முருங்கைக்காய் விலை "கிடுகிடு' உயர்வு

முருங்கைக்காய் விலை கிடுகிடுவென உயர்ந்துள்ளதால்  விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

  • முருங்கை பயிரிட குறைவான தண்ணீர் இருந்தால் போதுமானது. மாதக்கணக்கில் தண்ணீர் இல்லாமல் போனாலும், மரம் பட்டுப்போகாது. மழை பெய்ததும் மீண்டும் துளிர் விட்டு, பூக்கும் தன்மையுடையது.
  • இதனால் திருத்தணி மற்றும் அதைச் சுற்றியுள்ள கிராமங்களில் விவசாயிகள் முருங்கை மரங்களை அதிகம் வளர்த்து வருகின்றனர். இங்கு விளையும் முருங்கை காய்களில் 75 சதவீதம் திருத்தணி காமராஜர் மார்க்கெட்டிலேயே விற்பனையாகி விடுகிறது.
  • முருங்கைக்காய் ஆண்டு முழுவதும் காய்க்காமல் குறிப்பிட்ட சீசனில் மட்டும் அதிகம் காய்ப்பதால் சில நேரங்களில் விலை சரிவு ஏற்படுகிறது. இதை தவிர்க்க நாற்று விட்டு செடியை நடவு செய்தால் சீசன் இல்லாத நேரங்களில் காய் பிடித்து அதிக வருவாய் ஈட்டித்தரும் என வேளாண் அதிகாரிகள் கூறுகின்றனர்.
  • முருங்கைக் கீரையில் இரும்புச்சத்து அதிகம் இருப்பதால் மக்கள் இதை விரும்பிச் சாப்பிடுகின்றனர். முருங்கைக் கீரைக்கு ஆண்டு முழுவதும் கிராக்கி இருந்துகொண்டே இருக்கிறது. இதை பறித்ததும், உடனே சந்தைக்குக் கொண்டு வந்து விற்பனை செய்ய வேண்டும். காலம் கடந்தால் இலைகள் உதிரத் தொடங்கி விடும். இதனால் விவசாயிகள் பலர் முருங்கைகீரை விற்பனையில் ஆர்வம் காட்டுவதில்லை.
  • எனினும் முருங்கைகீரை விற்பனையிலும் நல்ல லாபம் பெற முடியும் என்பதே உண்மை.
  • முருங்கைக் காய்க்கு தற்போது சீசன் இல்லாததால், மொத்த உற்பத்தியில் 20 சதவீதம் மட்டுமே உற்பத்தியாகிறது. உற்பத்தி குறைவு என்பதாலும், தற்போது கல்யாண சீசன் என்பதாலும் முருங்கை காய் விலை கிடுகிடுவென விலை உயர்ந்து வருகிறது.
  • திருமண விருந்தில் சாம்பாருக்கு முருங்கைகாய் கூடுதல் சுவையைத் தரும் என்பதால் மக்கள் அதை அதிக விலை கொடுத்தும் வாங்குகின்றனர்.
  • இந்நிலையில் திருத்தணி காமராஜர் மார்க்கெட்டில் முருங்கைகாய் உள்ளூர் வரத்து மிகவும் குறைந்து விட்டதால், வியாபாரிகள் பிற பகுதிகளில் இருந்து கொண்டு வந்து இங்கு விற்பனை செய்கின்றனர்.
  • தற்போது மார்க்கெட்டில் நெட்டை ரகம் 20 காய் கொண்ட ஒரு கட்டு 75 ரூபாய்க்கும், குட்டை ரகம் 50 ரூபாய்க்கும் விற்பனையாகிறது.
  • தேங்காய் விலைக்கு இணையாக முருங்கைகாய் விற்பனையாவதால், முருங்கை பயிர் செய்த  விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.