பயறு வகைப் பயிர்களில் கூடுதல் மகசூல் பெற டிஏபி

பயறு வகைப் பயிர்களில் கூடுதல் மகசூல் பெற இரு முறை 2 சதம் டிஏபி கரைசலை கைத் தெளிப்பான் கொண்டு தெளிப்பது அவசியம் என்று வேளாண்மைத் துறை அறிவுறுத்தியுள்ளது.

பயறு வகைப் பயிர்கள்: கொண்டைக் கடலை, உளுந்து, தட்டைப் பயிறு, அவரை, பாசிப் பயறு, கொள்ளு, துவரை, சோயா மொச்சை ஆகிய பயறு வகைப் பயிர்களுக்கு டிஏபி கரைசல் பெரிதும் அவசியமானது.

டிஏபி கரைசல் தயாரிப்பு: டிஏபி கரைசலைப் பயிர்களுக்கு தெளிப்பதைவிட அந்தக் கரைசலைத் தயாரிப்பதில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். சிறிது அளவு மாறினாலும் கரைசல் தெளித்தும் எந்தவிதப் பயனும் கிடைக்காது. அளவு கூடினால் பயிர்கள் காய்ந்து விடும் அபாயமும் உள்ளது. எனவே, கரைசல் தயாரிப்பில் சரியான வழிமுறைகளைப் பின்பற்ற வேண்டியது அவசியம்.

ஓர் ஏக்கருக்கு 4 கிலோ டிஏபி உரம் போதுமானது. 4 கிலோ டிஏபி உரத்தை 10 லிட்டர் தண்ணீரில் இரவில் கரைத்து வைக்க வேண்டும். இரவு நேரத்தில் 4 முறை இந்தக் கரைசலை நன்கு கலக்க வேண்டும். காலையில் இந்தக் கரைசலை கலக்காமல் இருக்க வேண்டும். மேல் புறத்தில் தெளிந்திருக்கும் கரைசலைத் துணியால் வடிகட்டி எடுத்துக் கொள்ள வேண்டும். இந்தக் கரைசலுடன் 190 லிட்டர் தண்ணீரை கலந்து ஒரு ஏக்கர் செடிக்கு தெளிக்கலாம்.

கைத் தெளிப்பான்: டிஏபி கரைசலைத் தெளிக்கும்போது விசைத் தெளிப்பான் பயன்படுத்தக் கூடாது. விசைத் தெளிப்பானில் கரைசல் முழுமையாக வெளியேறாது. நுரையே அதிகமாக வரும். எனவே, கைத் தெளிப்பான் பயன்படுத்தியே தெளிக்க வேண்டும். காலை அல்லது மாலை நேரத்தில் மட்டும் செடி முழுவதும் நனையும் வகையில் தெளிக்க வேண்டும். வெயில் இருக்கும் தருணத்தில் தெளித்தால் எந்தவிதப் பயனும் தராது.

எப்போது தெளிப்பது?: பயறு வகைப் பயிர்களை நடவு செய்த 30-வது நாளில் ஒரு முறையும், 45-வது நாளில் ஒரு முறையும் தெளிக்க வேண்டும். இல்லையெனில் பூக்கும் தருணத்தில் ஒரு முறையும், 15 நாள் இடைவெளிவிட்டு மறுமுறையும் தெளிக்கலாம்.

பயன்கள் என்ன?: பொக்கு காய்கள் வராது. பூக்கள் கொட்டாது. காய்கள் நன்கு திரட்சியாக வளரும். கூடுதல் மகசூல் பெறலாம். சாதாரணமாக ஒரு ஹெக்டேரில் 620 கிலோ பயறு வகைகள் கிடைத்தால் 2 சதம் டிஏபி தெளிப்பதன் மூலம் கூடுதலாக 20 சதம் வரை மகசூல் கிடைக்கும்.

அரசு மானியம்: டிஏபி தெளிப்புக்கு தேசிய வேளாண்மை வளர்ச்சித் திடத்தின் மூலம், அரசு மானியமும் வழங்கப்படுகிறது. டிஏபி கரைசல் தயாரிப்புக்கு மானியமாக ரூ.500 வழங்கப்படுகிறது. விவசாயி கூடுதலாக ரூ.200 மட்டும் செலவு செய்தால் போதுமானது. இதேபோல், டிஏபி தெளிக்கும் பணிக்கும் ரூ.300 மானியம் வழங்கப்படுகிறது. இந்தப் பணிக்கு 2 ஆள்களைப் பயன்படுத்தினால் கூலியாக ரூ.600 வழங்க வேண்டியிருக்கும். அதில், 50 சதத்தை அரசே மானியமாக வழங்குகிறது.

தருமபுரி மாவட்டத்தில்…: தருமபுரி மாவட்டத்தில் நிகழாண்டு 26,157 ஹெக்டேரில் பயறு வகைப் பயிர்கள் சாகுபடி செய்யப்பட்டுள்ளன. இதில், 860 ஹெக்டேர் பயிருக்கு அரசு மானியம் வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மானியத் தொகையை விவசாயிகளின் வங்கிக் கணக்கிலேயே வரவு வைக்கவும் வேளாண்மை அலுவலர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

தொழில்நுட்பப் பயிற்சி: டிஏபி கரைசல் தயாரிப்பு மற்றும் தெளிக்கும் முறைகள் குறித்து வேளாண்மைத் துறை சார்பில் விவசாயிகளுக்கு இலவசமாக தொழில்நுட்பப் பயிற்சிகளும் அளிக்கப்படுகின்றன. நல்லம்பள்ளி ஒன்றியத்துக்குள்பட்ட மாதேமங்கலம் குட்டூர் பகுதி விவசாயிகளுக்கு வேளாண்மைத் துறை சார்பில் புதன்கிழமை பயிற்சி வகுப்பு நடத்தப்பட்டது. கந்தசாமி என்பவரது விளைநிலத்தில் சுற்றுப் பகுதியைச் சேர்ந்த 50 விவசாயிகளை அழைத்து டிஏபி கரைசல் தெளிப்பது குறித்து நேரடி செயல் விளக்கம் அளிக்கப்பட்டது.

வேளாண்மைத் துறை துணை இயக்குநர் பி. வேணுகோபால், வேளாண்மை அலுவலர் எம். மணிராஜன், உதவி அலுவலர்கள் பி. மாதேஷ், ஜி. செல்வம், ஆர். சதாசிவம் ஆகியோர் பயிற்சி அளித்தனர்.

நல்லம்பள்ளி ஒன்றியத்தில் மட்டும் 108 ஹெக்டேரில் பயறு வகைப் பயிர்களுக்கு விவசாயிகளுக்கு மானியம் வழங்கப்படவுள்ளது. எனவே, பயறு வகைப் பயிர்களை சாகுபடி செய்யும் விவசாயிகள் அனைவரும் தவறாமல் 2 சதம் டிஏபி கரைசல் தெளிக்க வேண்டும் என்று வேளாண்மைத் துறை வலியுறுத்தியுள்ளது.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s