தக்காளியில் உயர் விளைச்சல் வேண்டுமா?

தக்காளி சாகுபடியில் உயர் விளைச்சல் பெற நவீன தொழில்நுட்பங்களை கடைப்பிடிக்க வேண்டியது அவசியம் என்று வேளாண்மைத் துறை தெரிவித்துள்ளது.

 • பி.கே.எம்-1,
 • கே.பி.ஹெச்-1,
 • கோ.பி.ஹெச்-2,
 • யு.எஸ்.-618,
 • ருச்சி,
 • லட்சுமி

ஆகிய ரகங்களைத் தேர்வு செய்யலாம்.

உர அளவு:

மண் பரிசோதனை செய்து அதற்கேற்ப உரமிடுதல் வேண்டும். சொட்டுநீர்ப் பாசனம் அமைத்து நீர் வழி உரமிடுதல் மூலம் மகசூலை இரட்டிப்பு செய்ய முடியும்.
kodaisirappupathivu
நடவு செய்த 30ஆவது நாளும், நன்றாகப் பூத்திருக்கும் நிலையிலும் 1.25 மில்லி கிராம் என்ற அளவில் வளர்ச்சி ஊக்கியை ஒரு லிட்டர் தண்ணீரில் கலந்து தெளிக்க வேண்டும்.

துல்லிய பண்ணையத்தில் வீரிய ஒட்டு ரகங்களை நடவு செய்தால் ஹெக்டேருக்கு 150 டன்கள் வரை பெற முடியும். நடவு செய்த 9 மாதம் வரை அறுவடை செய்யலாம்.

பச்சைக் காய்ப்புழு, புகையிலைப் புழுக்களைக் கட்டுப்படுத்த ஒருங்கிணைந்த பூச்சி நிர்வாகத்தை மேற்கொள்ள வேண்டும்.

தக்காளி

கோடை உழவு:

கோடை உழவு செய்வதன் மூலம் கூட்டுப் புழுக்களை அழிக்கலாம். இனக்கவர்ச்சிப் பொறி பயன்படுத்தியும் பூச்சிகளை கட்டுப்படுத்தலாம். டிரைகோகிரம்மா என்னும் முட்டை ஒட்டுண்ணியை ஹெக்டேருக்கு 50 ஆயிரம் என்ற அளவில் பூக்கும் தருணத்தில் விட வேண்டும். குழித்தட்டுகளில் வளர்க்கப்பட்ட வாளிப்பான நாற்றுகளை நடவுக்குப் பயன்படுத்த வேண்டும்.

பழங்களை அறுவடை செய்த பிறகு அவற்றை தரம் பிரித்து பிளாஸ்டிக் கிரேடுகளில் நிரப்ப வேண்டும். பழங்களின் எடை ஒவ்வொரு ரகத்துக்கு மாறுபடும்.

எனவே, பழங்களை அளவு அடிப்படையில் விற்பனை செய்யக் கூடாது. எடை அடிப்படையில் விற்பனை செய்வதன் மூலம் கூடுதல் லாபம் பெற முடியும் என்று வேளாண்மைத் துறை அலுவலர்கள் தெரிவித்துள்ளனர்.

இயற்கை முறையில் தக்காளி சாகுபடி: ஹெக்டேருக்கு 25 டன் வரை மகசூல்

செயற்கை உரங்களை பயன்படுத்தி தக்காளி சாகுபடி செய்வதைக் காட்டிலும், இயற்கை வழி வேளாண் முறையில் தக்காளி சாகுபடி செய்வதன் மூலம் அதிக மகசூல் பெற்று லாபம் பெறலாம் என  தெரிவித்தார்.

அவர் கூறியதாவது: தக்காளி சாகுபடி பொதுவாக கோடைப் பருவத்திலும் இல்லாமல், மழைக்காலத்திலும் இல்லாமல் இதுபோல் இடைபட்ட காலத்தில் செய்வது அதிக லாபம் தரும். மேலும் பூச்சிகளின் தாக்குதல், நோய் பாதிப்பில் இருந்து இப்பருவத்தில் எளிதாக காக்க முடியும்.

நாற்றங்கால் முறை:

மண்ணைத் தோண்டி அடித்தாள்களை அகற்ற வேண்டும். 10 நாள்கள் சிதைவு ஏற்பட நிலத்தை விட்டு விட வேண்டும். வடிகால் நன்றாக அமைவதற்கு உயரமான பாத்திகள் அமைக்கவும். தொழு உரம் அல்லது கம்போஸ்ட், செம்மண், மணல் ஆகியவற்றை சம அளவில் நன்றாக கலந்து நிலத்தில் இட வேண்டும். தொழு உரத்துடன் அசோஸ் பைரில்லத்தை 1 சதுர மீட்டருக்கு 20 கிராம் என்ற அளவில் இட வேண்டும்.  பாஸ்போ பாக்டீரியாவையும் 1 சதுர மீட்டருக்கு 20 கிராம் என்ற அளவில் இட வேண்டும். நாற்று அழுகல் நோயைக் கட்டுப்படுத்த கோதுமைத் தவிடு, மக்கிய மண் ஆகியவற்றை சம அளவில் கலந்து இட வேண்டும்.

விதை அளவு:

நாட்டு ரக விதைகள் ஒரு ஹெக்டேருக்கு 400 கிராமும், வீரிய ஓட்டு ரக விதையாக இருந்தால் ஒரு ஹெக்டேருக்கு 150 கிராமும் இட வேண்டும்.

விதை நேர்த்தி:

விதை உற்பத்தி நிறுவனங்களால் ரசாயனப் பொருள்களை கொண்டு நேர்த்தி செய்யப்பட்ட விதைகளை தவிர்க்க வேண்டும். விதைப்பதற்கு 24 மணி நேரத்துக்கு முன், 1 கிலோ விதையை ட்ரைக்கோடெர்மா விரிடியுடன் கலந்து நேர்த்தி செய்யலாம். விதைப்பதற்கு முன் 400 கிராம் விதையுடன் 40 கிராம் அசோஸ் பைரில்லத்தை கலக்க வேண்டும். வீரிய ஒட்டு ரக விதைகளுக்கு 20 கிராமுக்கு 150 கிராம் என்ற அளவில் கலக்க வேண்டும். நாற்றங்கால் பாத்தியில் 10 செ.மீட்டர் இடைவெளி விட்டு வரிசையாக விதைக்க வேண்டும்.

நடவு வயல்:

சரியான ஈரப்பதத்தில் வயலை 3 அல்லது 4 முறை உழவு செய்யவேண்டும். 10 நாள் சிதைவு ஏற்படுவதற்காக விட வேண்டும். பசுந்தாழ் உரமாக சணப்பை விதைத்து 35 நாட்களுக்குப் பின் மடக்கி உழ வேண்டும். கடைசி உழவுக்கு முன் ஹெக்டேருக்கு 25 டன் வீதம் தொழு உரம் அல்லது கம்போஸ்ட் இடலாம். நடவுக்கு முன் 20 கிலோ தொழு உரத்துடன் அசோஸ் பைரில்லம் 2 கிலோ (1 ஹெக்டேருக்கு) பாஸ்போ பாக்டீரியா 2 கிலோ ஆகியவற்றை கலந்து இட வேண்டும். 60 செ.மீட்டர் இடைவெளியில் பார்கள், உழவு சால்கள் அமைக்க வேண்டும். ஒரு ஹெக்டேருக்கு 12 எண்ணிக்கை என்ற அளவில் இனக் கவர்ச்சி பெரோமோன்களை அமைக்க வேண்டும். பேசில்லஸ், துரின்ஷியன்சிஸ் 2 கிலோ என்ற அளவில் தெளிக்கவும். தாக்கப்பட்ட பழங்களை அப்புறப்படுத்தி அழிக்கவேண்டும். வேப்பெண்ணெய் 3 சதவீதம், வேப்ப விதை பருப்புச் சாறு 5 சதவீதம் என்ற அளவில் தெளித்து பூச்சி பரவுதலைத் தடுக்க வேண்டும்.

புள்ளியிட்ட அழுகல் வைரஸ்:

10 சதவீத சோள இலைச்சாறு, அல்லது ப்ரோசோபிஸ் அல்லது தேங்காய்ச் சாறு 15 நாள் இடைவெளியில் தெளிப்பதன் மூலம் வைரஸ் தாக்குதலில் இருந்து பாதுகாக்க முடியும்.

அறுவடை:

முக்கால் பருவ முதிர்ச்சியில் பழங்களை அறுவடை செய்யவும். அதிக அளவு பழுக்க விடக்கூடாது. இலை மற்றும் செடியின் அனைத்து பாகங்களையும் எடுத்து அவற்றை கம்போஸ்ட் செய்யவேண்டும். பொதுவாக 1 ஹெக்டேருக்கு 15 டன் வரை மகசூல் பெற முடியும். மேற்கண்ட இயற்கை வேளாண் முறைகளின்படி தக்காளி சாகுபடி செய்தால் ஹெக்டேருக்கு 20 முதல் 25 டன்கள் வரை நிச்சயம் மகசூல் செய்ய முடியும்.

இதுகுறித்த மேலும் விவரங்களுக்கு உதவிப் பேராசிரியர்கள் மணிமேகலை மற்றும் முரளிதரன் ஆகியோரை 9444339404, 9894540420 என்ற மொபைல் எண்களில் தொடர்பு கொண்டு அறிந்து கொள்ளலாம் என்றார் கோ.வி.ராமசுப்பிரமணியம்.

தினமணி தகவல் – கோ.வி.ராமசுப்பிரமணியன், தலைவர், திரூர் நெல் ஆராய்ச்சி நிலையம்

தக்காளியில் இலைப்புள்ளி நோய்

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் சுமார் 5 ஆயிரம் ஹெக்டேர் பரப்பளவில் தக்காளி சாகுபடி செய்யப்படுகிறது. இங்கு ஆண்டுக்கு 3 லட்சம் டன் தக்காளி உற்பத்தியாகிறது.

தற்போதுள்ள பருவ நிலை காரணமாக தக்காளி பயிரில் இலைப்புள்ளி நோயின் தாக்குதல் அதிகம் காணப்படுகிறது. குறிப்பாக சூளகிரி, காமன்தொட்டி, பேரிகை மற்றும் கிட்டம்பட்டி பகுதிகளில் இந்நோயின் தாக்குதல்கள் அதிகம் காணப்படுகிறது. இதனால் 60 சதவீதம் மகசூல் பாதிக்கப்பட வாய்ப்புள்ளது.

நோய்க்கான அறிகுறிகள்:

இலைப்புள்ளி நோய், பாக்டீரியாவால் ஏற்படுகிறது. இந்நோய் தக்காளி பயிரின் இலை, தண்டு, பூ மற்றும் காய்களைத் தாக்கும் தன்மை கொண்டது. தாக்கப்பட்ட பயிரின் இலையின் மேல் வட்ட வடிவமாக அல்லது ஒழுங்கற்ற கருமை நிற புள்ளிகள் முதலில் காணப்படும். பின்னர் இந்தப் புள்ளிகளைச் சுற்றிலும் மஞ்சள் நிற வளையங்கள் தோன்றும். குறிப்பாக இந்தப் புள்ளிகள் இலையின் ஓரங்கள் மற்றும் நுனிப் பகுதியில் காணப்படும். பிறகு இவை பெரிய புள்ளிகளாக மாறும். நோய்த் தாக்குதலுக்கு உள்ளான பயிர்கள் கருகியது போல் காணப்படும். பின்னர் செடியானது காய்ந்து உதிர்ந்து விடும்.

சிறிய அடர்ப் பழுப்பு அல்லது கருமையான புள்ளிகள் இளம் காய்கள் மீது காணப்படும். காய் பழுக்கும்போது இவை மறைந்து விடும் என்றாலும், நோய்த் தாக்கப்பட்ட பழங்களில் இந்தப் புள்ளிகள் அதிகம் காணப்படும். இதனால் பழத்தின் தரம் குறையும்.

இலைப்புள்ளி நோய், பல மாதங்கள் விதைகளில் தங்கியிருக்கும். செடிகள் வளரும்போது காற்று மற்றும் மழையால் ஒரு செடியிலிருந்து மற்றோரு செடிக்குப் பரவும்.

இதனால், நோய் எதிர்ப்புத்திறன் கொண்ட ரகங்களையோ, நோய்த் தாக்குதல் இல்லாத விதைகளையோ தேர்வு செய்வது நல்லது.

நோயை கட்டுப்படுத்தும் முறை:

சூடோமோனாஸ் பாக்டீரியா கலவையை ஒரு கிலோ விதைக்கு 10 கிராம் கலந்து விதை நேர்த்திச் செய்ய வேண்டும். வயல் மற்றும் வரப்புகளில் களைகளை அகற்றி சுத்தமாக வைக்க வேண்டும். நோய்த் தாக்குதலுக்கு உள்ளான பயிரை பிடுங்கி அழிக்க வேண்டும்.

நோய்த் தாக்குதல் காணப்பட்டால், பாக்டீரிய கொல்லியான அக்ரிமைசின் 6 கிராமை 50 லிட்டர் நீரில் கலந்து 10 நாள்கள் இடைவெளியில் 3 நாட்களுக்கு தெளிக்க வேண்டும்.   மேலும், ஸ்டெரப்டோமைசின் 6 கிராம் மற்றும் காப்பர் அக்ஸி குளோரைடு அல்லது மேன்கோசேப் (மேன்கோசைடு) 100 கிராம் மருத்தை 50 லிட்டர் தண்ணீரில் கலந்து செடியின் தண்டுப் பகுதியில் தெளிக்க வேண்டும்

வயலில் நீர் தேங்காமல் பார்த்துக் கொள்வது நல்லது. தக்காளி, மக்காச்சோளம், தட்டைபயிறு என சுழற்சி முறையில் பயிர் செய்வதன் மூலம் இந்நோயை கட்டுப்படுத்தலாம் என்றார் அவர்.

தினமணி தகவல் – பேராசிரியர் கல்பனா, வேளாண்மை பல்கலைக்கழகம், பையூர்

புதிய ரக தக்காளி

புதிய ரக த.வே.ப.க. தக்காளி – வீரிய ஒட்டு3-

இந்த ரகம் சமீபத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

 • எக்டருக்கு 96.2 டன் பழமகசூல் கொடுக்கக் கூடியது.
 • இது கோடிஎச்.2, லட்சுமி ரகங்களைக் காட்டிலும் முறையே 9.76 மற்றும் 42.24 சதம் கூடுதல் மகசூலாகும்.
 • அதிகபட்ச மகசூலாக எக்டருக்கு 129.5 டன் கொடுக்க வல்லது.
 • வயது – 145-150 நாட்கள்.
 • பருவம் – பிப்ரவரி-மார்ச், மே-ஜூன், நவம்பர்-டிசம்பர்.

பயிரிட உகந்த மாவட்டங்கள்:

கோவை, சேலம், கடலூர், தஞ்சாவூர், மதுரை, தேனி, காஞ்சிபுரம், தூத்துக்குடி, திண்டுக்கல், திருச்சி, தர்மபுரி, கிருஷ்ணகிரி, வேலூர், திருவண்ணாமலை.

சிறப்பியல்புகள்:

அடர்நடவு முறைக்கு ஏற்றது. பழங்கள் கொத்தாகவும், (கொத்திற்கு 3-5 பழங்கள்), 55.65 கிராம் எடையுடனும், உருண்டை வடிவிலும் இருக்கும். பழங்களில் 5.58 பிரிக்ஸ் மொத்த கரையும் திடப்பொருளும், 0.73 சதம் புளிப்புச்சுவையும், 35.72 மி.கி/100 கி வைட்டமின் சி சத்தும் அடங்கியுள்ளது. இலைச்சுருள், நச்சுயிரி நோய், வேர்முடிச்சு நூற்புழுவுக்கு மித எதிர்ப்புத்திறன் கொண்டது.