நீடித்த உற்பத்தி முறையில் நவீன கரும்பு சாகுபடி

கரும்பு சாகுபடி

  • ஒரு விதைப்பரு சீவல்களில் இருந்து நாற்றங்கால் அமைத்தல்,
  • இளம் நாற்றுக்கலை (25 முதல் 35 நாட்கள் வயது) எடுத்து நடவு செய்தல்,
  • அதிக இடைவெளியில் நடவு செய்தல்,
  • தேவையான அளவு மட்டும் நீர்ப் பாய்ச்சுதல்,
  • இயற்கை சார்ந்த உரங்கள் இடுதல்,
  • பயிர்ப் பாதுகாப்பு மற்றும் பராமரிப்புக்கு போதிய அளவு முக்கியத்துவம் அளித்தல்,
  • ஊடுபயிர் சாகுபடி மூலம் மண்வளம் மற்றும் மகசூல் அதிகரித்தல்

ஆகியவையே நவீன கரும்பு உற்பத்தியின் கோட்பாடு.

நாற்றங்கால்:

நீடித்த நவீன கரும்பு உற்பத்தி முறையில் ஒரு விதைப்பருவை கரும்பில் இருந்து அரை வட்ட வடிவில் வெட்டி எடுத்து, தரமான அச் சீவல்களைக் கொண்டு ப்ரோடிரே எனப்படும் குழித்தட்டுக்களில் மக்கிய தென்னை நார்க்கழிவை பயன்படுத்தி நாற்றங்கால் அமைக்கப்படுகிறது.

இதனால் அதிக அளவு முளைப்புத் திறனை, குறைந்த நாள்களிலேயே அடைய முடியும். இவ்வாறு அமைக்கப்பட்ட நாற்றங்காலில் நாற்றுகள் 25 முதல் 30 நாட்கள் வயது அடைந்தவுடன் வேர்ப் பகுதியில் உள்ள தென்னை நார்க் கழிவுடன் சேர்த்து நடவு செய்ய வேண்டும்.

அப்போது, கரும்பில் 4 முதல் 6 இலைகள் முளைத்திருக்கும். சாதாரண முறையில் 2 மாதங்களில் அடையப்படும் வளர்ச்சியை இம்முறையில் ஒரே மாதத்தில் எட்டுகிறது.

நீர்ப்பாசனம்:

பயிர்நடவு செய்த 15 முதல் 30 நாள்களில் அல்லது 2 முதல் 3 பக்க சிம்புகள் வந்தபின் மண்ணில் இருந்து ஓர் அங்குல உயரத்தில் கவாத்து செய்யும் கத்தரி கொண்டு வெட்டிவிட வேண்டும். வெட்டுவதற்குமுன் சொட்டுநீர்ப் பாசனம் அமைக்காத விவசாயிகள், ஒரு தேக்கரண்டி அளவு யூரியா இட வேண்டும். சொட்டு உரநீர்ப் பாசனம் அமைத்துள்ள விவசாயிகள் அதன் மூலம் உரம் அளிக்க வேண்டும். கரும்புக்குத் தேவையான நீரை சிக்கனமாக, பயிருக்கு வேண்டிய அளவு மட்டும் தினமும் அளிக்க வேண்டும். இதற்கு சொட்டு உரநீர் மிகவும் ஏற்றது.

இதை ஊக்குவிக்க சிறு, குறு விவசாயிகளுக்கு 75% மானியம் வழங்கப்படுகிறது. இம்முறையால் மண்ணில் எப்போதும் 60% ஈரமும், 40% காற்றும் உள்ளவாறு பராமரிக்கப்படுவதால் பயிரின் வளர்ச்சி ஒரே சீராக இருக்கும். பயிருக்குத் தேவையான உரச் சத்தை பயிரின் வளர்ச்சி நிலைக்கேற்ப 210 நாள்கள் வரை அளிப்பதால், உர உபயோகத் திறன் அதிகரிப்பதோடு மகசூல் உயர்கிறது.

நவதானிய உரப்பயிர்:

மண்ணாய்வு பரிந்துரையின்படி, உரமிட வேண்டும். பரிந்துரை இல்லாத பட்டத்தில், ஏக்கருக்கு 110 கிலோ தழைச்சத்து, 25 கிலோ மணிச்சத்து, 45 கிலோ சாம்பல் சத்து தரவல்ல ரசாயன உரங்களை அளிக்க வேண்டும். நிலத் தயாரிப்பின்போது தொழுஉரம் இடுவதாலும், நவதானிய உரப்பயிர்களை ஊடுபயிராக வளர்த்து மண்ணோடு உழுதுவிடுவதாலும் பயிருக்குத் தேவையான நூண்ணூட்டச் சத்துக்கள் கிடைக்கின்றன.

ஏக்கருக்கு சனப்பை, தக்கைப்பூண்டு தலா 2 கிலோ, எள் 200 கிராம், உளுந்து, பாசிப்பயறு, தட்டைப்பயறு தலா 1 கிலோ, கொத்தமல்லி, வெந்தயம், கம்பு தலா அரை கிலோ ஆகியவற்றை கலந்து, நடவு செய்த ஒருவாரம் கழித்து பார்களின் இடையே விதைக்க வேண்டும். பின்னர், 45 நாள்கள் கழித்து மடக்கி உழுது, மண் அணைக்க வேண்டும்.

ஜீவாமிருத கரைசல்:

பயிருக்கு இயற்கையான ஊட்டச் சத்துக்களை அளிக்க, ஜீவாமிருத கரைசல் தயாரித்து 4 முதல் 5 முறை பயிருக்கு பாசன நீருடன் கலந்து இடலாம். இதனால், அதிக அளவு தழை, மணிச்சத்து கிடைக்கும். இதற்கு, பசுஞ்சானம் 20 கிலோ, வெல்லம் ஒரு கிலோ, கடலை மாவு ஒரு கிலோ, நல்லெண்ணைய் 200 மில்லி, பசு கோமியம் 5 லிட்டர், நுண்ணுயிர் உரம் 5 கிலோ, பயிர் சாகுபடி செய்துள்ள நிலத்தின் மண் அரை கிலோ ஆகியவற்றை ஒரு தொட்டியிலோ அல்லது டிரம்மிலோ 100 லிட்டர் தண்ணீரில் கலந்து நிழலில் வைக்க வேண்டும். தினமும் 2 (அ) 3 முறை நன்கு கலக்கிவிட வேண்டும். 5 நாள்களுக்குப்பின் இதை பாசன நீருடன் கலந்து பயிருக்கு அளிக்க வேண்டும். சாகுபடி காலத்தில் 4 (அ) 5 முறை இவ்வாறு அளிப்பது பலனளிக்கும்.

சோகை உரித்தல் மற்றும் விட்டம் கட்டுதல்: கரும்புப் பயிர் 5 முதல் 7 மாத பயிராக இருக்கும்போது சாதாரணமாக 30 இலைகள் வரை இருக்கும். பயிரின் மேற்பகுதியில் உள்ள 8 முதல் 10 இலைகள் மட்டுமே ஒளிச் சேர்க்கைக்கு பயன்படுகின்றன. மற்ற இலைகள் சத்தை உறிஞ்சுவதில் போட்டியிடுவதால் பயிர் வளர்ச்சி பாதிக்கப்படுகிறது.

எனவே, இந்த நேரத்தில் கீழ்ப்பகுதியில் உள்ள காய்ந்த இலைகளை, ஒளிச்சேர்க்கைக்குப் பயன்படாத இலைகளை உரித்து பார்களில் பரப்பி விடுவதால் பயிர் வளர்ச்சி நன்றாக இருப்பதோடு, மண்ணில் ஈரம் காக்கப்படுகிறது. களையும் கட்டுப்படுத்தப்படும். இதை 5 மற்றும் 7-வது மாதங்களில் செய்ய வேண்டும்.

பயிர்ப் பாதுகாப்பு, அறுவடை:

கரும்பில் தோன்றும் இளங்குருத்துப் புழு, இடைக்கணுப் புழு, வெள்ளை வேர்ப்புழு மற்றும் செவ்வழுகல் புழு, வாடல் நோய்களை கட்டுப்படுத்த ஒருங்கிணைந்த பயிர்ப் பாதுகாப்பு முறைகளைக் கையாள வேண்டும். கரும்பு அறுவடைக்குத் தயாராகும் நேரத்தில் கரும்பை அடியோடு வெட்டி எடுக்க வேண்டும். இதற்குப் பொருத்தமான வெட்டுக்கத்தி (அ) வெட்டுக்கோடாரியைப் பயன்படுத்தலாம். இவ்வாறு வெட்டுவதன் மூலம், அதிக சர்க்கரை சத்துள்ள அடிக் கரும்பு வெட்டப்படுவதால் கூடுதல் எடையுடன் சர்க்கரை கட்டுமானமும் கூடும். இந்த புதிய அணுகுமுறையைக் கையாண்டால், ஏக்கருக்கு 80 டன் கரும்பு வரை மகசூல் பெறலாம்.

தினமணி தகவல்
தருமபுரி மாவட்ட வேளாண் இணை இயக்குநர் கா. ராஜன்,
உழவர் பயிற்சி நிலைய துணை இயக்குநர் ந. மேகநாதன்

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s