மிளகாய் – உயர் விளைச்சல் வேண்டுமா?

மிளகாய்ச் சாகுபடியில் உயர் விளைச்சல் பெற சரியான ரகங்களைத் தேர்வு செய்ய வேண்டும்.

 • கோ-1,
 • கோ-2,
 • கே-1,
 • கே-2,
 • எம்.டி.யு.-1,
 • பி.கே.எம்.-1,
 • பாலூர்-1

ஆகிய ரகங்களைத் தேர்வு செய்யலாம்.

Bird Chillis

விதை நேர்த்தி

ஒரு கிலோ விதைக்கு திரம் அல்லது காப்டான் 2 கிராம் என்ற அளவில் விதைகளுடன் கலந்து 24 மணி நேரம் வைத்திருந்து பின்னர் விதைக்க வேண்டும். மேலும், அசோஸ்பைரில்லம் 400 கிராம் கலந்து விதை நேர்த்தி செய்வதால் தழைச்சத்தின் தேவையை 25 சதம் வரை குறைக்கலாம்.

குழித்தட்டு முறையில் நாற்றங்கால் மூலம் நல்ல தரமான நாற்றுகளைப் பெறலாம். நோய், பூச்சி தாக்குதல் இல்லாத நாற்றுகளைப் பெறுவதற்கும் சிறந்த வழியாக இருக்கும். அடியுரமாக தொழு உரம் 25 டன், யூரியா 30 கிலோ, சூப்பர் பாஸ்பேட் 60 கிலோ, மூரியேட் ஆப் பொட்டாஷ் 20 கிலோ இட வேண்டும். மேல் உரமாக 30 கிலோ யூரியாவை முறையே 30, 60, 90ஆவது நாள்களில் இட வேண்டும்.

green Chilli

பயிர் ஊக்கிகள்

பூக்கள், பிஞ்சுகள் உதிர்வதைத் தடுக்கவும், பூக்கள் விடுவதைத் தூண்டவும், நட்ட 60 அல்லது விதைத்த 100-ஆவது நாளில் ஒரு முறையும், மேலும் 30 நாள்களுக்குப் பிறகு ஒரு முறையும் ஒரு லிட்டர் தண்ணீரில் டிரையகான்டினால் (1.25 மி.லி.) கலந்து தெளிக்க வேண்டும். சாறு உறிஞ்சும் பூச்சிகளைக் கட்டுப்படுத்த நட்ட 15ஆம் நாள் முதல் ஒரு லிட்டர் தண்ணீரில் மீத்தைல் டெமான் (2 மி.லி.) கலந்து 15 நாள் இடைவெளியில் தெளிக்க வேண்டும். சாம்பல் நோயைக் கட்டுப்படுத்த ஒரு லிட்டர் தண்ணீரில் நனையும் கந்தகம் 2 கிராம் கலந்து தெளிக்க வேண்டும்.

காய் அழுகல் நோயைக் கட்டுப்படுத்த டைத்தேன் எம் 45 என்ற மருந்தை ஒரு லிட்டர் தண்ணீரில் 2 கிராம் அளவில் கலந்து தெளிக்க வேண்டும்.

இதன் மூலம் மிளகாயில் உயர் விளைச்சலும், கூடுதல் லாபமும் பெறலாம்.

logo.png

மிளகாய் சாகுபடி தொழில்நுட்பங்கள்

மானாவாரி கரிசல் நிலங்களில் சாகுபடி செய்யப்படும் பயிர்களில் மிளகாய் முக்கியப் பயிராகும்.

ஆந்திரம், கர்நாடகம் ஆகிய மாநிலங்களில் அதிக பரப்பளவில் மானாவாரியாக சாகுபடியாகிறது. இதில் சம்பா ரகங்களை விட மானாவாரி ரகங்களே அதிகம்.

மானாவாரி மிளகாய் சாகுபடியில் ஆரம்ப கால விதை முளைத்தல், இளம் செடிகளின் வளர்ச்சி ஆகியனவற்றில் ஏற்படும் பிரச்னைகள் மற்றும் மானாவாரி நாற்றங்காலில் ஏற்படும் பயிர் இழப்பு ஆகியவையும் முக்கியப் பிரச்னைகளாகும்.

ராமநாதபுரம் மாவட்டத்தில் மானாவாரி பயிராக சுமார் 2400 ஹெக்டேர் பரப்பளவில் மிளகாய் சாகுபடி செய்யப்படுகிறது.

ரகங்களைப் பொருத்தவரை கே1,கே2 போன்ற உயர் விளைச்சல் சம்பா ரகங்களும், நாட்டு முண்டு ரகங்களும், வீரிய ஒட்டு ரகங்களும் பயிரிடப்படுகின்றன. செப்டம்பர், அக்டோபர் மாதங்கள் இதன் பருவமாகும். மண் நல்ல வடிகால் வசதியுடன் கூடிய இருமண்பாடு கொண்ட 6.5-7.5 வரை கார அமிலத்தன்மை உள்ள நிலம் மிளகாய்க்கு ஏற்றது.

ஏக்கருக்கு விதை அளவு 400 கிராம் போதுமானதாகும். 2 கிலோ அசோஸ்பைரில்லம் அல்லது சூடோமோனாஸ் நுண்ணுயிர் உரத்தை 20 கிலோ தொழு உரத்துடன் கலந்து விதைத்த பின் நிலத்தில் போதுமான ஈரம் இருக்கும் போது தூவ வேண்டும். அடியுரமாக ஏக்கருக்கு 10 டன் தொழு உரம், 52 கிலோ யூரியா, 75 கிலோ சூப்பர் பாஸ்பேட், 32 கிலோ பொட்டாஷ் ஆகியன இட வேண்டும்.

நன்கு பொடிபட உழுது தயார் செய்யப்பட்ட நிலங்களில் புழுதியில் விதைகளை கைவிதைப்பாக வரிசையில் பருவ மழைக்கு முன்னர் விதைக்க வேண்டும். மேலும், நடவு சாகுபடி முறையில் சிபாரிசு செய்யப்படும் உர அளவில் பாதி மட்டுமே மானாவாரி மிளகாய்க்கு இட வேண்டும்.

பயிர் முளைத்து 45ஆம் நாள் களை எடுக்கும்போது மேலுரமாக 43 கிலோ யூரியா இட வேண்டும். மேலுரம் இடும்போது மண்ணில் போதுமான அளவு ஈரம் இருக்க வேண்டும்.

பயிர் முளைத்த 30 ஆம் நாள் களை எடுக்க வேண்டும். பூக்கள் கொட்டுவதைக் குறைக்கவும், பிஞ்சுகள் உதிர்வதைத் தவிர்க்கவும், பயிர் முளைத்த 90 மற்றும் 120 ஆம் நாளில் பிளானோபிக்ஸ் வளர்ச்சி ஊக்கி மருந்தை 4.5 லிட்டர் நீருக்கு 1. மி.லி. என்ற விகிதத்தில் கலந்து பூக்கள் மற்றும் பிஞ்சுகள் மேல் படும்படி தெளிக்க வேண்டும். வளர்ச்சி ஊக்க மருந்துடன் கலக்கும் நீர் உப்பு நீராக இருக்கக் கூடாது. நிலத்தில் போதுமான ஈரம் இருக்க வேண்டும்.

களை நிர்வாகத்தைப் பொருத்தவரை மிளகாய் விதை விதைத்து முதல் மழை கிடைத்தவுடன் ஹெக்டேருக்கு 1.0 லிட்டர் ப்ளுக்ளோரலின் அல்லது 3.3லிட்டர் பெண்டிமித்தலின் ஆகியனவற்றில் ஏதேனும் ஒன்றை 500 லிட்டர் நீரில் கலந்து முளைக்கும் முன் இடவேண்டிய களைக்கொல்லியாகத் தெளிக்க வேண்டும்.

பூச்சிகளின் வகைகள்

இலைப்பேன்:

இவை இலையைச் சுருட்டி சாற்றை உறிஞ்சி விடும். இவற்றை கட்டுப்படுத்த

ஏக்கருக்கு மீத்தைல் டெமட்டான் 200 மி.லி. தெளிக்கலாம்.

அசுவினி:

இவை கூட்டமாக இலையின் மேல் குருத்துக்களில் பூ மொட்டுகளில் மற்றும் காய்களில் காணப்படும். அசுவினியைக் கட்டுப்படுத்த ஏக்கருக்கு அசிப்பேட் 200 கிராம் அல்லது மாலத்தியான் 200 மி.லி. தெளிக்கலாம்.

காய்ப் புழு:

புரடீனியா மற்றும் பச்சைக் காய்ப் புழுக்கள் இலைகளையும், காய்களையும் தின்று பெரும் சேதத்தை ஏற்படுத்துகின்றன. இவற்றைக் கட்டுப்படுத்திட ஆமணக்குச் செடியை வரப்பு ஓரத்தில் பொறிப் பயிராக விளைவித்து புரடீனியா பூச்சியின் முட்டைக் குவியல்களைக் கவர்ந்து அழிக்கலாம்.

வேப்ப எண்ணெய் 3 சதம் அல்லது வேப்பங்கொட்டைச் சாறு 5 சதத்தை சோப்பு போன்ற ஒட்டும் திரவத்துடன் கலந்து தெளிக்கவும். பூச்சியின் தாக்குதல் பொருளாதார சேத நிலையைத் தாண்டும் பட்சத்தில் கீழே குறிப்பிடும் ரசாயனப் பூச்சி மருந்துக் கொல்லி மருந்துகளில் ஏதேனும் ஒன்றைத் தெளிக்கவும்.

மிளகாய் மொசை நோய்:

அசுவினியைக் கட்டுப்படுத்த வேண்டும். அசுவினி இலைப்பேனைக்

கட்டுப்படுத்திட மெதில் டெம்ட்டான் 25 மி.லி. மருந்தை ஒரு லிட்டர் நீரில் கலந்து மூன்று முறை 15 நாட்கள் இடைவெளியில் தெளிக்க வேண்டும். மகசூலைப் பொருத்தவரை 210-240 நாட்களில் ஹெக்டேருக்கு 10-15 டன் பச்சை காய்களும், 2-3 டன் காய்ந்த மிளகாய் வற்றல் மகசூலாகக் கிடைக்கும்.

அறுவடை பின்செய் நேர்த்தி முறைகள்:

மிளகாய் தோட்டத்தில் பழம் அழுகல் நோயை பூஞ்சாளக் கொல்லிகள் தெளித்து கட்டுப்படுத்திட வேண்டும். காய்கள், ஹிலியாத்திஸ் புரடீனியா புழுக்களால் தாக்கப்பட்டால் ஒருங்கிணைந்த பயிர் பாதுகாப்பு முறைகள் மேற்கொள்ள வேண்டும்.

பொட்டாஷ் உரமிடுவதால் காய்களின் நிறமும், காரத்தன்மையும் அதிகரிக்கிறது. மிளகாய் செடியில் பழங்கள் முழுவதும் சிவப்பு நிறமாக மாறியவுடன் பழங்களைப் பறிக்கலாம். மிளகாய்ப் பழங்களை காம்புடன் பறிக்க வேண்டும்.

பழங்களைப் பறித்த அன்றே காயப் போட வேண்டும். மணல் பரப்பிய கலங்களில் பழங்களைப் பரப்பி உலர விட வேண்டும். மிதமான வெப்பநிலை உள்ள காலையிலும், மாலையிலும் 4 நாட்கள் உலர விட வேண்டும். நன்கு உலர்த்திய மிளகாய் வற்றலில் இருந்து காய்ப் புழு தாக்கிய மற்றும் பழம் அழுகல் நோய் தாக்கிய, நிறம் மாறிய சண்டு வற்றல் மேலும் உடைந்த மிளகாய் வற்றலை நீக்கி நல்ல வற்றலைப் பிரித்து எடுக்க வேண்டும்.

அறையின் ஈரம் மிளகாய் பழங்களைத் தாக்காமல் இருக்க தரையின் மேல் மணல் பரப்பி அதன் மேல் சேமிக்க வேண்டும். இரவில் மிளகாய்ப் பழங்கள் பனியால் பாதிக்கப்படாமல் இருக்க பழங்கள் மீது லேசான படுதா போட்டு மூடி வைக்கலாம்.

நல்ல நிறத்துடன் நீர் தெளிக்கப்படாமலும் காரல் வாடை இல்லாத வற்றல் மிளகாய் நல்ல குணத்துடன் நீண்டநாள் கெடாமலும் இருக்கும்.

தினமணி செய்தி – ராமநாதபுரம் தோட்டக் கலைத் துறை உதவி இயக்குநர் இளங்கோவன்

மிளகாய் சாகுபடி

நல்ல வடிகால் வசதியுடைய நிலங்கள் மிளகாய் பயிரிட ஏற்றவை. கடல்மட்டத்திலிருந்து 2000 மீட்டர் உயரம் வரை உள்ள வெப்பப் பிரதேசங்களில் மிளகாய் நன்கு வளரும்.

 • ஜனவரி -பிப்ரவரி,
 • ஜூன்-ஜூலை,
 • செப்டம்பர் ஏற்ற பருவங்கள்.

ஒரு ஏக்கருக்கு 400 கிராம் (20,000 நாற்றுகள்) விதை தேவைப்படும்.

மானாவாரி மற்றும் இறவையில் பயிரிட ஏற்றது. கோ.1, கோ.2, கோ3, பிகேஎம்1, மேலும் சாத்தூர் சம்பா, ராமநாதபுரம் குண்டு, நம்பியூர் குண்டு ஆகிய நாட்டு வகைகளும் அந்தந்த பகுதிகளில் பயிர் செய்யப்படுகின்றன.

விதைப்பு

ஒரு கிலோ விதைக்கு காப்டான் அல்லது திராம் 2 அல்லது டிரைகோடெர்மா விரிடி 4 கிராம் வீதம் கலந்து 24 மணி நேரம் வைத்திருந்து விதைக்க வேண்டும். அசோஸ் பைரில்லம் நுண்ணுயிரியை எக்டருக்கு 2 பொட்டலம் வீதம் விதைநேர்த்தி செய்வதால் தழைச்சத்தின் தேவையினை 25 விழுக்காடு அளவுக்கு குறைக்கலாம்.

நாற்றங்கால்:

 • நாற்றங்காலுக்கு மேட்டுப்பாத்திகள் 1 மீட்டர் அகலம், 3 மீ. நீளம், 15 செ.மீ. உயரம் கொண்டதாக இருக்க வேண்டும். ஒரு சென்ட் நாற்றங்காலுக்கு மக்கிய தொழு உரம் 75 கிலோ இடவேண்டும். பாத்திகளில் விதைகளை 2 செ.மீ. ஆழத்தில் 5-10 செ.மீ. இடைவெளியில் வரிசையில் விதைத்தபிறகு வைக்கோல் அல்லது உலர்ந்த இலைகளைப் பாத்திகளின் மேல் பரப்பி, பூவாளியால் தண்ணீர் ஊற்றவும்.
 • விதைத்த 10-15 நாட்களில் பாத்திகளில் பரப்பியதை அகற்றிவிட வேண்டும்.
 • நாற்றங்காலில் வேர் அழுகல் நோயைக் கட்டுப்படுத்த 15 நாட்கள் இடைவெளியில் புளூகாப்பர் 2.5 கிராம் மருந்தை 1 லிட்டர் நீரில் கலந்து ஊற்ற வேண்டும்.
 • நடவுக்காக நாற்று பிடுங்குவதற்கு 15 நாட்களுக்கு முன் ஒரு சென்ட் நாற்றங்காலுக்கு 250 கிராம் பியூரடான் குருணைகளை இடுவது நூற்புழு மற்றும் இளம் பயிரில் சாறு உறிஞ்சும் பூச்சிகளைக் கட்டுப்படுத்த உதவும்.
 • நடுவதற்கு 40 முதல் 44 நாட்கள் வயதுடைய நாற்றுகளே ஏற்றவை. நேரடியாக விதைக்கப்பட்ட பாத்திகளில் விதைத்த 30 நாட்களுக்குப் பிறகு தேவையான பயிர் எண்ணிக்கை இருக்குமாறு கலைத்து இடைநிறைவு செய்வது அவசியம்.

உழவு:

நிலத்தை 4 முறை உழுது, கடைசி உழவின்போது எக்டருக்கு 25 டன் தொழு எரு அல்லது மக்குகுப்பை இட்டு 45 செ.மீ. இடைவெளியில் பார்கள் அமைத்து, பயிருக்கு பயிர் 30 செ.மீ. இடைவெளியில் நடவேண்டும். கோ 3 வகைகளுக்கு 30 து 15 செ.மீ. இடைவெளி யில் நடவு செய்ய வேண்டும்.
அடியுரமாக எக்டருக்கு 30 கிலோ தழைச்சத்து, 30 கிலோ சாம்பல் சத்து இடவேண்டும். மானாவாரி அல்லது இறவைப்பயிர் இரண்டிற்கும் தழைச்சத்தை மூன்று முறை பிரித்து இடவேண்டும். விதைத்த 70, 100 மற்றும் 130வது நாள் நடவுப்பயிரில் நட்ட 30, 60, 90ம் நாள் ஒவ்வொரு முறையும் எக்டருக்கு 30 கிலோ வீதம் இடவேண்டும். உரம் இட்டபின் நீர் பாய்ச்ச வேண்டும்.

பயிர்பாதுகாப்பு:

பூக்கள், பிஞ்சுகள் உதிர்வதைத் தடுக்கவும், பூக்கள் விடுவதைத் தூண்டவும் நட்ட 60 அல்லது விதைத்த 100வது நாளில் ஒரு முறையும், 30 நாட்களுக்குப் பிறகு இரண்டாவது முறையும் வளர்ச்சி ஊக்கி (என்ஏஏ) 10 மில்லிகிராம் ஒரு லிட்டர் நீர் என்ற அளவில் கலந்து கைத்தெளிப்பான் மூலம் தெளிக்க வேண்டும். மேலும் டிரையகான்கைடனால் 1.25 மிலி/ லிட்டர் தண்ணீரில் கலந்து தெளிக்க வேண்டும்.

பச்சை மிளகாயை நட்ட 75 நாட்கள் அல்லது விதைத்த 105 நாட்களிலும், பழுத்த பழங்களை ஒரு மாதத்திற்குப் பின்னும் அறுவடை செய்யலாம். மேலும் 3 முதல் 4 மாதங்களுக்கு தொடர்ந்து அறுவடை செய்யலாம். முதல் இரண்டு பறிப்புகளிலிருந்து பச்சை மிளகாயும் அடுத்த பறிப்புகளிலிருந்து பழுத்த மிளகாயும் அறுவடை செய்யலாம்.

மகசூல்:

ஒரு எக்டருக்கு-210-240 நாட்களில், வற்றல்- 2-3 டன், பச்சைமிளகாய்-10-15 டன்.

——————————

தொடர்புக்கு:

அகமது கபீர், 268/77, பழைய ஹவுசிங் யூனிட், எல்லீஸ் நகர், தாராபுரம்-638 657.
மொபைல்: 93607 48542.

தினமலர் செய்தி

ஆரோக்கியமான மிளகாய் நாற்றுகளை வளர்ப்பது எப்படி?

வீரிய ஒட்டு ரக மிளகாயை பயிரிட்டாலும் ஆரோக்கியமான நாற்றுகளை உற்பத்தி செய்து நடவு செய்வதன் மூலமே நல்ல மகசூல் பெற முடியும் எனவும், அதை செயல்படுத்தும் முறை குறித்தும் வேளாண் துறையினர் யோசனை கூறியுள்ளனர்.

மேட்டுப்பாத்தி நாற்றங்கால்:

பாத்திகளை ஓரளவு நிழல்படியும் படியான இடத்தில் 10-15 செ.மீ. உயரத்தில் தயாரிக்க வேண்டும். அதன் அகலம் 1 மீட்டர், நீளம் 3 மீட்டர் வரை அமைக்கலாம். மண் மிருதுவாகவும், ஈரம் காக்கும் தன்மையுடையதாகவும் இருக்க வேண்டும். இதற்காக மண்ணின் தன்மையைப் பொறுத்து குறுமண், மணல் ஆகியவற்றை கலக்க வேண்டும்.

நன்கு பண்படுத்திய ஒரு சென்ட் நாற்றங்காலுக்கு 20 கிலோ மக்கிய தொழு உரம் அல்லது கம்போஸ்ட சேர்க்க வேண்டும். ஒரு சென்ட் நாற்றங்காலுக்கு இரண்டு கிலோ டி.ஏ.பி. உரம் இடுவதால் நாற்றுகள் ஊட்டத்துடன் வளர்கின்றன. மேலும் நாற்றுகளை பிடுங்கும் போது வேர் அறுபடாமல் இருக்கும்.

நாற்றங்காலில் நூற்புழு, இளம்பயிரில் சாறு உறிஞ்சும் பூச்சிகளை கட்டுபடுத்த ஒரு சென்ட் நாற்றங்காலுக்கு 250 கிராம் வீதம் பீயுரடான் குருணைகளை இட வேண்டும். அழுகல் நோய் வராமல் தடுக்க ஒரு சதவீதம் வீரியமுள்ள போர்டா கலவையால் மண்ணை நேர்த்தி செய்ய வேண்டும்.

மேட்டுப்பாத்தியின் மேற்பரப்பை மரப்பலகையால் சமப்படுத்த வேண்டும். அதில் 10 செ.மீ. இடைவெளியில் 1.2 செ.மீ. ஆழத்துக்கு கோடுகள் போட்டு, அந்தக் கோடுகளில் விதை நேர்த்தி செய்த விதைகளை, பரவலாக, சீரான இடைவெளியில் விதைக்க வேண்டும். அடர்த்தியாக விதைப்பது அழுகல் நோயை உண்டாக்கும்.  மேலும் நாற்றுகள் மெலிந்து காணப்படும். விதைக்கும் ஆழம் விதைகளின் விட்டத்தை விட 3-4 மடங்கு அதிகம் இருக்க வேண்டும்.

விதைகளை மணல் அல்லது நாற்றங்கால் மண் கொண்டு மூடிவிட்டு பூவாளியால் நீர் பாய்ச்ச வேண்டும். பின் வைக்கோல் அல்லது உலர்ந்த இலைகளை பாத்திகளின் மேல் பரப்ப வேண்டும்.

விதைத்து 10 முதல் 15 நாள்கள் கழித்து பாத்திகளின் மேல் பரப்பிய வைக்கோல் அல்லது இலைகளை அகற்றி விட வேண்டும். தினமும் பூவாளி கொண்டு காலை, மாலை நேரங்களில் நீர் ஊற்றுவது நாற்றுகள் நல்ல வளர்ச்சி அடைவதற்கும், விதைகள் நாற்றங்காலை விட்டு வெளியே வராமல் இருப்பதற்கும் உதவுகிறது.

நாற்றங்காலில் வேர் அழுகல் நோயை கட்டுபடுத்த பதினைந்து நாள்கள் இடைவெளியில் காப்பர் ஆக்ஸிகுளோரைடு அல்லது புளுகாப்பர் 2.5 கிராம் மருந்தை 1 லிட்டர் நீரில் கரைத்து ஊற்ற வேண்டும். நடவுக்காக நாற்று பிடுங்குவதற்கு 12 மணி நேரத்துக்கு முன்பே மேட்டுப்பாத்திகள் நன்கு மூழ்கும் அளவுக்கு நீர் பாய்ச்ச வேண்டும்.

குழித்தட்டு நாற்றங்கால்:

நாற்றுகள் நல்ல வாளிப்பாகவும் முழுமையான வேர்களுடனும் கிடைக்க “புரோடிரே’ எனப்படும் குழித்தட்டு நாற்று அட்டைகள் உதவுகின்றன. இம்முறையில் நன்கு மக்கிய தென்னை நார்க்கழிவை வளர் ஊடகமாக பயன்படுத்தி பூச்சிகள் புகாத நிழல் வலைக் கூடாரங்களில் நாற்றுக்கள் உற்பத்தி செய்யப்படுகின்றன.

இம்முறையை பயன்படுத்தி பருவமற்ற காலங்களிலும் நாற்றுகளை உற்பத்தி செய்யமுடியும். குழித்தட்டுகளில் நாற்றுகள் உற்பத்தி செய்யும் போது வழக்கமான முறையை விட விதையளவு 30-40 சதவீதம் குறைவாக தேவைப்படும். பாதுகாப்பான சூழலில் நாற்றுகள் வளர்க்கப்படுவதால் பூச்சி, நோய்களின் தாக்குதல்களை கண்காணிப்பது எளிது.

மேலும் விவரங்களை பெற அவரவர் வட்டாரங்களில் உள்ள தோட்டக்கலை மற்றும் மலைப் பயிர்கள் துறை அலுவலகத்தை அணுகலாம் என அரக்கோணம் வட்டார தோட்டக்கலை மற்றும் மலைப் பயிர்கள் துறை உதவி இயக்குநர் ஜெபக்குமாரிஅனி தெரிவித்துள்ளார்.

தினமணி தகவல் : எஸ்.சபேஷ்

திருச்சி சிறுகமணி வேளாண்மை அறிவியல் நிலையத்தில் கத்தரி, மிளகாய் நாற்றுகள் விற்பனை

திருச்சி அருகே சிறுகமணியில் உள்ள வேளாண்மை அறிவியல் நிலையத்தில் விதை நெல், கத்திரி நாற்று, மிளகாய் நாற்று உள்ளிட்டவை விற்பனை செய்யப்படுகின்றன.

இந்த நிலையத்தில் விவசாயிகளின் நலன்களுக்காக அவ்வப்போது புதிய விஞ்ஞான தொழில்நுட்பங்களும், பயிற்சிகளும் அளிக்கப்பட்டு வருகின்றன. இதேபோல, விவசாயிகளுக்குத் தேவையான தரமான விதைகள், நாற்றுகள் போன்றவற்றையும் உற்பத்தி செய்யப்பட்டு, வழங்கப்பட்டு வருகின்றன.  தற்போது,

 • கிழக்குக் கடற்கரை நெட்டை (இ.சி.டி.) ரக தென்னை நாற்றுகள் தலா ரூ. 25-க்கும்,
 • ஆந்திர பொன்னி (பிபிடி 5204) விதை நெல் கிலோ ரூ. 20 வீதமும்,
 • ஊர்ச்சி ரக கத்திரி நாற்று (குழித்தட்டு நாற்று) 35 பைசா வீதமும்,
 • பிரியங்கா ரக மிளகாய் நாற்று (குழித்தட்டு நாற்று) 40 பைசா வீதமும்

விற்பனை செய்யப்படுகின்றன.

தேவைப்படும் விவசாயிகள் வேளாண்மை அறிவியல் நிலையத்தை நேரடியாக அணுகி முன் பணம் செலுத்தி பதிவு செய்தோ அல்லது உடனடியாகவோ பெற்றுக் கொள்ளலாம்.

தினமணி தகவல் : அ. சகுந்தலை, நிலைய இணைப் பேராசிரியர் மற்றும் தலைவர்