தர்பூசணி சாகுபடி முறைகள்!

தகிக்கும் வெயிலுக்கும், தவிக்கும் தாகத்திற்கும் அருமருந்தாக திகழ்கிறது தர்பூசணி. நீர்ச்சத்து நிறைந்த இத் தர்பூசணி நிறைய மருத்துவப் பயன்களையும் கொண்டுள்ளது. சிட்ரல்லூஸ் லனாடஸ் என்ற தாவரவியல் பெயரைக் கொண்டுள்ள தர்பூசணி குர்குபிடேசியே குடும்பத்தைச் சேர்ந்தது.

kodaisirappupathivuரகங்கள்:

 • பி.கே.எம். 1,
 • சுகர்பேபி,
 • அர்காமானிக்,
 • டிராகன் கிங்,
 • அர்கா ஜோதி,
 • அர்கா ஜஸ்வர்யா,
 • அம்ருத் அபூர்வா,
 • பூசா பெடானா,
 • புக்கிசா,
 • மைதிலா (மஞ்சள்),
 • தேவயானி (ஆரஞ்சு)

ஆகிய தர்பூசணி ரகங்கள் சாகுபடிக்கு ஏற்றவை.
அங்ககச் சத்து நிறைந்த, வடிகால் வசதியுள்ள, 6.5 முதல் 7.5 வரைய கார அமிலத்தன்மை கொண்ட மணற்சாரி நிலம் தர்பூசணிக்கு ஏற்றது. ஜனவரி முதல் மார்ச் வரை தர்பூசணி சாகுபடி செய்யலாம். நன்கு உழுது எட்டு அடி அகலப்பார் அமைத்து, பார்களுக்கிடையில் கால்வாய் பிடிக்க வேண்டும். ஏக்கருக்கு ஒன்றரை கிலோ விதை தேவைப்படும். கால்வாயை ஒட்டி மூன்று அடி இடைவெளியில் விதைகளை ஊன்ற வேண்டும். குத்துக்கு இரண்டு செடி இருக்குமாறு, விதைத்த 15ஆம் நாள் கலைத்துவிட வேண்டும்.

விதைகளை ஊன்றுமுன் நீர்ப்பாசனம் செய்ய வேண்டும். பின்னர் வாரம் ஒருமுறை நீர் பாய்ச்ச வேண்டும். சொட்டு நீர்ப்பாசனம் அமைப்பது, நீர்ப் பயன்பாட்டைச் சிக்கனமாக்கி நிறைவான மகசூல் பெற உதவும். அடியுரமாக ஏக்கருக்கு 10 டன் தொழு உரமிட வேண்டும். மேலும் ஏக்கருக்கு 22 கிலோ மணிச்சத்து தரவல்ல 140 கிலோ சூப்பர் பாஸ்பேட், 22 கிலோ சாம்பல் சத்து தரவல்ல 40 கிலோ மூரேட் ஆப் பொட்டாஷ் உரங்களை அடியுரமாக இட வேண்டும்.

விதைத்த 30ஆம் நாள் 22 கிலோ தழைச்சத்து தரவல்ல 50 கிலோ யூரியாவை மேலுரமாக இட வேண்டும். எத்தரல் வளர்ச்சி ஊக்கியை 10 லிட்டர் நீருக்கு இரண்டரை மி.லி. அளவில் கலந்து, விதைத்த 15ஆம் நாள் முதல் வாரத்திற்கு ஒருமுறை என நான்கு முறை தெளித்து மகசூலை அதிகரிக்கலாம்.

Watermelon field

பயிர்ப் பாதுகாப்பு: வண்டுகளை ஒரு லிட்டர் நீருக்கு ஒரு மி.லி. மாலத்தியான் 500 ஈ.சி. தெளித்து கட்டுப்படுத்தலாம். நன்கு உழவு செய்து பழ ஈயில் கூட்டுப் புழுக்களை வெளிப்படுத்தி அழிக்க வேண்டும். பாதிக்கப்பட்ட பழங்களை அப்புறப்படுத்தி அழிக்க வேண்டும்.

இப்பழ ஈயின் தாக்குதல், வெப்பக் காலத்தில் மிகக் குறைவாகவும், மழைக் காலத்தில் மிக அதிகமாகவும் இருக்கும். எனவே, அதற்கேற்ப விதைப்பு தேதியை நிர்ணயம் செய்ய வேண்டும்.

கருவாட்டுப் பொறி: ஒரு பாலித்தீன் பையில் 5 கிராம் நனைந்த கருவாடு, ஒரு மி.லி. டைக்குளோர்வாஸ் நனைந்த பஞ்சு வைத்து கருவாட்டுப் பொறிகளை ஏக்கருக்கு இருபது என்ற அளவில் வைத்து பழ ஈக்களைக் கவர்ந்து அழிக்கலாம்.

20 நாள்களுக்கு ஒரு முறை நனைந்த கருவாடும், வாரத்திற்கு ஒரு முறை டைக்குளோர்வாஸ் நனைந்த பஞ்சும் மாற்ற வேண்டும்.

லிண்டேன் பூச்சிக் கொல்லி மற்றும் தாமிர, கந்தகப் பூசணக் கொல்லிகள் தாவரநச்சாகப் பயிரைப் பாதிப்பதால் அவற்றை உபயோகிக்கக் கூடாது.

120 நாள்களில் ஏக்கருக்கு 15 டன் மகசூல் எடுக்கலாம். எனவே, விவசாயிகள் இந்த தொழில்நுட்பங்களைக் கடைபிடித்து,  தர்பூசணியை சாகுபடி செய்து, சமுதாயத்திற்கு உதவுவதுடன் உயர் மகசூலும் உன்னத லாபமும் பெறலாம் என்றார் அவர்.

– சேரன்மகாதேவி தோட்டக்கலை உதவி இயக்குநர் தி.சு.பாலசுப்பிரமணியன்

logo.png

தர்ப்பூசணி சாகுபடியில் அதிக லாபம் பெற…

வெப்பமண்டலம் மற்றும் மிதவெப்ப மண்டலப் பகுதிகளில் தர்ப்பூசணி பயிரிடப்படுகிறது. இப்பயிரில் உள்ள பல ரகங்கள் பல்வேறு தட்பவெப்ப நிலைகளிலும், மண் வகைகளிலும் குறைந்த செலவில் சாகுபடி செய்து அதிக லாபத்தை தரக்கூடியதாகும்.

விவசாயிகள் நெல் தரிசு நிலத்தில் தர்ப்பூசணி சாகுபடி செய்து அதிக வருவாயைப் பெறலாம்.

தர்ப்பூசணி டிசம்பர் முதல் செப்டம்பர் மாதம் வரை உள்ள நெல் தரிசு நிலத்தில் விவசாயிகள் சாகுபடி செய்யலாம்.

 • அர்கா மானிக்,
 • அர்கா ஜோதி,
 • டி.கே.எம். 1,
 • சுகர்பேபி,
 • அசாகியமாடோ,
 • சார்லஸ்டன் கிரே,
 • அம்ரூத்,
 • பூசா பேடானா மற்றும்
 • விதை உற்பத்தி நிறுவனங்களால் வெளியிடப்படும் ரகங்கள் மற்றும்
 • வீரிய ஒட்டு

ரகங்களை விவசாயிகள் சாகுபடி செய்யலாம்.

விதையும், விதை நேர்த்தியும்:

3 முதல் 4 கிலோ வரை நல்ல தரமான விதைகளாக தேர்வு செய்து பயன்படுத்த வேண்டும். விதைகளையும், இளம் செடிகளையும் நோய் மற்றும் பூச்சிகள் தாக்கமலிருக்க ஒரு ஹெக்டேருக்கு விதையுடன் 4 கிராம் டிரைகோடர்மா விரிடி அல்லது 10 கிராம் சூடோமோனாஸ் புளோரசன்ஸ் என்ற பூஞ்சாணக் கொல்லி அல்லது 2 கிராம் கார்பண்டாசிம் அல்லது திரம் என்ற பூஞ்சாண மருந்தில் ஏதேனும் ஒன்றை கலந்து விதை நேர்த்தி செய்யலாம்.

நிலம் தயார் செய்தல்:

நெல் தரிசு நிலத்தில் தர்ப்பூசணி சாகுபடி செய்ய உழவில்லா குழி நடவு முறையைப் பின்பற்றலாம். இம்முறையில் நெல் தரிசு நிலத்தில் உள்ள நெல் பயிர் அடித்தாழ் மற்றும் உளுந்துப் பயிரின் அடிச்சக்கையை நன்று சேர்த்து சுத்தம் செய்ய வேண்டும்.

இவைகளை தர்ப்பூசணிக்கு மண் போர்வையாக அல்லது மண்புழு உரம் அல்லது மட்கு தயார் செய்ய பயன்படுத்தலாம். இவ்வாறு சுத்தம் செய்யப்பட்ட நிலத்தில் 15×15 மீட்டர் இடைவெளியில் 50x50x50 செ.மீ. குழிகளை அமைக்க வேண்டும்.

இக்குழியில் உள்ள மண்ணை நன்கு கடப்பாரை மற்றும் மண்வெட்டி போன்ற கருவிகளால் கொத்தி, விதை நடவுக்கு ஏற்ற வகையில் தயார் செய்ய வேண்டும்.

இங்ஙனம் தயார் செய்யப்பட்ட குழிகளில் அடிஉரம் இட்டு குழிக்கு 5 விதைகள் வீதம் நடவு செய்ய வேண்டும். ஒவ்வொரு குழிக்கும் நட்டவுடனும், நட்ட மூன்று நாள் இடைவெளியில் மூன்று நீர்ப்பாசனம் முழுமையாக தர வேண்டும்.

உர நிர்வாகம்:

ஹெக்டேருக்கு 25 டன் தொழு உரத்துடன் 30:65:85 கிலோ தழை, மணி மற்றும் சாம்பல் சத்துகளை இட வேண்டும்.

இதில் பாதியளவு தழை, முழு அளவு மணி மற்றும் சாம்பல் சத்துகளை உழவில்லா சாகுபடி முறையில் குழியமைக்கும் போதும், மீதமுள்ள தழைச்சத்தை இரண்டு பகுதியாக நட்ட 30 மற்றும் 60 நாள்களில் இட வேண்டும்.

தொழு உரத்துக்கு பதிலாக 25 டன் மக்கிய அல்லது சாண எரிவாயுக்கு பயன்படுத்திய கரும்பு ஆலைக்கழிவு அல்லது 2.5 டன் மண்புழு உரம் அல்லது 12.5 டின் செரிவூட்டப்பட்ட தாவரமட்கு அல்லது 2.5 டன் செரிவூட்டப்பட்ட தென்னை நார்க்கழிவு மட்குகளை பயன்படுத்தலாம்.

இத்துடன் ஹெக்டேருக்கு 2 கிலோ அசோஸ்பைரில்லம் மற்றும் பாஸ்போ பாக்டீரியாவை கலந்து பயன்படுத்த வேண்டும்.

நீர்ப்பாசனம்:

தர்ப்பூசணி சாகுபடிக்கு தகுந்த நீர்ப்பாசன முறையை பயன்படுத்துவது மிகவும் முக்கியம். ஏனெனில் அப்பருவத்தில் பாசன நீரின் அளவு மிகக்குறைவு. ஆழ்துளை கிணற்றுப் பாசன வசதியுள்ளவர்கள் நல்ல முறையில் தர்ப்பூசணி சாகுபடி செய்ய முடியும்.

இவர்கள் பாத்தி பாசனம் அல்லது சொட்டு நீர்ப் பாசனம் அல்லது தெளிநீர்ப் பாசனம் என வசதிக்கேற்ப பயன்படுத்தலாம். கிணற்றுப் பாசன வசதியில்லாதவர்கள் அருகிலிருந்து வடிகால் வாய்க்காலில் இருக்கும் தண்ணீரை குடிநீர் பாசன முறையில் பயன்படுத்தலாம்.

வளர்ச்சி ஊக்கிகள்:

எத்தரல் என்னும் பயிர் வளர்ச்சி ஊக்கியை 250 பி.பி.எம். (2.5 மி.லி எத்தரல் மற்றும் 10 லிட்டர் தண்ணீர்) கரைசலாக தயார் செய்து, விதை முளைத்து செடியில் 2 இலை மற்றும் நான்கு இலை உற்பத்தியாகும் சமயத்திலும், அடுத்து 15 நாள் இடைவெளியில் 2 முறை தெளிப்பதால் பெண் பூக்களின் உற்பத்தியை அதிகரித்து மகசூலை அதிகரிக்கலாம்.

புகைமூட்டம் போடுதல்:

எத்தரல் கரைசல் தெளிக்க இயலாதவர்கள், நட்ட 15 நாள்களிலிருந்து, 15 நாள்களுக்கு ஒருமுறை வயலில் ஒரு ஓரமாக காற்றடிக்கும் திசையில் புகைமூட்டம் போட்டால், அதிக பெண் பூக்கள் உற்பத்தியாவது அறியப்பட்டுள்ளது.

இது ரசாயன முறை சாகுபடியில் தெளிக்கும் எத்திலீன் என்ற வினையூக்கி தெளிப்பதற்கு சமமானது.

களை நிர்வாகம்:

செடி வளர்ந்து படரும் இடங்களில் உள்ள களைச் செடிகளை அவ்வப்போது நீக்கிவிட வேண்டும்.

பயிர் பாதுகாப்பு:

இலை வண்டு மற்றும் புழுக்களை கட்டுப்படுத்த மாலத்தியான் 50 இசி 1 மிலி அல்லது மிதைல் டெமடான் 25 இசி 1 மிலி தெளிக்கவும், சாம்பல் நோயை கட்டுப்படுத்த 1 மிலி டினோகாப் அல்லது கார்பண்டாசிம் 0.5 கிராம் லிட்டர் என்ற அளவில் நட்ட 10 நாள்கள் இடைவெளியில் இரண்டு முறை தெளிக்கவும்.

அறுவடை: பூ மகரந்த சேர்க்கையடைந்ததிலிருந்து 40 நாள்களில் பழங்களை அறுவடை செய்யலாம். நன்குப் பழுத்த பழங்களை மட்டுமே அறுவை செய்ய வேண்டும்.

பழக்காம்பு காய்தல், பழத்தைத் தட்டினால் ஏற்படும் சப்தம் மற்றும் பழம் மண்ணில் படும் இடங்கள் பச்சை நிறத்திலிருந்து வெள்ளை அல்லது வெளிர் மஞ்சள் நிறமாக மாறுதல் போன்றவற்றை கணித்து பழமுதிர்ச்சியை அறிந்து அறுவடை செய்யலாம்.

தமிழக விவசாயிகள் நெல் பயிரிடாத காலங்களில் நெல் தரிசு நிலத்தில் தர்ப்பூசணி சாகுபடி செய்து ஹெக்டேருக்கு 50 முதல் 60 டன்கள் வரை மகசூல் பெற்று அதிக லாபம் பெறலாம் என்கிறார் பேராசிரியர் கே.மணிவண்ணன்.

தர்ப்பூசணி டிசம்பர் முதல் செப்டம்பர் மாதம் வரை உள்ள நெல் தரிசு நிலத்தில் விவசாயிகள் சாகுபடி செய்யலாம்.

 • அர்கா மானிக்,
 • அர்கா ஜோதி,
 • டி.கே.எம். 1,
 • சுகர்பேபி,
 • அசாகியமாடோ,
 • சார்லஸ்டன் கிரே,
 • அம்ரூத்,
 • பூசா பேடானா மற்றும் விதை உற்பத்தி நிறுவனங்களால் வெளியிடப்படும் ரகங்கள் மற்றும் வீரிய ஒட்டு ரகங்களை

விவசாயிகள் சாகுபடி செய்யலாம்.

தினமணி செய்தி: பேராசிரியர் முனைவர் கே.மணிவண்ணன், வேளாண்புல தோட்டக்கலைத் துறைத் தலைவர், அண்ணாமலைப் பல்கலைக்கழகம். சிதம்பரம்.

வேளாண் அரங்கம் மார்க்கெட்டில் அண்ணாமலைப் பல்கலைக் கழகம்

குறைந்த செலவில் அதிக லாபம் தரும் தர்ப்பூசணி

குறைவான செலவில் அதிகமான லாபத்தை சம்பாதிக்க தர்ப்பூசணி பயிரிட விவசாயிகளுக்கு தோட்டக்கலைத் துறை சார்பில் அழைப்பு விடப்பட்டு உள்ளது.

திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டி வட்டத்தில் மாதர்பாக்கம், போந்தவாக்கம், அமரம்பேடு, செதில்பாக்கம், மாநெல்லூர், நேமள்ளூர், பாதிரிவேடு, தேர்வாய் உள்ளிட்ட பல பகுதிகளில் தர்ப்பூசணி பயிரிட விவசாயிகள் ஆர்வத்தோடு உள்ளனர்.

அப்படி தர்ப்பூசணி பயிரிடும் விவசாயிகளுக்கு தோட்டக்கலை துறை மூலம் விதைகளை மானிய முறையில் தந்து தோட்டக்கலைத் துறையின் ஆலோசனைப்படி குறைந்த செலவில் அதிக லாபம் சம்பாதிக்க வழிகளை தெரிவிக்கின்றனர்.

 • ஒரு ஏக்கர் நிலத்தில் தர்ப்பூசணி பயிரிட ஆகும் முதலீடு ரூ. 12 ஆயிரம் முதல் ரூ.15 ஆயிரம் மட்டுமே. நிலத்தை உழுது பண்படுத்திய பின்பு 6-8 அடி அகல இடைவெளியில் கால்வாய் வெட்டிய பின் 3 அடி இடைவெளி விட்டு குழிகள் தோண்ட வேண்டும்.
 • இந்த குழியில் மக்கிய தொழு உரம், ரசாயன உரங்களை இட்டு நன்கு கலக்கிய பின்பு ஒரு குழிக்கு 3-4 விதைகளை இட்டு குழிகளை மூடி விட வேண்டும்.
 • விதை தூவிய 5-வது நாள் விதை முளைத்தல் நிகழும். இதைத் தொடர்ந்து வாரத்துக்கு ஒரு முறை தண்ணீர் பாய்ச்சினால் போதுமானது. 15-ம் நாளுக்கு பிறகு நிலத்தில் முளைத்துள்ள களைகளை அகற்ற வேண்டும். இந்நிலையில் பூச்சிமருந்து தெளித்து பயிர்களை காக்க வேண்டியது அவசியமாகும்.
 • 30-35-ம் நாளில் செடியில் பூப்பூக்க தொடங்கி அதை தொடர்ந்து காய் காய்த்து பெரிதாக தொடங்கும். பயிரிடப்பட்ட 65-75 நாள்களில் தர்ப்பூசணி நன்கு வளர்ந்து விற்பனைக்கு தயாராக இருக்கும்.

இப்படி இரண்டு மாத கால பராமரிப்பில் தர்ப்பூசணி சாகுபடி செய்யும் போது அதிகபட்ச லாபத்தை விவசாயிகள் அடைந்து பயனடையலாம் என்கின்றனர் தோட்டக்கலைத் துறையினர்.

 • ஒரு ஏக்கர் நிலத்தில் நல்ல பராமரிப்புக்கு தக்கவாறு 10 டன் தர்ப்பூசணி வரை விளைச்சலாக வாய்ப்புண்டு. தற்சமயம் ஒரு டன் தர்ப்பூசணி ரூ. 7 ஆயிரம் முதல் ரூ.8 ஆயிரம் வரை விலை போகிற நிலையில் குறைந்தபட்சம் ஒரு ஏக்கர் நிலத்தில் விளையும் 10 டன் தர்ப்பூசணியை விற்பதன் மூலம் ரூ.70 ஆயிரம் வரை விற்கலாம்.
 • செலவுகள் போக குறைந்தபட்சம் ரூ.50 ஆயிரம் லாபத்தை 2 மாதங்களில் விவசாயிகள் பெற்று லாபம் பெற வாய்ப்பு உள்ளதால் தர்ப்பூசணி ஒரு லாபகரமான விவசாயப் பயிர் என தோட்டக்கலைத் துறை அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். மேலும் தர்ப்பூசணி பயிரிடும் விவசாயிகளுக்கு நல்ல தரமான விதைகளை 50 சதவீதம் மானியத்துடன் தோட்டக்கலைத் துறை தருகிறது.
 • அதே போல தோட்டக்கலைத் துறையோடு சேர்ந்து தேசிய வேளாண் நிறுவனமும் தர்ப்பூசணி பயிரிடும் விவசாயிகளுக்கு கருவிகள், பாஸ்வோபாக்டீரியா, சூடாமோனாஸ் போன்ற உயிரி உரங்களை பெற்று தருகின்றனர்.
 • கூலியாள்கள் கிடைக்க சிரமமாய் இருக்கும் இது போன்ற நாள்களில் குறைந்த ஆட்களைக் கொண்டு தோட்டப் பயிரான தர்ப்பூசணி பயிரிடுவது எளிதாக உள்ளதாலும் அதில் நிறைய லாபம் கிடைப்பதாலும் விவசாயிகள் இதைப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.