வர்த்தக உள்நோக்கம் கொண்ட அமெரிக்க பல்கலை ஆய்வு முடிவு

இயற்கை வேளாண்மை குறித்த விழிப்புணர்வு மெல்ல மெல்லப் பரவி வரும் வேளையில், அதற்கு எதிரான ஆய்வு முடிவினை அறிவித்துள்ளது அமெரிக்காவில் உள்ள ஸ்டான்ஃபோர்டு பல்கலைக்கழகம். இயற்கை வேளாண்மையில் விளைந்த உணவுப்பொருள்களில் (ஆர்கானிக் ஃபுட்) உடல்நலத்துக்கான பயன்கள் இருப்பதாகக் கூறப்படுவதற்கு மிகக் குறைந்த சான்றுகளே உள்ளன என்பதுதான் அந்த முடிவு.

இந்தியாவில் தற்போதுதான் இயற்கை வேளாண் விளைபொருளுக்கான சந்தை தொடங்கியிருக்கிறது. அதன் விற்பனை சுமார் 20% அதிகரித்துள்ளது என்கிறார்கள். இருப்பினும், ரசாயன உரங்களில் விளைந்த அரிசி, பருப்பு, காய்கறிகளைவிட, இயற்கை வேளாண் விளைபொருள்களின் விலை இரு மடங்கு. இதற்கு நுகர்வோர் குறைவு என்றாலும் அண்மைக்காலமாக, உயர் -நடுத்தர வருவாய்ப் பிரிவினரும் இத்தகைய இயற்கை வேளாண் விளைபொருள்களுக்கு மாறத் தொடங்கியுள்ள வர்த்தகச் சூழலில்தான் இந்த ஆய்வு முடிவுகள் ஊடகங்கள் மூலம் இந்தியாவில் பரப்பப்படுகின்றன.

“”வேளாண் விளைபொருள்களை மட்டுமே உட்கொள்ளும் பசுக்களின் பாலை ஆய்வு செய்ததில், மற்ற பசுக்களின் பாலில் இருக்கும் புரதம், கொழுப்பு ஆகியவற்றில் பெரிய மாறுபாடு காணப்படவில்லை. உணவு தானியங்களிலும்கூட, இயற்கை வேளாண்மையில் விளைந்தது என்பதால் அதில் கூடுதலாக வைட்டமின் இல்லை. இருப்பினும், இயற்கை வேளாண் உணவுப் பொருள்களில் கொஞ்சம் பாஸ்பரஸ் கூடுதலாக இருக்கிறது. அதைத் தவிர வேறு பயன் இல்லை” என்று அந்த ஆய்வு சொல்கிறது.

இதையெல்லாம் விடவும், அவர்கள் அதிக அழுத்தம் தரும் வாதம் வேறொன்று இருக்கிறது. “இயற்கை வேளாண்மையில் விளைந்ததால் மட்டுமே காய்கறிகளும் பழங்களும் 100% ரசாயனங்களே இல்லாமல் இருக்கும் என்று சொல்லிவிட முடியாது. என்னதான் இயற்கை வேளாண்மையில் விவசாயம் செய்தாலும்கூட, 30% ரசாயனம் காணப்படவே செய்யும்’ என்பதுதான் இந்த ஆய்வு சொல்லும் முடிவு. இந்த ஆய்வின் “உண்மையான நோக்கம்’ வர்த்தகத்தை முன்வைத்தது என்பதை இந்த முடிவு ஒன்றே வெளிப்படுத்திவிடுகிறது.

ரசாயன உரங்களைப் பயன்படுத்தாமல், இயற்கை வேளாண் முறைகளில் விளைவிக்கப்பட்ட காபி, தேயிலை, வெல்லம், மிளகு போன்ற உணவுப் பொருள்கள் இந்தியாவிலிருந்து சுமார் ரூ.1,000 கோடிக்கு ஏற்றுமதியாகின்றன. இந்த ஏற்றுமதி மேலும் அதிகரிக்கலாம்.

அத்துடன், இந்தியாவிலிருந்து ஏற்றுமதியாகும் பழங்கள், காய்கறிகளின் அளவும் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. தற்போது 2011-12-ஆம் ஆண்டில் ரூ. 2,830 கோடி ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது. நிகழாண்டில் பழங்கள் காய்கறி ஏற்றுமதி இலக்கு ரூ.6,420 கோடி! அடுத்த ஐந்து ஆண்டுகளில் 13,000 கோடிக்கு உயர்த்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இவ்வளவு காலமாக, இந்தியாவிலிருந்து வரும் காய்கறி, பழங்களில் ரசாயனக் கலப்பு அதிகமாக இருக்கும் என்கின்ற எண்ணம்தான் ஐரோப்பிய நாடுகளில் இருந்தது. தற்போது அத்தகைய எண்ணம் தகர்ந்துள்ளது. இந்தியாவில் விளைவிக்கப்படும் காய்கறி, பழங்கள் உற்பத்தியில், ஐரோப்பிய நாடுகள் தடைசெய்துள்ள ரசாயன உரங்கள் பயன்படுத்தப்படுவதில்லை என்பதால்தான் ஏற்றுமதி அதிகரிக்கிறது.

மேலும், இயற்கை வேளாண்மைக்கு வெளிநாடுகளில் அதிக வரவேற்பு இருப்பதாலும், அதிகவிலை காரணமாக அதற்கு உள்ளூர் சந்தையில் விற்பனை வாய்ப்பு குறைவு என்பதாலும், இயற்கை வேளாண்மையில் விளைவிக்கப்படும் பழங்கள், காய்கறிகளை ஏற்றுமதி செய்வதன் மூலம்தான் வியாபாரிகள் லாபம் பார்க்க முயலுவார்கள். ஆகவே, வளரும் இந்தியச் சந்தைக்கு முட்டுக்கட்டை போடத்தான் இத்தகைய ஆய்வுகள் மூலம், “இயற்கை வேளாண்மையில், உடல்நலனுக்குப் பெரும் நன்மை விளையாது, முழுக்க முழுக்க ரசாயனம் இல்லாமல் இருக்கும் என்று சொல்லிவிட முடியாது’ என்றெல்லாம் உலகுக்குச் சொல்கிறார்களோ என்று சந்தேகப்படத் தோன்றுகிறது.

அரசியலில் எதிர்க்கட்சித் தலைவர்கள் மீது எதையாவது சொல்லி அவர்களது வாக்கு வங்கிகளைச் சிதைக்கும் பிரசாரத்தைப் போன்றதுதான், அறிவியல் உலகில் வெளியிடப்பட்டிருக்கும் இத்தகைய ஆய்வு முடிவுகள். மேலெழுந்தவாரியான உண்மை, அடியிழையோடும் உள்நோக்கத்தை மறைத்துவிடும்.

இந்தியாவில் எந்த மண்ணில் எந்தப் பொருள் விளைவித்தாலும், கொஞ்சம் ரசாயனம் இருக்கவே செய்யும். அந்த அளவுக்கு இந்திய மண்ணில் உரத்தைக் கொட்டியுள்ளோம். இந்தியா மட்டுமல்ல, ரசாயன வேளாண்மை செய்யும் எல்லா நாடுகளிலும் இதேதான் நிலைமை.

இயற்கை வேளாண்மையில் விளைந்த உணவுப்பொருளுக்கும் ரசாயன உரம் பயன்படுத்தப்பட்ட உணவுப்பொருளுக்கும் அதிக வித்தியாசம் இல்லை என்பது உண்மையாகவே இருந்தாலும், உடல்நலனுக்குத் தீங்கு விளைவிக்கும் பொருள்கள் நிச்சயமாக இல்லை. புற்றுநோயை உருவாக்கும் கார்சியோஜெனிக் போன்ற வேதிப்பொருள்கள் நிச்சயமாக இல்லை.

இந்திய மக்கள்தொகைக்கு ஏற்ப உணவுப் பொருள் உற்பத்தி செய்வது அவசியம் என்பதால், ஒரேயடியாக ரசாயன உரங்களைக் கைவிட்டுவிட முடியாது. அதேநேரத்தில், பாரம்பரிய விவசாய முறைகளையும் நாம் மறந்துவிடக் கூடாது. அந்தந்தப் பகுதியின் மண்வளம், அங்குள்ள இயற்கை உரங்கள், அதற்கேற்ற பயிர்கள் பயிரிட வேண்டும் என்ற கருத்துள்ள விவசாயிகள் அதிகரிக்கும்போது, இயற்கை வேளாண் விளைபொருள்கள் குறித்த ஆய்வுகளை இந்தியாவே நடத்தி, உண்மைகளை வெளிப்படையாகப் பேசுவதுதான் சரியாக இருக்கும்.

யாரோ, எந்த வர்த்தக நோக்கத்துக்காகவோ செய்யும் ஆய்வு முடிவுகள், இங்குள்ளவர்களைக் குழப்ப அனுமதிப்பது கூடாது. நமது மண் வளத்தையும், வருங்காலச் சந்ததியினரின் உடல் வாழ்வையும் பாதிக்காதவரையில் மட்டுமே விஞ்ஞானம் வழங்கும் கொடைகள் ஏற்புடையவை. கண்ணை விற்றுச் சித்திரம் வாங்குதல் கூடாது – அது, மதுபானம் விற்று வழங்கப்படும் நலத்திட்டங்கள் போன்றது!

தினமணி தலையங்கம் – 10-செப்-2012

ஜப்பான் காடைக்குத் தடை – மத்திய அரசின் அடுத்த அதிரடி

ஜப்பானிய காடை வளர்ப்பு பற்றி ஏற்கனவே இந்தப் பதிவில் கூறியுள்ளோம். அது தவிற அகில இந்திய வானொலியின் பதிவையும் அதில் கொடுத்திருந்தோம். விவசாயம் பொய்த்துப் போகும் சூழ்நிலைகளில், விவசாயிகளுக்குக் கைகொடுப்பது… கால்நடை வளர்ப்புதான். ஆடு, மாடு, பன்றி, முயல், கோழி, காடை…. இப்படி பிடித்தமான கால்நடைகளை வளர்த்து காலத்தை ஓட்டிக் கொண்டுள்ளனர் விவசாயிகள். அந்த வகையில், தமிழகத்தில் காடைப் பண்ணைகள் நிறையவே இருக்கின்றன. இங்கெல்லாம் ‘ஜப்பான் காடை’ என்கிற இனம்தான் பெருமளவில் வளர்க்கப்படுகிறது.

இறைச்சிக்காக மட்டுமே காடைகள் வளர்க்கப்படும் நிலையில், ‘ஜப்பான் காடை, பாதுகாக்கப்பட்ட வன விலங்குகள் பட்டியலில் இணைக்கப்படுகிறது. அதைக் கொல்வதோ… வேட்டையாடுவதோ… தண்டனைக்குரியக் குற்றம். காடைப் பண்ணைகள் அமைக்கவும் மாநில அரசுகள் அனுமதி வழங்கக்கூடாது’ என்று அதிரடியாக அறிவித்து, விவசாயிகளை அலற வைத்துள்ளது மத்தியச் சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சகம்.

இதைப் பற்றி நம்மிடம் பேசிய நாமக்கல் மாவட்டம், அய்யம்பாளையம் முத்துசாமி, ”குறைஞ்ச இடவசதி, குறைஞ்ச முதலீடு, குறுகிய காலத்துலயே வருமானம்… இதெல்லாம்தான் ஆயிரக்கணக்கான விவசாயிகள ஜப்பானியக் காடை வளர்ப்புல இறக்கி விட்டிருக்கறதுக்குக் காரணம்.

இந்தக் காடைகள பெருசா நோய் தாக்குறது இல்லை. அதனால பராமரிப்பும் பெருசா தேவைப்படாது. விற்பனையிலயும் பிரச்னை இருக்கறதில்ல. 1,000 காடை வளர்த்தா… ஒரு மாசத்துல

10 ஆயிரம் ரூபாய் லாபம் கிடைக்கும். இந்த நிலையில ஜப்பான் காடைக்குத் தடை போட்டிருக்கறது… விவசாயிகளோட வாழ்வாதாரத்தையே பறிச்ச மாதிரிதான்” என்று பொறுமினார்.

தமிழ்நாடு கால்நடை மருத்துவப் பல்கலைக்கழக துணைவேந்தர் ஆர். பிரபாகரனிடம் இதுபற்றி கேட்டபோது, ”ஏற்கெனவே இருக்கும் பண்ணையாளர்கள், பீதியடையத் தேவையில்லை. புதிதாக பண்ணை அமைப்பதற்கும், தற்பொழுது இருக்கும் ஜப்பானியக் காடைகளின் அளவை அதிகப்படுத்துவதற்கும்தான் தடை செய்திருக்கிறார்கள்.

தற்போது பண்ணைகளில் வளர்க்கப்படும் ஜப்பானியக் காடை ரகங்கள், 1972-ம் ஆண்டு கலிஃபோர்னியாவில் இருந்து கொண்டு வரப்பட்டு, ஆராய்ச்சி மூலம் இனப்பெருக்கம் செய்யப்பட்டு, கால்நடைப் பல்கலைக்கழகத்தின் மூலம் வெளியிடப்பட்டவை. அவை காடுகளில் இருந்து கொண்டு வரப்படவில்லை.

இந்தக் காரணத்தை வைத்தே, தடையை நீக்கும் முயற்சியில் இறங்கியுள்ளோம். மத்திய வனத்துறை அமைச்சகத்துக்கு தேவையான தகவல்களை அனுப்பி தெளிவுபடுத்தி, தடையை விலக்க வைப்போம்” என்று சொன்னார்.

உர நிறுவனங்களின் தன்னலமும் பாழாகும் விளைநிலங்களும் – தினமணி

சுதந்திர தினத்தன்று உரையாற்றிய பிரதமர் மன்மோகன் சிங், உணவு உற்பத்தியில் இந்தியா சாதனை படைத்திருப்பதைப் பெருமையுடன் குறிப்பிட்டார். உண்மைதான். கடந்த இரு ஆண்டுகளாக உணவு உற்பத்தி நன்றாகவே இருக்கிறது. உணவுப் பொருள் கையிருப்பும்கூட வழக்கத்தைவிட அதிகமாகவே உள்ளது.

உணவு மற்றும் விநியோக அமைச்சகத்தின் அறிக்கையில் அரிசி கையிருப்பு 268 லட்சம் டன், கோதுமை கையிருப்பு 371 லட்சம் டன் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மொத்தம் 639 லட்சம் டன். இந்த அளவு வழக்கமான கையிருப்பாகிய 319 லட்சம் டன் உணவு தானியத்தைப்போல இரு மடங்கு! உணவுப் பொருள்கள் தற்போது கையிருப்பில் உள்ளதென்பது பிரதமருக்கு மட்டுமல்ல, இந்தியக் குடிமக்கள் அனைவருக்கும் மகிழ்ச்சி தரும் செய்திதான்.

இருப்பினும், இந்த வேளையில் நிகழ் நிதியாண்டில் இதுநாள் வரை உர நிறுவனங்களுக்குக் கொடுக்கப்பட்டுள்ள உர மானியத்தின் அளவைப் பார்க்கும்போது மலைப்பாக இருப்பதோடு, கவலை தருவதாகவும் இருக்கிறது. இதற்கு இரண்டு காரணங்கள் உண்டு.
இந்த உர மானியம் நேரடியாக உர நிறுவனங்களுக்கு அளிக்கப்படும்போது, இதனால் நிறுவனங்கள் அடையும் லாபம் அதிகமாகவும், விவசாயி பெறும் நன்மை குறைவாகவும் உள்ளது என்பது முதல் காரணம்.

மானிய விலையில் கிடைக்கும் யூரியா உரத்தை மிக அதிகமாகப் போட்டு இந்திய விவசாயிகள் தங்கள் நிலத்தைப் பாழாக்கி விட்டார்கள். இந்த நிலைமை மாற்றப்படாவிட்டால், இதே உற்பத்தி நீடிக்குமா என்பது சந்தேகம்தான் என்று வேளாண் வல்லுநர்கள் தரும் தகவல்கள் இரண்டாவது காரணம்.

யூரியா, பொட்டாசியம், பாஸ்பேட் என அடிப்படை உரங்களுக்காக இந்திய அரசு மானியம் வழங்குகிறது. இந்த மானியம் 2009-10-ம் ஆண்டில் ரூ. 64,032 கோடி, 2010-11-ம் ஆண்டில் ரூ. 65,836 கோடி என்று உர நிறுவனங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. இந்த உரங்களுக்கு மானியம் அளிக்கப்பட்டாலும், இவை விநியோகத்துக்கு வந்து, விவசாயிகளைச் சென்றடையும்போது, அரசு நிர்ணயிக்கும் விலையைவிட அதிகவிலை கொடுத்து வாங்கும் நிலைதான் இன்றளவும் உள்ளது. இதற்காக எத்தனை புகார்கள், போராட்டங்கள் நடைபெற்றாலும் விவசாயி அதிக விலை கொடுப்பதும், உரங்கள் பதுக்கப்படுவதும் தொடர்கதையாகவே இருக்கிறது.

இந்த உர நிறுவனங்கள் தரமான உரங்களைத் தயாரிப்பதில்லை என்கிற புகார்கள் ஒருபுறம், இவை தொழில்நுட்பத்தைப் புதுப்பிக்காமல் பழைய நிலையிலேயே உரங்களைத் தயாரித்து, சுற்றுச்சூழல் மாசுக்குக் காரணமாகின்றன என்பது இன்னொருபுறம். ஆனால், அதுபற்றி அரசு எந்தக் கவலையும் கொள்வதில்லை.

ரசாயனத் துறை மற்றும் உரங்கள் அமைச்சகம் தரும் புள்ளிவிவரத்தின்படி, சந்தை மதிப்பில் யூரியாவின் அதிகபட்ச விலையான ரூ.5,310 (ஒரு டன்) என்பதில் விவசாயிக்கு 27 முதல் 58 விழுக்காடு வரை பயன் கிடைக்கும் வகையில் மானியம் அளிக்கப்படுகிறது என்றுதான் சொல்லப்படுகிறது. ஆனால், இந்த அதிகபட்ச விற்பனை விலை என்பதை யார் தீர்மானிக்கிறார்கள், எப்படித் தீர்மானிக்கிறார்கள் என்பது அரசுக்கே வெளிச்சம்.

இந்திய விவசாயிகளுக்கு உரம் கிடைக்க வேண்டும் என்ற நோக்கில் உர ஆலைகளுக்கே நேரடியாக மானியம் வழங்கும் திட்டத்தைக் கொண்டுவரச் சொல்லப்பட்ட காரணம், இந்தியா முழுவதும் சிதறியுள்ள விவசாயிகளுக்குத் தனித்தனியாக மானியம் நேரடியாகக் கிடைக்கச் செய்வது இயலாது என்பதுடன், அது ஊழலில் போய் முடியும் என்பதுதான். அதனால்தான் உர நிறுவனங்களுக்கே நேரடியாக மானியத்தை அளிக்க முடிவு செய்தது அரசு.

உரத்தின் அதிகபட்ச விலையைத் தீர்மானிக்கும்போது, அந்த நிறுவனத்தின் முதலீட்டுக்கு, வரிக் கழிவுகள் நீங்கலாக, 12 விழுக்காடு லாபம் கிடைக்கும் வகையில் விலை நிர்ணயம் செய்வதெனத் தீர்மானிக்கப்பட்டது. ஆனால், இப்போது அந்த அடிப்படையில்தான் உர நிறுவனங்களால் இந்த விலைகள் தீர்மானிக்கப்படுகின்றனவா என்பது பரம ரகசியம். அது பற்றிய கேள்விகள் எழாமல் இருப்பதற்காகவோ என்னவோ, உர நிறுவனங்கள் தங்களுக்கு 3 விழுக்காடு லாபம்தான் கிடைக்கிறது என்று தங்களுக்கான ஆதரவுக் குரலைத் திரட்டிக் கொண்டிருக்கின்றன, மக்கள் மத்தியில் கொண்டுபோய்ச் சேர்த்துக் கொண்டிருக்கின்றன.
விவசாயியின் நன்மைக்காகவும், உணவு உற்பத்தியை உறுதி செய்வதற்காகவும் உரத்துக்கு அரசு அளிக்கும் மானியத்தை, உர நிறுவனங்கள் அதிகமாகவே பெற்று நன்றாக இருக்கின்றன என்பதுதான் கசப்பான உண்மை. இந்த உரத்தை, குறிப்பாக யூரியா உரத்தை, சலுகை விலையைவிடக் கூடுதலான விலைக்கு வாங்கி நிலத்துக்குப் போட்டு, தானும் பாழாகி, நிலத்தையும் பாழாக்கிக்கொண்டு வருகிறார்கள் நமது விவசாயிகள் என்பதும் கசப்பான உண்மை. இதுபற்றி எந்தவிதமான விழிப்புணர்வையும் அரசு ஏற்படுத்தவில்லை என்பது அதைவிடக் கொடுமையான உண்மை.

இந்திய விளைநிலங்களில் யூரியாவின் பயன்பாடு மிக அதிகமாக இருப்பதால், நமது விளைநிலங்களின் உற்பத்தித் திறன் குறைந்துள்ளது என்கின்றன ஆய்வுகள். இந்தியாவில் ஒரு ஹெக்டேர் நிலத்தில் 3.4 டன் நெல் உற்பத்தியாகிறது என்றால், சீனாவில் இதே ஒரு ஹெக்டேர் நிலத்தில் 6.5 டன் நெல் உற்பத்தியாகிறது. இதற்கான முக்கிய காரணங்களில் ஒன்று, இந்திய விவசாயிகள் உரத்தை அதிகமாகப் போட்டதுதான் என்கிறார்கள்.

இந்த உர மானியத்தை உரம் தயாரிக்கும் நிறுவனங்களுக்குக் கொடுப்பதைப் படிப்படியாகக் குறைக்கும் அதே நேரத்தில், பாரம்பரிய வேளாண்மைக்கு இந்த மானியத்தை கொண்டுபோய்ச் சேர்த்து ஊக்கப்படுத்தவும் பாரம்பரிய வேளாண்மையை மீட்டெடுக்கும் விழிப்புணர்வை இந்தியா முழுவதும் ஏற்படுத்தவும் தேவையான முயற்சிகளை அரசும், ஊடகங்களும், தன்னார்வத் தொண்டு நிறுவனங்களும் முடுக்கி விட்டால், விளைநிலங்கள் முற்றிலும் பாழாகிவிடும் முன்பாக மீட்டு விடலாம். விவசாயியும் மீட்கப்படுவார். விவசாயி வாழ்ந்தால் மட்டும்தான் நாடு வாழும்!

தினமணி தலையங்கம் 23 Aug 2011