வேளாண் செய்தித் தொகுப்பு 22-08-2010

தமிழக அரசின் இலவச மோட்டார் பற்றிய முதல்வர் கருணாநிதியின் அறிவிப்பு கடந்த சுதந்திர தினத்தன்று வெளியானது. அதனைத் தொடர்ந்து பல்வேறு சந்தேகங்களும் விவாதங்களும் அதைத் தொடர்ந்து ‘இது உடன் நடக்கக்கூடியது அல்ல. 6 வருடங்கள் தவணை முறையில் நடக்கும்’ என்கிற அரசின் விளக்க அறிக்கையும் வெளியானது.

இதைத் தேர்தல் ஜனரஞ்சகத்தின் ஒன்றாகத்தான் பார்க்க முடிகிறது. முந்தைய நாள் எதிர்கட்சித்தலைவர் ஜெயலலிதாவின் மாநாட்டின் விளைவு என்றும் சொல்லலாம். எது எப்படி இருந்தால் என்ன. நாம் கருத்தில் கொள்ளவேண்டியது திட்டம் செயல்படுத்தும் முறைகளைத்தான். இதில் தெளிவு இருப்பதாகவும், கடைசி மக்கள் வரை தகவல் பரிமாறப்பட்டதாகத் தெரியவில்லை. சிறு குறு விவசாயிகள் என்கிற பாகுபாடு உள்ளது. அதற்கு சான்றிதழ்கள் வாங்கி அதனை அரசிடம் கொடுத்து மோட்டார் வாங்கவேண்டும். விவசாயிகள் பயன்படுத்தும் மோட்டாரின் சக்தி என்பது அவரவர் வாழும் இடத்தைப் பொறுத்து மாறுகிறது. சில இடங்களில் 400, 600 அடி போர்வெல் வைத்து தண்ணீர் உறிஞ்சுகிறார்கள். அது போன்ற சபிக்கப்பட்ட இடங்களுக்கு அரசு வழங்கும் மோட்டார் பலனளிக்காது. எல்லாவற்றையும் விட மும்முனை மின்சாரம் என்பது தங்குதடை இன்றி வழங்கப்படவேண்டும். அதில் அரசாங்கம் கொள்கை முடிவு எடுக்க வேண்டும்.  இலவச டிவி எல்லாம் அரசின் கொள்கை முடிவில் வரும்போது இந்தத் திட்டம் வரக்கூடாதா?

இலவச மோட்டார் விண்ணப்பித்தோர் பட்டியல் மற்றும் வழங்கப்படும் உத்தேச நாட்கள் வெளிப்படையானதாக இருக்க வேண்டும். அரசின் ஜனரஞ்சகத் திட்டங்களான இலவச டிவி, இலவச வீட்டு மனைப்பட்டா, இலவச தார்சு வீடு போன்றவற்றைப் போன்று அல்லாமல் பத்தாம் வகுப்பு தேர்வு முடிவு வெளியிடுதலைப் போல அமையவேண்டும். அத்தோடு மின்சார மோட்டார் இல்லாத மற்றும் மின்சாரத்திற்குக் காத்திருக்கும் விவசாயிகள் டீசல் மோட்டார்களைப் பயன்படுத்திக்கொண்டிருக்கிறார்கள். அவர்களின் செலவழிக்கும் பணத்திற்கு அரசாங்கம் மாற்றுவழி செய்யவேண்டியது அவசியம்.

அதன் மறுபக்கம் ஸ்ரீபெரும்புதூர் விவசாய நில ஆக்கிரமிப்புப் பிரச்சினை அரசியலாக்கப்பட்டிருக்கிறது. போராட்டக் காரர்களை நாட்டின் வளர்ச்சிக்கு எதிரானவர்கள் என்று சாடுகிறார் முதல்வர் கருணாநிதி.

இந்த வார வேளாண் செய்திகளில் பயிரிடும் யோசனைகளை நிறைய வழங்கியிருக்கிறார்கள். ஆனால் இயற்கை விவசாயத்தின் மூலம் கத்தரி பயிரிடும் முறை பற்றி செய்தி வந்துள்ளது. அதனை முன்னிலைப் படுத்த விரும்புகிறோம். பாரம்பரிய விவசாயத்துடன் தற்கால வேளாண் பல்கலையின் ஆய்வுகளுடன் சேரும்போது அது விவசாயிக்கு மட்டுமல்ல அந்த நிலத்திற்கும் பயனுடையதாக இருக்கிறது. கடந்த வாரத்தின் இந்து நாளிதழின் வலைப்பதிவில் இயற்கை விவசாயம் பற்றிப் பேசினார்கள் (அறிமுகப்படுத்தியவர் திரு வின்செண்ட், கோவை). அனைத்து வகைகளிலும் நாமே முன்னோடியாக இருந்துவிட்டு தற்போது பாரம்பரியம் இழந்து பணமும் இழந்து நிற்கிறோம் என்று அந்த ஒலிக்கோவை சொல்கிறது.

உழவர்களுக்கு என்று புதிய படிப்பை வேளாண் பல்கலை அறிமுகம் செய்திருக்கிறது. இவை தவிற அறுவடை மற்றும் பயிரிடும் யோசனைகள், மரம் ஏறும் கருவி மற்றும் புதிய ஏல ரகங்களுடன் இந்த வார செய்திகள்.

இயற்கை வேளாண்மையில் கத்தரி சாகுபடி

பி.டி.​ பருத்தியில் அதிக மகசூல் பெற ஆலோசனை

சின்ன வெங்காயம் – பெரிய லாபம்: வேளாண் துறை ஆலோசனை

தேங்காய் அறுவடைக்கு ஏற்ற தருணம்

உழவர்களுக்கு வேளாண் பல்கலை வழக்கும் இளநிலைப் பட்டம்

ஐ.சி.ஆர்.ஐ.5 புது ஏலக்காய் ரகம்

விதை நெல் பாதுகாப்புக்காக தகரப் பத்தையம்

தென்னை, பனைமரம் ஏற உதவும் கருவி

விவசாயிகளுக்கு தள்ளுபடி விலையில் எஸ்கார்ட்ஸ் டிராக்டர்கள்

இலவச மின் மோட்டார்களால் மின் சேமிப்பு சாத்தியமா?

சலுகைகளை எதிர்நோக்கும் டீசல் என்ஜின் விவசாயிகள்!

வேளாண் செய்தித் தொகுப்பு 15-08-2010

வேளாண் பூமியாம் இந்தியாவின் 64ஆவது சுதந்திர தினத்தை இன்று கொண்டாடிக் கொண்டிருக்கும் வேளையில அனைவரையும் சந்திப்பதில் மகிழ்வெய்துகிறோம். தவிற வேளாண் துறையை ஊக்குவிக்க பிரதமர் மன்மோகனோ, முதல்வர் கருணாநிதியோ நம் கவனத்தைக் கவரும் அறிவிப்புகள் ஏதும் வெளியிடவில்லை என்கிற வருத்தமும் நம் மனதைக் கவ்வத்தான் செய்கிறது.

நூறுநாள் வேலைத்திட்டம் (NREGA) தொடர்பாக அவையில் நடைபெற்ற விவாதம் கவனத்தை ஈர்க்கிறது. நூறுநாள் வேலைத்திட்டம் என்பது நம் நாட்டிற்கு ஒரு கனவுத்திட்டம் போன்றது. அது நீடிக்க வேண்டும் என்பதே நமது ஆவல். அது நடைபெறும் முறையில் மாற்றங்கள் அவசியம் என்பதை நாம் அறியவேண்டும். பொதுவாகவே, அனைத்து பகுதி விவசாயிகளும் குற்றம் சாட்டுவது கூலி ஆட்கள் பற்றாக்குறை. இந்தத் திட்டம் பயிர் அறுவடை காலத்தில் நடைமுறைப்படுத்தப் படாது என்று அறிவித்தாலும் அது பெயரளவே உள்ளது. தவிற கேள்விப்பட்ட வரையில் குறிப்பிட்ட ஒரு நபருக்கு குறிப்பிட்ட நாள் வரை வேலை தந்துமுடித்தாலும், அதே நபருக்கு திரும்ப பணி வழங்கப்படுவதாகத் தெரிகிறது. அது செல்வாக்கோ பிற பிரச்சினைகளோ என்று நாம் அரசியல் பேசாவிட்டாலும், NREGA படி நடக்கும் பணிகளின் தரம் அவ்வாறு இருக்கிறது. நான்கு விரட்கடை தோண்டிவிட்டு குளத்தைத் தூர்வார்வதாக கணக்கு காட்டி இருக்கிறோம். அதற்கு ஆன செலவிற்கு எந்திரத்தின் மூலம் அந்தப் பணியை மேற்கொண்டால் சிறப்பான முறையில் முடிந்திருக்கும் என்பது நமது யோசனை. பணியாளர் நேரங்களில் ஒரு ஒழுங்குமுறை என்பது இருப்பதாகத் தெரியவில்லை. இந்தக் கறைகள் களைவதற்காக கண்காணிப்புக் குழுக்கள் ஏற்படுத்தப்படும் என்று செய்திகளில் படித்தோம். அது பற்றி தெரியவில்லை.

மாறாக, எந்திரத்தையும் மக்கள் சக்தியையும் கலக்க வேண்டும். உதாரணமாக, குளத்தை எந்திரம் தூர்வாரட்டும். தூர்ந்து போன மடைப்பகுதிகளை மக்கள் சரி செய்யட்டும். கரைகளில் மண்ணரிப்பு ஏற்படாமல் இருக்க செடிகள் நடவு மற்றும் பராமரிப்பினை மகளிர் தொழிலாளர்கள் பார்க்கட்டும். திட்டமிட்ட பணிகள் மெற்கொண்டால் பணிகள் சுத்தமாக முடியும் என்பது நமது பார்வை. ஆனால் அது போன்று நடைபெறுவதற்குரிய தலைமை அங்கு இல்லை.

அவை விவாதங்களில் வேலைத்திட்டத்தையும் வேளாண் பணிகளையும் ஒருங்கிணைப்பது பற்றி எதிர்கட்சிகள் பேசியதாக செய்திகள் வெளியாயின. அதாவது வேலைத்திட்டத்தின் சம்பளத்தின் ஒரு பகுதி நிலத்தின் சொந்தக்காரர் வழி பணியாளர்களுக்குப் போகட்டும் என்று யோசனை செய்திரு்ககின்றன. அப்படிச் செய்தால் உழவுக்கு மானியம் கொடுத்தது மாதிரி ஆகிவிடும் என்று அரசு மறுத்திருப்பதாகத் தெரிகிறது. எதிர்கட்சிகள் செய்யும் யோசனையில் தவறு இருப்பதாகத் தெரியவில்லை. தற்போதைய திட்டத்தில் இருக்கும் குறைபாடுகள் இதில் வராமல் பார்த்துக் கொண்டால் வேளாண் பணிகளும் நடைபெறும். அரசாங்கத்தின் நோக்கமும் நிறைவேறும். பணம் என்கிற ஒன்றை நேரடியாகக் கையாளக் கொடுத்தால்தான் பித்தலாட்டங்கள் அரங்கேறும். அதில் கண்டிப்பு மேற்கொண்டு பணிகளில் கவனம் செலுத்தினால் சிறப்பான முறையில் விவசாயமும் பணியாளர்களும் செழிப்பார்கள்.

அரசாங்க வேளாண் அறிவிப்புகள் காதும் காதும் வைத்தாற்போல நடக்கிறது என்று கடந்த வாரம் குறைப்பட்டு இருந்தோம். நம் மனக்குறையை வெளிப்படுத்தும் வகையில் மானியம் பற்றிய திட்டங்கள் வெளியிடுவதில் வெளிப்படையான தன்மை இல்லாததைச் சொல்லி தினமணி செய்தி ஒன்று வெளியாகி உள்ளது. தனியார் முதலாளிகள் பைகளில் கத்தை கத்தையாக பணம் சேர்க்க FM வானொலிகள், ஊரே குறைசொன்னாலும் வளர்ச்சித் திட்டங்களை புறம் தள்ளி வீட்டுக்கு வீடு பிள்ளையாராக உட்கார்ந்து வரும் இலவச தொலைக்காட்சி (தொலைக்காட்சி என்பது தகவல் பரிமாற்ற சாதனம் என்பதை விட அதில் வரும் நிகழ்ச்சிகளைப் பார்த்தால் அது ஒரு விஷ விதை), தூங்கி வழியும் தோட்டக்கலை மாவட்ட மற்றும் கிளை அலுவலகங்கள் போன்றவை இருந்தும் இந்த எளிய செயலைச் செய்ய யாருக்கும் திறன் இல்லாமல் போய்விட்டது. தகவல் பரிமாற்றம் செய்வதைத் தவிற இவர்களுக்கு என்ன வேலை? நாலாவது தெருவில் மாரியம்மன் கோயில் நடந்த விளக்கு பூசை செய்தி நாளிதழ்களில் படத்துடன் வெளியாகிறது. வேளாண் அறிவிப்புகள் எப்ப வெளியாகும் எதில வெளியாகும் என்பதெல்லாம் மர்மமான விஷயமாக இருக்கிறது. விபரம் அறியா சிறு விவசாயிகள் கந்துவட்டி, வங்கி வட்டி என்று கஷ்டத்திலும் நஷ்டத்திலும் உழல்கிறார்கள். பெருவிவசாயிகள் மானியம் உதவியுடன் சைடு வருமானமாக விவசாயத்தைப் பார்க்கிறார்கள். மானியம் என்பதற்கு அர்த்தமே தவறாகப் போகிறது. எனவே வேளாண் அறிவிப்புகள் வெளிப்படையாக வெளியிடப்படவேண்டும்.

புதிய ரகங்கள் அறிமுகம் மற்றும் ஆர்வம் தரும் பயிரிடும் யோசனைகளுடன் இந்த வார செய்திகள் வெளியாகி உள்ளன. உதாரணமாக வாழையில் காற்றடிக்கு நைலான் கயிறு கொண்டு பாதுகாப்புத் தரும் சிந்தனையை செயலாக்கம் செய்து நன்மை அடைந்துள்ளார் இராமாபுரம் ஞானசேகரன் (கடலூர்). புதிய தென்னை, வாழை மற்றும் சூரிய காந்தி ரகங்களை வேளாண் பல்கலைக் கழகம் அறிமுகம் செய்துள்ளது. தவிற உயிரியல் அடிப்படையில் அமைந்த பருத்திப் பாதுகாப்பும் உற்சாகம் தரும் வகையில் உள்ளது.

இந்த வார செய்திகளை உங்களுக்குத் தொகுத்துத் தருகிறோம்.

நன்றி.

மறைக்கப்படும் மானியத் திட்டங்கள்!

வாழை – காற்றடி பாதுகாப்பு – கம்புகளுக்கு பதிலாக நைலான் கயிறு

புதிய தென்னை ஏ.எல்.ஆர்.2 (த.வே.ப.க.)

புதிய வீரிய ஒட்டு சூரியகாந்தி கோ.2 (த.வே.ப.க)

புதிய கரும்பு ரகம் த.வே.ப.க. கரும்பு எஸ்.ஐ.7

கோடையில் உளுந்து பயிரைத் தாக்கும் மஞ்சள் தேமல் நோய்

பருத்தியில் ஒருங்கிணைந்த பயிர் பாதுகாப்பு

செய்தித் தொகுப்பு

இந்த வாரம் சிறப்பான செய்திகள் வந்திருக்கின்றன. சிறப்பான நிகழ்வுகள் நடந்திருக்கின்றன. வேளாண் சந்தையில் பரபரப்பாகப் பேசப்படும் தலைப்புகளில் பரவலாக செய்திகள் வந்து விழுந்துள்ளன. செம்மை நெல் சாகுபடி பற்றி செய்திகள் வந்தது போக இந்த வாரம் வாழை மற்றும் கரும்பு சாகுபடியில் செம்மை முறை பற்றி செய்திகள் வந்துள்ளன. கரூர் விவசாய கண்காட்சியில் பேசி உள்ளார்கள். போடி பக்கம் இருந்து தகவல் வெளியிட்டுள்ளார்கள். மனதிற்கு மகிழ்ச்சியாக இருக்கிறது.

விழுப்புரம் கண்காட்சி அரங்கிற்கு செல்லும் வாய்ப்பு கிடைத்தது. அதனைப் பற்றியும் எழுதி இருக்கிறோம். வியாபார நோக்கத்திற்காக நடத்தப்படும் இத்தகைய நிகழ்வுகள் விளம்பரப் படுத்தப்படுகின்றன. விவசாயிகளுக்கு உபயோகமாக நடத்தப்படும் நிகழ்வுகள் காதும் காதும் வைத்தாற்போல நடத்தப்படுகின்றன. தகவல் வெளிப்படையாக தெரிவது குறைவு. இது மாறினால் அனைவருக்கும் உபயோகமாக இருக்கும்.

விழுப்புரம் மாவட்டத்தில் மஞ்சள் சாகுபடியில் விவசாய அலுவலர்கள் உதவி மற்றும் முறையான சொட்டுநீர்பாசன உதவியுடன் பட்டையைக் கிளப்பியிருக்கிறார் ஒரு பெண்மணி. இத்தகு சாதனையாளர்களைப் பற்றிப் படிக்கும் போது இரத்தம் சுத்தமானது போல் தோன்றுகிறது.

மண்புழு உரம் செய்முறை, செம்மை நெல் செய்முறை பற்றி ஏற்கனவே செய்திகள் வந்தாலும் இந்த முறையும் இடம் பிடிக்கின்றன. புதிதாக மூலிகை சாகுபடி வகையினம் சேர்த்துள்ளோம். வசம்பு அதில் முதலில் இடம் பிடிக்கிறது.

இதற்கிடையே கலப்பு உரங்கள் மற்றும் இயற்கை உரங்களில் போலி மற்றும் கலப்படம் பற்றிய எச்சரிக்கை செய்திகளும் இடம் பிடிக்கின்றன.

மீண்டும் சந்திப்போம்.

வணக்கம்.

நிகழ்வுகள்

சிறப்புப் பகுதி – சாதனை விவசாயி

நவீன தொழில்நுட்பம்

அறிவிப்புகள்

யோசனைகள்

பயிரிடும் முறை மற்றும் பாதுகாப்பு முறைகள்

பூச்சி மற்றும் நோய் கட்டுப்பாடு