பாரம்பரிய விவசாயத்தின் மூலம் பாசிப்பயிறு சாகுபடி

புதிதாக விதை வாங்கனுமா.. வேண்டவே வேண்டாம் என்கிறார் கோயமுத்தூர் மாவட்டம் நெகமம் அருகிலுள்ள தாசநாயக்கன்பாளையத்தை மூத்த விவசாயி திரு பழனி.
மூன்றரை ஏக்கரில் சோளம் மற்றம் பாசிப்பயிறு இரண்டையும் மாற்றி மாற்றி சாகுபடி செய்கிறார். உரம் பூச்சிக்கொள்ளி இல்லாமல். நாட்டு விதையில் விவசாயம் செய்யும் இவர் விதைக்காக யாரையும் நாடுவதில்லை. அவரது தோட்டத்தில் இருந்தே விதைகளை உபயோகப் படுத்திக் கொள்கிறார்.

தோட்டத்தில் வேம்பு, புங்கன், நொச்சி, அரளி எல்லாம் வேலியில் இருக்கவேண்டும் – இது மருந்துக்கு
தொழுவத்தில் மாட்டுச்சாணம், ஆட்டு எரு – இது உரம்
புகையிலை, பாக்கு – இதுவும் மருந்து
இவற்றை வைத்து செய்யும் வேளாண்மையில் பூச்சி மற்றும் நோய்களை விரட்டலாம் என்கிறார்

சித்திரைப் பட்டத்தில் வெள்ளைச்சோளம் போட்டு அறுவடை செய்தவர் 400 கிலோ மகசூலை அள்ளியிருக்கிறார் அத்துடன் 3 டிராக்டர் தீவனத் தட்டை வேறு! அதன் பின் புரட்டாசிப் பருவத்தில் பாசிப்பயிறு.

பாசிப்பயிறு சாகுபடி
பாசிப்பயிறு 110 நாள் பயிர். ஆடி மாதத்தில் இரண்டு முறை ஏர் உழவு செய்து ஏக்கருக்கு 20 மாட்டுவண்டி என்ற கணக்கில் தொழுஉரத்தைக் கொட்டி இறைத்துவிடவேண்டும். பிறகு புரட்டாசி மாதத்தில் பாசிப்பயிறு விதைகளைத் தூவி விதைத்து, மண் மூடுமாறு உழவு செய்தல் வேண்டும். ஏக்கருக்கு 6 கிலோ விதை தேவைப்படும்.

அதைத் தொடர்ந்து ஐப்பசி கார்த்திகை மாதங்களில் கிடைக்கும் பருவ மழையில் விதைகள் நன்றாக முளைத்து வளர்ந்து வரும். விதைத்து 40 நாட்கள் கழித்து களை எடுக்கவேண்டும்.

கார்த்திகை மாதத்தில் பூ எடுக்கத் துவங்கும். இந்த சமயத்தில் பூச்சிகள் மற்றும் சிறு வண்டுகள் தாக்குதல் நடக்கலாம். நாட்டு விதை என்பதால் எதிர்ப்பு சக்தி அதிகம். என்றாலும் புகையிலை, இஞ்சி, பச்சை மிளகாய் ஆகிய மூன்றிலும் சிறிதளவு எடுத்து இடித்து சாறு எடுத்து மண்பானையில் 5 லிட்டர் தண்ணீருடன் கலந்து வைத்துக் கொள்ளவேண்டும். இந்தக் கரைசலை வேப்பிலைக் கொத்து மூலம் செடிகள் மேல் தெளித்தால் பூச்சிகளை விரட்டலாம்.

மார்கழி மாதத்தில் காய்கள் பிடித்துவிடும். அந்த சமயத்தில் பச்சைப் புழு, கம்பளிப் புழு ஆகியவை படையெடுக்கலாம். நன்றாகப் புளித்த ஒரு லிட்டர் மோரில் அரைக்கிலோ அரளிக் காய்களை இடித்துப் போட்டு ஒரு நாள் ஊறவைக்கவேண்டும். அதை வடிகட்டி 5 லிட்டர் தண்ணீர் 200 மில்லி வேப்பெண்ணெய் ஆகியவற்றுடன் கலந்து காலை வேளையில் வேப்பிலைக் கொத்து மூலம் செடிகள் மேல் தெளித்துவிட்டால் புழுக்கள் ஓடிவிடும்.

பூச்சிகளைப் பொறுத்த மட்டில் அவை தென்படும் வரையில் காத்துக்கொண்டு இருக்காமல் முன்கூட்டியே தெளித்துவிடுவது நல்லது. வேறு எந்த வேலையும் செய்யவேண்டியதில்லை. தைமாதத்தில் அறுவடை செய்துவிடலாம்.

தேவை போக மீதத்தை விற்றுவிட்டு பங்குனி மாசத்துக்குள் இரு முறை உழுது சித்திரைப்பட்ட வெள்ளைச் சோள வேளாண்மைக்குத் தயாராகிறார்.

பசுமை விகடன் தகவல்