உழவர்களுக்கு வேளாண் பல்கலை வழக்கும் இளநிலைப் பட்டம்

உழவர்களுக்கு இளநிலைப் பட்டம் (பி.எப்.டெக்)., படிப்பை தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகம் உழவர்களுக்கென்று முதன் முதலாக துவங்கிஉள்ளது. உலகிலேயே இது ஒரு முன்னோடி திட்டம். பல்கலைக் கழகத்தின் திறந்தவெளி மற்றும் தொலைதூரக் கல்வி இயக்ககம், கோயம்புத்தூர்-641 003 மூலம் இந்த ஆண்டு அறிமுகப் படுத்தியுள்ளது.

சிறப்பு அம்சங்கள்:

  • இளநிலை பண்ணைத் தொழில்நுட்ப பட்டப்படிப்பின் வழியாக உழவர்கள் சுயதொழில் முனைவராகலாம்.
  • அனுபவம் வாய்ந்த வேளாண் விஞ்ஞானிகள் மூலம் வடிவமைக்கப்பட்ட பயிற்சி புத்தகங்கள் வழங்கப்படும்.
  • நிலத்தினை பண்படுத்துதல் முதல் அறுவடை வரையும் தானியங்களை சேமித்தல், பதப்படுத்துதல் மற்றும் மதிப்பூட்டுதல் வரை அனைத்து தொழில்நுட்பங்களையும் அறிந்துகொள்ளலாம்.
  • தொழில்நுட்பங்களுக்கான செயல்முறை விளக்கங்கள் நேர்முகப் பயிற்சி வழியாக எளிய முறையில் நடத்தப்பட உள்ளது.
  • இப்பட்டப்படிப்பு எளியமுறையில் தமிழில் பயிற்றுவிக்கப்பட உள்ளது.
  • பருவமுறையில் (செமஸ்டர் சிஸ்டம்) 3 ஆண்டுகளுக்கு 6 பருவங்களில் பாடங்கள் நடத்தப்பட உள்ளன.

தகுதிகள்:

உலகிலேயே முதன்முறையாக வேளாண் மக்களுக்காக அறிமுகப்படுத்தப் பட்டுள்ள இளநிலை பண்ணைத் தொழில்நுட்ப பட்டப்படிப்பில் 10ம் வகுப்பு படித்த 30 வயது நிரம்பிய அனைவரும் சேர்ந்து பயன்பெறலாம். உழவர்கள் அனைவரும் இந்த அரிய வாய்ப்பை பயன்படுத்தி வேளாண்மை மற்றும் அறிவியல் அடிப்படையில் இப்பட்டப்படிப்பின்மூலம் அறிந்து பயனடையுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். மேலும் விபரங்களுக்கு

இயக்குநர்,

திறந்தவெளி மற்றும் தொலைதூரக் கல்வி இயக்ககம்,
தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகம்,
கோயம்புத்தூர்-641 003.
0422-661 1229, 94421 11047, 94421 11048,
மின்அ ஞ்சல்: odl@tnau.ac.in
இணையதளம்: www.tnau.ac.in.

தினமலர் தகவல் முனைவர் கு.சௌந்தரபாண்டியன்.

தென்னை, பனைமரம் ஏற உதவும் கருவி

வேளாண் பல்கலையின் தென்னைமரம் ஏறும் கருவி பற்றி பலருக்கும் பரவலாகத் தெரியும். அதைப் பற்றி ஏற்கனவே செய்தியும் வெளியிட்டு இருந்தோம். அதைப் பின்பற்றி சந்தையிலிருந்து இந்த செய்தி வந்துள்ளது.

உயரமாக வளரும் அல்லது வளர்த்தக் கூடிய பனை, தென்னை, தேக்கு, குமிழ், மலைவேம்பு மற்றும் தேயிலை தோட்ட மரமான சில்வர் ஓக் மரங்களில் அறுவடை, பராமரிப்பு சமயங்களில் மரம் ஏறி வேலை செய்ய ஆட்கள் பற்றாக்குறையாக உள்ளதால் விவசாயிகள், மரம் வளர்ப்போர் பெரிதும் சிரமப் படுகின்றனர். கால் மற்றும் இடுப்பில் கயிற்றை இணைத்து மரத்தோடு நெஞ்சை உரசியபடி கைகளால் மரத்தை கட்டிப்பிடித்து உடலை வருத்திக்கொண்டுதான் மரம் ஏற வேண்டும் என்பதால் மரம் ஏறி பழக யாரும் முன்வருவதில்லை. அதிலும் பாதுகாப்பின்மை பயமும் கூட.

இந்நிலை மாற உருவானதுதான் Multi Tree Climber.  பாதையில் நடப்பதை விட பாதுகாப்பானது. இக்கருவியின் உதவியுடன் பழக்கமில்லாதவர்கள், பெண்கள், சிறுவர்கள், இளைஞர்கள் என அனைத்து தரப்பினராலும் மரம் ஏறமுடியும். தனிநபர் வேலைவாய்ப்பின் மூலம் பொருளாதாரம் மேம்படையச் செய்யும் வகையில் கருவியின் முக்கிய பாகங்கள் ஸ்டெயின்லஸ் ஸ்டீல் என்ற சதுர வடிவ எக்கு குழாயினால் பிரத்யேகமாக தயாரிக்கப் பட்டுள்ளது. மரத்தில் இரும்பு பாகங்கள் படும் பகுதியில் மரங்களுக்கு சேதம் ஏற்படா வண்ணம் ரப்பர் உருளைகள் பொருத்தப் பட்டுள்ளது. குறைந்த எடை எங்கும் எடுத்துச்செல்ல எளிது. மரத்தின் சுற்றளவிற்கேற்ப கருவியில் இருந்தவாறே சரிசெய்யும் வசதி, மரத்தின் உச்சியில் நிறுத்திவிட்டு மட்டையின் மீதேறிச் செல்லவும். சுற்றி வந்து காய் பறிக்கவும், கிளைகளை வெட்டவும் முடியும். இக்கருவி அதிக பட்சமாக 70 கிலோ எடையை தாங்கவல்லது. பராமரிப்பு செலவு ஏதுமின்றி மேற்கூறிய அனைத்து மரங்களிலும் ஏறி இறங்க இக்கருவி ஒன்றே போதுமென்பது தனிச்சிறப்பாகும்.

கருவி பற்றிய செயல்முறை விளக்கம்

மரம் ஏறுபவர் பாதுகாப்பு கச்சையை உடலில் அணிந்துகொள்ளவும். முதலில் கீழ்ப்பகுதியை அடுத்து மேல்பகுதியை மரத்தில் சரியாகப் பொருத்தவும். இணைப்பு கச்சையால் இணைக்கவும். கால்வைக்கும் பகுதியில் ஏறி நின்று இரு கைகளாலும் மேல்பகுதியை மேல் நோக்கியவாறு எடுத்து மரத்துடன் சற்று சாய்ந்த நிலையில் வைத்து பின் அமரவும். பாதுகாப்பு கச்சையின் மறு முனையை அதற்குரிய இடத்தில் பொருத்தவும். மேல் மற்றும் கீழ்ப்பகுதியின் இணைப்பு கச்சையை மரம் ஏறுபவரின் கால்களின் உயரத்திற்கேற்ப சரிசெய்து கொள்ளவும். தயார் நிலையில் அனைத்தையும் சரிபார்க்கவும். கருவியில் அமர்ந்த நிலையில் கீழ்ப்பகுதியை மேல் நோக்கியவாறு கால்களின் உதவியோடு சரிசமமாக எடுத்துவைத்த நிலையில் சற்றே அழுத்தியவாறு எழுந்து நிற்கவும். 3ம் நிலை மற்றும் 7ம் நிலையில் கூறியுள்ளபடி மாற்றி மாற்றி செய்யும்போது மரம் ஏற ஏதுவாகிறது. இறங்க வேண்டுமென்றால் கீழ்நோக்கியவாறு எடுத்து வைத்து வரவேண்டும். மரத்தின் சுற்றளவிற்கேற்ப / பிடிமானத்திற்கேற்ப / மரத்தின் மீது சுற்றி வர / நிறுத்தி வைக்க கீழ்க்கண்டபடி செய்யவும்.

மரம் ஏறும் கருவி

மரம் ஏறும் கருவி

கீழ்ப்பகுதியில் நின்றவாறே மேல்பகுதியை சமமாக வைத்த நிலையில் நீட்ட, குறைக்க அல்லது நிறுத்திவைக்க அதற்குண்டான பாகங்களை பயன்படுத்திக் கொள்ளவும். மேல்பகுதியில் அமர்ந்தவாறே கீழ்ப்பகுதியை சமமாக வைத்த நிலையில் நீட்ட, குறைக்க அல்லது நிறுத்தி வைக்க அதற்குண்டான பாகங்களை பயன்படுத்திக் கொள்ளவும்.

தொடர்புக்கு:

வெங்கட் 0 99442 84440

கே.சத்தியபிரபா 94865 85997, 97501 20222