பொருளாதாரச் சீர்திருத்தங்களுக்கு ஒரு வக்காலத்து – மீள்பதிவு

மீள்பதிவு http://www.badriseshadri.in/2012/09/blog-post_7619.html

பொருளாதாரச் சீர்திருத்தங்கள் ஏழைகளின் வயிற்றில் அடிக்கின்றன என்று புலம்புபவர்கள், ஏழைகளும் நடுத்தர வர்க்கத்தினரும் 1970-களிலும் 1980-களிலும் எப்படிப்பட்ட நிலையில் வாழ்ந்தனர் என்று ஆராய்ந்து பார்த்தால், எந்த அளவுக்குக் கடந்த முப்பது ஆண்டுகளில் நல்ல மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன என்பதைப் புரிந்துகொள்வார்கள். என்னென்னவோ ஸ்பூரியஸ் தரவுகளை வைத்துக்கொண்டு அன்று உண்டதைவிட இன்று குறைந்த அளவு தானியங்களையே மக்கள் உண்கின்றனர் என்பதைத் தாண்டி இடதுசாரிகளால் வேறு எதையும் பேச முடிவதில்லை.

இன்று தமிழகத்தின் எந்த ரேஷன் கடையிலும் சென்று பாருங்கள். அரிசி கொட்டிக்கிடக்கிறது. உண்மையிலேயே தரையில் சிந்திச் சீரழிகிறது. கேரளாவுக்குக் கடத்திச் செல்லப்பட்டதுபோக மீதி அரிசி இது. இலவச அரிசி, ஒரு ரூபாய் அரிசி, இரண்டு ரூபாய் அரிசி என்று ஒரு மாதம் முழுக்க ஒரு குடும்பத்துக்குத் தேவையான அரிசி இலவசமாக அல்லது இரண்டு மணி நேரக் கூலியில் கிடைத்துவிடுகிறது.

தமிழகத்தில் சாப்பிட உணவு இல்லை என்று யாராவது இன்று சொல்லமுடியுமா? அதையும் மீறிப் பிச்சைக்காரர்கள் இல்லையா என்று நீங்கள் கேட்கலாம். அதற்குக் காரணம், அமைப்புரீதியான பிரச்னைகள். அவர்களுக்கு வீடு இருக்காது, ரேஷன் கார்டு இருக்காது. இவற்றை எப்படிப் பெற்று, பசியாறிக்கொள்வது என்று தெரியாது. அல்லது மஃபியாக்களின் கட்டுப்பாட்டில் இருப்பார்கள். இவை அனைத்துமே அரசினால் தீர்க்கப்படக்கூடிய எளிய பிரச்னைகள்.

வெறும் அரிசியை மட்டும் வைத்துக்கொண்டு எப்படி உயிர்வாழ்வது என்று நீங்கள் கேட்கலாம். முடியாது. ஒப்புக்கொள்கிறேன். அதற்கு வேலை செய்து சம்பாதிக்கவேண்டும். இன்று அமைப்புசாரா வேலைகள் எக்கச்சக்கமாகக் கிடைக்கின்றன. அவற்றைச் செய்வதற்குத்தான் தமிழகத்தில் ஆள்கள் இல்லை. அதனால்தான் மணிப்பூரிலிருந்து சர்வர்களும் பிகாரிலிருந்து கட்டடக் கூலிகளும் வருகிறார்கள்.

இன்று விவசாயக் கூலி வேலை செய்ய ஆட்கள் கிடைப்பதில்லை. விவசாயக் கூலிகளுக்கு நாளுக்கு 75 ரூபாய்க்குமேல் கொடுக்க நிலம் வைத்திருப்பவர்களுக்குக் கட்டுப்படி ஆவதில்லை. ஏனெனில் விவசாயக் கொள்முதல் விலை மிகக் குறைவாக உள்ளது. இடுபொருள் செலவு அதிகமாகியுள்ளது. விவசாயம் செய்வது என்பது ‘வாய்க்கும் வயிற்றுக்கும்’ என்ற நிலையில் உள்ள subsistence விவசாயிகளால் இனியும் முடியாது. பெருவிவசாயம் மட்டுமே இனி சாத்தியம். வளர்ந்த நாடுகள் அனைத்திலும் இதுதான் நடந்துள்ளது. இந்தியாவிலும் இதுதான் இனி நடக்கப்போகிறது. அதற்கான சட்டதிட்ட மாறுதல்கள் தேவை. கார்பரேட் விவசாயம், கூட்டு விவசாயம் (கூட்டுறவும் ஒருவகையில் கார்பரேட் மாதிரிதான்), பங்குச்சந்தையில் பங்குப்பணம் அல்லது கடன் பணம் திரட்டி விவசாயம், அந்நிய முதலீட்டில் விவசாயம் ஆகியவை நடப்பதை நாம் பார்க்கப்போகிறோம்.

அரசிடம் லாபி செய்து கொள்முதல் விலையை அதிகரிப்பது அல்லது பொதுச்சந்தையில் அதிக விலைக்கு விற்க முயற்சி செய்வது என்பதுதான் விவசாயம் செய்வோரின் நோக்கங்களாக இருக்கவேண்டும். மாறாக இலவச மின்சாரம் கொடு, உரத்தைக் குறைந்த விலையில் கொடு, கடனை ரத்து செய் என்று தொடர்ந்து அரசிடம் பிச்சை எடுத்துக்கொண்டிருந்தால் அரசு கொள்முதல் விலையை அடிமட்டத்திலேயே வைத்துக்கொண்டிருக்கும்.

வளர்ச்சி என்பது உற்பத்தித் தொழில் துறையிலும் சேவைத் துறையிலும் மட்டும்தான் சாத்தியம். இவை இரண்டுக்கும் நிதி மூலதனம், கட்டுமானம் ஆகியவை மிக அதிகமாகத் தேவை. தமிழகம் இப்போது மின் பற்றாக்குறையில் திண்டாடுகிறது. 12 மணி நேர அறிவிக்கப்படாத மின்வெட்டு என்பது அடுத்த ஓராண்டுக்காவது இருக்கப்போகிறது. மாறி மாறி கழக அரசுகள் காசுக்கு வாக்குகளை வாங்கிக்கொண்டும் திராவிட, தமிழ் இன உணர்ச்சிகளை விற்றுக்கொண்டும் இருந்தபோது இந்தியாவின் வேறுசில மாநிலங்கள் மின் கட்டுமானத்தில் கவனம் செலுத்திக்கொண்டிருந்தன. மனித வாழ்வுக்கு மின்சாரம் இன்றியமையாததாக ஆகிவிட்டது. நாம் இனி காந்திய மாதிரியில் குடிசைகளில் இருந்துகொண்டு மின்சாரம் பயன்படுத்தாமல், தொழிற்சாலைகளைக் கட்டாமல், கையால் நூல் நூற்று, ஈர்க்கால் இலை தைத்து வாழ்க்கை நடத்தப்போவதில்லை. பெட்ரோல், பிளாஸ்டிக், உலோகம், மின்சாரம், பொருள் உற்பத்தி, டிவி, இணையம், கணினி, செல்பேசி என்று வாழ்க்கை வசதிக்கான பொருள்களால் நம்மை நிரப்பிக்கொண்டுதான் வாழப்போகிறோம்.

இதற்குத் தேவையான அடிப்படை முதலீடு இந்திய அரசிடம் இல்லை. இந்திய அரசின் முதலீட்டில் இவை இயங்குவதையும் நான் ஏற்றுக்கொள்ள மாட்டேன். தேவையான முதலீடு இந்திய மக்களிடம் இருக்கிறது. ஆனால் முதலிடும் மனோபாவம் இந்தியர்களிடம் இல்லை. பணத்தைப் பெட்டியில் போட்டுவைப்பது அல்லது வங்கியில் போட்டுவைப்பது. வங்கிகளும் இந்தப் பணத்தைத் தம்மிஷ்டத்துக்கு முதலிட முடியாது. இந்தியப் பங்குச்சந்தை சிறியது. இந்திய நிதி நிறுவனங்கள் – இன்ஷூரன்ஸ், மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்கள் ஆகியவை – மிகச் சிறியவை. இந்தியாவில் தனியார் பென்ஷன் ஃபண்ட் மிக மிகச் சிறியது. இவையெல்லாம் ஆரம்பித்து, நன்கு பெரிதானால் இந்தியா அந்நிய முதலீட்டைப் பற்றிக் கவலைப்படத் தேவையில்லை.

ஆனால் இது இப்போதைக்கு நடக்காது என்பதால் நாம் அந்நிய முதலீட்டைப் பெருமளவு நம்பியிருக்கிறோம். அடுத்தவனிடம் காசு கேட்டால் அவன் சொல்வதற்குக் கொஞ்சமாவது தலை ஆட்டவேண்டும். அவனுக்குப் பிடித்த துறையில்தான் அவன் முதலீடு செய்ய வருவான். ‘அமெரிக்க அடிமை’, ‘நாட்டை விற்கும் நயவஞ்சகன்’ என்று எதுகை மோனையோடு நாட்டின் பிரதமரைத் தூற்றுவதை விடுத்து, நாட்டை முன்னேற்றப் பாதைக்குக் கொண்டுசெல்லும் நல்ல திட்டங்கள் என்று எழுந்து நின்று கை தட்டுவோம்.

 

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s