கார்த்திகைப் பட்ட எள் சாகுபடித் தொழில்நுட்பம்

கார்த்திகைப் பட்டத்தில் எள் சாகுபடி செய்யும் விவசாயிகள் நவீன தொழில் நுட்பங்களைப் பின்பற்றுவதன் மூலம், உயர் விளைச்சல் பெற முடியும் என்று வேளாண்மைத் துறை தெரிவித்துள்ளது.

மாவட்டத்தில் நிலக்கடலைக்கு அடுத்தபடியாக அதிகப் பரப்பளவில் சாகுபடி செய்யப்படும் முக்கிய எண்ணெய் வித்துப் பயிராக இருப்பது எள் மட்டுமே. இப்போது கார்த்திகைப் பட்டத்தில் (நவம்பர் – டிசம்பர்) எள் சாகுபடி செய்வதற்காக விவசாயிகள் நிலங்களைத் தயார்படுத்தி வருகின்றனர்.

எண்ணெய் வித்துகளின் இளவரசி என்று அழைக்கப்படும் எள் சாகுபடியில் நவீன தொழில்நுட்பங்களைப் பின்பற்ற வேண்டியது அவசியமானது.

ரகங்கள்:

கார்த்திகைப் பட்டத்தில் சாகுபடி செய்வதற்கு

  • கோ-1,
  • டிஎம்வி-3,
  • டிஎம்வி-5,
  • எஸ்விபிஆர்-1

ஆகிய ரகங்கள் தகுதியானவை.

எள் பயிரிடுவதற்கு மணல் பாங்கான வண்டல், செம்மண், கருவண்டல் நிலங்கள் ஏற்றவை.

உழவு முறை:

எள் விதைகள் மிகவும் சிறியதாக இருப்பதால், விதைகள் நன்கு முளைக்க மண்ணில் உள்ள கட்டிகளை உடைத்து, நுண்மைப்படுத்த வேண்டும். எனவே, நிலத்தை இரு முறை டிராக்டர் கலப்பையால் உழவு செய்ய வேண்டும்.

இல்லையெனில், இரும்புக் கலப்பையால் மூன்று முறையோ அல்லது நாட்டுக் கலப்பையால் 5 முறையோ உழவு செய்ய வேண்டும். கடைசி உழவில் ஏக்கருக்கு 5 டன் தொழு உரம் இடவேண்டும்.

இறவை எள் சாகுபடிக்கு கிடைக்கும் நீர் மற்றும் நிலத்தின் சரிவைக் கணக்கிட்டு, 10 சதுர மீட்டர் அல்லது 20 சதுர மீட்டர் அளவுக்கு நீர் தேங்காத வகையில் நன்கு சமன் செய்யப்பட்ட பாத்திகள் அமைக்க வேண்டும்.

விதை நேர்த்தி:

ஓர் ஏக்கருக்கு 2 கிலோ விதை போதுமானது. விதை மூலம் பரவும் நோய்களைத் தடுக்க ஒரு கிலோ விதைக்கு 2 கிராம் கான்பன்டாசிம் அல்லது 4 கிராம் திரம் அல்லது 4 கிராம் டிரைக்கோடெர்மா விருடி என்ற அளவில் கலந்து, 24 மணி நேரம் காற்றுப் புகாத வகையில் வைத்திருந்து, உயிர் உர விதையை நேர்த்தி செய்ய வேண்டும்.

ஒரு பாக்கெட் அசோஸ்பைரில்லம் மற்றும் ஒரு பாக்கெட் பாஸ்போ பாக்டீரியாவை ஆறிய அரிசிக் கஞ்சியில் கலந்து, ஓர் ஏக்கருக்குத் தேவையான விதையுடன் விதை நேர்த்தி செய்து நிழலில் உலர்த்திய பிறகு விதைப்பு செய்ய வேண்டும்.
விதைகள் சீராகப் பரவ 2 கிலோ விதையுடன் 8 கிலோ மணல் கலந்து நிலத்தின் மேற்பரப்பில் சீராக விதைக்க வேண்டும்.

தொழில்நுட்ப முறைகள்:

விதைத்த 15ஆம் நாள் செடிக்கு, செடி 15 செ.மீ. இடைவெளி விட்டு, செடிகளைக் கலைந்து விட வேண்டும். 30ஆம் நாள் செடிக்கு, செடி 30 செ.மீ. இடைவெளி விட்டு மீண்டும் ஒரு முறை கலைந்து விடவேண்டும். மண் பரிசோதனைப்படி உரமிட வேண்டும்.

இல்லையெனில், பொதுப் பரிந்துறையான இறவை எள்ளுக்கு ஏக்கருக்கு 14:9:9 கிலோ தலை, மணி, சாம்பல் சத்து தரும் உரங்களை இடவேண்டும். விதைப்புக்குப் பின் ஓர் ஏக்கருக்கு 2 கிலோ மாங்கனீசு சல்பேட் நூண்ணூட்டச் சத்தை, நன்கு மக்கிய 8 கிலோ தொழுவுரத்தில் கலந்து சீராக தூவ வேண்டும்.

களைகளைக் கட்டுப்படுத்த பென்டிமெத்தலின் 1.3 லிட்டர் களைக் கொல்லி மருந்தை 260 லிட்டர் தண்ணீரில் கலந்து, விதைத்த 3 நாள்களுக்குள் சீராகத் தெளிக்க வேண்டும். இல்லையெனில், 10 கிலோ மணலுடன் கலந்து சீராக தூவ வேண்டும்.
களைக் கொல்லி பயன்படுத்தாவிட்டால் விதைத்த 15 நாள்கள் கழித்து ஒரு கைக் களையும், 35 நாள்கள் கழித்து இரண்டாவது கைக் களையும் எடுத்து களைகளைக் கட்டுப்படுத்தலாம்.

நீர்ப் பாய்ச்சுதல்:

மண்ணின் தன்மை, பருவ காலம் ஆகியவற்றைக் கணக்கிட்டு 5 அல்லது 6 முறை நீர்ப் பாய்ச்ச வேண்டும். முதல் முறை விதைத்தவுடன் 7ஆவது நாள் உயிர்த் தண்ணீர், 25ஆவது நாள் பூக்கும் தருவாயில் இரண்டு முறை, காய் பிடிக்கும் தருவாயிலும், முதிர்ச்சியடையும் போதும் இரு முறையாக 6 முறை நீர் பாய்ச்ச வேண்டும். இறவைப் பயிரில் 65 நாள்களுக்குப் பின் நீர் பாய்ச்சக் கூடாது.

அறுவடை:

செடியில் கீழிருந்து 25 சதவீத இலைகள் உதிர்ந்து, காய்கள், தண்டு பாகங்கள் பழுப்பு நிறமாக மாறுவதே பயிர் அறுவடை செய்ய உகந்த காலமாகும். செடியின் அடியிலிருந்து மேலாக உள்ள 10ஆவது காயில் உள்ள விதைகள் கறுப்பாக மாறியவுடன் அறுவடை செய்தால், காய்கள் வெடித்துச் சிதறி ஏற்படும் மகசூல் இழப்பைத் தவிர்க்கலாம்.

தினமணி செய்தி –

தருமபுரி உழவர் பயிற்சி நிலைய வேளாண் துணை இயக்குநர் ந. மேகநாதன்

வேளாண் அரங்கத்தில்

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s