முக்கியத்துவம் அடைந்துவரும் வீரிய ஒட்டு மக்காச்சோளப்பயிர்

மக்காச்சோளப்பயிர் ஏற்கனவே சாகுபடியில் இருந்தது. சாதாரண ரகம் சாகுபடியில் இருந்தது. இதன் தட்டைகள் கறவை மாடுகளுக்கு கொடுக்கப்பட்டு வந்தது. மக்காச்சோளக் கதிர்கள் உலர்த்தப்பட்டு விற்பனை செய்யப்பட்டு வந்தது. ஏக்கர் சாகுபடியில் சுமார் ரூ.7,000 வரை லாபம் கிடைத்து வந்தது.

தற்போது தஞ்சைப்பகுதியில் வீரிய ஒட்டு மக்காச்சோளம் நெல் சாகுபடியுடன் செய்யப்படுகின்றது. நெல் சாகுபடியைத் தொடர்ந்து செய்யப்பட்டதால் நிலவளம் பாதிக்கப்பட்டு வந்தது. இப்போது ஒரு போகம் வீரிய ஒட்டு மக்காச் சோளத்தையும் மற்றும் ஒரு போக நெல் சாகுபடி விவசாயிகள் செய்யத் துவங்கிவிட்டனர். வீரிய ஒட்டு மக்காச் சோளத்தை மாற்றுப்பயிர் என்று சுந்தரம் கூறுகிறார். (யார் இந்த சுந்தரம்? தினமலரைத்தான் கேக்கனும்)

தஞ்சாவூர் பகுதியில் விவசாயத்திற்கு வேலை ஆட்கள் கிடைப்பது அரிதாக உள்ளது. மக்காச் சோள சாகுபடி இதனால் பாதிக்கப்படுவது இல்லை.

 • இதற்கு தேவைப்படும் வேலை ஆட்கள் மிகவும் குறைவு.
 • சாகுபடியில் இயந்திரங்கள் உதவுகின்றன.
 • இயந்திரங்கள் மூலம் உழவு, விதைப்பு மற்றும் அறுவடை செய்யப்படுகின்றது.
 • வீரிய ஒட்டு மக்காச் சோளத்தை மிகக் கொடிய பூச்சி, நோய் தாக்குவது இல்லை.

மிகவும் கெட்டியான மண், அதில் வடிகால் வசதி இல்லாத நிலத்தை விட்டு மண் நல்ல வடிகால் வசதியுள்ள இடத்தில் விவசாயிகள் வீரிய ஒட்டு மக்காச் சோளத்தை சாகுபடி செய்கிறார்கள்.

மக்காசோளம்

மக்காசோளம்

தஞ்சாவூர் மாவட்டத்தில் எள், உளுந்து சாகுபடி கணிசமான லாபத்தைக் கொடுத்துவந்தன. இப்பயிர்களைவிட வீரிய ஒட்டு மக்காச்சோளம் அதிக பலனைத் தருகின்றது. காரணம் எள், உளுந்து சாகுபடியில் பூச்சி, வியாதி தாக்கினால் அவைகளை அழிக்க செலவு மிக அதிகம். தஞ்சாவூரில் சரியான நேரத்தில் கால்வாயில் நீர் வந்தால் குறுவைப்பயிரை சாகுபடி செய்வார் கள். தண்ணீர் வராத நிலையில் வீரிய ஒட்டு மக்காச்சோளத்தை சாகுபடி செய்தவர்கள் நல்ல வருவாய் பெற்றனர்.

வடிமுனை தண்ணீர் கிடைத்ததால் வீரிய ஒட்டு மக்காச்சோளத்தில் நல்ல வருவாயினை விவசாயிகள் பெற்றனர். தமிழகத்திற்கு மக்காச் சோளத் தேவை அதிகம். விவசாயிகள் வெளி மாநிலங்களிலிருந்து அதிக விலை கொடுத்து வாங்க வேண்டிய நிர்ப்பந்தம் இருந்தது. தற்போது மக்காச்சோளத்தை தாங்களே சாகுபடி செய்ய இயன்றதால் விவசாயிகள் மகிழ்ச்சியாக உள்ளனர்.

விளைச்சல் 2 2லீ டன். கிலோ ரூ.12 வீதம் வரவு-30,000.00. நிகர லாபம் – 17,700.00

தரமான வீரிய ஒட்டு மக்காச்சோள விதைகள் கம்பெனிகாரர்கள் விவசாயிகளுக்கு கொடுத்தார்கள். இதனால் விதை கிடைக்காத நிலை தோன்றவில்லை.

வீரிய ஒட்டு மக்காச்சோளத்தின் வயது 100-110 நாட்கள். கோடையில் விவசாயிகள் மார்ச் 15 முதல் ஏப்ரல் 15க்குள் சாகுபடி செய்யலாம். குறுவை சாகுபடி சமயம் மே 15 தேதியில் இருந்து ஜூன் 7ம் தேதி வரை சாகுபடி செய்யலாம். இம்மாதிரியான அனுபவங்கள் விவசாயிகளுக்கு மக்காச்சோளத்தின் முக்கியத்துவத்தை உணர்த்தும்.

மானாவாரி சாகுபடியில் பலன் தந்த மக்காச்சோளம்:

சேலம், நாமக்கல், தர்மபுரி போன்ற மாவட்டங்களில் விவசாயிகள் மானாவாரியில் மக்காச்சோளம் சாகுபடி செய்தனர். நல்ல பலன் கிடைத்ததால் மக்காச்சோளம் விவசாயிகளால் விரும்பப்படுகிறது. விவசாய அதிகாரிகள் விவசாயிகளை ஊக்குவிக்கின்றனர். கிருஷ்ணகிரி, ஓசூர், பாகலூர் இங்கெல்லாம் அதிக நிலப்பரப்பில் விவசாயிகள் மக்காச்சோளத்தை பயிரிடுகின்றனர். இப்பகுதிகளிலும் மக்காச்சோளம் முக்கியத்துவம் அடைந்து வருகின்றது.

முக்கியத்துவத்தைப் பற்றி பேசும்போது மக்காச்சோளக் கதிர்களை மக்கள் வேகவைத்து சாப்பிடுவதைப்பற்றியும் பேச வேண்டும்.தள்ளுவண்டியில் ரோட்டில் மக்காச்சோளக் கதிர்களை விற்பதைப் பார்த்தோம். திடீரென்று இந்த காட்சி மாறி வருகின்றது. தற்போது குளிர்சாதன வசதி கொண்ட பெரிய கடைகளில் மக்காச்சோளத்தை பலவிதமாக தயாரித்து விற்று வருவது ஆகும். இச்சூழ்நிலையில் நாம் தெரிந்து கொள்வது என்னவென்றால் மக்காச்சோள சாகுபடி அதிகரிக்கக் கூடும் என்பதாகும். இதை மனதில் கொண்டுதான் சுந்தரம் மக்காச்சோளம் சீக்கிரம் தமிழகத்தில் ஒரு மாற்றுப்பயிர் ஆகக்கூடும் என்கிறார்.

தினமலர் செய்தி

எஸ்.எஸ்.நாகராஜன்

திருக்காட்டுப்பள்ளியைச் சேர்ந்த விவசாயி சுந்தரம்

பருத்தி மற்றும் மக்காசோள சாகுபடியில் கூடுதல் மகசூல் பெற

பருத்தி மற்றும் மக்காசோள சாகுபடியில் கூடுதல் மகசூல் பெற புதிய தொழில் நுட்பங்களை விவசாயிகள் பயன்படுத்த அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

பெரம்பலூர் மாவட்டத்தில், 45,000 ஹெக்டரில் மக்காசோளமும், 26,000 ஹெக்டரில் பருத்தியும் சாகுபடி செய்து வருகின்றனர். ஆனால், மாநில சராசரி விளைச்சலை விட குறைவான மகசூல் பெறுகின்றனர். எனவே, ஒரு ஏக்கர் பரப்பளவில் அதிக பயிர் எண்ணிக்கை பராமரிப்பதன் மூலம் கூடுதல் மகசூலும், அதிக வருவாயும் எடுக்கமுடியும்.

பருத்தியில், செடிக்கு செடி 2 அடி இடைவெளியும், அடுத்த வரிசை 4 அடியும், அடுத்த வரிசை 2 அடியும் விட்டு நடவு செய்ய வேண்டும். ஊடுபயிராக உளுந்து சாகுபடி செய்து, அதிக பயிர் எண்ணிக்கையை பராமரித்து கூடுதல் வருவாய் பெறலாம்.

மக்காசோள சாகுபடியில் வரிசைக்கு வரிசை 2 அடியும், செடிக்கு செடி ஒன்றரை அடி விட்டு ஒரு குழியில் இரண்டு விதை நடவு செய்தால், அதிக பயிர் எண்ணிக்கையை பராமரிக்கலாம்.

இதன்மூலம், இரட்டிப்பு வருவாய் பெறலாம். எனவே, பெரம்பலூர் மாவட்டத்தில் பருத்தி மற்றும் மக்காசோளம் சாகுபடி செய்யும் விவசாயிகள் இந்த புதிய தொழில் நுட்பத்தை கடைத்து அதிக மகசூல் பெறலாம்.

தினமணி செய்தி – வேளாண் இணை இயக்குநர் பி. சங்கரலிங்கம், பெரம்பலூர்

மக்காச்சோளம் சாகுபடி – இயற்கை மற்றும் செயற்கை

மக்காச்சோளத்திற்கான தேவை அதிகரித்துள்ளது என்பதை ஏற்கனவே இங்கே வெளியிட்டு இருந்தோம். தேவையுடன் சேர்த்து இதற்கான செய்யும் பக்குவமும் குறைவே. இறைவை மற்றும மானாவாரி இரண்டுக்குமே ஏற்ற இந்தப் பயிருக்கு அதிக தண்ணீர் தேவையில்லை. குறுகிய காலத்தில் மகசூல். ஓரளவு கட்டுபடியாகக்கூடிய வேலை. வில்லங்கமில்லாத விற்பனை என்பதால் விவசாயிகளின் ஆர்வம் அதிகரித்துள்ளது.

வழக்கமான முறையில் விவசாயம் செய்து வருவோர் மத்தியில் சொட்டுநீர் பாசனத்தின் உதவி கொண்டு அதிக மகசூல் அடைந்திருக்கிறார் கோயமுத்தூர் மாவட்டம் ஜே.கிருஷ்ணாபுரத்தைச் சேர்ந்த விவசாயி ம. கோவிந்தராசன்.

அவரது சொல்படி

 • உற்பத்தி செலவு ரொம்ப கம்மி.
 • அதிக உரம் பூச்சி மருந்துக்கு வேலை இல்லை
 • ஓரளவு கட்டுபடியாகக்கூடிய விலையும் கிடைக்கும்

சமச்சீர் உரமேலாண்மை முறையில் இயற்கை ரசாயனம் கலந்து மூன்று ஏக்கரும் இயற்கை முறையில் ஒரு ஏக்கரும் சாகுபடி செய்திருந்த இவர் இயற்கை வழிப்படி கூடுதல் மகசூல் கிடைக்கும் என்கிறார்.

 • நுட்பம் : மக்காச்சோளம்
 • வயது : 110 நாள்
 • நிலம் : வடிகால் வசதி உள்ள அனைத்து நிலங்களும்
 • சாகுபடி காலம் : இறவையில் வருடம் முழுவதும்

உழவு
சாகுபடி நிலத்தை இரண்டு முறை உழவு செய்து 5 டிராக்டர் அளவு கோழி எருவைக் கொட்டி இறைத்து மீண்டும் ஒரு உழவு செய்து நிலத்தை ஆறப்போட வேண்டும். சொட்டுநீர் பாசணம் பயன்படுத்தும்போது பார் மற்றும் வரப்பு எடுக்கவேண்டியதில்லை. உழவு ஓட்டிய வயலில் அப்படியே நடவு செய்துவிடலாம். ஏக்கருக்கு 8 கிலோ விதைகள் தேவைப்படும். செடிக்கு செடி ஒரு அடியும், வரிசைக்கு வரிசை ஒரு அடியும் இடைவெளி விட்டு நடவு செய்யவேண்டும். ஒன்றரை அடி லேட்டரல் குழாய்களை ஒன்றரை அடி இடைவெளியில் தண்ணீர் சொட்டுவது போல் அமைக்கவேண்டும். வரிசைக்கு வரிசை 3 அடி இடைவெளியில் இந்தக் குழாய்களை அமைத்தால் போதும்.

பச்சை வர்ணத்தின் X குறிகள் – நாற்றுக்கள்
கருப்புவர்ணம் சொட்டு நீர் குழாய்கள்

பாசனத்துடன் பஞ்சகவ்யா
ஈரத்தைப் பொறுத்து வாரம் இருமுறை பாசனம் செய்யலாம். மொத்த சாகுபடி காலத்தில் அதிகபட்சம் 4 முறை பாசனம் செய்யலாம். விதைத்த 6ஆம் நாள் முளைவிடும் இதற்கு 15ஆம் நாளில் களைஎடுக்கவேண்டும். சொட்டு நீர்ப் பாசன முறையில் பயிருக்கு மட்டுமே பாசனம் நடைபெறுவதால் மற்ற இடங்களில் களை வரும் வாய்ப்பு குறைவு. 15ஆம் நாளில் வடிகட்டிய பஞ்சகவ்யா 200 லிட்டரை பாசன நீர் வழியாகக் கொடுக்கவேண்டும். ஏற்கனவே கொட்டிய கோழி எருவின் சத்துக்களை எடுத்து செடிகளுக்குக் கொடுப்பதுடன், பயிர் வளர்வதற்குத் தேவையான கூடுதல் தழைச்சத்தையும் பஞ்சகவ்யா கொடுக்கும். 40 நாளில் ஒரு ஆள் உயரத்திற்கு வளர்ந்து பூக்களோடு நிற்கும். அந்தத் தருணத்தில் மீண்டும் ஒரு முறை 200 லி்டடர் பஞ்சகவ்யாவைப் பாசன நீருடன் கொடுத்தால் பக்கவாட்டில் தோன்றும் கதிர்கள் விரைவான வளர்ச்சி அடைவதுடன் அடிச்சாம்பல் நோயும் தாக்காது

அறுவடை
60 மற்றும் 70ஆம் நாட்களில் கதிர்கள் ஒரே சீராக வளரத் தொடங்கும். 100ஆம் நாளில் கதிர்களை உரித்துப் பார்த்தால் சிவப்பு நிறத்தில் வரிசை கட்டிய தங்கப் பற்கள் பொன்று மணிகள் காணப்படும். அறுவடைக்கு 10 நாட்களுக்கு முன்பாகவே பாசனத்தை நிறுத்திவிடவேண்டும். 110ஆம் நாளில் தட்டைகள் காய்ந்து நிற்கும். ஆட்களை வி்டடு கதிர்களை மட்டும் ஒடித்து எடுக்கவேண்டும். அளத்து மேட்டில் குவித்து கதிரடிக்கும் எந்திரம் மூலமாக மணிகளைப் பிரித்துக் கொள்ளலாம்.

பாசனம் தரும் பாடம்
ஒரு ஏக்கருக்கு சொட்டு நீர் பாசனத்தில் ஒரு முறை பாசனம் செய்ய 20ஆயிரம் லிட்டர் தேவைப்படும். மொத்த சாகுபடி காலமான 110 நாட்களுக்கும் கணக்கிட்டால் 8 லட்சம் லிட்டர். ஆனால் வாய்க்கால் பாசனத்தில் 18 லட்சம் லிட்டர் வரை நீர் கொடுக்கப்படுகிறது. எனவே நீர்ப் பற்றாக்குறை உள்ள விவசாயிகளுக்கு சொட்டுநீர் பாசனம் ஒரு வரப்பிரசாதமே. அறுவடை முடிந்த சோளத்தட்டைகளை வெட்டி எடுத்து மாட்டுத் தீவனத்துக்காகச் சேமித்துக் கொள்ளலாம்.

வயலுக்கு வந்து எடைபோட்டு வாங்கிச் செல்லும் விவசாயிகள் இருந்தாலும் ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்களுக்கு எடுத்துச் சொல்கிறார் கோவிந்தராஜன். கட்டுப்படியான விலை கிடைக்கி வரைக்கும் அங்கேயே இருப்பு வைத்துக்கொள்ளலாம். அதோட மதிப்புக்கு ஏத்த மாதிரி அதிக பட்சம் ஒரு லட்சம் ரூபாய் வரைக்கும் பொருளீட்டுக் கடன் கொடுப்பார்கள். அதை வாங்கி அடுத்த சாகுபடிக்குப் பயன்படுத்திக்கலாம்.

ஒரு குவிண்டால் மக்காச்சோளம் 900 முதல் 1000 வரை விற்பனையாகிறது. அது கட்டுபடி ஆகிற விலைதான்.

அவர் மூன்று ஏக்கரில் சமச்சீர் உர மேலாண்மைப் படி சாகுபடி செய்த முறை
உழவு செய்து பார் கலப்பை மூலம் பாத்தி அமைத்து விதைகளை நடவு செய்யவேண்டும். பாத்தியில் உள்ள பாரின் அளவு ஒன்றே கால் அடி இருக்கவேண்டும். ஏக்கருக்கு 7 கிலோ விதைகள் தேவைப்படும்.

பாரின் இரு சரிவிலும் ஒரு அடி இடைவெளியில் விதையை ஊன்ற வேண்டும். பின்னர் பார் வரப்பு முழுவதும் நனையும்படி தண்ணீர்ப் பாசனம் செய்யவேண்டும். பிறகு வாரம் ஒரு தண்ணீர் கொடுத்தால் போதும். 15ஆம் நாளில் களை எடுத்து 50 கிலோ தழைச்சத்து உரமான யூரியாவை ஏகமாக வயல் முழுவதும் இறைத்துவிட வேண்டும். இந்த யூரியா கோழி எருவில் உள்ள சத்துக்களை விரைவாக செடிகளுக்கு எடுத்துக் கொடுக்க உதவும். 40ஆம் நாளில் 50 கிலோ யூரியாவைக் கொடுக்கவேண்டும்.

ரசாயண முறையில் ஏக்கருக்கு செலவு 19,000
மகசூல் 30 குவிண்டால்
இயற்கை முறையில் ஏக்கருக்கு 14,000
மககூல் 40 குவிண்டால்

வாய்க்கால் பாசனத்தைவிட சொட்டு நீர் பாசனத்தில் வேலையும் குறைவு. ஆக குறைந்த செலவு மற்றும் உழைப்பில் பலமான வருமானம் என்பது கோவிந்தராஜனின் அனுபவம்.

பார்க்க –
சுட்டி 1

சுட்டி 2

மானாவாரிக்கு ஏற்ற மக்காச் சோளம் சாகுபடி

தமிழகத்தில் 40 ஆண்டுகளுக்கு முன்புவரை முத்துச்சோளம், சாமை, தினை, கேழ்வரகு, வரகு உள்ளிட்ட நவதானியங்கள்தான் பெரும்பாலும் நமது உணவுப்  பொருளாக பயன்படுத்தப்பட்டு வந்தன.

மானாவாரிப் பயிர்களான நவதானியங்கள் பின்னர் கொஞ்சம் கொஞ்சமாக உணவுப் பழக்கவழக்கத்தில் இருந்தும், விவசாயத்தில் இருந்து குறையத் தொடங்கி விட்டன. பின்னர் அந்த இடத்தை அரிசி பிடித்துக் கொண்டது. இதனால் நவதானியங்கள் உற்பத்தி வெகுவாகக் குறைந்து விட்டது. கடந்த சில ஆண்டுகளாக மானாவாரி நவதானியங்கள் உற்பத்திக்கான தளத்தை மக்காச் சோளம் பிடிக்கத் தொடங்கியுள்ளது.

தற்போது தமிழகத்தில் மக்காச் சோளத்தின் ஆண்டுத் தேவை 8 லட்சம் டன். கோழிப் பண்ணைகளில் தீவனமாக மக்காச் சோளம் அதிகமாகப் பயன்படுத்தப்படுவதால் தமிழகத்தில் மக்காச் சோளத்தின் தேவை ஆண்டுக்கு ஆண்டு அதிகரித்து வருகிறது.

ஆனால் தமிழகத்தில் ஆண்டுக்கு 4 லட்சம் டன் மக்காச் சோளம் மட்டுமே தற்போது உற்பத்தி செய்யப்படுகிறது. 1990-91 ம் ஆண்டில் தமிழகத்தில் 5.49 டன் மக்காச்சோளம் உற்பத்தி செய்யப்பட்டது. எனினும் 2005-06-ம் ஆண்டில் 2.31 லட்சம் டன் மட்டுமே உற்பத்தி செய்யப்பட்டருந்தது.

வரும் ஏப்ரல் மாதம் தொடங்க இருக்கும் இறவைப் பாசனத்தில் 4 லட்சம் ஏக்கரில் மக்காச் சோளம் பயிரிட வாய்ப்பு இருப்பதாக வேளாண் அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

தமிழகத்தில் மக்காச் சோளத்தில்

 • சித்ரா,
 • சி.டெக்,
 • எம்.கோல்டு 900,
 • என்.கே. 6240,
 • ஹைசெல்

உள்ளிட்ட ரகங்கள் பயிரிடப்படுகின்றன. ஏக்கருக்கு 7 கிலோ விதை பயன்படுத்தப்படுகிறது. செலவு ஏக்கருக்கு ரூ. 2 ஆயிரம் முதல் ரூ. 5 ஆயிரம் வரைதான். ஏக்கருக்கு 30 முதல் 35 குவிண்டால் வரை மகசூல் கிடைக்கும் என்று விவசாயிகள் தெரிவிக்கிறார்கள்.

தற்போதைய விலை குவிண்டாலுக்கு ரூ. 1,000 ஆக உள்ளது. மக்காச் சோளத்தின் விலை சில நேரங்களில் குவிண்டால் ரூ. 1,700 வரை உயர்ந்தும்  இருக்கிறது. வரும் மாதங்களில் குவிண்டால் ரூ.1,200 வரை இருக்கும் வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

ஏற்கெனவே அறுவடை செய்த மக்காச் சோளத்தை உலர்த்தி தூற்றி பாதுகாப்புடன் சேமித்து வைத்து இருப்பவர்களுக்கும், ஏப்ரல்-மே மாதங்களில் அறுவடை ஆகும் இறவைப் பருவ மக்காச் சோளத்துக்கும் நல்ல விலை கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுவதாக வேளாண் விற்பனைத் துறை தெரிவிக்கிறது.

கடலூர் மாவட்டத்தில் மங்களூர், நல்லூர் வட்டாரங்களில் மக்காச் சோளம் 2 ஆண்டுகளுக்கு முன், சுமார் 10 ஆயிரம் ஏக்கரில் பயிரிடப்பட்டு வந்தது. கடந்த ஆண்டு 30 ஆயிரம் ஏக்கராக உயர்ந்துள்ளது. அதிகபட்சம் 5 மாதங்களில் மக்காச் சோளம் அறுவடைக்கு வந்துவிடும். மானாவாரிப் பயிராக இருப்பதால் செலவு மிகவும் குறைவு. பூச்சித் தாக்குதலும் இல்லை என்கிறார்கள்.

சாதாரண காலங்களில் குறைந்தபட்சம் குவிண்டாலுக்கு ரூ. 850 வரை விலை கிடைக்கிறது. இந்த அடிப்படையில் கணக்கிட்டால் ஏக்கருக்குச் செலவு போக குறைந்த வருவாய் ரூ.15 ஆயிரமாகவும், அதிகபட்ச வருவாய் ரூ.30 ஆயிரமாகவும் இருக்கும் என்று விவசாயிகள் தெரிவிக்கிறார்கள்.

மக்காச் சோளம் விதை பெரும்பாலும் நிறுவனங்களில் இருந்து விற்பனை செய்யப்படுவதால், விதை விலை அதிகமாக இருப்பதாக விவசாயிகள் தெரிவிக்கிறார்கள். மேலும் பல விவசாயிகள் மக்காச் சோளத்தை வயலுக்கு வரும் வியாபாரிகளிடமே விற்பனை செய்கிறார்கள்.

இதனால்தான் விலை குறைவாக இருக்கிறது. விதைகளை விநியோகிக்கும் நிறுவனங்களிடம் நேரடியாக விற்பனை செய்தால் நல்ல விலை கிடைக்கும் என்கிறார்கள்.

மானாவாரிக்கு சிறந்த பயிராகவும், வணிகப் பயிராக மாறிவருவது மட்டுமன்றி, விவசாயிகளுக்கு மகிழ்ச்சி தரும் பயிராகவும் மக்காச் சோளம் உள்ளது.

தினமணி தகவல்

பார்க்க – மக்காச்சோளம் சாகுபடி – கட்டுரை மற்றும் ஒலிப்பதிவு

மக்காச்சோளம் சாகுபடி

விதைப்பு

விவசாயிகள் கூடுதல் வருமானம் பெற 90 முதல் 100 நாட்களில் மகத்தான மகசூல் கிடைக்கும் மக்காச்சோளத்தை சாகுபடி செய்யலாம். குறுகிய கால பயிரான மக்காச்சோளத்தில்

 • கோ 1, கங்கா,
 • கோ ஹெச் (எம்) 4,
 • கோ ஹெச் (எம்) 5

ஆகிய வீரிய ஒட்டு ரகங்களை பயிரிடலாம். விதைமூலம் பரவும் நோய்களை கட்டுப்படுத்திட ஒரு கிலோ விதைக்கு 2 கிராம் கார்பன்டாசிம் அல்லது 4 கிராம் டிரைக்கோடெர்மா விரிடி கலந்து 24 மணிநேரம் கழித்து தலா ஒரு பாக்கெட் அசோஸ்பரில்லம், பாஸ்போ பாக்டீரியா உயிர் உரங்களை ஆறிய அரிசி கஞ்சியுடன் கலந்து நிழலில் உலர்த்த வேண்டும். பின்னர் அந்த விதையை விதைப்பு செய்ய வேண்டும்.

உரம்

மண்ணின் வளத்தை மேம்படுத்த ஏக்கருக்கு 5 டன் தொழு உரமிட வேண்டும். மண்ணாய்வு பரிந்துரைப்படி தேவையறிந்து ரசாயன உரமிட வேண்டும். இல்லையெனில் பொதுப்பரிந்துரையான

 • 54 கிலோ தழைச்சத்து,
 • 25 கிலோ மணிச்சத்து,
 • 20 கிலோ சாம்பல் சத்து

தரவல்ல உரங்களை இட வேண்டும்.

 • 30 கிலோ யூரியா,
 • 156 கிலோ சூப்பர் பாஸ்பேட்,
 • 33 கிலோ பொட்டாஷ்

உரங்களை அடியரமாக இட வேண்டும்.

நுண்ணூட்டச் சத்து பற்றாக்குறையை தவிர்க்க ஏக்கருக்கு 5 கிலோ நுண்ணூட்ட உரக்கலவையை 20 கிலோ மணலுடன் கலந்து விதைகளை ஊன்றுவதற்கு முன் மேலுரமாக இடவேண்டும்.

பாசனம்

மண்ணின் தன்மைக்கு ஏற்றாற் போல் 10 முதல் 12 நாட்களுக்கு ஒருமுறை தண்ணீர் விடவேண்டும்.

பூச்சி

குருத்துப்புழு, சாம்பல் வண்டை கட்டுப்படுத்த எண்டோ சல்பான் 4டி அல்லது பாசலோன் 4 கிலோ தூளை 16 கிலோ மணலுடன் கலந்து இலையும், தண்டுப்பகுதியும் சேரும் இடங்களில் உள்ள இடைவெளியில் இடவேண்டும். அசுவினியை கட்டுப்படுத்த ஏக்கருக்கு 200 மில்லி டைமிதோயேட்டை தெளிக்க வேண்டும்.

அறுவடை முறை

மக்காச்சோள கதிரின் மூடிய உறை மஞ்சளாகவும், விதைகள் சற்று கடினமாகவும் மாறிய பின் கதிரை மட்டும் தனியாக அறுவடை செய்ய வேண்டும். மக்காச்சோள தட்டையை காயவிடாமல் பச்சையாக அறுவடை செய்து சிறுசிறு துண்டுகளாக செட்டி கால்நடைகளுக்கு தீவனமாக பயன்படுத்தலாம்.
ஏக்கருக்கு இறவையில் 2,500 கிலோ முதல் 3,000 கிலோ வரை மகசூல் கிடைக்க வாயப்புள்ளது. ஒரு கிலோ மக்காச்சோளத்தை 10 ரூபாய்க்கு விற்பனை செய்தாலும் ஏக்கருக்கு 25,000 ரூபாய் முதல் 30,000 ரூபாய் வரை லாபம் கிடைக்கும். எனவே விவசாயிகள் மக்காச்சோளம் சாகுபடி செய்து நல்ல மகசூல் பெற்று பயனடையலாம்.

உரை – தினமலர்

ஒலி – சென்னை வானொலி பண்ணைச் செய்தி