கு 175 முதல் 200 டன் வரை கரும்பு விளைச்சல் அதிகரிக்கும். இது சாதாரண முறையில் கிடைக்கக்கூடிய விளைச்சலை விட 70லிருந்து 90 டன்கள் அதிகமாகும். சுமார் 25 லிருந்து 50 விழுக்காடு பாசன நீரை சேமிக்கலாம். இதன் மூலம் கரும்பு பயிரிடும் நிலப்பரப்பை அதிகரிக்கலாம். சொட்டுநீர் மற்றும் பெர்டிகேஷன் முறையில் நீர்பாசனம், உரச்செலவு மற்றும் களை நிர்வாகத்திற்கு தேவையான செலவினங்களை பாதி குறைக்க இயலும். இந்த முறையில் சாதாரண முறையில் கரும்பு சாகுபடியில் கிடைக்கும், எக்டருக்கு ரூ.58,000 லாபத்தைவிட சொட்டுநீர் பாசனம் மற்றும் பெர்டிகேஷன் மூலம் எக்டருக்கு ரூ.75,000 வரை நிகர லாபம் பெறலாம். இத்துடன் வறட்சியை சமாளிக்க தாங்கி வளரும் சிறந்த ரகங்களை தேர்வு செய்ய வேண்டும். இத்துடன் சிபாரிசு செய்யப்படும் வறட்சி நிர்வாக முறைகளை கடைபிடித்தால் விளைச்சல் பாதிக்காமல் அதிக வருவாயை பெறலாம்.

டாக்டர் கொ.பாலகிருஷ்ணன், பேராசிரியர் தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகம்
மண்டல வேளாண்மை ஆராய்ச்சி நிலையம், அருப்புக்கோட்டை.

தினமலர் செய்தி