நெல் நாற்றங்காலில் பூச்சிகளை கட்டுப்படுத்துவது எப்படி?

நாற்றங்காலில் நெல் நாற்றுவிடும் சமயத்தில் உருவாகும் பூச்சிகளை சுற்றுச் சூழலுக்கு பாதிப்பில்லாமல் இயற்கை வழியிலும், உயிர்ரக மருந்துகளை பயன்படுத்தியும் கட்டுப்படுத்தலாம்.

தற்போது புதுச்சேரி மற்றும் தமிழக பகுதிகளில் சம்பா பருவதுக்கான நெல் விதைகள் விதைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன.

இந்த நெல் நாற்றங்காலை, சுற்றுச்சூழல் பாதிப்பில்லாமல் முறையாக பாதுகாக்க முடியும். சம்பா பருவ நெல் சாகுபடிக்காக,

  • வெள்ளைப் பொன்னி,
  • பொன்மணி (சி.ஆர். 1009) அல்லது சாவித்திரி,
  • பாபட்டலா, ஐ.ஆர். 20 மற்றும்
  • பின் சம்பா ரகமான ஆடுதுறை 39

போன்ற ரகங்களை விவசாயிகள் தேர்வு செய்து சாகுபடிசெய்து வருகின்றனர்.

இவ்வாறு சாகுபடி செய்யும்போது ஒற்றை நெல் சாகுபடி முறைகளை பயன்படுத்தலாம். இதன் மூலம் விதைகள், நீர் மற்றும் உரங்களின் அளவு குறைந்து விவசாயிகள் கூடுதல் லாபம் பெற முடியும்.

உயிர்ரக பூச்சிக்கொல்லிகள்…

மேலும் நெல் நாற்றங்காலில் தோன்றக்கூடிய பூச்சிக்கொல்லிகளை கட்டுப்படுத்த ரசாயன பூச்சிக் கொல்லிகளை பயன்படுத்த தேவையில்லை.

சுற்றுச்சூழலுக்கு பாதிப்பில்லாத உயிர்ரக பூச்சிக் கொல்லிகளை பயன்படுத்தலாம். இதன் மூலம் விவசாயிகளுக்கு நன்மை விளைவிக்கும் பூச்சிகளை அழியாமல் பாதுகாக்க முடியும்.

நாற்றங்கால் தயார் செய்யும் போது நாற்றங்கால் படுக்கைகளை மேடான இடத்தில் அமைக்க வேண்டும்.

விளக்கு கம்பங்களுக்கு அருகிலேயே நாற்றங்கால் அமைக்கக் கூடாது. ஒரு சதுர மீட்டர் நாற்றங்கால் பரப்பளவில் உள்ள படுக்கைகளை 50 கிராம் பாக்டீரிய உயிர் ரக நோய்க்கொல்லியான சூடோமோனாஸ் ஃபுளோரசன்ஸ் மற்றும் 200 கிராம் வேப்பம் புண்ணாக்கு அல்லது புங்கம் புண்ணாக்கு ஆகியவற்றுடன் கலந்து பின் நாற்றங்கால் தயார் செய்ய வேண்டும்.

நாற்றங்காலில் விதை விதைப்பதற்கு முன் விதை நேர்த்தி செய்ய வேண்டும். இதனால் விதை மூலம் பரவும் நோய்கிருமிகளை பரவாமல் தடுக்கலாம்.

இலைப்பேன் தாக்குதல்:

விதை விதைத்த 10 நாள்களுக்குள் நாற்றின் முனைப்பகுதி கருகி, இலையானது சிறிது சிறிதாக மஞ்சள் நிறமாக மாறினால் அது இலைப்பேன் என்ற பூச்சி தாக்குதலின் அறிகுறியாகும்.

இதை உறுதி செய்ய உள்ளங்கையை நாற்றாங்கால் நீரில் நனைத்து நாற்றின் மீது தடவி உள்ளங்கையை திருப்பி பார்த்தால் கருப்பு நிறத்தில் சிறிய பேன்கள் இருக்கும்.

இதனை கட்டுப்படுத்த, ஒரு சென்ட் நாற்றாங்காலுக்கு ஒரு லிட்டர் தண்ணீர் எடுத்து அதனை விசை தெளிப்பான் கொண்டு நாற்றங்கால் இலையின் முனைப்பகுதியில் படும்படி பீய்ச்சி அடிப்பதால் இலைப்பேன்கள் கீழே விழுந்துவிடும். பின்பு நாற்றங்காலில் உள்ள தண்ணீரை வடிகட்டுவதன் மூலம் இலைப்பேன் தாக்குதலை கட்டுப்படுத்தலாம்.

விசைத் தெளிப்பான் வைத்திராத விவசாயிகள், நாற்றங்காலை நீரில் 10 நிமிஷங்கள் முழுவதும் நனையுமாறு மூழ்கடித்து பின் நீரினை வடிகட்டுவதால் இலைப்பேன் தாக்குதலை கட்டுப்படுத்தலாம்.

இதற்குப்பின் ஒரு சென்ட் நாற்றங்காலுக்கு 10 மில்லி 3 சத வேப்ப எண்ணெய்யை 10 கிராம் ஒட்டுத் திரவத்துடன்( டீப்பால், டிரைட்டான், சேண்டோவிட்) சேர்த்து நாற்றங்கால் இலைப்பரப்பில் தெளிப்பதால் இலைப்பேன்கள் கசப்பு தன்மை காரணமாக விலகி ஓடிவிடும் அல்லது இறந்துவிடும்.

குட்டைக் கொம்பு வெட்டுக்கிளி:

விதைத்த 10 லிருந்து 15 நாட்களுக்குள் தோன்றக்கூடிய குட்டைக் கொம்பு வெட்டுக்கிளியை கட்டுப்படுத்த வேப்பம் எண்ணெய்யே போதுமானதாகும்.

மேலும், நாற்றங்காலில் 10 “வி’ வடிவ குச்சிகள் வைப்பதால், பறவைகள், குருவிகள், மைனா, கோட்டான் போன்றவைகள் அதன்மீது அமர்ந்து குட்டை கொம்பு வெட்டுக்கிளிகளையும், இலை உண்ணும் புழுக்களையும், பறக்கும் தாய்பூச்சிகளையும் உண்டுவிடும்.

இலை சுருட்டுப் புழு:

நாற்றங்காலில் தோன்றக் கூடிய இலை சுருட்டுப்புழுவின் தாக்குதலை குறைக்க ஒரு லிட்டர் தண்ணீருக்கு 2 கிராம் “பெவேரியா பேசியானா’ என்ற உயிர்ரக பூச்சிக்கொல்லியை அதிகாலைப் பொழுதில் கைத் தெளிப்பான் மூலம் 200 லிட்டர் நீரினை பயன்படுத்தி தெளிப்பதால் புழுக்களின் மீது நோய் உருவாக்கி புழுக்களை அழிக்கலாம்.

பச்சை தத்துப்பூச்சி:

நாற்றங்கால் வயது 15 முதல் 20 நாட்கள் உள்ள தருணத்தில் நாற்றுக்களின் இலைகள் மஞ்சள் நிறமாக மாறினால் அது பச்சை தத்துப்பூச்சியின் தாக்குதலின் அறிகுறியாகும்.

இதை நிவர்த்தி செய்ய 5 சீத்தாபழங்களில் உள்ள கொட்டைகளை லேசாக இடித்து 1 லிட்டர் தண்ணீரில் ஒரு இரவு முழுவதும் (12 மணி நேரம்) வைத்திருந்து அந்த சாற்றினை மறுநாள் காலையில் மெல்லிய துணியில் வடிகட்டி நாற்றங்காலில் தெளித்தால் கட்டுப்படும்.

செஞ்சிலந்தி தாக்குதல்:

தட்பவெப்பநிலை மாற்றம் காரணமாக நிலவும் ஒடுக்கத்துடன் கூடிய அதிகமான வெப்பநிலையால் செஞ்சிலந்திகளின் தாக்குதல் நெல் நாற்றுக்களில் தோன்றி இலைகள் மீது சிகப்பு வண்ண திட்டுக்கள் ஏற்படும்.

இதனை கட்டுப்படுத்த ஒரு சத புங்கம் எண்ணெய் (1 மில்லி ஒரு லிட்டர் நீரில்) அல்லது டைக்கோபால் (1.5 மில்லி ஒரு லிட்டர் நீரில்) அல்லது நனையும் கந்தகம் (1 கிலோ 8 சென்ட் நாற்றங்கால்) தெளிக்க வேண்டும். இதன் மூலம் செஞ்சிலந்தி தாக்குதல் கட்டுப்பாடும்.

சாறு உறிஞ்சும் பூச்சிகள்:

நாற்றங்கால் வரப்புகளை புல், பூண்டு மற்றும் களைகள் இல்லாதவாறு நன்கு செதுக்கி சுத்தமாக வைத்திருப்பதால் சாறு உறிஞ்சும் பூச்சிகள் நாற்றங்காலை தாக்காதவாறு பாதுகாக்கலாம்.

இவ்வாறான முறைகளை பயன்படுத்தி விவசாயிகள் சுற்றுச் சூழலுக்கு பாதிப்பில்லாமல் நாற்றங்காலை பாதுகாக்க முடியும். செலவும் விவசாயிகளுக்கு குறையும்.

தினமணி தகவல் புதுச்சேரி காமராஜர் வேளாண்மை அறிவியல் நிலையத்தின் பூச்சியியல் வல்லுநர் நி.விஜயகுமார்

வேளாண் அரங்கத்தில் காமராஜர் வேளாண்மை அறிவியல் நிலையம் புதுச்சேரி

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s