எளிய முறையில் பயறு வகை சாகுபடி

பயறுவகைப் பயிர்களில் இருந்து மனித வளர்ச்சிக்குத் தேவையான புரதச் சத்து கிடைக்கிறது. இப் பயிர்களை எளிய முறையில், அனைத்து விவசாயிகளும் சாகுபடி செய்யலாம். குறைந்த செலவில், அதிக மகசூலும் பயறுவகைப் பயிர்களிலிருந்து கிடைக்கின்றன.

கன்னியாகுமரி மாவட்டத்தில் உளுந்து, நஞ்சை தரிசில் மட்டுமே பயிரிடப்படுகிறது. மேலும், பயிர் சாகுபடி மற்றும் அறுவடையின்போது குறைந்த அளவு கவனம் செலுத்தப்படுகிறது. இப்போது சுமார் 500 ஹெக்டேர் பரப்பில் சாகுபடி செய்யப்பட்டு வரும் பயறு வகைகளில் இருந்து, ஹெக்டேருக்கு சுமார் 400 கிலோ என்ற அளவில் மட்டுமே உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது.

blackgram

ஆகவே, பயறுவகைப் பயிர்களில் உற்பத்தியை அதிகரிக்க வேண்டியது அவசியம். பயறுவகை உற்பத்தியை அதிகரிக்க, சாகுபடி பரப்பை அதிகரிக்க வேண்டும். தனிப் பயிராகவும், ஊடுபயிராகவும் மற்றும் வரப்போரத்திலும் பயிரிடலாம். உற்பத்தித் திறனை அதிகரிக்கச் செய்ய பயிர் எண்ணிக்கையைப் பராமரிக்க வேண்டும்.

ஒருங்கிணைந்த உரம், களை, நீர் நிர்வாகம் செய்து காலத்தே அறுவடை செய்ய வேண்டும். ஏக்கருக்கு 25 கிலோ என்ற விதை அளவில், நெல் அறுவடைக்கு 5-10 நாள்களுக்கு முன் மெழுகு பதத்தில் விதைக்க வேண்டும். வயல் மெழுகு பதத்தில் இல்லை என்றால், தண்ணீர் பாய்ச்சி மெழுகு பதம் வந்ததும் விதைக்கலாம்.

விதை மூலம் பரவும் நோய்களைக் கட்டுப்படுத்த பூஞ்சாண விதை நேர்த்தி செய்யலாம். இதற்கு சூடோமோனாஸ் என்ற உயிரியல் பூஞ்சானக் கொல்லியை கிலோவுக்கு 10 கிராம் என்ற அளவில் அல்லது டிரைகோடெர்மாவிரிடி என்ற உயிரியல் பூஞ்சானக் கொல்லியை கிலோவுக்கு 4 கிராம் என்ற அளவில் விதையுடன் கலந்து 24 மணி நேரத்திற்கு பின் விதைக்க வேண்டும்.

ulundu உளுந்து

காற்றிலுள்ள தழைச்சத்தை கிரகித்து வேர் முடிச்சுகள் மூலம் பூமியில் நிலைப்படுத்துவதற்காக ரைசோபியம் என்ற உயிர் உரத்தையும், மண்ணில் கிட்டாத நிலையில் உள்ள மணிச்சத்தை கிடைக்கச் செய்ய பாஸ்போ பாக்டீரியா என்ற உயிர் உரத்தையும் ஹெக்டேருக்கு 3 பாக்கெட் வீதம் 400 மி. ஆறிய அரிசி கஞ்சியுடன் கலந்து, விதையுடன் கிளறி நிழலில் அரை மணி நேரம் உலர்த்தி விதைக்க வேண்டும்.

தழைச்சத்து ஹெக்டேருக்கு 12.5 கிலோ வீதமும், மணிச்சத்து ஹெக்டேருக்கு 12.5 கிலோ வீதமும் பயிருக்கு உரமிட வேண்டும். பயறு நுண்ணூட்டம் அல்லது தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகம் மூலம் தயாரிக்கப்படும் பயறு வொண்டர் நுண்ணூட்டம் ஹெக்டேருக்கு 5 கிலோ வீதம் இட வேண்டும்.

இடைவெளி 3×10 செ.மீ. என்ற அளவில் சதுர மீட்டரில் 33 செடிகள் இருக்குமாறு பயிர் எண்ணிக்கை பராமரிக்கப்பட வேண்டும். நன்செய் தரிசில் உளுந்து பயிர் சாகுபடி செய்யும்போது கண்டிப்பாக 2 சதவீத டிஏபி உரக்கரைசல் இலை வழியாக தெளிக்க வேண்டும். ஒரு ஹெக்டேருக்கு 10 கிலோ டிஏபி உரத்தை 25 லிட்டர் தண்ணீரில் 12 மணி நேரம் ஊற வைக்க வேண்டும்.

டிஏபி

பூக்கும் நிலையில் ஒரு முறையும், பிறகு 15 நாள்கள் கழித்து மறுமுறையும் கைத்தெளிப்பான் கொண்டு தெளிக்க வேண்டும். இவ்வாறு இலைவழி உரம் தெளிப்பதால் பூ, பிஞ்சு உதிர்வது கட்டுப்படுத்தப்படும். தழைச்சத்து குறைவு உடனடியாக சரி செய்யப்படுகிறது.

ஒரு சமயத்தில் அறுவடை செய்ய வாய்ப்பு ஏற்படுகிறது. குறைந்த செலவில் அதிக மகசூல் கிடைக்கிறது.

பயறு அறுவடை செய்யும்போது 80 சதவீதத்திற்கும் அதிகமான காய்கள் முதிர்ச்சி அடைந்தவுடன், செடிகளை தரைமட்டத்திற்கு அரிவாளால் அறுவடை செய்து கட்டி வைத்து, பின் வெயிலில் காய வைத்து கையிலாலோ அல்லது இயந்திரங்களை வைத்தோ மணிகளைப் பிரித்து எடுக்க வேண்டும்.

இவ்வாறு தரைமட்டத்திற்கு வெட்டுவதால் மண்ணில் இருக்கும் வேர்கள் மண்வளத்தைப் பெருக்கும். இயந்திரத்தினால் அறுவடை செய்யும்போது வயலில் மண்ணின் ஈரத்தன்மை மிதமாக உள்ளதா என்று கண்டறிந்துவிட்டு அறுவடையை மேற்கொள்ளலாம்.

அறுவடை இயந்திரம் மூலம் 1 மணி நேரத்தில் 1 ஏக்கர் உளுந்து மற்றும் பாசிப்பயறு செடிகளை அறுவடை செய்து, தானியங்களை சுத்தம் செய்து பிரித்து எடுக்கலாம். இயந்திரத்தைப் பயன்படுத்துவதால் சாகுபடி செலவைக் குறைக்கலாம்.

மேலும், பயிரை தக்க தருணத்தில் அறுவடை செய்து, மேலான பலனைப் பெறமுடியும். இவ்வாறு பயறு சாகுபடி செய்வதால் குறைந்த நாள்களில் எளிய செலவில் நிறைந்த மகசூல் பெறலாம்.

வேளாண் அரங்கம் மார்க்கெட்
பூச்சிக் கொல்லி

 

விதை – நாற்றங்கால்

 

logo.png

Advertisements

ஊடுபயிராக ஆமணக்கு சாகுபடி

ஆமணக்கு உற்பத்தி செய்யும் நாடுகளில் இந்தியா பரப்பளவிலும், உற்பத்தியிலும் முதலிடத்தில் உள்ளது. தமிழகத்தில் மட்டும் சுமார் 14 ஆயிரம் ஹெக்டர் பரப்பளவில் 3 ஆயிரத்து 750 டன் ஆமணக்கு உற்பத்தி செய்யப்படுகிறது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் மட்டும் சுமார் 1,100 ஹெக்டர் பரப்பளவில் ஆமணக்கு சாகுபடி செய்யப்படுகிறது.

ஆமணக்கு

ஆமணக்கு

ஆமணக்கு எண்ணெய் உண்ணா வகையைச் சார்ந்தது. இதில் 50 சதவீதத்துக்கும் மேலாக எண்ணெய்ச் சத்து உள்ளது. ஆமணக்கில் இருந்து மருந்துப் பொருள்கள் தயாரிக்கப்

படுகின்றன. இந்த எண்ணெய் பெயின்ட், வார்னிஷ் தயாரிக்கவும் மூலப் பொருள்களாகப் பயன்படுகிறது. மேலும், இதரப் பயிர்களுடன் பொறிப் பயிராக பயிரிடும் போது அந்தப் பயிர்களில் பூச்சித் தாக்குதலைக் கட்டுப்படுத்தலாம்.

பருவம்:

ஆமணக்கு தனிப் பயிராகப் பயிரிட மானாவாரி-ஜூன், ஜூலை (ஆடிப் பட்டம்) மற்றும் இறவை செப்டம்பர்-அக்டோபர் (கார்த்திகை பட்டம்) மாதங்கள் சிறந்தவையாகும். ஊடு பயிராக எல்லாப் பருவங்களிலும் பயிரிடலாம்.

ரகங்கள்:

  • டெஎம்வி-4 (105 நாள்கள்)
  • டெஎம்வி-5 (120 நாள்கள்)
  • டிஎம்வி-6 (160 நாள்கள்)
  • எ.எம்.வி.எச்-1 (160 நாள்கள்)
  • ஒய்.ஆர்.சி.எச்.1 (150 நாள்கள்)

ஆகிய ரகங்களைப் பயிரிடலாம்.

நிலத் தன்மை:

டிராக்டர் அல்லது நாட்டுக் கலப்பை மூலம் 2-3 முறை நிலத்தை நன்கு கட்டி இல்லாமல், புழுதிபட உழ வேண்டும். வடிகால் வசதியுடன் கூடிய கார, அமிலத் தன்மையற்ற வண்டல், செம்மண் நிலங்கள் மிகவும் உகந்தவை. கடைசி உழவில் 5 டன் மக்கிய தொழு உரமிட்டு உழ வேண்டும். தனிப் பயிரானால் நிலத்தை பார்கள் அமைத்து நீர் பாய்ச்ச ஏதுவாக தயார் செய்ய வேண்டும்.

விதை:

சிறந்த தரமான விதைகளை தேர்ந்தெடுக்க வேண்டும். ஒரு ஹெக்டருக்கு தனி பயிரானால் 10 கிலோ விதை தேவைப்படும். கலப்புப் பயிராக அல்லது ஊடு பயிராக இருந்தால் 3 கிலோ விதைகள் போதுமானது. வீரிய ஒட்டு ரகமானால் 5 கிலோ விதைகள் தேவைப்படும்.

விதை நேர்த்தி:

ஒரு கிலோ விதைக்கு 4 கிராம் உயிர்ப் பூசணம் டிரைக்கோடெர்மா கலந்து விதை நேர்த்தி செய்ய வேண்டும்.

விதைப்பு:

விதைகளை விதைக்கும் முன்பு 24 மணி நேரம் தண்ணீரில் ஊறவைத்து விதைத்தால் முளைப்புத் திறன் அதிகரிக்கும். ஒரு குழிக்கு ஒரு விதை போதுமானது. விதைகளை பரிந்துரை செய்யப்பட்ட இடை வெளியில் விதைக்க வேண்டும். மானாவாரிப் பயிராக இருந்தால் 90-க்கு 60 செ.மீ. இடைவெளியிலும், இறவையில் பயிரிட்டால் 120-க்கு 90 செ.மீ. இடைவெளியிலும் விதைக்க வேண்டும்.

உரமிடுதல்:

பொதுவாக மண் பரிசோதனை முடிவுக்கு ஏற்ப உரமிட வேண்டும். மண் பரிசோதனை செய்யாவிடில், பரிந்துரைக்கப்பட்ட அளவான ரகத்திற்கு 30:15:15 கிலோ தழைச்சத்து, மணி சத்து, சாம்பல் சத்து இட வேண்டும். மானாவாரி ஒட்டு ஆமணக்கிற்கு 45:15:15 கிலோ தழை, மணி, சாம்பல் சத்து இட வேண்டும்.

இதில் 30:15:15 அடியுரமாகவும், மீதமுள்ள 15 கிலோ தழைச் சத்தை மேலுரமாக மழை வரும் போது 40-60 நாள்களுக்குள் இட வேண்டும்.

இறவை வீரிய ஒட்டு ஆமணக்கிற்கு 60:30:30 கிலோ தழைச்சத்து, மணிச்சத்து, சாம்பல் சத்து இட வேண்டும். இதில் 30:30:30 கிலோ தழை, மணி, சாம்பல் சத்தை அடி உரமாகவும், மீதமுள்ள 30 கிலோ தழைச்சத்தை 2 தவணைகளாகப் பிரித்து 30ஆவது நாளும், 60ஆவது நாளும் இட வேண்டும்.

நீர் நிர்வாகம்:

விதைத்தவுடன் உயிர்த் தண்ணீர் பாய்ச்ச வேண்டும். பிறகு 15 நாள்கள் இடைவெளியில் மண்ணின் தன்மைக்கு ஏற்ப நீர் பாய்ச்ச வேண்டும்.

களை நிர்வாகம்:

விதைத்த 3 நாள்களுக்குள் ஏக்கருக்கு புளுகுனோரலின் 800 மி.லி தெளித்து களைகளை கட்டுப்படுத்தலாம். மருந்து தெளிக்காதபட்சத்தில் விதைத்த 20 மற்றும் 40ஆவது நாளில் களைக்கொத்து கொண்டு களை எடுóக்க வேண்டும்.

ஊடுபயிர்:

ஆமணக்கை ஊடுபயிராகவும் பயிரிடலாம். ஆறு வரிசை நிலக்கடலை, உளுந்துக்கு ஒரு வரிசை ஆமணக்கு பயிரிடலாம்.

அறுவடை:

பயிரின் வயதைக் கொண்டு அறுவடை செய்யலாம். குறுகிய கால ரகம் 120-140 நாள்களில் அறுவடை செய்யலாம். நடுத்தர கால ரகம் 150-160 நாள்களில் அறுவடை செய்யலாம்.

– டாக்டர் பெருமாள் வேளாண் அறிவியல் ஆராய்ச்சி மையத்தின் ஒருங்கிணைப்பாளர் டி.சுந்தரராஜ்

 

 

மார்கழி தைப் பட்டத்தில் நெல் சாகுபடி வயலில் பயறு வகை விதைப்பு

நெல் சாகுபடி செய்யப்பட்ட வயல்களில் உளுந்து, பாசிப் பயறு போன்ற பயறு வகை சாகுபடி மேற்கொள்ள மார்கழி, தைப் பட்டம் ஏற்ற தருணமாகும்.

தஞ்சை, நாகை, திருவாரூர், திருச்சி, நெல்லை, தூத்துக்குடி உள்ளிட்ட மாவட்டங்களில் பாசனப் பகுதிகளில் சம்பா, முன் தாளடிப் பருவ நெல் சாகுபடி அறுவடையாகும் தருணத்தில் உளுந்து, பாசிப் பயறு போன்றவை நேரடியாக விதைப்பு செய்யப்படுகிறது.

நெல் தரிசு பயறு வகை விதைப்புக்கு மார்கழி, தைப் பட்டம் ஏற்ற தருணமாகும். நிலத்தின் தன்மை மெழுகுப் பதத்தில் இருக்கும் போது, அறுவடைக்கு ஒரு வாரத்துக்கு முன்பாக விதைக்க வேண்டும். நெல் தரிசு பயறு வகை சாகுபடிக்கு ஏற்ற ரகங்களைத் தேர்வு செய்வதில் கவனம் செலுத்துவது அவசியம்.

பயறு ரகம்

குறிப்பாக, ஏ.டி.டி.3, ஏ.டி.டி.4 உளுந்து ரகங்கள் மானாவாரி மற்றும் இறவைக்கு ஏற்றவை. 70 – 75 நாள்களுக்குள் அறுவடைக்கு வருவதுடன், ஒரே நேரத்தில் காய்கள் முற்றும் சிறப்பு இயல்பு இருப்பதால், மகசூல் இழப்பு ஏற்படுவதும் குறைவாக இருக்கும். கோ.1,2,3 ரக உளுந்து 65 நாள்களில் மகசூல் தரும். இதேபோல, ஏ.டி.டி. 3 ரக பச்சைப் பயறு மூலம் 65 நாள்களில் மகசூல் எடுக்கலாம்.

பாசனம்

நெல் தரிசுப் பயறு வகையான உளுந்து, பச்சைப் பயறு பயிர்கள் ஜனவரி -பிப்ரவரி – மார்ச் மாதங்களில் பெய்யும் பனியைக் கொண்டு வளர்ந்து பலன் தருகிறது. நீர்ப்பாசனம் செய்யத் தேவையில்லை. அதிகமாக வறட்சி ஏற்பட்டால் இலை வழியாக நீர் தெளிக்கலாம்.

நோய் கட்டுப்பாடு

விதைகள் மூலம் பரவும் நோய்களைக் கட்டுப்படுத்த விதைப்பதற்கு 24 மணி நேரத்துக்கு முன்பு டிரைகொடெர்மா விரிடி எதிர் உயிர் பூசணத்தை ஒரு கிலோ விதைக்கு 4 கிராம் அளவில் கலந்து விதை நேர்த்தி செய்ய வேண்டும். இதனால் முளைப்புத் திறன் கூடுவதுடன், சீரான பயிர் எண்ணிக்கையைப் பராமரிக்க முடியும்.

பயறு வகை சாகுபடியில் பூச்சி, நோய் தாக்கம், நுண்ணூட்டம் பற்றாக்குறை, வெள்ளம், கடும் வறட்சி காரணமாக பூக்கள் உதிர்ந்து மகசூல் இழப்பை ஏற்படுத்தும். இதைத் தடுக்க பயிர் ஊக்கியான நாப்தலின் அசிடிக் ஆசிட் (என்.ஏ.ஏ) பயன்படுத்தி கட்டுப்படுத்தலாம்.

இதை, ஒரு மில்லி என்ற அளவில் நாலரை லிட்டர் தண்ணீரில் கலந்து, கைத்தெளிப்பான் மூலம் மாலை அல்லது அதிகாலையில் தெளிக்க வேண்டும். ஒரு ஹெக்டேருக்கு 624 லிட்டர் கரைசல் தேவைப்படும்.

காய்கள் அதிகம் பிடித்து மகசூலை அதிகரிக்க டி.ஏ.பி. கரைசலைத் தெளிப்பது பயனளிக்கும். ஹெக்டேருக்கு,10 கிலோ டி.ஏ.பி. உரத்தை 25 லிட்டர் தண்ணீரில் ஊறவைத்து, 12 மணி நேரத்துக்குப் பிறகு தெளிந்த கரைசலை மட்டும் 500 லிட்டர் தண்ணீரில் கலந்து கைத்தெளிப்பான் மூலம் தெளிக்க வேண்டும்.

இதை, பூக்கும் நிலையில் ஒரு முறையும், காய்கள் பிடிக்கும் தருணத்தில் மறு முறையும் காலை அல்லது மாலையில் தெளிக்க வேண்டும்.

உரிய பருவத்தில் விதைத்து, பரிந்துரைக்கப்படும் தொழில்நுட்பங்களைக் கையாண்டால் கூடுதல் மகசூல் கிடைக்கும்.

அத்துடன், பயறு வகைப் பயிர்கள் வழியாக பல்வேறு உயிர்ச் சத்துக்கள் மண்ணில் சேமிக்கப்படுவதால் மண்ணின் வளமும் அதிகரிக்கிறது.

உளுந்துப் பயிருக்கு டிஏபி தெளிப்பு

உளுந்துப் பயிரில் அதிக மகசூல் பெற அடியுரம் இடுவதுடன் கூடுதலாக இலைவழியே 2 சதவிகித டி.ஏ.பி. உரத்தினைக் கலந்து தெளிப்பது ஒரு செலவு குறைந்த எளிய, அதிக பலன் தரும் தொழில்நுட்பமாகும்.

இந்த டி.ஏ.பி. தெளிப்பை இரண்டு முறை செய்வது மிகவும் நல்லது.

  • முதல் முறை உளுந்து விதைப்பு செய்த 25-ம் நாள் அல்லது
  • பூக்கும் தருணமாகும்.

முதல் முறை தெளித்த 15 நாள் கழித்து இரண்டாம் முறை தெளிக்க வேண்டும். ஒரு ஏக்கருக்கு தெளிப்பு செய்யத் தேவையான 4 கிலோ டி.ஏ.பி. உரத்தை தெளிப்பதற்கு முந்தைய நாள் 15 லிட்டர் நல்ல நீரில் ஊற வைக்க வேண்டும்.

மறுநாள் ஊற வைத்த நீரில் தெளிவினை மட்டும் நன்றாக வடிகட்டி 185 லிட்டர் நல்ல நீரில் கலந்து ஒரு டேங்க் தெளிக்க 2 மில்லி டீபால் ஒட்டும் திரவம் கலந்து தெளிக்க வேண்டும்.

டி.ஏ.பி. அளவை பரிந்துரைத்ததை விட அதிகமாகவோ அல்லது குறைவாகவோ தெளிக்கக் கூடாது.

மேலும் அதில் நீரின் அளவு அதிகமானால் செடிகள் மஞ்சளாகவும், குறைந்தால் செடிகள் எரிந்தது போன்றும் காணப்படும். பூச்சி மற்றும் நோய் மருந்துகளுடன் கலந்து தெளிக்கக் கூடாது. இதனால் செடிகளில் பூக்களின் எண்ணிக்கை அதிகரிக்கும். பெரும்பாலான பூக்கள் பிஞ்சமாக மாறும்.

டி.ஏ.பி. தெளிப்பதால் காய் பிடிப்பு அதிகமாவதோடு காய்களில் உள்ள பருப்புகள் அனைத்தும் நன்றாக முற்றுவதுடன் திரட்சியாகவும், அதிக புரதச்சத்துடனும் எடை அதிகமாகவும் கிடைக்கும். இதனால் கூடுதல் மகசூல் கிடைக்கிறது.

தினமணி தகவல் – திருவெண்ணெய்நல்லூர் வேளாண் உதவி இயக்குநர் தேவநாதன்

உளுந்துக்கு உதவும் டி.ஏ.பி. கரைசல்

உளுந்துப் பயிரில் அதிக மகசூல் பெற டி.ஏ.பி. கரைசல் தெளிக்கலாம்.

பாளையங்கோட்டை வட்டாரத்தில் புதுக்குளம், திடியூர், கொங்கந்தான்பாறை, சிவந்திப்பட்டி, முத்தூர் கிராமங்களில் உளுந்துப் பயிர் சாகுபடி செய்யப்பட்டு தற்போது 30-40 நாள்கள் பயிராக உள்ளது. டி.ஏ.பி. கரைசல் தெளிக்க இதுவே ஏற்ற தருணம்.

உளுந்துப் பயிரை நன்செய் தரிசில் சாகுபடி செய்வதால் அடி உரமிட வாய்ப்பில்லை. அதிக மகசூல் பெற இலைவழி உரம் அளித்தல் மிகவும் அவசியம்.
செடிகள் பூக்க ஆரம்பிக்கும்போது 2 சதவிகிதம் டி.ஏ.பி. கரைசல் தயார் செய்ய ஒரு ஏக்கருக்கு தேவையான 4 கிலோ டி.ஏ.பி. உரத்தை நன்கு தூள் செய்து 10 லிட்டர் தண்ணீரில் கரைத்து ஒரு நாள் இரவு முழுவதும் வைத்திருக்க வேண்டும்.

பின்னர் மறுநாள் நீரை வடிகட்ட வேண்டும். வடிகட்டிய நீரில் 190 லிட்டர் தண்ணீர் சேர்த்து 200 லிட்டர் கலவை தயார் செய்ய வேண்டும். இந்த கலவையை மாலை நேரத்தில் கைத்தெளிப்பான் கொண்டு பயிரில் தெளிக்க வேண்டும்.

டி.ஏ.பி. 2 சதவிகித கரைசல் தெளிப்பின்போது நிலத்தில் போதுமான ஈரம் இருக்க வேண்டும். மீண்டும் கரைசலை 15 நாள்கள் கழித்து தெளிக்க வேண்டும்.
இவ்வாறு தெளித்தால் பயறு வகைப் பயிர்களில் உண்டாகும் பூக்கள் அனைத்தும் காய்களாக உருவாகி செடிகளில் காய்களின் எண்ணிக்கை அதிகரிக்கும்

தினமணி செய்தி : 22 Sep 2011 01:16:44 AM IST
பாளையங்கோட்டை வேளாண் உதவி இயக்குநர் மு. வெள்ளைப்பாண்டி.

உழவர்களுக்கு ஊக்கம் தரும் உளுந்து சாகுபடி

குறைந்த காலத்தில் கணிசமான வருவாய் ஈட்டும் விவசாயமாக உளுந்து சாகுபடி உள்ளது.

நிறைந்த ஊட்டச்சத்தும் சிறந்த மருத்துவக் குணங்களும் கொண்டது உளுந்து. எனவேதான் உளுந்தின் தேவை, தமிழகத்தில் மட்டுமன்றி இந்தியா முழுவதுக்கும் ஆண்டுதோறும் அதிகரித்து வருகிறது.

இந்தியாவில்  தமிழகம் உள்ளிட்ட பெரும்பாலான மாநிலங்களில் உளுந்து பயிரிடப்படுகிறது. எனினும் தேவையில் 85 சதவீதத்தை பர்மா உள்ளிட்ட நாடுகளில் இருந்து இறக்குமதி செய்கிறது. இந்தியாவில் 1990-91ல் 3.36 லட்சம் ஏக்கரில் 1.35 லட்சம் டன் உளுந்து உற்பத்தி செய்யப்பட்டது. 2000-2001ல் 2.75 லட்சம் ஏக்கரில் 1.32 லட்சம் டன் உற்பத்தி செய்யப்பட்டது.

தமிழகத்தில் உளுந்து உற்பத்தி பெரும்பாலும் காவிரி டெல்டா பாசனப் பகுதிகளையே நம்பி இருக்கிறது.

காவிரி பாசனப் பகுதிகளான சுமார் 16 லட்சம் ஏக்கரில் உளுந்து சாகுபடிக்கு அதிகம் வாய்ப்பு உள்ளது. கடலூர் மாவட்டத்தில் கடந்த ஆண்டு 46 ஆயிரம் ஹெக்டேரில் உளுந்து பயிரிடப்பட்டது.

சம்பா நெல் அறுவடைக்கு 10 தினங்களுக்கு முன் வயல்களில் உளுந்து விதைகளை விதைத்து விடுவார்கள். வயல்களில் உள்ள ஈரப்பதம் மற்றும் பனியால் உளுந்துப்பயிர் வளர்ந்து 60 நாள்களில் அறுவடைக்குத் தயாராகிவிடும். இதற்குச் செலவு இல்லை. ஏக்கருக்கு குறைந்தபட்சம் 150 கிலோ வரை உளுந்து கிடைக்கும் என்கிறார்கள் விவசாயிகள்.

இந்த ஆண்டு உரிய காலத்தில் காவிரி நீர் கிடைத்து இருப்பதால் உளுந்து சாகுபடிக்கு ஏற்ற சூழ்நிலை இருப்பதாக, வேளாண் அலுவலர்கள் தெரிவிக்கிறார்கள்.

தமிழகத்தில் தற்போது ஏடிடி 3, டி 9, டி.ஓ.யூ.1 வம்பன் ஆகிய உளுந்து ரகங்கள் பயிரிடப்படுகின்றன.

ஏடிடி 3 டெல்டா பகுதிகளுக்கு உகந்ததாகக் கருதப்படுகிறது.

தேவையைக் கருத்தில் கொண்டு, உளுந்தை தனிப்பயிராக சாகுபடி செய்வதற்கான நடவடிக்கைகளையும் மத்திய அரசு மேற்கொண்டு வருகிறது.

இதுகுறித்து கடலூர் மாவட்ட உழவர் மன்றங்களின் கூட்டமைப்பின் தலைவர் பி.ரவீந்திரன் கூறுகையில், “காவிரி டெல்டா பாசனப் பகுதிகளில் இந்த ஆண்டு உளுந்து சாகுபடிக்கு நிறைய வாய்ப்பு உள்ளது. நஞ்சை தரிசில் உளுந்து சாகுபடி மூலம் செலவு இல்லாமலேயே ஏக்கருக்கு ரூ. 10 ஆயிரம் வரை வருவாய் ஈட்ட முடியும்.

உளுந்தை தனிப்பயிராக இறவை பாசனத்தில் சாகுபடி செய்தால் 60 நாள்களில் ரூ. 30 ஆயிரத்துக்கு மேல் வருவாய் கிடைக்கும்.

எனவே உளுந்தை தனிப்பயிராக சாகுபடி செய்யவும், நேரடிகொள்முதல் செய்யவும் தமிழக அரசு விரைவான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்’ என்றார்.

இதுகுறித்து வேளாண்துறை அளிக்கும் தகவல்கள்:

தேசிய உணவு பாதுகாப்பு மிஷன் மற்றும் விரைவுபடுத்தப்பட்ட பயறு வகைகள் சாகுபடித் திட்டம் தமிழகத்தில் 2 ஆண்டுகளாக நடைமுறையில் உள்ளன.

இத்திட்டங்களில் விருத்தாசலம், காட்டுமன்னார்கோவில் வட்டாரங்களில் தலா 1,000 ஹெக்டேரில் உளுந்து பயிரிட நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது.

மேற்கண்ட திட்டங்களில் உளுந்து விவசாயிகளுக்கு பல்வேறு மானியங்கள், இடுபொருள்கள், பூச்சி மருந்து தெளிக்கும் கருவிகள், சொட்டு நீர் பாசனக் கருவிகள் வழங்கப்படுகிறது என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

அறுவடைக்கு அப்புறம் என்ன செய்யலாம்

மதுரை, திண்டுக்கல், சிவகங்கை, விருதுநகர் மற்றும் ராமநாதபுரம் மாவட்டங்களில் நெல் அறுவடை தீவிரமாக நடந்து கொண்டு இருக்கின்றது. ஐந்து மாவட்டங்களிலும் எடீடி 45 நெல், நல்ல விளைச்சலைக் கொடுத்துள்ளது. பெருவெட்டு நெல் அம்பை 16ம் நல்ல மகசூல் கொடுத்துள்ளது. திண்டுக்கல், சிவகங்கை, விருதுநகர் மற்றும் ராமநாதபுரம் மாவட்ட விவசாயிகள் நெல் அறுவடைக்குப் பின் என்ன செய்யலாம் என்பதைப் பற்றி யோசித்துக் கொண்டு இருக்கின்றனர். அணைக்கட்டுகளிலும், கண்மாய்கள் மற்றும் கிணறுகளிலும் தண்ணீர் வசதி சிறப்பாக உள்ளது. தற்போதுள்ள சூழ்நிலை கீழ்க்கண்ட பயிர்களை சாகுபடி செய்ய ஒரு வாய்ப்பினை உருவாக்கியுள்ளது.

நெல் சாகுபடி:

பாசன வசதி நல்லபடியாக இருக்குமிடங்களில் தைரியமாக நெல்லினை சாகுபடி செய்யலாம். தற்போது குறுகிய கால நெல் ரகங்களான ஜே-13 மற்றும் ஆடுதுறை 36 நெல் ரகங்களை சாகுபடி செய்யலாம். பச்சரிசிக்கு ஏற்ற கர்நாடகா பொன்னியை சாகுபடி செய்யலாம். ஆனால் இது பூஞ்சாள வியாதி தாக்குதலால் பாதிக்கப்பட்டு கருப்பு நெல் விழும். இதை கவனித்து ஆராய்ந்து செயல்பட வேண்டும். அடுத்து எல்லா பட்டங்களுக்கும் ஏற்ற 100 நாள் நெல்லாகிய ஜே13 போடலாம். தவறாமல் பலன் தரக்கூடிய ஜே13 நெல் ரகத்தைப் பற்றி மதுரை விவசாயிகள் நன்கு அறிவார்கள். அடுத்து ஆடுதுறை 45 ரகத்தை விவசாயிகள் போட விரும்புகின்றனர். இருப்பினும் பூஞ்சாள நோய் வராமல் தடுக்க திறன் பெற்றவர்கள் சாகுபடியில் ஈடுபடலாம்.

காய்கறி சாகுபடி:

தற்போது காய்கறி சாகுபடி செய்பவர்களுக்கு நல்ல லாபம் கிட்டும். ஆனால் காய்கறி சாகுபடி கடுமையானது. விவசாயிகள் பாடுபட்டு காய்கறி சாகுபடி செய்யலாம். குறுகிய கால காய்கறியான வெண்டையை சாகுபடி செய்து அதில் ஊடுபயிராக சீனி அவரையை (கொத்தவரை) சாகுபடி செய்யலாம். இப்பயிர் மாசி மாதத்தில் நல்ல மகசூல் தருகின்றது. வெண்டையில் இருபது அறுவடைகள் வரை கிடைக்கும். காய்கறி சாகுபடியில் பாடுபட்டு உழைத்தால் ஏக்கரில் குறுகிய காலத்தில் ரூ.8,000 வரை லாபம் எடுக்கலாம்.

உளுந்து சாகுபடி:

தை பட்டத்தில் உளுந்து சாகுபடி செய்யலாம். பாசன வசதி குறைவாக இருக்கும் இடத்தில் உளுந்து சாகுபடி செய்யலாம். விவசாயிகள் நஞ்சை நிலத்தை உழுது புழுதியாக்கி டி9  உளுந்தினை (வயது 90 நாட்கள்) விதைக்கலாம். ஏக்கருக்கு 8 கிலோ விதை தேவைப்படும். நிலத்திற்கு தொழு உரத்தோடு உயிர் உரங்களையும் அடியுரமாக இடலாம். வளர்ந்த செடிகள் மேல் டி.ஏ.பி. கரைசல் தெளிக்கலாம். சங்கு பருவத்தில் பூக்கள் தோன்றும்போது தெளிக்கலாம். பூச்சிகளை அழிக்க செவின் தூள் அல்லது எண்டோசல்பான் மருந்து தெளிக்கலாம். ஏக்கரில் 300 கிலோ மகசூல் கிட்டும். உளுந்திற்கு நல்ல விலை கிடைக்கின்றது. நெல் பயிர் அறுவடை செய்ய இருக்கும் இடத்தில் உளுந்தினை தூவலாம். தஞ்சாவூர் விவசாயிகள் இம்முறையை அனுசரிக்கின்றனர். ஆடுதுறை 2, 3, 4 போன்ற ரகங்களை நெல் தரிசில் சாகுபடி செய்யலாம். விதை விதைக்கும்போது மண் மெழுகு பதத்தில் இருக்க வேண்டும். உளுந்து சாகுபடி நஞ்சை நிலத்தின் வளத்தை கூட்டுகின்றது.

சணப்பு சாகுபடி லாபம் தரும்:

சணப்பு சாகுபடியில் கிடைக்கும் மகசூலான விதைகளை விற்று லாபம் பெறலாம். விதைகளை விதைத்து சணப்பு செடிகளை பூமியில் மடக்கி உழும்போது ஏக்கரில் 10,000 கிலோ தழை கிடைக்கும். ஏக்கரில் 37 கிலோ தழைச்சத்து கிடைக்கும். வாழை சாகுபடி செய்யும் நிலத்தில் சணப்பு செடிகளை உழுதுவிட்டால் வாழையை தாக்கும் நூற்புழுக்கள் அழிந்துவிடும். மணிலா சாகுபடியில் சணப்பு உதவுகின்றது. பூமியில் சணப்பினை விதைத்த பின் வளர்ந்து வரும் சணப்பு செடிகளை பூமியில் உழுதுவிட்டால் மணிலா பயிரை பூச்சிகள் தாக்காது.

மேலும் கிடைக்கும் மணிலா மகசூல் நல்ல தரம் கொண்டதாக இருக்கும். சணப்பினை விதை விதைத்து 80-85 நாட்களில் அறுவடை செய்யலாம். விதைகள் பிடிக்கும் இடம் செடியின் மேல் பாகத்தில் இருப்பதால் அந்தப்பகுதியை மட்டும் வெட்டி எடுத்து விதையை பிரித்து எடுத்துவிடலாம். இதனை பதப்படுத்தி விற்பனை செய்யலாம்.

மீதமுள்ள செடிகளை பூமியில் உழுது பூமியின் வளத்தை கூடுதலாக்கிவிடலாம். ஏக்கரில் 1,600 கிலோ மகசூல் கிட்டும். சணப்பு சாகுபடியில் நல்ல லாபம் கிட்டும். தற்போது மதுரை பகுதியில் நிலவும் சூழ்நிலை விவசாயிகளுக்கு தங்கள் திறமையை எடுத்துக்காட்ட ஒரு வாய்ப்பாகும். விவசாயிகளுக்கு கீழ்க்கண்ட அம்சங்கள் உதவும். (1) கடுமையான உழைப்பு (2) விஞ்ஞான தொழில்நுட்பங்களை அனுசரித்தல் (3) செயல் ஆற்றல் திறன் அல்லது நிர்வாகத்திறன்.