திசு வளர்ப்பு வாழையால் வாழும் இளைஞர்

திசு வளர்ப்பு வாழை பற்றிய செய்தி தினமணியில் விவசாயி சொல்வது போன்ற ஒரு செய்தி வந்துள்ளது. வேளாண் பேராசிரியர்கள் பெயர் எதுவும் வெளிப்படையாகத் தெரியவில்லை. ஜி-9 வாழைக்கான விளம்பர உத்தியாக இந்த செய்தி இருக்காது என்கிற நம்பிக்கையில் இதைப் பதிப்பிக்கிறேன்.

விருத்தாசலம் பகுதியில் திசு வளர்ப்பு வாழையான கிராண்ட் நைன் ரக வாழையை சாகுபடி செய்து நல்ல லாபம் கிடைப்பதாக இளைஞர் ஒருவர் தெரிவிக்கிறார்.

G-9 வாழை

G-9 வாழை

விருத்தாசலம் பகுதியில் மணிலா, கரும்பு, நெல், வாழை போன்ற விவசாயப் பொருள்களை விவசாயிகள் பயிர் செய்து வருகின்றனர்.

தற்போது திசு வளர்ப்பு வாழைக்கன்றான ஜி9 வாழைப்பழம் பார்வைக்கு கவர்ச்சியாக இருப்பதால் அவற்றை பொதுமக்கள் விரும்பி வாங்கிச் செல்கின்றனர். தேனி, திண்டுக்கல் உள்ளிட்ட பகுதிகளிலிருந்து கடலூர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளுக்கு கிராண்ட் நைன் எனப்படும் ஜி9 வாழை விற்பனைக்கு வருகிறது.

இதைப் பார்த்த விருத்தாசலத்தை அடுத்த சின்னவடவாடி கிராமத்தைச் சேர்ந்த ப.வேல்முருகன், தானும் இந்த வாழையை சாகுபடி செய்ய வேண்டும் என்ற ஆர்வத்தில் தனக்குச் சொந்தமான 2 ஏக்கர் நிலத்தில் ஜி9 வாழையை நடவு செய்துள்ளார். தற்போது அறுவடை செய்யும் நிலையில் உள்ளது.

இது குறித்து ப.வேல்முருகன் தெரிவித்தது:

நடவு:

பொதுவாக திசு வளர்ப்பு வாழையை நடும்போது அந்தந்தப் பருவ சூழலுக்கு ஏற்ப நடவு செய்ய வேண்டும். இதனடிப்படையில் விருத்தாசலம் பகுதியில் ஜூன் முதல் டிசம்பர் மாதத்துக்குள் நடவு செய்ய வேண்டும்.

கன்றுகளை ஜனவரி முதல் மே மாதம் வரையிலான மாதங்களில் நடவு செய்தால் பாக்டீரியா மற்றும் வைரஸ் நோய்த் தாக்குதல் அதிகம் இருப்பதுடன் செடியின் வளர்ச்சியும் குறைந்து சில நேரங்களில் குலை தள்ளிவிடும் என தோட்டக்கலைத் துறையினர் தெரிவித்தனர். அதன்படி ஆகஸ்ட், செம்டம்பர் மாதங்களில் நான் நடவு செய்தேன்.

நிலத்தை சமப்படுத்தி தோட்டக்கலைத் துறையினரின் ஆலோசனைப்படி 6 அடி இடைவெளியில் 1 ஏக்கருக்கு 1000 கன்றுகளை நடவு செய்தேன்.

நடவு மற்றும் உரம்:

நடவு செய்தது முதல் 5 நாளுக்கு ஒரு முறை தண்ணீர் பாய்ச்சி வந்தேன். 1 ஏக்கருக்கு 10 டன் தொழு உரம் இட்டும், 30 நாளுக்கு ஒரு முறை களை எடுத்து வந்தேன். தற்போது அறுவடைக்குத் தயார் நிலையில் வாழைத்தார் உள்ளது.

விருத்தாசலம் பகுதியில் இந்த ஜி9 வாழைத்தார் ஒன்று ரூ.300 முதல் ரூ.600 வரையில் விற்பனையாகிறது. களை எடுத்தல், முட்டுக்குச்சிகள், தொழு உரம், உரம் உள்ளிட்டவைகளின் செலவு போக நல்ல லாபம் கிடைக்கும் வகையில் இருக்கிறது.

கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் கடலூர் மாவட்டத்தில் ஏற்பட்ட தானே புயலின்போது 3 மாத கன்றுகளாக இருந்த வாழை மண்ணில் சாய்ந்து கிடந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்தேன். இருப்பினும் சாய்ந்த கன்றுகளுக்கு மண் அணைத்ததால் அவை நன்றாக வளர்ந்துள்ளன. எனவே, நல்ல லாபம் தரக்கூடியதாகவும், விற்பனை செய்வதற்கு எளிமையாகவும் இருக்கிறது என்று தெரிவித்தார்.

இது குறித்து வேளாண்மைத் துறை உதவிப் பேராசிரியர் ஒருவர் தெரிவித்தது: வாழை பயிரிட விரும்புவோர் நல்ல வடிகால் வசதியுள்ள அமில காரத் தன்மை 5.5-7.5 வரையுள்ள மண்ணைத் தேர்வு செய்யலாம். காரத்தன்மை அதிகமாகவும் உப்பு கலந்த களிமண்ணானது வாழை நடவு செய்ய ஏற்றதல்ல. ஏனெனனில், இத்தகைய மண்ணில் நுண்ணூட்டச் சத்தும், மணிச்சத்தும் வாழைக்கு எளிதில் கிடைக்காது.

திசு வாழைக் கன்றுகளைத் தேர்வு செய்யும்போது 5 முதல் 6 இலைகள் கொண்ட நன்கு வளர்ந்த தரமான செடிகளைத் தேர்வு செய்ய வேண்டும்.

வாழைக் கன்றுகள் நடும் வயலை உளிக்கலப்பை மூலம் ஒரு முறையும், சட்டிக்கலப்பையின் மூலம் ஒரு முறையும் உழவு செய்த பின்னர் கொக்கிக் கலப்பையால் 2 முறை உழவு செய்ய வேண்டும். நடவுக்கு ஒரு மாதத்துக்கு முன்பே 1.5ஷ்1.5ஷ்1.5 அடி அளவுள்ள குழிகளை 6-க்கு 6 அடி அல்லது 5-க்கு 7 அடி இடைவெளியில் எடுக்க வேண்டும்.

குழிக்கு 5 கிலோ அளவுக்கு தொழு உரத்தை மேல் மண்ணுடன் கலந்து குழியில் இட வேண்டும். மேலும், வேப்பம் புண்ணாக்கு 500 கிராம், பியூரடான் 20 கிராம் இட்டு கன்றுகளை நடவு செய்ய வேண்டும். ஹெக்டர் ஒன்றுக்கு குறைந்தபட்சம் 3 ஆயிரம் வாழைக்கன்றுகள் தேவை. இவ்வாறு நடவு செய்த வாழைக்கன்றுகளுக்கு நாள்தோறும் தேவையான அளவு தண்ணீர் பாய்ச்ச வேண்டும். வாழை ஒன்றுக்கு நாள்தோறும் 25 லிட்டர் தண்ணீர் தேவைப்படும். நீரில் எளிதில் கரையும் உரங்களை ஒரு வாழைக்கு 200 முதல் 300 கிராம் தழை, மணி மற்றும் சாம்பல் சத்து என்ற விதத்தில் கரையும் உரப்பாசனம் மூலம் 5 நாள் இடைவெளியில் இடவேண்டும்.

வாழைக் கன்றில் நூல்புழுத் தாக்குதலின் அறிகுறி தெரிந்தால் மீண்டும் வேப்பம் புண்ணாக்கு, புங்கம் புண்ணாக்கை ஒரு மரத்துக்கு 500 கிராம் வீதம் இட்டு மண் அணைக்க வேண்டும்.

அசோஸ்பைரில்லம், பாஸ்போபாக்டீரியா இரண்டையும் 20 கிராம் அளவில் தொழு உரத்துடன் கலந்து மரம் ஒன்றுக்கு இடவேண்டும். இவ்வாறு செய்தால் கன்றுக்கு ஊட்டச்சத்து சிறப்பாக அமையும். பாக்டீரியா நோய்த் தாக்குதலிலிருந்து கன்றுகளைக் காப்பாற்ற செடிக்கு 25 கிராம் சூடோமோனாஸ் வைக்கலாம்.

வாழைக்குலையின் கடைசி சீப்பு வந்தவுடன் 1 வாரத்துக்குள் ஆண் பூவை நீக்கிவிட்டு சவுக்கு அல்லது யூகலிப்டஸ் குச்சிகளை முட்டுக் கொடுக்க வேண்டும். கடைசி சீப்பு வெளிவந்தவுடன் ஒளி ஊடுருவும் பாலித்தீன் பை கொண்டு வாழைக்குலைகளை மூடவேண்டும். ÷பாலித்தீன் பைகளில் குளிர்காலமாக இருப்பின் 2 சதவீதம் துளைகளையும், கோடைகாலத்தில் 4 சதவீதத் துளைகளையும் ஏற்படுத்தி காற்றோட்டமாக வைத்திருக்க வேண்டும்.

இதன்மூலம் பழங்கள் நல்ல ஏற்றுமதித் தரத்துடன் சிறப்பாகக் காணப்படும். நன்கு பராமரிக்கப்பட்ட ஜி9 வாழை நடவு செய்த 11 மாதங்களில் முதல் அறுவடையும், முதல் அடிக்கன்றிலிருந்து வரும் குலைகள் 10 மாதத்திலும், 2-ம் அடிக்கன்றிலிருந்து வரும் குலை 9 மாதத்திலும் வரும் என தெரிவித்தார்.

தினமணி தகவல்: ப.வேல்முருகன், சின்னவடவாடி கிராமம், விருத்தாசலம்

வேளாண் அரங்கம் மார்க்கெட்டில் கிராண்டு 9 வாழை உட்பட்ட விதை மற்றும் நாற்றுகள் – http://www.market.grassfield.org/index.php?q=itemList&categoryId=8

வாழை இலை மஞ்சள் நிறமாகிறதா – வாடல் நோய்

வாழையில் மஞ்சள் நோய் என்பது மரத்தை ஒட்டு மொத்தமாக காலி செய்து நஷ்டம் அடையச் செய்யும்.

இதன் அறிகுறிகள்

ஆரம்பத்தில் அடி இலையின் ஓரங்கள் மஞ்சளாக காணப்படும். நாளடைவில் இந்த மஞ்சள் நிறம் இலையின் மையப்பகுதி அல்லது நடுநரம்புக்குப் பரவி, கடைசியில் இலை முழுவதும் மஞ்சள் நிறமாக மாறுகிறது.பின்னர், இந்த மஞ்சள் நிறமானது அடி இலையிலிருந்து மேல் இலைகளுக்கும் பரவி வாழை மரத்திலுள்ள அனைத்து இலைகளும் மஞ்சள் நிறமாக மாறும்.பாதிக்கப்பட்ட மரத்தின் அடி இலைகள், இலைக்காம்பு பகுதிகள் ஒடிந்து தண்டைச் சுற்றி தொங்கும்.

வாடல்நோய் அறிகுறிகள்

வாடல்நோய் அறிகுறிகள் - Image courtesy http://old.padil.gov.au/pbt/index.php?q=node/13&pbtID=137

தண்டின் நீளவாக்கில் அடியிலிருந்து வெடிப்புகள் காணப்படும். சில நேரங்களில் மரம் இறப்பதற்கு முன்னால் நிறைய பக்க கன்றுகள் தோன்றும்.பொதுவாக நோய் பாதிக்கப்பட்ட வாழை மரத்தில் தார்கள் வருவதில்லை.

அப்படியே தார் வந்தாலும் காய்கள் மிகவும் சிறுத்தும், குறைந்த எண்ணிக்கையிலும் காணப்படும். இக்காய்கள் ஒரே சீராக பழுப்பதில்லை, சதைப் பகுதியும் ருசி இல்லாமல் அமிலச் சுவையாக இருக்கும். அடிக் கிழங்கை குறுக்காக வெட்டிப் பார்த்தால் அதில் நீர் மற்றும் சத்துக்களை கடத்தக்கூடிய சாற்றுக் குழாய்த் தொகுப்பு, மஞ்சள் கறுப்பு போன்ற நிறங்களில் காணப்படும்.

வாடல் நோய்

வாடல் நேய் - image courtesy http://www.doa.sarawak.gov.my/modules/web/page.php?id=145

நீண்டநாள்களுக்கு பிறகு இந்த நோய் பாதிக்கப்பட்ட மரம் அழுகி, வெட்டப்பட்ட தண்டுப் பகுதியிலிருந்து அழுகிய மீன் போன்ற துர்நாற்றம் வீசும்.

இந்த வாடல்நோய் பியூசேரியம் என்று அழைக்கப்படும் ஒருவித பூஞ்சாணமானது ஏற்படுத்துகிறது. இந்த பூஞ்சாணம் பலவித வித்துக்களை உற்பத்தி செய்து அவை மண்ணில் சுமார் 30 ஆண்டுகள் வாழக்கூடியது.

கட்டுப்படுத்தும் முறைகள்:

வாழையைத் தொடர்ந்து சாகுபடி செய்யாமல், நெல், மரவள்ளி போன்ற பயிர்களை ஓரிரண்டு ஆண்டுகள் சாகுபடி செய்தபின் வாழை நடவு செய்யலாம்.

எங்கெல்லாம் இந்த நோயின் தாக்குதல் இருக்கிறதோ, அந்தநிலங்களில் மாற்று ரகங்களான பூவன், பொபஸ்டா, செவ்வாழை ஆகியவற்றை சாகுபடி செய்யலாம்.நோய் பாதிக்கப்பட்ட கிழங்கு அல்லது கன்றுகளை ஓரிடத்திலிருந்து மற்றொரு இடங்களுக்கு கொண்டு சென்று நடவு செய்வதைத் தவிர்க்க வேண்டும்.

வாடல்நோய் தாக்காத வாழைத் தோட்டங்களில் தார் வெட்டும் முன்பே சென்று பார்த்து கன்றுகளைத் தேர்வு செய்ய வேண்டும். கன்றுகளை வாழைத் தோட்டத்திலிருந்து எடுத்தபின் கன்றுகளின் கிழங்குகளின் மேல்தோல் மற்றும் வேர்களை நீக்கி பின் அக்கிழங்கை 0.2 சதவிகிதம் கார்பெண்டாசிம் (ஒரு லிட்டர் நீரில் 2 கிராம்) மற்றும் மோனோகுரோட்டாபாஸ் (ஒரு லிட்டர் நீரில் 14 மில்லி) மருந்துக் கலவையில் 30 நிமிடம் மூழ்க வைத்து பின் நிழலில் உலர வைத்து நடவு செய்ய வேண்டும்.

நடவு செய்த உடன் கிழங்கை சுற்றி 20 கிராம் டிரைகோடெர்மா விரிடி மற்றும் 20 கிராம் சூடோமோனாஸ் ப்ளூரெசென்ஸ் ஆகிய எதிர் உயிர்க் கொல்லிகளை அரை கிலோ மண்புழு உரத்துடன் கலந்து இட்டு நீர் பாய்ச்ச வேண்டும். இந்த முறையை கன்று நட்ட 2, 4 மற்றும் 6-வது மாதங்களில் மீண்டும் செய்ய வேண்டும்.

ஓரிரண்டு வாழைகளில் நோயின் அறிகுறி தென்பட்டதும் அனைத்து வாழை மரத்துக்கும் தலா 2 லிட்டர் மருந்து கலவை வீதம் மரத்தைச் சுற்றி ஊற்றி பியூசேரியம் வாடல் நோயைக் கட்டுப்படுத்தலாம்

தினமணி தகவல் – பாப்பாக்குடி தோட்டக்கலை உதவி இயக்குநர் நா. பாலகிருஷ்ணன்

ஜீரோ பட்ஜெட்டில் ஜொலிக்கும் ஒருங்கிணைந்தப் பண்ணையம்!

ஒருங்கிணைந்த பண்ணையம் ஆர்வமூட்டும் ஒரு சமாச்சாரம். ஒன்றை ஒன்றை சார்ந்து இயங்குவது இதன் சிறப்பம்சம். அதில் ஜீரோ பட்ஜெட் இணையும்போது இதன் திறன் அதிகமாகிறது. ஒன்றை ஒன்று சார்ந்து இயங்கும் பசுமை விகடன் கட்டுரைகளை ஏற்கனவே பிரசுரித்திருந்தோம். இது இன்னொன்று.

பத்து ஏக்கர்… இருபது ஏக்கர் என்று இருந்தாத்தான் வருமானம் பார்க்க முடியும்கறதில்ல. முறையா திட்டமிட்டா… மூணரை ஏக்கர்ல இருந்தே முத்தான வருமானத்தைப் பாக்கலாம். என்னோட பண்ணையே அதுக்கு சரியான உதாரணம்” என்று தெம்போடு சொல்கிறார் தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் அருகே உள்ள திருபுவனம் பகுதியைச் சேர்ந்த மகாலிங்கம்.

இரண்டு ஏக்கரில் நெல், உளுந்து, எள் சாகுபடி; அரை ஏக்கரில் மீன்குளம் கரையில் வாழை, தென்னை, தேக்கு, தீவனப்புல், பரங்கி, கீரை, காய்கறி நாற்றுகள்; இன்னொரு அரை ஏக்கரில் நெல்லியும் அதற்கு ஊடுபயிராக கீரை, வெண்டை, மிளகாய், கத்திரி, உளுந்து என ஜீரோ பட்ஜெட் முறையில் அசத்தலாக சாகுபடி செய்து வருகிறார் மகாலிங்கம்!

”இது காவிரிப் பாசனப் பகுதி. ஆத்துல தண்ணி இல்லாத காலங்கள்ல போர்வெல்லை பயன்படுத்துவோம். மூணரை ஏக்கர்ல இந்தப் பண்ணை அமைஞ்சிருக்கு. ஆறடி வரைக்கும் களிமண்ணும், அதுக்கு கீழே நீரோட்ட மணலும் உள்ள பகுதி. ஜீரோ பட்ஜெட் முறையில ஒருங்கிணைந்தப் பண்ணயத்தைத் தொடங்கி, மூணு வருஷம் முடிஞ்சிடுச்சி. இங்க இயற்கை இடுபொருட்களைக்கூட அதிகம் பயன்படுத்துறதில்ல. ஆனாலும், வளர்ச்சி அபாரமா இருக்கு. இதுவரைக்கும் பூச்சி, நோய்த் தாக்குதலே ஏற்படல.

சாணத்துக்காகவும், பாலுக்காகவும் ரெண்டு எருமைகள வெச்சிருக்கேன். இப்போதைக்கு வாழை, கீரை, காய்கறிகள், நெல், உளுந்து, மீன், பால் மூலமா வருமானம் வந்துக்கிட்டு இருக்கு. நெல்லியும், மாவும் இப்பத்தான் காய்ப்புக்கு வந்திருக்கு. தென்னை இனிமேதான் காய்ப்புக்கு வரும். ஆனா, எல்லாமே நல்ல வளர்ச்சியில இருக்கு” என்று மகிழ்ச்சியோடு சொன்ன மகாலிங்கம், தொடர்ந்தார்.

”மூணு வருஷத்துக்கு முன்ன வரைக்கும் நெல்லையும், கரும்பையும் ரசாயன முறையிலதான் சாகுபடி செஞ்சுக்கிட்டு இருந்தேன். ‘பசுமை விகடன்’ படிக்க ஆரம்பிச்ச பிறகுதான், இயற்கை விவசாயத்தைப் பத்தி புரிஞ்சது. உடனே, ‘இந்த மூணரை ஏக்கர் நிலத்தையும் ஜீரோ பட்ஜெட் முறையில ஒருங்கிணைந்தப் பண்ணையமா மாத்தணும்’னு முடிவெடுத்தேன். இதைச் சொன்னதும் தோட்டக்கலைத்துறை அதிகாரிகள், ‘ரசாயன உரம், பூச்சிமருந்து பயன்படுத்தலைனா… தோட்டக்கலைப் பயிர்கள் தாக்குப் பிடிக்காது. குறிப்பா, நெல்லிக்கு அது ரெண்டும் அவசியம்’னு சொன்னாங்க.

நான் அதுக்கெல்லாம் அசராம, இயற்கை விவசாயத்துல இறங்கிட்டேன். ரெண்டு ஏக்கர்ல சுழற்சி முறையில சீரகச் சம்பா, உளுந்து, எள், அதிசயப் பொன்னினு சாகுபடி செய்றேன். அரை ஏக்கர்ல நெல்லியை நட்டு, இடையில காய்கறிகளையும், இன்னொரு அரை ஏக்கர்ல மீன்குளம் வெட்டி, மீனையும், குளத்தோட கரையில தென்னை, வாழை, தேக்கு, தீவனப்புல், கீரை, உளுந்து, காய்கறி நாத்துகளையும் உற்பத்தி செய்றேன்” என்றவர், ஒருங்கிணைந்தப் பண்ணையத்துக்கான சாகுபடிப் பாடத்தை நடத்த ஆரம்பித்தார்.

நெல், உளுந்து, எள்!

சீரகச் சம்பா ரகம் 120 நாள் வயது கொண்ட பயிர். இதைச் சம்பா பருவத்தில், அதாவது, செப்டம்பர் இரண்டாவது வாரத்தில் நடவு செய்யலாம். இரண்டு சால் உழவு ஓட்டி, ஏக்கருக்கு நான்கு டன் தொழுவுரம், அரை டன் சாம்பல் போட்டு, மறுபடியும் ஒரு சால் உழவு ஓட்டி, சீரகச் சம்பா நாற்றுகளை சாதாரண முறையில் நடவு செய்ய வேண்டும். ஒரு நாள் விட்டு ஒரு நாள் பாசனத் தண்ணீருடன் 5 லிட்டர் ஜீவாமிர்தக் கரைசலைக் கலந்துவிட வேண்டும். 20-ம் நாள் களையெடுக்க வேண்டும். 120-ம் நாளில் நெல் அறுவடைக்கு வரும். அறுவடைக்கு 10 நாட்களுக்கு முன்னதாக, ஏக்கருக்கு 10 கிலோ உளுந்து விதைகளை வயலில் தெளிக்கவேண்டும். நெல் அறுவடை முடிந்த 70 நாட்களில், அதாவது மார்ச் மாதக் கடைசியில் உளுந்து அறுவடை செய்யலாம்.

அதன் பிறகு, நிலத்தை நன்றாக உழுது, ஏக்கருக்கு இரண்டு கிலோ எள் விதையைத் தெளிக்க வேண்டும். விதைத்ததில் இருந்து 80-ம் நாள் எள் அறுவடை செய்யலாம். அதன் பிறகு, கோடை சாகுபடி போல அதிசயப் பொன்னியை விதைக்கலாம். சீரகச் சம்பா நெல்லுக்கு செய்தது போலவே இதற்கும் நிலத் தயாரிப்பு உள்ளிட்ட அனைத்துப் பராமரிப்புகளையும் செய்ய வேண்டும். இதன் அறுவடை முடிந்த உடனே, மறுபடியும் சீரகச் சம்பாவுக்கான பணிகளைத் துவக்க வேண்டும். இப்படி சுழற்சி முறையில் செய்துகொண்டே இருக்கலாம்.

நெல்லியும்… ஊடுபயிர்களும்!

நான்கு சால் உழவு ஓட்டி, மண்ணை, பொலபொலப்பாக்கிக் கொள்ள வேண்டும். 15 அடி இடைவெளியில் இரண்டு அடி நீள, அகல, ஆழத்தில் குழியெடுத்து, ஒவ்வொரு குழிக்கும் 5 கிலோ தொழுவுரம், கால் கிலோ வேப்பம் பிண்ணாக்கு போட்டு, நெல்லிக் கன்றை நடவு செய்து, உடனே தண்ணீர் கொடுக்க வேண்டும். ஏக்கருக்கு 200 கன்றுகள் தேவைப்படும் (இவர் அரை ஏக்கரில் 100 கன்றுகளை நடவு செய்துள்ளார்). ஒரு மாதம் வரை 3 நாட்களுக்கு ஒரு முறையும், பிறகு… காய்ச்சலுக்கு ஏற்ப 10 நாட்களுக்கு ஒரு முறையும் பாசனம் செய்ய வேண்டும். ஆண்டுக்கொரு முறை கவாத்து செய்ய வேண்டும். நடவு செய்த மூன்றாவது ஆண்டு ஆரம்பிக்கும்போது மகசூல் கிடைக்கும். படிப்படியாக அதிகரித்து, ஆறாவது ஆண்டு முதல் மரத்துக்கு 100 கிலோ வரை கிடைக்கும். (இவர் நெல்லி கன்றுகள் நடவு செய்து மூன்று ஆண்டுகள் ஆகின்றன. இந்த ஆண்டு முதல்தான் காய்ப்புக்கு வரும்).

இரண்டு நெல்லி வரிசைக்கு இடையில், 9 அடி அகலம், ஒன்றரையடி உயரம், 50 அடி நீளத்தில் பாத்திகளை அமைத்து, ஒவ்வொரு பாத்தியிலும் கீரை, காய்கறி போன்றவற்றைச் சாகுபடி செய்யலாம். இப்படித் திட்டமிட்டுப் பயிர் செய்தால், வேலையாட்களை அதிகமாக எதிர்பார்க்கத் தேவையில்லை. விற்பனையிலும் சிரமம் இருக்காது.

மீனுக்கு அமுதக்கரைசல்!

ஒரு ஏக்கர் நிலத்தில் மையமாக குளம் வெட்ட வேண்டும். குளத்தில் தண்ணீர் நிற்கும் பரப்பு அரை ஏக்கருக்குக் குறையாமல் இருக்குமாறு, பார்த்துக் கொள்ள வேண்டும். குளம் வெட்டும்போது கிடைக்கும் மண்ணை வைத்து, சுற்றி கரை அமைத்துக் கொள்ள வேண்டும். ஐந்தடி ஆழத்தில் குளம் வெட்டி, அதில் 10 கிலோ சுண்ணாம்பு ஊற வைத்த தண்ணீருடன், 200 கிராம் மஞ்சள் தூளைக் கலந்து தெளித்து, ஒரு வாரத்துக்குக் குளத்தைக் காயவிட வேண்டும். குளத்தில் ஏதேனும் நச்சுக்கிருமிகள் இருந்தால், அவற்றை மஞ்சள் செயலிழக்க செய்துவிடும்.

குளம் நன்றாக காய்ந்த பிறகு, மூன்றடி உயரத்துக்கு தண்ணீர் கட்ட வேண்டும். பிறகு… ரோகு, கட்லா, மிர்கால், புல்கெண்டை வகைகளில் தலா 100 கிராம் எடையுள்ள 1,000 மீன்குஞ்சுகளை விட வேண்டும். தீவனமாக 10 கிலோ அரிசித் தவிடையும்,

2 கிலோ கோதுமைத் தவிடையும் கலந்து, தினமும் கொடுக்க வேண்டும். மீன்கள் சாப்பிடுவதைப் பொறுத்து, அளவைக் கூட்டியும் குறைத்தும் கொடுக்கலாம். மூன்று நாட்களுக்கு ஒரு முறை தீவனப்புல்லைப் போட வேண்டும். வாரம் ஒரு முறை, 10 கிலோ பசுஞ்சாணத்தையும், பத்து நாட்களுக்கு ஒரு முறை 10 லிட்டர் அமுதக்கரைசலையும், தண்ணீரில் கலந்துவிட வேண்டும். ஆறு மாதத்தில் மீன்கள் முக்கால் கிலோ எடையில் இருக்கும். அப்போது விற்பனை செய்யலாம்.

தென்னை கரையானை அரிக்கும் உப்பு!

குளக்கரையின் வெளி விளிம்பில் 10 அடி இடைவெளியில், மூன்றடி நீள, அகல, ஆழத்தில் குழியெடுத்து வரிசையாக தென்னங்கன்று நடவேண்டும். இவற்றைக் கரையான் அரிக்காமல் தடுக்க, நடவுக்கு முன்பாக ஒவ்வொரு குழியிலும் 100 கிராம் சாதாரண கல்உப்பு, குளத்துமண் ஆகியவற்றைப் போட்டு, தென்னங்கன்றுகளை நடவேண்டும். உடனடியாக உயிர்த் தண்ணீர் தர வேண்டும். பிறகு, தேவைக்கு ஏற்ப தண்ணீர் கொடுக்க வேண்டும். தென்னைக்கு இடையிலும், ஒரு அடி தள்ளியும் வரிசையாக தீவனப்புல்லை நடவு செய்யலாம். இதன் மூலம் இரண்டு மாடுகளுக்கு போதுமான பசுந்தீவனம் கிடைக்கும்.

வாழைக்கு இடையில் தேக்கு!

குளத்துக் கரையின் உள் விளிம்பில் 10 அடி இடைவெளியில் வரிசையாக ஒரு அடி நீள, அகல, ஆழத்தில் குழியெடுத்து, வாழையை நடவு செய்யலாம். அரை ஏக்கர் குளத்தின் கரையில் 100 கன்றுகள் வரை நடலாம். வாழை இலைகளை அவ்வப்போது, நறுக்கி குளத்தில் போட்டால், மீன்களின் வளர்ச்சி நன்றாக இருக்கும்.

இரண்டு வாழைக்கு இடையில் அரை அடி நீள, அகல, ஆழத்தில் குழியெடுத்து, ஒரு தேக்குக் கன்றை நடவேண்டும். கரையின் நடுப்பகுதியில 10 அடிக்கு 10 அடியில் பாத்திகளை அமைத்து அதில் கீரை விதைக்கலாம். மிளகாய், கத்திரி நாற்றுகளை சொந்தத் தேவைக்கு உற்பத்தி செய்யலாம்.

மழைக் காலங்களில் கரையில் காய்கறி நாற்று உற்பத்தி செய்யமுடியாது. அப்போது கரை முழுவதும் காலியாகத்தான் இருக்கும். அந்த இடங்களில் உளுந்து விதையை ஊன்றிவிட வேண்டும். இதைத் தவிர, கரையின் ஏதாவது இரண்டு மூலைகளில் ஒரு அடி நீள, அகல, ஆழத்தில் குழியெடுத்து, ஒவ்வொரு குழியிலும் மூன்று கிலோ தொழுவுரத்தைப் போட்டு, மண்ணால் நிரப்பி, குழிக்கு மூன்று பரங்கி விதைகளை ஊன்றினால்… குறைந்தபட்சம் 50 காய்கள் கிடைக்கும்.’

இரண்டு ஏக்கரில் 1,80,000

சாகுபடி பாடம் முடித்த மகாலிங்கம், வரும்படி பற்றி பேசத் தொடங்கினார்.

”நெல்லுக்கு ஜீவாமிர்தம் கொடுக்கறதால முளைப்புத் திறன் நல்லா இருக்கு. ரெண்டு ஏக்கருக்கும் சேர்த்து 3,600 கிலோ சீரகச் சம்பா நெல்லு, கிடைக்குது. இதுல 2,000 கிலோ நெல்லை விதைநெல்லா விற்பனை செய்றேன். கிலோ 50 ரூபாய்னு விக்கிறது மூலமா ஒரு லட்ச ரூபாய் கிடைக்குது. மீதியுள்ள நெல்லை சொந்தத் தேவைக்காக வெச்சுக்குறேன். இதோட மதிப்பு 17 ஆயிரம் ரூபாய். அதிசயப் பொன்னி

3,600 கிலோ மகசூல் கிடைக்கும். கிலோ 11 ரூபாய் வீதம் விலைக்குக் கொடுக்கிறேன். இதுல 39,600 ரூபாய் கிடைக்கும்.

உளுந்து 300 கிலோ கிடைக்கும். அதை விதைக்காக வேளாண்துறையிலயே கிலோ 56 ரூபாய்னு வாங்கிக்கறாங்க. இதன் மூலமா 16,800 ரூபாய் கிடைக்கும். எள் 300 கிலோ கிடைக்கும். இதுல 200 கிலோ எள்ளை 40 ரூபாய்னு வித்துடுவேன். இதன் மூலமா 8,000 ரூபாய் கிடைக்கும். மீதி 100 கிலோ எள்ளை எண்ணெயா ஆட்டுவேன். 60 லிட்டர் எண்ணெயும்,

40 கிலோ புண்ணாக்கும் கிடைக்கும். எண்ணெயை வீட்டுத் தேவைக்கும், புண்ணாக்கை மாடுகளுக்கும் வெச்சுக்குவேன்.

ஆக, மொத்தத்துல ரெண்டு ஏக்கர்ல நெல், உளுந்து, எள் மூலமா வருஷத்துக்கு, ஒரு லட்சத்து 80 ஆயிரம் ரூபாய்க்குக் குறையாம வருமானம் கிடைக்கும்.

ஊடுபயிர் மூலம் 10,000

நெல்லி இந்த வருஷம்தான் மகசூல் கொடுக்கும். ஆனா, அதுக்கு இடையில இருக்கற ஊடுபயிர் மூலமா முன்கூட்டியே வருமானம் கிடைக்கும். காய்கறி 6,500 ரூபாய், கீரை 1,500 ரூபாய், உளுந்து 2,000 ரூபாய்னு மொத்தம் 10 ஆயிரம் ரூபாய் கிடைக்குது.

அரை ஏக்கரில் 60,000

அரை ஏக்கர் குளத்துல, ஆறு மாசத்துல 500 கிலோ மீன் கிடைக்கும். கிலோ நூறு ரூபாய்னு விற்பனை செய்றேன். இப்படி வருஷத்துக்கு ரெண்டு தடவை விற்பனை செய்றதன் மூலமா 1 லட்ச ரூபாய் கிடைக்கும். எல்லாச் செலவும் போக, 60 ஆயிரம் ரூபாய் லாபமா கிடைக்குது.

குளக்கரை சாகுபடியைப் பொறுத்தவரை, உளுந்து 2,000 ரூபாய், பரங்கிக்காய் 3,000 ரூபாய், வாழை (நூறு தார்கள்) 7,500 ரூபாய்னு கிடைக்கும். ஆக, மீன் குளம், அதோட கரைனு மொத்தமா பார்த்தா… 1,12,500 ரூபாய் வருமானமா கிடைக்கும்

பால் 45,000

ரெண்டு எருமை மூலமா வருஷம் முழுக்க  சராசரியா 7 லிட்டர் பால் கிடைக்கும். ஒரு லிட்டர் 20 ரூபாய்னு விற்பனை பண்றேன். தினமும் ஒரு மாட்டுக்கு ஒரு கிலோ நெல் தவிடு, கால் கிலோ எள்ளுப் புண்ணாக்கு, அரை கிலோ கோதுமை தவிடும் கலந்து அடர்தீவனமா கொடுக்குறேன். கோதுமைத் தவிடை மட்டுந்தான் வெளியில காசு கொடுத்து வாங்குறேன். ரெண்டு எருமைக்கும் சேர்த்து ஒரு நாளைக்கு

15 ரூபாய்தான் செலவாகுது. ஒரு வருஷத்துல பால் மூலமா மட்டுமே 45 ஆயிரம் ரூபாய்க்குக் குறையாம கிடைக்கும்” என்று விலாவாரியாகச் சொன்னவர்,

”நெல்லி வருமானம் இந்த வருஷம்தான் வர ஆரம்பிக்கும். மரத்துக்கு 100 கிலோ வீதம்,

100 மரத்துக்கு 10 ஆயிரம் கிலோ நெல்லி கிடைக்கும். கிலோவுக்கு சராசரியா 15 ரூபாய் விலை கிடைச்சாலும்… மொத்தம் 1 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் வருமானம் கிடைக்க வாய்ப்பிருக்கு” என்று எதிர்பார்ப்போடு சொன்னார்.

படங்கள்:ந. வசந்தகுமார்
தொடர்புக்கு மகாலிங்கம்,
அலைபேசி: 93457-12260.

காப்புரிமை : Pasumai Vikatan

வளம் தரும் வாழை நார்!

வாழை மரங்களில் குலைகள் வெட்டிய பின், வாழை மட்டைகளை குப்பையாகக் கருதப்பட்டு வந்த காலம் ஒன்று.

ஆனால் குப்பையாக்கப்படும் அந்த வாழை மட்டைகளை மூலப் பொருளாகக் கொண்டு, சிறந்த வருவாய் ஈட்டும் சிறு தொழிற்சாலையையே நடத்தலாம் என்று பரிந்துரைக்கிறது வேளாண் விற்பனை மற்றும் வேளாண் வணிகத் துறை.

தமிழகத்தில் சுமார் 2.80 லட்சம் ஏக்கரில், வாழை மரங்கள் சாகுபடி செய்யப்படுகின்றன. ஒரு ஏக்கருக்கு 1,000 வாழைக் கன்றுகள் நடப்படுகிறது.
அனைத்து ரக வாழையில் இருந்தும் நார் பிரித்து எடுக்க முடியும். வாழையின் தண்டுப் பகுதியை அறுவடை செய்தபின் 48 மணி நேரத்தில் நார் பிரித்து எடுக்கப்பட வேண்டும். வாழை நாரில் இருந்து நீர்ப் பகுதி வெளியேற சூரிய வெளிச்சத்திலோ, நிழலிலோ காய வைக்க வேண்டும்.

வாழை நாரில் 62 சதவீதம் செல்லுலோஸ், 29 சதவீதம் லிக்னின், 3 சதவீதம் ஹெமி செல்லுலோஸ், 2 சதவீதம் பெக்டின், 4 சதவீதம் இதர ரசாயனங்கள் உள்ளன. வாழை நார் சணல் போல் பயன்படுத்தப்படுகிறது. சணலை விட பன்மடங்கு உறுதியானது என்றும் கண்டறியப்பட்டு இருக்கிறது. வாழை நாரில் இருந்து துணிகள் தயாரிக்கப் படுகிறது.

நாரில் தயாரிக்கப்படும் பொருள்கள்:

  • சாக்குப் பைகள்,
  • மிதியடிகள்,
  • தரை விரிப்புகள்,
  • வீட்டு அலங்கார விரிப்புகள்,
  • அலங்கார பைகள்,
  • டிஸ்யூ பேப்பர்,
  • பில்டர் பேப்பர்,
  • அலங்கார பேப்பர் போன்றவை தயாரிக்கப்படுகின்றன.

ஒரு மரத்தில் இருந்து 300 கிராம் வாழை நார் கிடைக்கும். வாழை நாரை பிரித்தெடுக்கும் இயந்திரம், வாழை அறுவடைக்கு பின்னர், வாழையின் தேவையில்லாத பகுதிகளான இலைகளின் தண்டுப்பகுதி, இலைக் காம்புப் பகுதி, வாழைத்தாரின் காம்புப் பகுதி, ஆகியவற்றில் இருந்து நாரை பிரித்தெடுக்கும் தன்மைக் கொண்டது.

இந்த இயந்திரத்தின் விலை ரூ. 40 ஆயிரம். வாழை நாரை பிரித்தெடுக்கும் இயந்திரம் மூலம் 8 முதல் 10 மணி நேரத்தில் 100 வாழை மரங்களில் இருந்து, 15 முதல் 20 கிலோ நாரைப் பிரித்து எடுக்கலாம். இந்த இயந்திரத்தை பெண்களும் எளிதில் இயக்கலாம்.

கையினால் நாரைப் பிரித்தெடுப்பதைவிட 40 சதவீதம் அதிக நார், இந்த இயந்திரம் மூலம் பிரித்தெடுக்கப்படுகிறது. இந்த இயந்திரத்தால் சுற்றுப்புறச் சூழல் பாதிக்காது.

விலை எவ்வளவு?

வாழை மட்டை நார் முதல் தரம், டன் ரூ. 70 ஆயிரம் முதல் ரூ. 80 ஆயிரம் வரையிலும், 2-ம் தரம் ரூ. 60 ஆயிரம் முதல் ரூ. 70 ஆயிரம் வரையிலும், வாழைத் தார் காம்பு நார், முதல் தரம் ரூ. 50 ஆயிரம் முதல் ரூ. 60 ஆயிரம் வரையிலும், வாழை இலைக் காம்பு நார் மற்றும் வாழை நார் கழிவு ரூ. 20 ஆயிரம் முதல் ரூ. 25 ஆயிரம் வரை விலையில் கொள்முதல் செய்யப்படுகிறது.

வாழை நார் பிரித்தெடுக்கும் தொழிலுக்கு முதலீடு இயந்திரத்துக்கான விலை ரூ. 40 ஆயிரம் மட்டுமே. வேலையாட்கள் 3 பெண்கள் போதும். நாளொன்றுக்கு 15 கிலோ நார் உற்பத்தி எனக் கணக்கிட்டால், அதன் விலை ரூ. 900. ஆள் சம்பளம், மின்சாரம் மற்றும் இயந்திரப் பராமரிப்புச் செலவுகள் நாளொன்றுக்கு ரூ. 345. நிகர வருவாய் நாளொன்றுக்கு ரூ. 655 என்றும் வேளாண் விற்பனை மற்றும் வணிகத்துறை தெரிவிக்கிறது.

வாழை நார்களை ஜெய்ப்பூரைச் சேர்ந்த பல நிறுவனங்கள் கொள்முதல் செய்கின்றன என்றும் அத்துறையின் தகவல் தெரிவிக்கிறது.

100 ஆண்டுகளுக்கு மேல் நீடித்து உழைக்கக்கூடிய ரூபாய் நோட்டுகள் வாழை நாரில் இருந்து தயாரிக்க முடியும் என்று, குஜராத் பல்கலைக்கழகம் கண்டுபிடித்து உள்ளது.

வாழை நாரில் இருந்து உயர்தர காகிதம் தயாரிக்க முடியும், சாதாரண காகிதத்தைவிட வாழைநார் காகிதம் தரத்தில் சிறந்ததாகவும் பல மடங்கு நீடித்து உழைக்கும் தன்மை கொண்டது என்றும், அப்பல்கலைக்கழக ஆய்வு தெரிவிக்கிறது.

வாழை நார் காகிதத்தை 100 ஆண்டுகளுக்கு மேல் கசங்காமல், கிழியாமல் பயன்படுத்த முடியும் என்றும், இயற்கை நார்களிலேயே அதிக வாழ்நாள் கொண்டது வாழைநார், வாழைநாரில் தயாரிக்கும் ரூபாய் நோட்டுகளை 3 ஆயிரம் முறை மடிக்க முடியும் என்றும் அந்த ஆய்வறிக்கை தெரிவிக்கிறது.

தினமணி செய்தி : 04 Aug 2011 01:56:36 AM IST

வாழைநார் திரிக்கும் கருவி

சைக்கிளில் உள்ள சக்கரத்தினைப் பயன்படுத்தி கயிறு திரிக்கும் சாதனத்தை உருவாக்கியுள்ளார் விவசாயி. இதன்மூலம் அவருக்கு சராசரியாக 15,000 மீட்டர் அளவிற்கு கயிறு உற்பத்தி செய்ய முடிந்துள்ளது. 40 கூலியாட்கள் மூலம் இரண்டு தொழில்நுட்ப கூடங்களை அமைத்தார். இன்று அவர் தமிழ்நாடு மட்டுமின்றி, கர்நாடகா, ஆந்திரா போன்ற மாநிலங்களுக்கு அவர் தயாரிக்கும் கைவினைப் பொருட்களை (வாழைநார் பைகள், கயிறு) எடுத்துச்சென்று வியாபாரம் செய்கிறார். மத்திய அரசு விவசாயியைக் கவுரவித்து 2 லட்சம் ரூபாய் நிதி வழங்கியுள்ளது என்று கூறும் விவசாயியின் தொடர்பு முகவரி:

பி.எம்.முருகேசன், மேலக்கால் கிராமம், திருமங்கலம், மதுரை. 93605 97884.

உழவர்கள் தாங்கள் கண்டுபிடிக்கும் புதிய முயற்சிகளில் ஏற்படும் சந்தேகங்கள் மற்றும் உதவிகளுக்கு உங்கள் மாவட்டத்திலுள்ள வேளாண் அறிவியல் மையத்தை தொடர்பு கொள்ளலாம். (தகவல்: உழவரின் வளரும் வேளாண்மை, 13-15, டிசம்பர் 2010)

தினமலர் செய்தி