செம்மறி ஆடு வளர்ப்பில் தீவனத்தின் பங்கு

ஊட்டச்சத்துக்களின் தேவை:

அ)புரதச்சத்தின் தேவை:

ஆடுகளின் கம்பள மயிர் அதாவது கிராட்டின் எனப்படும் முழுப்புரதம் மொத்தமும் புரதத்தால் ஆனவை. எனவே புரதச் சத்தின் தேவை செம்மறி ஆடுகளில் கொஞ்சம் அதிகமாகவே காணப் படுகிறது. புரதமில்லா நைட்ரஜன் சத்து பொருள்களை அசையும் இரைப்பையில் நல்ல தரம் மிக்க நுண்ணுயிர் புரதமாக மாற்றும் தன்மை செம்மறி ஆடுகளில் உள்ளது.

செம்மறி கிடை

செம்மறி கிடை

கம்பள மயிர்களில் சிஸ்டைன் மற்றும் மெத்தியோனைன் ஆகிய இரண்டு அமினோ அமிலங்களும் அதிக அளவில் காணப்படும். அன்றாடத் தேவையான இவ்விரு அமினோ அமிலங்களையும் தினசரி கொடுக்கப்படும் தீவனமே சரிபார்த்துக்கொள்ளும். இருப்பினும் ஒரு வேளை ஆடுகளின் தீவனத்தில் எதிர்பாராமல் சிஸ்டன் பற்றாக்குறை ஏற்பட்டால், இவ்விரு அமினோ அமிலங்கள் அதிகமாக உள்ள புரத உபபொருட்களை தீவனத்தில் கலப்பது நன்மை பயக்கும். தோராயமாக நாள் ஒன்றுக்கு நிலைகாப்புக்காக தேவைப்படும் புரதச் சத்தின் அளவு ஒரு கிலோ உயிர் எடைக்கு ஒரு கிராம் செரிமான கச்சா புரதம் வீதம் ஆகும். இந்த ஒரு கிராம் புரதமானது சினைப்பருவ காலங்களில் 50 விழுக்காடுகள் வரையிலும் வளர்ச்சி மற்றும் கறவை காலங்களில் 100 விழுக்காடுகள் வரையிலும் அதிகமாகும்.

புரதச்சத்து பற்றாக்குறை ஏற்பட்டால் ஆடுகளின் உணவு உண்ணும் அளவு குறையும். தீவன மாற்றுத்திறன் குறையும். உடல் மற்றும் தசை வளர்ச்சி குறையும். இனவிருத்தி திறன் குறையும். கடைசியாக கம்பள மயிர் உற்பத்தியும் குறைந்துவிடும்.

ஆ. எரிசக்தி அல்லது மொத்த செரிமான சத்துக்களின் தேவை:

செம்மறி ஆட்டுக்குட்டிகளுக்கு மொத்த செரிமான சத்துக்களின் தேவை பருவமடைந்த ஆட்டைவிட அதிகமாகும். அதுபோல, சினை ஆடுகள் இனப்பெருக்கத்திற்கான பெட்டை செம்மறி ஆடுகள் மற்றும் கறவை ஆடுகளுக்கு சினையில்லா மற்றும் கறவையில்லா பெட்டை ஆடுகளைவிட அதிகளவு எரிசக்தி தேவைப்படும். அடிப்படையாக ஒரு சினையில்லா மற்றும் கறவையில்லா பெட்டை ஆட்டுக்கு நாள் ஒன்றுக்கு ஒரு கிலோ உயிர் எடைக்கு10 கிராம் மொத்த செரிமான சத்துக்கள் வீதம் தேவைப்படும்.

இ. கொழுப்புச்சத்தின் தேவை:

செம்மறி ஆடுகளின் தீவனத்தை குறைந்தபட்சம் 3 விழுக்காடுகள் கொழுப்புச்சத்து இருப்பது அவசியமாகும். பொதுவாக ஆடுகளின் அடர்தீவனத்தில் 5 விழுக்காடுகள் வரை கொழுப்பு சேர்க்கப் படுகிறது. உருக்கப்பட்ட மாட்டின் கொழுப்பு தவிட்டு எண்ணெய், சோயா எண்ணெய் போன்ற கொழுப்புச்சத்து தீவனப்பொருட்கள் அடர்தீவனத்தில் கலக்கப்படுகிறது.

ஈ. தாது உப்புக்களின் தேவை:

பொதுவாக செம்மறி ஆடுகளுக்கு 15 தாது உப்பு வகைகள் தேவை என கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அவைகளுள் மிக முக்கியமானவை சோடியம், குளோ ரைடு, சுண்ணாம்பு, மணிச்சத்து, மெக்னீசாம்பல் சத்து மற்றும் சல்பர் ஆகும்.

உ. உப்பு:

செம்மறி ஆடுகள் பசுமாடுகளைவிட அதிகளவு உப்பு உட்கொள்ளும். எந்தவகை பண்ணை மேலாண்மை செய்முறையானாலும் தினசரி உப்பு கொடுப்பதை ஒரு அடிப்படை நியதியாக பின்பற்ற வேண்டும். பொதுவாக முழுமைத் தீவன மாயின் 0.5 சதவீதம் அல்லது அடர் தீவனமாயின் ஒரு சதவீதம் என்ற விகிதத்தில் உப்புச்சத்தை சேர்க்க வேண்டும்.

தினமலர் தகவல்:
முனைவர் ப.வாசன், இணை பேராசிரியர், கால்நடை மருத்துவக் கல்லூரி, ஒரத்தநாடு. 94446 94530
-கே.சத்தியபிரபா, உடுமலை.

வேளாண் அரங்கம் மார்க்கெட்

ஒரத்தநாடு கால்நடை மருத்துவக் கல்லூரி

கால்நடை

தீவனம்

ஆட்டு எரு: சத்துமிக்க இயற்கை உரம்

பெருகி வரும் மக்கள்தொகைக்கு ஏற்ப உணவு உற்பத்தியை அதிகரிக்க பல்வேறு செயற்கை உரங்கள் பயன்பாட்டில் உள்ளன. அவற்றால் ஏற்படும் பக்க விளைவுகள் மனித சமுதாயத்திற்கு பெரும் தீங்கை விளைவிக்கின்றன.

அன்றாடம் பயன்படுத்தப்படும் காய்கறிகள் முதல் கடுகு வரை ஒவ்வொன்றையும் விளைவிக்க பயன்படுத்தப்படும் யூரியா போன்ற செயற்கை ரசாயன உரங்கள் உடலுக்கு பெரும் தீங்கை விளைவிக்கக் கூடியவை.

ஆட்டு எரு

ஆட்டு எரு Image courtesy http://fr.bestpicturesof.com/manure

அதேநேரத்தில், ரசாயன உரங்களின் விலையும் தற்போது வேகமாக உயர்ந்து வருகிறது. செயற்கை ரசாயன உரங்களால் நமக்கு ஏற்படும் ஆபத்துகளைப் போக்க இயற்கை நமக்கு தந்த வரப்பிரசாதம்தான் ஆட்டு எரு. ஆட்டு எருவில், மாட்டு எருவில் உள்ளதைப் போல 2 மடங்கு தழைச் சத்தும், சாம்பல் சத்தும் உள்ளன. ஓர் ஆடு, ஓராண்டுக்கு 500 முதல் 750 கிலோ வரை எருவைக் கொடுக்கிறது.

ஓர் ஏக்கர் நிலத்தை எல்லா சத்துகளையும் கொண்டு வளப்படுத்த 100 ஆடுகளை வளர்த்தால் போதுமானது. ஆட்டு எரு மண் வளத்தைப் பெருக்கி, பசுமைப் புரட்சிக்கு வித்திடுகிறது என்றால் மிகையாகாது.

ஆட்டு எருவை மண்ணில் இட்டால் கரிமப் பொருள்களின் அளவு அதிகரித்து ஈரப் பதத்தை சேமிக்கும் திறன் அதிகமாகிறது. ஆட்டு எருவில் உள்ள சத்துகளின் அளவு, ஆட்டு இனம் மற்றும் அவற்றுக்கு அளிக்கப்படும் தீவனத்தைப் பொருத்தே இருக்கும்.

ஆடுகளுக்கு புரதச்சத்து நிறைந்த தீவனங்களான குதிரை மசால், முயல் மசால், வேலி மசால், சுபா புல், தட்டைப் பயறு போன்ற தீவனங்களை அளித்தால், எருவில் தழைச்சத்தின் அளவு அதிகமாக இருப்பதோடு, நுண்ணூட்டச் சத்துகளும், தாது உப்புகளும் அதிகமாகக் காணப்படும். ஆட்டு எருவில் 60 முதல் 70 சதம் தண்ணீரும், 2 சதம் தழைச் சத்தும், 0.4 சதம் மணிச் சத்தும் 1.7 சதம் சாம்பல் சத்தும் உள்ளன. மேலும், பயிர் வளர்ச்சிக்குத் தேவையான போரான், மெக்னீசியம், கோபால்ட், தாமிரம், துத்தநாகம், மாலிப்டினம் சத்துகளும் அதிகளவில் காணப்படுகின்றன.

நம்முடைய அன்றாட விவசாயத்திற்கு அதிகளவில் ஆட்டு எரு தேவைப்படுமாயின் அவற்றை ஆழ்கூள முறையில் தயார் செய்யலாம்.

அதற்கு முதலில் ஆட்டுக் கொட்டகையின் தரைப் பகுதியில் நிலக்கடலைத் தோல், சிறிய துண்டுகளாக வெட்டிய வைக்கோல், இலைச் சருகுகள், மரத்தூள், தேங்காய் நார்க் கழிவு போன்றவற்றை அரை அடி உயரத்தில் ஓர் ஆட்டிற்கு 7 கிலோ என்ற அளவில் பரப்ப வேண்டும்.

இவ்வாறு பரப்பினால் ஆட்டுப் புழுக்கையானது இந்த ஆழ் கூளத்தில் படிந்துவிடும். சிறுநீர் ஆழ் கூளத்தால் உறிஞ்சப்பட்டு தழைச் சத்து வீணாகாமல் பாதுகாக்கப்படும். ஆழ் கூளத்தில் உள்ள ஈரத் தன்மையைப் பொருத்து 3-லிருந்து 4 மாதங்களுக்கு ஒரு முறை ஆழ் கூள் ஆட்டு எருவை விவசாயத்திற்கு எடுத்துக் கொள்ளலாம்.

ஆழ் கூள முறையைப் பொருத்தமட்டில் 10 ஆடுகளிலிருந்து ஓராண்டில் இரண்டரை டன் தரமான எரு கிடைக்கும். இதில் 50 கிலோ யூரியாவில் உள்ளதைப்போல, தழைச் சத்தும், 37 கிலோ சூப்பர் பாஸ்பேட்டில் உள்ள மணிச் சத்தும், 40 கிலோ பொட்டாஷில் உள்ள சாம்பல் சத்தும் கிடைக்கும்.

இவ்வாறு ஆழ் கூள முறையில் பெறப்படும் ஆட்டு எருவை வேளாண் பயிர் சாகுபடிக்கு பயன்படுத்தினால் களை எடுக்கும் செலவு குறையும். மேலும், நெல், தக்காளி, மிளகாய், கத்தரி மற்றும் அனைத்து விதமான வேளாண்மைப் பயிர்களுக்கும் இந்த எருவைப் பயன்படுத்தினால் அதிக லாபம் அடையலாம்.

எனவே, ஆட்டு எருவை முறையாகப் பயன்படுத்தி இயற்கை வழி வேளாண்மைக்கு வித்திட்டால் ரசாயன உரங்களால் ஏற்படும் தீமைகளைக் குறைக்க முடியும்.

தினமணி செய்தி

அறிவியல் ரீதியான ஆடு வளர்ப்பு ஒரு வெற்றிக்கதை

கோவை மாவட்டத்தின் கதை

என் பெயர் ஐ.நாசர். நான் கோவை மாவட்டத்தில் கோட்டைப்பாளையம் கிராமத்தில் கரூர்வாலா ஆட்டுப்பண்ணை என்ற பெயரில் கடந்த இரண்டு வருடங்களாக அறிவியல் ரீதியாக வெள்ளாடுகள் மற்றும் செம்மறியாடுகளை வளர்த்து வருகின்றேன். முறையாக பயிற்சி பெற்று சிறந்த தொழில் நுட்பங்களைக் கடைபிடித்து பண்ணையை தொடங்குவதற்கு முன்பே பல வகையான பசுந்தீவனங்களைப் பயிரிட்டு அறிவியல் ரீதியாக பராமரித்தால் “ஆடு வளர்ப்பு” ஒரு லாபகரமான தொழில் என்பது நான் அனுபவத்தில் உணர்ந்த உண்மை.

பசுந்தீவன உற்பத்தி:

கோட்டைப்பாளையம் கிராமத்தில் மூன்று ஏக்கர் விவசாய பூமியை குத்தகைக்கு எடுத்து கோ 4 கம்பு நேப்பியர் ஒட்டுப்புல், கோ.எப்.எஸ்.29 தீவனச் சோளப்பயிர், வேலி மசால், குதிரைமசால் மற்றும் அகத்தி போன்ற பசுந்தீவனங்களைப் பயிரிட்டேன். ஆடுகளுக்கு தேவைப்படும் பசுந்தீவன அளவை கணக்குப்போட்டு, சிறிய சிறிய பாத்திகளை அமைத்து பசுந்தீவனங்களை முறையாகப் பயிரிட்டு வளர்ப்பதால் ஆண்டு முழுவதும் பசுந்தீவனப் பற்றாக்குறை ஏற்படுவது இல்லை.

விற்பனை வழிமுறைகள்:

நான் வியாபாரிகளுக்கு ஆடுகளை அறுப்பதற்கு விற்பனை செய்வதற்கு முன்பே எனது ஆடுகளை எடைபோட்டு, அதிலிருந்து வெட்டிய உடல் எடை எவ்வளவு கிடைக்கும் என்று கணக்குப்போட்டு என்னுடைய ஆட்டின் மதிப்பை தெரிந்துகொண்டு விலை நிர்ணயம் செய்துகொள்வேன். பிறகு வியாபாரியிடம் விற்பனை செய்யும்போது நான் நிர்ணயித்த விலைக்குக் குறைவாக ஆடுகளைக் கொடுக்க மாட்டேன். இவ்வாறு ஆடுகளை விற்பனை செய்வதால் அதிக லாபம் கிடைக்கிறது. மேலும் உயிருடன் ஆடுகளை விற்பதைவிட அவற்றை இறைச்சியாக மதிப்பூட்டி விற்பனை செய்யும்போது மேலும் அதிக லாபம் கிடைக்கும் என்பதை உணர்ந்து ஆடுகளை அறுக்க ஒரு இடத்தை ஏற்படுத்தி, போதிய வசதிகளைச் செய்து, தேவைப்படும்போது, ஆடுகளை அறுத்து இறைச்சியாகவும் விற்பனை செய்கிறேன்.

மேலும் ஆட்டுப்பண்ணை ஆரம்பிக்க ஆர்வமுள்ள பண்ணையாளர்கள் கீழ்க்காணும் சில முக்கிய விபரங்களை கருத்தில் கொள்ள வேண்டும்.

  • ஆட்டுப்பண்ணை தொடங்கும் பண்ணையாளரே அந்தப் பண்ணையின் முதல் வேலையாளாக இருக்க வேண்டும்.
  • ஆட்டுப்பண்ணை தொடங்க முதலில் முறையான பயிற்சி அவசியம்.
  • பசுந்தீவன உற்பத்தியில் முக்கிய கவனம் செலுத்தி அதிக அளவு பயறுவகை மற்றும் மரவகைப் பசுந்தீவனங்களைப் பயிரிட வேண்டும்.
  • உயர்ந்த இனக்கிடாய்களையும், பண்ணை முறையில் வளர்க்கப்பட்ட ஆடுகளையும் தேர்வு செய்து, வாங்கி, பண்ணையை தொடங்க வேண்டும்.
  • நோய் தடுப்பு, குடற்புழு மற்றும் ஒட்டுண்ணிகள் நீக்கம் போன்ற பண்ணை நடைமுறைகளில் அதிக கவனம் செலுத்த வேண்டும்.
  • குட்டிகளில் இறப்பைத் தடுக்க, குட்டிகள் பராமரிப்பில் அதிக கவனம் செலுத்த வேண்டும்.
  • நாம் வளர்த்த ஆட்டின் மதிப்பைத் தெரிந்துகொண்டு இடைத்தரகர்கள் மற்றும் வியாபாரிகளிடம் ஏமாறாமல் உடல் எடைக்கு ஏற்ப ஆடுகளை விற்பனை செய்தால் அதிக லாபம் கிடைக்கும்.

மேற்காணும் வழிமுறைகளை கடைபிடித்து அறிவியல் ரீதியாக ஆடுகளை வளர்த்தால் வெற்றி நிச்சயம். தொடர்புக்கு:

தகவலுக்கு – ஐ.நாசர், கோயம்புத்தூர். 99943 82106.
தினமலர் தகவல் – கே.சத்தியபிரபா, உடுமலை.