விதை மூலம் சின்ன வெங்காயம் நாற்றங்கால் மேலாண்மை

சின்ன வெங்காயம் பொதுவாக இரண்டு பட்டங்களாகப் பிரித்து சாகுபடி செய்யப்படுகின்றது.

  • ஒன்று: சித்திரை – வைகாசி பட்டம்,
  • இரண்டு: ஐப்பசி-கார்த்திகைப்பட்டம்.

நாற்று வெங்காயம் (விதை மூலம்) மேற்கூறிய இரண்டு பட்டங்கள் தவிர்த்து இடைப்பட்ட மார்கழி முதல் சித்திரை மாதம் வரை உள்ள காலங்களில் மிகச் சிறப்பாகவும், வெயிலைத் தாங்கி விளையும் சக்தி கொண்டவையாகவும், கூடுதல் மகசூல் தரக்கூடியனவாகவும் சிறப்பான விற்பனைத் தரம் கொண்டவையாகவும், அளவில் பெரியதாகவும் இந்த நாற்று வெங்காய ரகங்கள் உள்ளன. இவைகள் விதைகள் மூலம் உற்பத்தி செய்யப்படுகின்றன.

நாற்று வெங்காய ரகங்கள்:

கடலூர் மாவட்டம் – நானமேடு என்ற கடற்கரைக் கிராமத்தைத் தாயகமாகக் கொண்ட கடலூர் ரகம். இது “மொட்லூர்’ எனவும் அழைக்கப்படுகின்றது. கோவை பல்கலைக்கழக வெளியீடான சிறப்பு பொறுக்கு ரகம் – கோ.ஓ.எண்.5 (கோயம்புத்தூர் ஆனியன் – எண்:5) இதுவே இன்று விவசாயிகளிடம் அதிக அளவு சாகுபடியில் – நடைமுறையில் உள்ளது. கோ.ஓ.எண்.5 என்று அழைக்கப்படுகிறது.

இது தவிர தனியார் கம்பெனிகளின் சில ரகங்களும் அறிமுகப்படுத்தப்பட்டு வருகிறது.கோ.ஓ.எண்:5: கோவை பல்கலைக்கழகத்தின் சிறப்புத் தேர்வு ரகமான கோ.ஓ.எண்:5 பற்றி விரிவாகப் பார்ப்போம். * விதை மூலம் உற்பத்தி, * அறுவடைக் காலம் 90 முதல் 100 நாட்கள். * உருண்டை வடிவம் கொண்ட மார்க்கெட் ரகம். * இளம் சிவப்பு காய்கள் – தரைக்குப் பக்கவாட்டில் விளையும் கிழங்குகள். * ஏக்கருக்கு 8000 முதல் 12,000 கிலோ கூடுதல் மகசூல் * அறுவடைக்குப் பின் சேமித்து வைக்க உகந்த ரகம். * கடலூர் ரகம் போலவே அறுவடை சமயத்தில் மழை பெய்தால் முளைக்கும் தன்மை உண்டு.

விதைக்கும் பட்டம்: சிறிய வெங்காய விதைகள் மூலம் சாகுபடி செய்வதற்கு சரியான பட்டம் – மழை அளவு குறையும் கார்த்திகை பின்பகுதியில் ஆரம்பித்து சித்திரை 15 வரை தொடர்ந்து நாற்று பாவி நடவு செய்யலாம். வைகாசி முதல் வாரத்திலிருந்து கார்த்திகை 15 வரை அல்லது 20 வரை நாற்று விடுவதைக் கண்டிப்பாகத் தவிர்க்கவும்.

  • ஒரு கிலோ விதையை 17 பாத்திகளில் (20′ து 3 1/2′) சீராகத் தூவிவிட வேண்டும்.
  • இத்துடன் 500 கிராம் பியூரடான் 3ஜி குருணை மருந்தை மணல் கலந்து சீராக வரப்பு வாய்க்காலிலும் சேர்த்து தூவிவிட வேண்டும். இவை எறும்புகள் மற்றும் வண்டுகள் நடமாட்டத்தைக் குறைக்கும்.
  • பின் அவியல் நெல்லை வீடுகளின் முற்றத்தில் பரப்பும் பொழுது கையாள்வதைப் போல் சீராகக் கிளறிவிட வேண்டும். இதனால் 40% முதல் 60% சதவீத விதைகள் மண்ணுடன் மேலாகக் கலந்துவிடும்.
  • மீதமுள்ள 40% விதைகள் எந்த ஆதரவும் இன்றி கருப்பாக மேலே கிடக்கும். இந்த விதைகளைக் கண்டிப்பாக மண்ணிற்குள் மறைத்தே ஆக வேண்டும். இதை மறைப்பதற்கு ஆற்றுப்படுகையில் கிடைக்கும் இளம் திருநீர் போன்ற வண்டல் மண்ணை சீராகத் தூவிவிட வேண்டும். கரிசல் மற்றும் இருமண்பாடு கொண்ட நிலங்களில் நாற்று பாவுபவர்கள் கண்டிப்பாக இந்த விதிமுறையை அவசியம் கடைபிடிக்க வேண்டும்.
  • இளம் மணல்பாங்கு, அல்லது செம்மண் நிலங்களில் நாற்று விடுபவர்கள் மேல்மண்ணை அரை அடி ஆழத்திற்கு ஒதுக்கிவிட்டு அடுத்து உள்ள மண்ணை பயன்படுத்திக் கொள்வது சிறப்பு.
  • மண்கொண்டு மூடும்பொழுது 1 பாத்திக்கு 4 அல்லது 5 கூடை (அல்லது) காரச்சட்டி இளம் மணலே போதுமானது. அதிகமான மண்ணை பயன்படுத்தக் கூடாது. பயன்படுத்தினால் விரைந்த முளைப்புத் தன்மைக்கு இடையூறாக அமையும் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

நீர் மேலாண்மை:

நாற்று பாவிய பின் அதிவேக நீர்ப்பாசனத்தை அவசியம் தவிர்க்கவும். பொதுவாகத் தண்ணீரைக் குறைத்து அளவுடன் நீர் பாய்ச்சவும்.

விதை பாவிய முதல் மூன்று நாளைக்கு:

மூன்று தண்ணீரும் (1, 2, 3வது நாள்), நான்காம் நாள் தவிர்த்து 5வது நாள் 4ம் தண்ணீரும், ஆறாவது, ஏழாவது நாள் தவிர்த்து எட்டாவது நாளில் 5ம் தண்ணீரும் பாய்ச்ச, எவ்வித மாற்றமுமின்றி சிறப்பான முளைப்புத் திறனைக் காண்பிக்கும். இது பொதுவான சிபாரிசு.

மழை கூடிய காலங்களிலும் கரிசல் பகுதியில் நாற்று விடும்பொழுதும் மண்ணின் ஈரம் மற்றும் பருவ நிலைக்குத் தகுந்தாற்போல் நீர் பாய்ச்சிக் கொள்ளுங்கள். கடுமையான வெயில் நேரங்களில் நாற்றங்காலுக்கு நீர் பாய்ச்சுவதைக் கண்டிப்பாக தவிர்க்க கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். நாற்று நன்கு முளைத்தபின் (நாற்றின் வயது 12 நாட்களுக்கு மேல் சென்ற பின்) நிலத்தை நன்கு உலரவிட்டு 3 அல்லது 4 நாள் இடைவெளியில் நீர் பாய்ச்சுவது மிகச்சிறப்பு. 25 நாட்களுக்கு மேற்பட்ட நாற்றுக்கு 5 தினத்திற்கு ஒரு முறை நீர் பாய்ச்சுவதே மிகவும் நன்று. அடிக்கடி நீர் பாய்ச்சினால் வேர்ப்பகுதி சரியான கிழங்கு வடிவம் கொள்ளாமல் நாற்று திமுதிமுவென வளர்ந்து விரைப்பு இல்லாமல் மேலும் கீழும் சாய்ந்துவிடும். சுருங்கச் சொன்னால் காய்ச்சலும் பாய்ச்சலும் எனலாம்.

தினமலர் தகவல்
கண்மணிசந்திரசேகரன், பி.எஸ்சி.,
கண்மணி இயற்கை அங்காடி மற்றும் இயற்கை வேளாண்மை இடுபொருளகம்,
404, பாங்க் ஆப் இந்தியா கீழ்தளம்,
ரயில்வே நிலையம் எதிர்புறம், பழநிப்பாதை, ஒட்டன்சத்திரம்-624 619.
98659 63456, 99522 96195.

சின்ன வெங்காயம் – பெரிய லாபம்: வேளாண் துறை ஆலோசனை

தற்போது விவசாயிகள் சின்ன வெங்காயத்தை பயிரிட்டால் அதிக லாபம் பெறலாம் என்று வேளாண் துறை பரிந்துரை செய்து உள்ளது.

இந்தியாவின் முக்கிய காய்கறிகளில் சின்ன மற்றும் பெரிய வெங்காயம் முக்கிய இடத்தை வகிக்கிறது. நாட்டின் மொத்த காய்கறி உற்பத்தியில் வெங்காயம் 10.5 சதவீதம்.

தமிழ்நாட்டில் 35 ஆயிரம் ஹெக்டேரில் 3.05 லட்சம் டன் வெங்காயம் உற்பத்தி செய்யப்படுகிறது. இதில் 75 சதவீதம் சின்ன வெங்காயம். கடலூர் மாவட்டத்தில் நாணமேடு, சுபஉப்பளவாடி, கண்டக்காடு, சிறுபாக்கம், எஸ்.நாரையூர், ரெட்டாக்குறிச்சி, எஸ்.புதூர் ஆகிய கிராமங்களில் சின்ன வெங்காயம் பயிரிடப்படுகிறது.

சின்ன வெங்காயம் பயிரிடும் விவசாயிகளுக்கு உதவும் வகையில் தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகத்தின் தகவல் மையம், கடந்த 10 ஆண்டுகளில் சின்ன வெங்காயத்தின் விலை நிலவரத்தை ஆய்வு செய்ததன் அடிப்படையில், வேளாண் விற்பனை மற்றும் வேளாண் வணிகத்துறை துணை இயக்குநர் நா.தனவேல், கீழ்காணும் பரிந்துரைகளை விவசாயிகளுக்கு அளித்து உள்ளார். அந்த விவரம்:

  • ஏப்ரல், மே, ஜூன், செப்டம்பர் மற்றும் அக்டோபர் மாதங்களில் கர்நாடக மாநிலத்தில் இருந்து தமிழகத்துக்கு வெங்காய வரத்து அதிகம் இருக்கும். இதனால் தமிழகத்தில் உற்பத்தியாகும் வெங்காயத்தின் விலை, கர்நாடக வெங்காய வரவால் பாதிக்கும். எனவே தமிழக வெங்காய விவசாயிகள் அக்டோபர், நவம்பர் மாதங்களில் அறுவடை செய்யும் வகையில், தற்போது வெங்காய விதைப்பை மேற்கொள்ளலாம்.
  • அக்டோபர், நவம்பர் மாதங்களில் இங்கு விலை ஏறுமுகத்தில் இருக்கும். உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு ஏற்றுமதி சந்தை தகவல் மைய ஆய்வு முடிவுகளின்படி, தரமான வெங்காயத்தின் விலை வரும் அக்டோபர் முதல் நவம்பர் வரை கிலோவுக்கு ரூ. 13 முதல் ரூ.16 வரை இருக்கும். சுமாரான வெங்காயம் கிலோ ரூ.10 முதல் ரூ. 13 வரை இருக்கும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது.

எனவே விவசாயிகள் தற்போது வெங்காயம் பயிரிடலாம். விதை மூலம் உற்பத்தி செய்யப்படும் வெங்காயத்தை விதைத்தால் பயிர் செலவு குறையும். ஆனால் இந்த வெங்காயம் சேமிக்க உகந்ததல்ல என்றும் துணை இயக்குநர் தெரிவித்துள்ளார்.

தினமணி தகவல் – திரு. நா. தனவேல், வேளாண் வணிகத்துறை துணை இயக்குநர், கடலூர்

சின்ன வெங்காயத்தில் அழுகல் நோய்: கட்டுப்படுத்த வேளாண் அதிகாரி யோசனை

தருமபுரி மாவட்டத்தில்,​​ தற்போது பயிரிடப்பட்டுள்ள சிறிய வெங்காயத்தில் அழுகல் நோய்த் தாக்குதல் தெரிகிறது.​ இது ப்யூசேரியம் ஆக்சிஸ்போரம் எனும் பூஞ்சை மூலமாக ஏற்படுகிறது.​ நோய்த் தாக்கிய விதைக் காய்களை நேர்த்தி செய்யாமல் நடுவதால்,​​ இந்நோய் அதிகளவு ஏற்படும்.

நிலத்தில் ஈரப்பதம் அதிகமாக இருந்தால் இந்த பூஞ்சையின் தாக்குதல் அதிகமாக ​ இருக்கும்.​ எனவே,​​ வெங்காய வயலுக்கு குறிப்பிட்ட இடைவெளியில் நீர்ப்பாசனம் ​ செய்ய வேண்டும்.

அதாவது,​​ நிலம் நன்கு காய்ந்த பிறகு நீர்ப் பாய்ச்ச வேண்டும்.​ ஈரத்தன்மை இருக்கும் ​ போது,​​ நீர்ப் பாய்ச்சுவதைத் தவிர்க்க வேண்டும்.​ களிமண் பாங்கான நிலங்களில் 7 ​ முதல் 9 நாள்களுக்கு ஒரு முறையும்,​​ மணல் பாங்கான நிலங்களில் 5 நாள்களுக்கு ஒரு முறையும் நீர்ப்பாய்ச்சினால் போதுமானது.

அழுகல் நோய்த் தாக்கிய வெங்காயத் ​ தாள்கள் மஞ்சள் நிறமாக மாறி இருக்கும்.​ நோய் முற்றிய நிலையில் தாள்கள் நேராக இல்லாமல்,​​ துவண்டு போய் காணப்படும்.

செடியைப் பிடுங்கிப் பார்த்தால்,​​ காயின் வேர் தோன்றும் பாகம் அழுகி நைந்து போனது போல தோன்றும்.​ இந்நோய் தோன்றிய செடிகளை ​ உடனடியாக பிடுங்கி அழித்துவிட வேண்டும்.​ இல்லையெனில்,​​ மற்ற செடிகளுக்கும் பாதிப்பை உண்டாக்கும்.

அழுகல் நோயைக் கட்டுப்படுத்தும் முறைகள்:

10 லிட்டர் நீருக்கு கார்பென்டாசிம் பூஞ்சாணக் கொல்லி 10 கிராம் மற்றும் ஸ்டிரெப்டோமைசீன் சல்பேட் 2 கிராம்,​​ ஒட்டும் திரவம் 5 மில்லி என்ற வீதத்தில் ​ கலந்து காலை அல்லது மாலை வேளைகளில் வயலில் தெளிக்கலாம்.​ இவ்வாறு ​ செய்வதன் மூலம் வெங்காயத்தில் ஏற்படும் அழுகல் நோயைக் கட்டுப்படுத்தலாம் என்றார் அவர்.

சின்ன வெங்காயத்தில் அழுகல் நோய் கட்டுப்பாடு

பெரம்பலூர் மாவட்டத்தில், தற்போது பயிரிடப்பட்டுள்ள சிறிய வெங்காயப் பயிரில் அழுகல் நோயின் தாக்குதல் பரவலாகத் தெரிகிறது. இந்த அழுகல் நோயானது,  ப்யூசேரியம் ஆக்சிஸ்போரம் எனும் பூஞ்சை மூலமாக ஏற்படுகிறது. நோய்த் தாக்கிய  விதைக் காய்களை நேர்த்தி செய்யாமல் நடுவதால், இந்த நோய் அதிகளவு ஏற்படும்.  நிலத்தில் ஈரப்பதம் அதிகமாக இருந்தால் இந்த பூஞ்சையின் தாக்குதல் அதிகமாக  இருக்கும். எனவே, வெங்காய வயலுக்கு குறிப்பிட்ட இடைவெளியில் நீர்ப்பாசனம்  செய்ய வேண்டும்.

அதாவது நிலம் நன்கு காய்ந்த பிறகு நீர்ப்பாய்ச்ச வேண்டும். ஈரத்தன்மை இருக்கும்  போது, நீர்ப்பாய்ச்சுவதை தவிர்க்க வேண்டும். களிமண் பாங்கான நிலங்களுக்கு 7  முதல் 9 நாள்களுக்கு ஒரு முறையும், மணற் பாங்கான நிலங்களுக்கு 5 நாள்களுக்கு ஒரு முறையும் நீர்ப்பாய்ச்சினால் போதுமானது. அழுகல் நோய்த் தாக்கிய வெங்காயத்  தாள்கள் மஞ்சள் நிறமாக மாறி இருக்கும். மேலும், அழுகல் நோய் முற்றிய நிலையில்  தாள்கள் நேராக இல்லாமல், துவண்டு போய் காணப்படும்.

செடியைப் பிடுங்கிப் பார்த்தால், காயின் அடிப்பாகம் அதாவது, வேர் தோன்றும் பாகம் அழுகி நைந்து போனது போல தோன்றும். இந்த நோய் தோன்றிய செடிகளை  உடனடியாக பிடுங்கி அழித்துவிட வேண்டும். இல்லையெனில், இதன் வேர்ப் பகுதியில் உள்ள பூஞ்சை, நீர்ப்பாய்ச்சும் போது பரவி மற்ற செடிகளுக்கும் பாதிப்பை உண்டாக்கும்.

அழுகல் நோயைக் கட்டுப்படுத்தும் முறைகள்:
10 லிட்டர் நீருக்கு கார்பென்டாசிம் பூஞ்சாணக் கொல்லி 10 கிராம் மற்றும் ஸ்டிரெப்டோமைசீன் சல்பேட் 2 கிராம், ஒட்டும் திரவம் 5 மில்லி என்ற வீதத்தில்  கலந்து காலை அல்லது மாலை வேளைகளில் வயலில் தெளிக்கலாம். இவ்வாறு  செய்வதன் மூலம் வெங்காயத்தில் ஏற்படும் அழுகல் நோயைக் கட்டுப்படுத்தலாம் என்றார் அவர்.

சிறிய வெங்காயத்தில் அதிக மகசூல் பெற யோசனை

First Published : 24 Jun 2010 11:12:18 AM IST
Last Updated : 24 Jun 2010 12:24:26 PM IST

பெரம்பலூர், ஜூன், 23: பெரம்பலூர் மாவட்டத்தில் சிறிய வெங்காயம்  சாகுபடி செய்துள்ள விவசாயிகள் அதிக மகசூல் பெற ஹேன்ஸ் ரோவர் வேளாண் அறிவியல் மைய தோட்டக்கலை தொழில்நுட்ப வல்லுநர் சி. சங்கர் யோசனை தெரிவித்துள்ளார்.    இதுகுறித்து அவர் வெளியட்ட செய்திக் குறிப்பு:

தற்போது விவசாயிகள் பயிரிட்டுள்ள வெங்காயமானது 25  முதல் 30 நாள்கள் வயதுடையதாகும். இது மேலுரம் இடுவதற்கு  தகுந்த தருணமாகும். எனவே, விவசாயிகள் தங்களது வயலில்  கைகளால் களை எடுத்து, அதன்மீது மண் அணைத்து ஏக்கர்  ஒன்றுக்கு 26 கிலோ யூரியா உரத்தை 50 கிலோ வேப்பம்  புண்ணாக்குடன் அல்லது 58 கிலோ அம்மோனியம் சல்பேட் உரத்தை மணலுடன் கலந்து தூவ வேண்டும்.

இலை வழி ஊட்டம் அளிப்பதாக இருந்தால் 19:19:19 என்ற நீரில் கரையும் உரத்தை 1 லிட்டர் நீருக்கு 10 கிராம் என்ற அளவில் கலந்து, காதி சோப்புக் கரைசல் அல்லது ஒட்டும் திரவம் லிட்டருக்கு அரை மில்லி லிட்டர் வீதம் கலந்து தெளிக்கவும். இவ்வாறு செய்வதால், சிறிய வெங்காயத்தில் அதிக மகசூல் பெறலாம் என்று அவர் தெரிவித்துள்ளார்.