மடி வீக்க நோயிலிருந்து கறவை மாடுகளைக் காப்பது எப்படி?

அதிகளவில் பால் கொடுக்கும் கலப்பினக் கறவை மாடுகளை பெருமளவில் மடி வீக்க நோய் தாக்க வாய்ப்புள்ளது. இதனால், கறவைகளிடம் பால் உற்பத்தி குறைவதுடன் மிகுந்த பொருளாதார இழப்பையும் ஏற்படுத்துகின்றன.

manitharkaleஇந்த நோயால் பால் மடியில் உள்ள திசுக்கள் பாதிப்படைந்து மடி வீக்கமாகவும், தடித்தும் காணப்படும். பால் திரிந்தோ அல்லது சில நேரங்களில் பாலுடன் ரத்தம் கலந்தோ, பால் தண்ணீர் போன்றோ காணப்படும். உரிய நேரத்தில் தகுந்த சிகிச்சை அளிக்காவிடில் மடியின் பால் சுரப்பிகள் நிரந்தரமாகக் கெட்டு பால் சுரக்கும் தன்மையை இழக்கக்கூடும்.

மடிவீக்க நோய் வந்தபின் சிகிச்சை அளித்து குணப்படுத்துவதைவிட சுகாதாரமான முறைகளைக் கடைப்பிடிப்பதன் மூலம் இந்த நோய் கிருமிகளின் எண்ணிக்கையையும், தாக்கத்தையும் குறைத்து நோய் வராமல் தடுக்க முடியும்.

மாட்டுத் தொழுவத்தில் சாணம், சிறுநீர் தேங்க விடாமல் கவனிப்பதுடன், கிருமி நாசினி மருந்தைக் கொண்டு தொழுவத்தை சுத்தம் செய்ய வேண்டும்.

பால் கறப்பதற்கு முன்னும், பின்னும் பொட்டாசியம் பெர்மாக்கனேட், அயோடோபோர் ஆகிய கிருமி நாசினிகளைக் கொண்டு சுத்தம் செய்ய வேண்டும்.

பால் கறப்பதற்கு பால் கறவை இயந்திரத்தைப் பயன்படுத்துவது உள்ளிட்ட நவீன மேலாண்மை முறைகளைக் கடைப்பிடிப்பதன் மூலமாகவும் மடிவீக்க நோய் வராமல் தடுக்க முடியும்.

cow-and-calf

கறவை மாடுகளை அதிகளவில் தாக்கக் கூடிய நோய்களில் மடிவீக்க நோய் மிக முக்கியமானது. இந்த நோயிலிருந்து கறவை மாடுகளைப் பாதுகாக்க நாமக்கல் கால்நடை மருத்துவக் கல்லூரி நிர்வாகம் பல்வேறு வழிமுறைகளைத் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து அந்தக் கல்லூரியின் விரிவாக்கத் துறைப் பேராசிரியர்கள் நா.நர்மதா, மொ.சக்திவேல், ஜோதிலட்சுமி ஆகியோர் கூறியது.

logo.png

சினை மாடுகள் பராமரிப்பு

சினை மாடுகள் பராமரிப்பு என்பது மாடுகளின் சினைத்தருண அறிகுறிகளைக் கண்டு செயற்கைமுறை கருவூட்டல் செய்வதில்இருந்தே ஆரம்பமாகிறது.

சினையை உறுதிசெய்து கொள்ளும் முறைகள்:

  • ஆசனவாயினுள் கையை செலுத்தி கருப்பையைப் பரிசோதனை செய்து உறுதி செய்தல்;
  • ரத்தத்தில் அல்லது பாலில் உள்ள கணநீரான புரொஜஸ்டிரானை அறிவதன் மூலம் உறுதி செய்தல்;
  • லேப்பராஸ்கோப் என்ற கருவியின் மூலம் உறுதிசெய்தல்;
  • ஸ்கேன் மூலமாகவும் சினை உறுதி செய்தல்;

சினை மாடுகளுக்கு கருவில் வளர்கின்ற கன்றின் வளர்ச்சிக்காக ஏழுமாத சினை முதல் உடல் பராமரிப்பும் பால் கொடுத்துக் கொண்டிருந்தால் அதற்கு கொடுக்கப்படும் தீவனக் கலவையுடன் 1 – ஒன்றரை கி.கிராம் தீவனமும் அதிகமாக கொடுத்தல் வேண்டும். சினையுற்ற மாடுகள் 7 மாதச்சினை வரை பால் கறப்பதால், சரியான, போதுமான தீவனம் அளிக்கப்பட வேண்டும்.

இப்பொழுது கருவளர்ச்சி மெதுவாகவே இருப்பதால் கருவளர்ச்சிக்காக அதிகமாகத் தீவனமும் தேவைப்படுவதில்லை. ஆனால் பால் வற்றியபின் கன்று ஈனும் வரை உள்ள இரண்டு அரை மாதச் சினைக் காலத்தில்தான் கரு வேகமாக வளர்கின்றது. ஏறக்குறைய மொத்த வளர்ச்சியில் 80 சதவீத வளர்ச்சி கடைசி இரண்டரை மாதத்தில் தான் நடைபெறு கின்றது. ஆதலின் கரு வளர்ச்சிக்கு அதிகமாக தீவனம் தேவைப்படுகின்றது. மேலும் அது முந்தைய கறவையில் இழந்த உடல் திசுக்களை புதுப்பித்துக் கொள்ள உதவுவதோடு கிடேரிகளில் எலும்பு வளர்ச்சி மாற்றத்திற்கும் இது மிகவும் அவசியமாகும்.

அவரையினத் தீவனம் இரண்டு பங்கு, புல்லினத் தீவனம் மூன்று பங்கு என்ற விகிதத்தில் கலந்து மாடு தின்னும் அளவு அல்லது குறைந்தது நாளைக்கு ஒரு மாட்டுக்கு 25 கிலோ பசுந்தீவனம் அளிப்பதோடு அடர் தீவனத்தையும் அளிக்க வேண்டும். கடைசி 10 நாட்களில் கொடுக்கும் தீவனம் மலமிளக்கும் தன்மை கொண்டதாக இருக்க வேண்டும். ஒரு நாளைக்கு ஒன்றரை கிலோ கோதுமைத்தவிடு கொடுப்பது நல்லது. அதிக கொள்ளளவு கொண்ட நார் தீவனங்களை அதிகமாகக் கொடுக்கக்கூடாது. குடிப்பதற்கு வெதுவெதுப்பான நீரைக் கொடுப்பது நல்லது. கன்று ஈனுவதற்கு ஓரிரு நாட்களுக்கு முன் 450 கிராம் எப்சம் உப்பு, ஒரு தேக்கரண்டி இஞ்சித்தூள் ஆகியவற்றை முக்கால் லிட்டர் தண்ணீரில் கலந்து உள்ளுக்குக் கொடுப்பது நல்லது.

சினை மாடுகளுக்குத் தேவைப்படும் சிறப்பான கவனிப்புகள்:

சினை ஊசி போட்ட நாளுடன் 280 நாளைக் கூட்டியோ அல்லது அட்டவணையைக் கொண்டோ தோராயமாக கன்று ஈனும் நாளை கண்டு அறிதல் வேண்டும். கன்று ஈனும் காலம் நெருங்கும்போது, சினை மாடுகளை மற்ற மாடுகளிலிருந்து பிரித்து தனியாகத் தூய்மையான காற்றோட்டமான, நல்ல வைக்கோல் பரப்பப்பட்ட கொட்டகையில் கட்டவேண்டும்.

பெரிய பண்ணையில் 12 ச.மீ. இடம் கொண்ட ஈனுதல் அறைகளைத் தனியாக கட்டி இதற்காகப் பயன்படுத்தலாம். தரையில் வைக்கோல் பரப்பி சினை மாட்டிற்கும் கன்றிற்கும் சேதம் ஏற்படாமல் அமைக்க வேண்டும். கருச்சிதைவு ஏற்பட்ட மாடுகளோடு கலவாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். மாடுகள் அதிக தூரம் நடப்பதும் விரட்டப்படுவதும் பயமுறுத்தப் படுவதும், மேடு பள்ளம் நிறைந்த பகுதியில் மேய்ச்சலுக்கு அனுப்புதலும் தவிர்க்கப்படல் வேண்டும். சினை மாடுகள் மேய்ச்சலுக்கு மேடு பள்ளத்தில் அனுப்பினால் கர்ப்பப்பை சுழற்சி ஏற்படும். சமமான மேய்ச்சல் பகுதியில் மேய்தலே போதுமான உடற் பயிற்சியை அளிக்கும். தனியாக கடுமையான உடற்பயிற்சி தேவையில்லை.

அதிக வெப்பம், அதிக குளிர் இவைகளிலிருந்து சினை மாடுகள் காக்கப்பட வேண்டும். கடைசி இரண்டு மாதங்களில் மாட்டின் எடை 60-80 கிலோ கூடி விலா எலும்புகள் தெரியா வண்ணம் இருக்க வேண்டும். கடைசி இரண்டு மாதங்களில் கலப்பினத் தீவனக் கலவையோடு தாது உப்புக் கலவையையும் சேர்த்து அளிக்க வேண்டும். மாடுகள் 7 மாதச்சினை காலம் நிறைவுற்ற பின்னும் தொடர்ந்து பால் கரந்து கொண்டிருக்குமானால் அவற்றின் கறவை நேரத்தைத் தள்ளிப்போடுதல், தீவனம், தண்ணீர் இவற்றைக் குறைத்தல் போன்றவைகளைக் கையாண்டு கறவையை வற்றச் செய்வது அவசியம். முந்தைய ஈற்றின்போது பால்ச்சுரம் வந்த மாடுகளுக்கு அவற்றைத் தடுக்கும் நோக்கில் கடைசி காலச்சினையில் கால்சியம் ஊசிகளை போடக்கூடாது.
தினமலர் செய்தி
டாக்டர் அ.யசோதா,
டாக்டர் அ.செந்தில்குமார் மற்றும் முனைவர் பிர்முகம்மது,
உழவர் பயிற்சி நிலையம்,
தேனி-625 531.

வேளாண் அரங்கத்தில்

 

செம்மறி ஆடு வளர்ப்பில் தீவனத்தின் பங்கு

ஊட்டச்சத்துக்களின் தேவை:

அ)புரதச்சத்தின் தேவை:

ஆடுகளின் கம்பள மயிர் அதாவது கிராட்டின் எனப்படும் முழுப்புரதம் மொத்தமும் புரதத்தால் ஆனவை. எனவே புரதச் சத்தின் தேவை செம்மறி ஆடுகளில் கொஞ்சம் அதிகமாகவே காணப் படுகிறது. புரதமில்லா நைட்ரஜன் சத்து பொருள்களை அசையும் இரைப்பையில் நல்ல தரம் மிக்க நுண்ணுயிர் புரதமாக மாற்றும் தன்மை செம்மறி ஆடுகளில் உள்ளது.

செம்மறி கிடை

செம்மறி கிடை

கம்பள மயிர்களில் சிஸ்டைன் மற்றும் மெத்தியோனைன் ஆகிய இரண்டு அமினோ அமிலங்களும் அதிக அளவில் காணப்படும். அன்றாடத் தேவையான இவ்விரு அமினோ அமிலங்களையும் தினசரி கொடுக்கப்படும் தீவனமே சரிபார்த்துக்கொள்ளும். இருப்பினும் ஒரு வேளை ஆடுகளின் தீவனத்தில் எதிர்பாராமல் சிஸ்டன் பற்றாக்குறை ஏற்பட்டால், இவ்விரு அமினோ அமிலங்கள் அதிகமாக உள்ள புரத உபபொருட்களை தீவனத்தில் கலப்பது நன்மை பயக்கும். தோராயமாக நாள் ஒன்றுக்கு நிலைகாப்புக்காக தேவைப்படும் புரதச் சத்தின் அளவு ஒரு கிலோ உயிர் எடைக்கு ஒரு கிராம் செரிமான கச்சா புரதம் வீதம் ஆகும். இந்த ஒரு கிராம் புரதமானது சினைப்பருவ காலங்களில் 50 விழுக்காடுகள் வரையிலும் வளர்ச்சி மற்றும் கறவை காலங்களில் 100 விழுக்காடுகள் வரையிலும் அதிகமாகும்.

புரதச்சத்து பற்றாக்குறை ஏற்பட்டால் ஆடுகளின் உணவு உண்ணும் அளவு குறையும். தீவன மாற்றுத்திறன் குறையும். உடல் மற்றும் தசை வளர்ச்சி குறையும். இனவிருத்தி திறன் குறையும். கடைசியாக கம்பள மயிர் உற்பத்தியும் குறைந்துவிடும்.

ஆ. எரிசக்தி அல்லது மொத்த செரிமான சத்துக்களின் தேவை:

செம்மறி ஆட்டுக்குட்டிகளுக்கு மொத்த செரிமான சத்துக்களின் தேவை பருவமடைந்த ஆட்டைவிட அதிகமாகும். அதுபோல, சினை ஆடுகள் இனப்பெருக்கத்திற்கான பெட்டை செம்மறி ஆடுகள் மற்றும் கறவை ஆடுகளுக்கு சினையில்லா மற்றும் கறவையில்லா பெட்டை ஆடுகளைவிட அதிகளவு எரிசக்தி தேவைப்படும். அடிப்படையாக ஒரு சினையில்லா மற்றும் கறவையில்லா பெட்டை ஆட்டுக்கு நாள் ஒன்றுக்கு ஒரு கிலோ உயிர் எடைக்கு10 கிராம் மொத்த செரிமான சத்துக்கள் வீதம் தேவைப்படும்.

இ. கொழுப்புச்சத்தின் தேவை:

செம்மறி ஆடுகளின் தீவனத்தை குறைந்தபட்சம் 3 விழுக்காடுகள் கொழுப்புச்சத்து இருப்பது அவசியமாகும். பொதுவாக ஆடுகளின் அடர்தீவனத்தில் 5 விழுக்காடுகள் வரை கொழுப்பு சேர்க்கப் படுகிறது. உருக்கப்பட்ட மாட்டின் கொழுப்பு தவிட்டு எண்ணெய், சோயா எண்ணெய் போன்ற கொழுப்புச்சத்து தீவனப்பொருட்கள் அடர்தீவனத்தில் கலக்கப்படுகிறது.

ஈ. தாது உப்புக்களின் தேவை:

பொதுவாக செம்மறி ஆடுகளுக்கு 15 தாது உப்பு வகைகள் தேவை என கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அவைகளுள் மிக முக்கியமானவை சோடியம், குளோ ரைடு, சுண்ணாம்பு, மணிச்சத்து, மெக்னீசாம்பல் சத்து மற்றும் சல்பர் ஆகும்.

உ. உப்பு:

செம்மறி ஆடுகள் பசுமாடுகளைவிட அதிகளவு உப்பு உட்கொள்ளும். எந்தவகை பண்ணை மேலாண்மை செய்முறையானாலும் தினசரி உப்பு கொடுப்பதை ஒரு அடிப்படை நியதியாக பின்பற்ற வேண்டும். பொதுவாக முழுமைத் தீவன மாயின் 0.5 சதவீதம் அல்லது அடர் தீவனமாயின் ஒரு சதவீதம் என்ற விகிதத்தில் உப்புச்சத்தை சேர்க்க வேண்டும்.

தினமலர் தகவல்:
முனைவர் ப.வாசன், இணை பேராசிரியர், கால்நடை மருத்துவக் கல்லூரி, ஒரத்தநாடு. 94446 94530
-கே.சத்தியபிரபா, உடுமலை.

வேளாண் அரங்கம் மார்க்கெட்

ஒரத்தநாடு கால்நடை மருத்துவக் கல்லூரி

கால்நடை

தீவனம்

கோழிகளில் பறவைக் காய்ச்சல் வராமல் தடுக்கும் முறைகள்

பறவைக் காய்ச்சல் நோய் வராமல் தடுக்கும் வழிமுறைகள் குறித்து கோழி வளர்ப்போர் கவனத்தில் கொள்ள வேண்டும் . உலகின் பல்வேறு நாடுகளில் காணப்படும் பறவைக்காய்ச்சல் நோய் இந்தியாவிலும் பரவி உள்ளது. தமிழகத்தில் பறவைக்காய்ச்சல் நோய் பாதிப்பு இல்லை. எனினும் இந்நோய் கோழிகளையும், மனிதர்களையும் தாக்காமல் இருக்க கீழ்கண்ட சுகாதார வழிமுறைகளை கண்டிப்பாக கோழிவளர்ப்போர் பின்பற்ற வேண்டும்.

வழிமுறைகள்:

வீட்டில் வளர்க்கும் கோழிகள் வீட்டு எல்லையை விட்டு வெளியில் சென்று மேயாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். அதே போல் வெளியில் உள்ள கோழி, வாத்து, கொக்கு மற்றும் இதர வனப்பறவைகளை உங்கள் வீட்டு எல்லைக்குள் நுழைந்து கோழிகளின் அருகில் வராமல் பார்த்துக் கொள்ள வேண்டும். சுவர் அல்லது முள்வேலி அமைக்க வேண்டும்.

உங்கள் கோழிகளின் தீவனம், தண்ணீர் வேறு கோழிகள் அல்லது பறவைகள் பங்கிட்டுக் கொள்ளாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். தீவனம், தண்ணீர் கொடுத்து விட்டு தட்டுக்களை வெளியே வைத்தல் கூடாது.

கோழி, வாத்து, வான்கோழி, கூஸ் வாத்து போன்ற பல்வேறு பறவைகளை ஒன்றாக வளர்த்தல் கூடாது.

வெளிநாட்டுப் பறவைகள் வந்து செல்லும் பறவைகள், சரணாலயங்களாக அருகில் கோழி அல்லது வாத்து கண்டிப்பாக வளர்க்கக்கூடாது. நாடு விட்டு நாடு செல்லும் பறவைகள் தான் பறவைக்காய்ச்சல் நோயை பரப்புகின்றன.

சந்தையில் வாங்காமல் அரசுப் பண்ணைகளில் இருந்து கோழிக்குஞ்சுகளை வாங்கலாம்.

கோழி எச்சம் உள்ள இடங்களில் சிறுவர்களை விளையாட விடக்கூடாது. கோழிக்கூண்டு சுத்தம் செய்யும்போது மூக்கின் மீது துமி கட்டி கொள்ளவும். கோழி அல்லது கோழி இறைச்சி கையாளும்போது கைகளை நன்கு சோப்பு போட்டு கழுவ வேண்டும்.

கோழிக்கறி, கோழிமுட்டை சாப்பிடுவோருக்கான அறிவுரைகள்:

முழுக்கோழியை அப்படியே சமைப்பது கூடாது. ஏனெனில் கோழி உடலின் அனைத்துப்பகுதிகளிலும் 70 டிகிரி வெப்பம் படாமல் போய்விடலாம். அரை வேக்காட்டில் சமைத்த கோழி, முட்டையை உண்ணக்கூடாது.

பச்சை முட்டை அல்லது ஆப்பாயில் சாப்பிடக்கூடாது. முழுமையாக அவித்த முட்டை அல்லது முழுமையாக பொரித்த ஆம்லெட் சாப்பிடலாம்.

கோழிகளில் பறவைக் காய்ச்சல் நோய் அறிகுறிகள்:

தீவனம் உண்ணாமல் சோர்வுடன் இருத்தல், தலைவீக்கம், கொண்டையில் நீலநிறம் பரவுதல், முட்டை உற்பத்தி திடீர் குறைவு, 100 சதம் வரை கோழிகள் திடீர் இறப்பு

இறந்த கோழிகளின் உடல் உறுப்புகள், நுரையீரல்களில் ரத்தக்கசிவு கொண்ட தொடை, கால்கள் மீது ரத்தப்புள்ளிகள்.

மேற்கண்ட அறிகுறிகள் இருந்தால் உடனே அருகே உள்ள கால்நடை மருத்துவமனையை அணுகலாம்.

தினமணி தகவல்: காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்ட கால்நடை நோய் புலனாய்வு பிரிவு

வேளாண் அரங்கம் மார்க்கெட்டில்

 

சிறந்த கறவை மாடுகளைத் தேர்வு செய்வது எப்படி?

பால் மற்றும் பால் பொருள்களின் தேவை அதிகரித்து வருவதால், கால்நடை வளர்ப்பில் பால் பண்ணைத் தொழிலுக்கு முக்கியத்துவ ம் அதிகரித்து வருகிறது. அதன்படி, பால் பண்ணைத் தொழிலை லாபகரமாக செயல்படுத்த சிறந்த கறவை மாடுகளைத் தேர்வு செய்வது குறித்து நாமக்கல் கால்நடை மருத்துவக் கல்லூரி நிர்வாகம் பல்வேறு வழிமுறைகளை தெரிவித்துள்ளது.

பால் பண்ணைத் தொடங்க முதலில் நல்ல கறவை மாடுகளைத் தேர்வு செய்தல் வேண்டும். அதற்கு கறவை மாடுகள் குறித்த அடிப்படை விஷயங்களைத் தெரிந்திருக்க வேண்டியது அவசியம். கறவை மாடுகள் வாங்கும் போது பதிவேடுகளை நன்கு பராமரித்து வரும் அரசு கால்நடைப் பண்ணைகள், தனியார் பண்ணைகளிலிருந்து பசுக்களைத் தேர்வு செய்வது சிறந்தது.

ஏனெனில் அந்தப் பதிவேடுகளில் பிறந்த தேதி, கன்று ஈன்ற தேதி, கறவைக் காலம், கொடுத்த பாலின் அளவு போன்ற விவரங்கள் குறித்து வைக்கப்பட்டிருக்கும். அதன்படி, பதிவேடுகள் மூலம் ஆண்டுக்கு ஒரு கன்று, அதிகப் பால் உற்பத்தித் திறன் உள்ள பசுக்களைத் தேர்வு செய்யலாம்.

பதிவேடுகள் என்பது பெரும்பாலும் ஏட்டளவிலேயே உள்ளன. இந்தச் சூழலில் மாடுகளின் தோற்றத்தைக் கொண்டும் அவற்றின் குணாதிசயங்கள் கொண்டும் பசுக்களை தீர்மானிக்கலாம். அதாவது, பசுவின் அமைப்புக்கும், அதன் உற்பத்தித் திறனுக்கும் ஓரளவு தொடர்பு உள்ளதென ஆராய்ச்சிகள் மூலம் நிரூபிக்கப்பட்டுள்ளன.

பசுவானது சுறுசுறுப்பாகவும், கண்கள் பிரகாசமாகவும், கருவிழி நன்கு அசையும் வண்ணமும் இருக்க வேண்டும். மூக்கின் முன்பகுதி ஈரமாக இருக்கவும், மூக்குத் துவாரங்கள் பெரியதாகவும் அகன்றும் இருக்க வேண்டும். மூச்சு விடும் போதோ அல்லது உள்ளிழுக்கும் போதோ குறட்டைச் சப்தம் வரக்கூடாது.

பல் வரிசை சீராக இருப்பதைக் கடைவாய்ப் பல்கள் அனைத்தையும் வாயைத் திறந்து நாக்கை விலக்கிப் பார்த்தல் வேண்டும். அதிக தேய்மானம், சொத்தைப் பல், புண் மற்றும் துர்நாற்றம் இருக்கக் கூடாது. மாடுகள் ஓய்வு நேரங்களில் அசை போட்டுக் கொண்டிருக்க வேண்டும்.

பசுவை பக்கவாட்டில் இருந்து பார்க்கையில் முன்னங்காலின் பகுதியைவிட பின்னங்கால் பகுதியில் உடலளவு பெரிதாக இருந்தால் தீவனத்தை நன்கு உள்கொண்டு பாலாக மாற்றும் திறன் உடையது என்று அனுமானிக்கலாம்.

பசுவின் மேல் பகுதியைப் பார்க்கையில் முன்னங்கால் பகுதியிலிருந்து இரு பக்க இடுப்பு எலும்பு வரையில் வரும் நேர்க்கோட்டில் இரு பக்கமும் விரிவடைந்திருக்க வேண்டும். அதன்படி, இடுப்பு எலும்பு அகலமாக இருப்பதால் இனப்பெருக்க உறுப்புகள் சிறப்பாக வளர்ந்திருக்கும், கன்று போடுவதில் எந்த சிரமமும் இருக்காது.

கறவை மாடுகள் அதிக கொழுப்புடனோ அல்லது அதிகமாக மெலிந்தோ இருக்கக் கூடாது. கறவை மாடுகளின் விலா எலும்புகளில் கடைசி மூன்று எலும்புகள் மட்டும் தெரிவது சிறந்ததாகும்.

கால்கள் உறுதியாகவும், நடக்கும் போது சீராக ஊன்றியும் நடக்க வேண்டும். பசுவின் நான்கு கால்களும் உடம்பின் நான்கு மூலையிருந்து நேராக தரையை நோக்கி இறங்கியிருக்கவும், பசு படுப்பதற்கோ எழுவதற்கோ சிரமப்படக் கூடாது.

மடியின் நான்குக் காம்புகளும் ஒரே அளவாகவும், சரிசமமாகவும், காம்புகளின் நுனியில் பால் வரும் துவாரம் இருக்க வேண்டும். காம்புகள் அதிக நீளமாகவும் இருக்கக் கூடாது. தவிர, பால் மடியானது உடலோடு நன்கு ஒட்டியிருக்கவும், மடி உடலோடு சேரும் பகுதி அகன்று விரிந்தும் அடிவயிற்றில் நன்கு திரண்டும் இருக்க வேண்டும்.

பால் கரந்த பிறகு மடி நன்கு சுருங்க வேண்டும். மாட்டின் கலப்பினத் தன்மைக்கேற்ப கணக்கிடப்பட்ட அளவுக்குப் பால் கறக்க வேண்டும். அதற்கு தொடர்ந்து மூன்று நாள்கள் இரு வேளையும் பால் கறந்துப் பார்த்து மாடுகளை வாங்க வேண்டும். பத்து லிட்டர் பாலை எட்டு நிமிஷங்களில் கறக்க வேண்டும்.

பால் கறக்கும் போது கால்களைக் கட்டியோ அல்லது மாடுகளைப் பிடித்துக் கொண்டோ கறக்கும் பழக்கமுள்ள மாடுகளை வாங்குவது நல்லதல்ல. மேலும், மாடுகள் முதல் கன்று ஈற்றைவிட இரண்டாவது, மூன்றாவது ஈற்றில்தான் அதிகமாக பால் கொடுக்கும். எனவே, மாடுகளை முதல் மூன்று ஈற்று இருக்குமாறு பார்த்து வாங்குவது சிறந்தது என்றனர் அவர்கள்.

தினமணி தகவல்:
நாமக்கல் கால்நடை மருததுவக் கல்லூரியின் விரிவாக்கத் துறை பேராசிரியர்கள் நா.நர்மதா, வே.உமா, மொ.சக்திவேல்

வேளாண் அரங்கம் மார்க்கெட்டில்