கோழிகளில் பறவைக் காய்ச்சல் வராமல் தடுக்கும் முறைகள்

பறவைக் காய்ச்சல் நோய் வராமல் தடுக்கும் வழிமுறைகள் குறித்து கோழி வளர்ப்போர் கவனத்தில் கொள்ள வேண்டும் . உலகின் பல்வேறு நாடுகளில் காணப்படும் பறவைக்காய்ச்சல் நோய் இந்தியாவிலும் பரவி உள்ளது. தமிழகத்தில் பறவைக்காய்ச்சல் நோய் பாதிப்பு இல்லை. எனினும் இந்நோய் கோழிகளையும், மனிதர்களையும் தாக்காமல் இருக்க கீழ்கண்ட சுகாதார வழிமுறைகளை கண்டிப்பாக கோழிவளர்ப்போர் பின்பற்ற வேண்டும்.

வழிமுறைகள்:

வீட்டில் வளர்க்கும் கோழிகள் வீட்டு எல்லையை விட்டு வெளியில் சென்று மேயாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். அதே போல் வெளியில் உள்ள கோழி, வாத்து, கொக்கு மற்றும் இதர வனப்பறவைகளை உங்கள் வீட்டு எல்லைக்குள் நுழைந்து கோழிகளின் அருகில் வராமல் பார்த்துக் கொள்ள வேண்டும். சுவர் அல்லது முள்வேலி அமைக்க வேண்டும்.

உங்கள் கோழிகளின் தீவனம், தண்ணீர் வேறு கோழிகள் அல்லது பறவைகள் பங்கிட்டுக் கொள்ளாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். தீவனம், தண்ணீர் கொடுத்து விட்டு தட்டுக்களை வெளியே வைத்தல் கூடாது.

கோழி, வாத்து, வான்கோழி, கூஸ் வாத்து போன்ற பல்வேறு பறவைகளை ஒன்றாக வளர்த்தல் கூடாது.

வெளிநாட்டுப் பறவைகள் வந்து செல்லும் பறவைகள், சரணாலயங்களாக அருகில் கோழி அல்லது வாத்து கண்டிப்பாக வளர்க்கக்கூடாது. நாடு விட்டு நாடு செல்லும் பறவைகள் தான் பறவைக்காய்ச்சல் நோயை பரப்புகின்றன.

சந்தையில் வாங்காமல் அரசுப் பண்ணைகளில் இருந்து கோழிக்குஞ்சுகளை வாங்கலாம்.

கோழி எச்சம் உள்ள இடங்களில் சிறுவர்களை விளையாட விடக்கூடாது. கோழிக்கூண்டு சுத்தம் செய்யும்போது மூக்கின் மீது துமி கட்டி கொள்ளவும். கோழி அல்லது கோழி இறைச்சி கையாளும்போது கைகளை நன்கு சோப்பு போட்டு கழுவ வேண்டும்.

கோழிக்கறி, கோழிமுட்டை சாப்பிடுவோருக்கான அறிவுரைகள்:

முழுக்கோழியை அப்படியே சமைப்பது கூடாது. ஏனெனில் கோழி உடலின் அனைத்துப்பகுதிகளிலும் 70 டிகிரி வெப்பம் படாமல் போய்விடலாம். அரை வேக்காட்டில் சமைத்த கோழி, முட்டையை உண்ணக்கூடாது.

பச்சை முட்டை அல்லது ஆப்பாயில் சாப்பிடக்கூடாது. முழுமையாக அவித்த முட்டை அல்லது முழுமையாக பொரித்த ஆம்லெட் சாப்பிடலாம்.

கோழிகளில் பறவைக் காய்ச்சல் நோய் அறிகுறிகள்:

தீவனம் உண்ணாமல் சோர்வுடன் இருத்தல், தலைவீக்கம், கொண்டையில் நீலநிறம் பரவுதல், முட்டை உற்பத்தி திடீர் குறைவு, 100 சதம் வரை கோழிகள் திடீர் இறப்பு

இறந்த கோழிகளின் உடல் உறுப்புகள், நுரையீரல்களில் ரத்தக்கசிவு கொண்ட தொடை, கால்கள் மீது ரத்தப்புள்ளிகள்.

மேற்கண்ட அறிகுறிகள் இருந்தால் உடனே அருகே உள்ள கால்நடை மருத்துவமனையை அணுகலாம்.

தினமணி தகவல்: காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்ட கால்நடை நோய் புலனாய்வு பிரிவு

வேளாண் அரங்கம் மார்க்கெட்டில்

 

முட்டை பொரிக்கும் கருவி

அடைகாத்தல்:
வெப்பநிலை, ஈரப்பதம், வாயுச்சூழ்நிலை மற்றும் முட்டைகளைத் திருப்பிவிடுதல் போன்ற இயற்கைக் காரணிகள் ஒரு வெற்றிகரமான குஞ்சுபொரிப்ப தற்கு அவசியம். அடைக்காப்பானின் உள்வெப்பநிலையானது அதைத் தயாரிப்பவர் கூறும் அளவு வைத்துக் கொள்ளலாம். பொதுவாக மிதமான வெப்பநிலையே விரும்பப்படுகிறது. இது பொதுவாக 99.5 – 100.5 டிகிரி பாரன்ஹீட் (37.2 டிகிரி செ – 37.8 டிகிரி செ) வரை. குறைந்த வெப்பநிலை கரு வளர்ச்சியைக் குறைக்கும். (சாதகமற்ற) அசாதாரண அதாவது அதிக வெப்பநிலை நிலவும்போது வளர்ச்சியைப் பாதித்து கோழிகளில் இறப்பு வீதத்தை அதிகப்படுத்துகிறது.
கருமுட்டைகள் அகலமான பக்கம் மேல்நோக்கியவாறு வைத்தல் வேண்டும். நவீன அடைகாப்பான்களில் முட்டைகள் தன்னிச்சையாகவே ஒரு நாளைக்கு 8 அல்லது அதற்கு மேற்பட்ட முறைகள் திருப்பிக்கொள்ளுமாறு வடிவமைக்கப்பட்டுள்ளது.

5 அல்லது 7வது நாளிலிருந்து ஒளியில் கரு வளர்நிலை காண வேண்டும். அப்போது கருவுறாத முட்டைகளையும், 18வது நாளில் சிதைந்த அல்லது இறந்த முட்டைகளையும் நீக்கிவிடலாம். ஆட்கூலியைக் குறைக்க பெரும்பாலும் 17 அல்லது 18ம் நாளில்தான் ஒளியில் கருவளர்நிலை காணப்படுகிறது. ஒளியை உட்செலுத்தும்போது அது முட்டையினுள் ஒளி ஊடுருவிச் செல்ல இயலாமல் இருட்டாக இருந்தால் கரு நன்றாக வளர்ந்துள்ளது என்றும் சிறிதளவு ஒளி கசியக்கூடியதாக இருந்தால் கரு இறந்துவிட்டது என்றும் ஒளி எளிதில் ஊடுருவக்கூடியதாக இருந்தால் அது கருவுறாத முட்டை என்றும் அறிந்துகொள்ளலாம். கரு வளர்ந்துள்ள முட்டைகளை மட்டுமே பொரிப்பகத்திற்கு மாற்றம் செய்ய வேண்டும். கோழியின் வம்சாவளியைப் பாதுகாக்க ஒரு கோழியின் முட்டைகளை ஆண் பெண் தனித்தனிப் பிரிவுகளாகப் பிரித்து அடுக்கி வைக்க வேண்டும்.

அடைகாப்பான் மற்றும் குஞ்சு பொரிப்பகத்தை முற்றிலும் முட்டையை அதில் வைப்பதற்கு முன்னரே ஒரு முறை சோதனை செய்து, ஏதேனும் குறையிருந்தால் சரிசெய்ய வேண்டும். நன்கு கழுவி, கிருமிநாசினி கொண்டு சுத்தப்படுத்தி வைக்க வேண்டும். இது நோய் பரவலின் தன்மையைக் குறைக்கும்.

தினமலர் தகவல்
தொடர்புக்கு: ஆர்.ஜி.ரீஹானா, அக்ரி கிளினிக், 268/77, பழைய ஹவுசிங் யூனிட், தாராபுரம்-638 657.
-ஆர்.ஜி.ரீஹானா,
தாராபுரம், 89037 57427.

தொகுப்பு: கால்நடை வளர்ப்பு