நேரடி விற்பனையில் நிகரற்ற லாபம்…

இயற்கை வழி விவசாயத்திற்கு பசுமை விகடன் இதழ் எப்பொழுதும் ஆதரவு சந்து வருகிறது. ஆனால் அதில் வரும் சில ஆர்வமூட்டும் விசியங்களை வலைப்பதிவில் பகிர முடிவதில்லை. காரணம் காப்பிரைட். விவசாயத்திற்கு ஆதரவளிக்கும் இதழ் அதன் விவரங்களையும் கட்டற்ற முறையில் தந்தால் பயனுள்ளதாகவும் தொகுக்க எளிதாகவும் இருக்கும்.

இந்த வாரம் இயற்கை வழி நெல் சாகுபடி தொடர்பாக ஒரு கட்டுரை வந்துள்ளது.

திருவண்ணாமலை மாவட்டம் பொற்குணம் கிராமத்தைச் சேர்ந்த சரவணன் என்பவரின் அனுபவக்கதை. அதன் சாரம் வருமாறு.

பிழைப்பிற்காக நகரத்திற்குச் சென்று கல்வியுடன் அச்சுத் தொழிலில் ஈடுபட்டவர் இயற்கை வழிவிவசாயம் கேள்விப்பட்டு கிராமத்துக்குத் திரும்பியிருக்கிறார். ஏற்கனவே குத்தகைக்கு விட்ட தன் நிலத்தின் ஒரு பகுதியை வாங்கி இயற்கை வழி சோதனையைச் செய்ய ஆரம்பித்திருக்கிறார். அதன் பின்னர் ஆர்வம் ஊற்றெடுக்கத் தொடங்கியதும்  கிராமத்துல் இருக்குற ஏழு விவசாயிகளை அழைத்து வந்து, ‘குக்கூ’ மூலம் இயற்கை வழி விவசாயப் பயிற்சிக்கு ஏற்பாடு செய்திருக்கிறார்.

பஞ்சகவ்யா, மூலிகைப் பூச்சிவிரட்டி, ஜீவாமிர்தம் மாதிரியான இடுபொருட்களையும் தயாரித்து தன் வயலில் பயன்படுத்தி இருக்கிறார் ஒரு மண்புழுகூட தட்டுப்படாத அவர் நிலத்தில் இப்போ ஏகப்பட்ட மண்புழுக்கள்.

நெல்லை நெல்லா விற்காமல் அரிசியாக அரைத்து விற்பதன் மூலம் மதிப்புக் கூட்டுதலையும் செய்திருக்கிறார்.

70 சென்ட்டுக்கு 25 கிலோ விதைநெல்!

‘ஒவ்வொரு நெல் ரகத்துக்கும் வயதுதான் வித்தியாசப்படுமே தவிர, சாகுபடி முறைகள் ஒன்றுதான். பவானி பொன்னி ரகத்துக்கு வயது 135 நாட்கள்; ஆடுதுறை-36 ரகத்துக்கு வயது 115 நாட்கள். இந்த ரகங்கள் அனைத்து வகை மண்ணிலும் நன்றாக வரும். அனைத்துப் பட்டங்களுக்கும் ஏற்றவை. 70 சென்ட் நிலத்தில் சாகுபடி செய்வதற்கு மொத்தம் 25 கிலோ விதைநெல் தேவைப்படும் (இவர் 45 சென்ட் நிலத்துக்கு பவானி பொன்னி ரகத்தில் 15 கிலோ விதையையும், 25 சென்ட் நிலத்துக்கு ஆடுதுறை-36 ரகத்தில் 10 கிலோ விதையையும் பயன்படுத்தியுள்ளார்).

2 சென்டில் நாற்றங்கால்!

நாற்றங்கால் தயாரிக்க,2 சென்ட் நிலத்தில் களைகளை அகற்றி, மூன்று சால் மினி டிராக்டரில் உழவு செய்து சேறாக மாற்றி சமப்படுத்த வேண்டும். பிறகு, 2 கிலோ கனஜீவாமிர்தம், 2 கிலோ வேப்பம் பிண்ணாக்கு ஆகியவற்றை கலந்து தூவ வேண்டும்.

விதைநெல்லை சணல் சாக்கில் இட்டு ஒரு பகல் முழுவதும் தண்ணீரில் ஊறவைத்து, இரவு கரையேற்றி வைக்க வேண்டும். இதேபோல மறுநாளும் செய்துவிட்டு… மூன்றாம் நாள், 50 லிட்டர் தண்ணீர், 5 லிட்டர் பஞ்சகவ்யா, 50 கிராம் சுண்ணாம்பு ஆகியவை கலந்த கரைசலில் விதைகளை நனைத்து, பிறகு விதைக்க வேண்டும்.

மழை… கவனம்!

விதைத்த பிறகு, வயலில் இருந்து தண்ணீரை வடித்துவிட வேண்டும். விதைத்த அன்று ‘மழை பெய்யலாம்’ என எதிர்பார்த்தால், தண்ணீரை வடிக்கக் கூடாது. தண்ணீரை வடித்துவிட்டால், மழை காரணமாக விதைகள் புரண்டு விடும். தொடர்ந்து 3, 5 மற்றும் 7-ம் நாட்களில் தண்ணீர் கட்டி, ஒரு மணி நேரம் வைத்திருந்து வடித்துவிட வேண்டும். 8-ம் நாள்… தண்ணீரோடு 5 லிட்டர் பஞ்சகவ்யாவைக் கலந்து விடவேண்டும். 20 முதல் 22 நாட்களில் நாற்று தயார் ஆகிவிடும். நாற்றைப் பறிப்பதற்கு இரண்டு நாட்களுக்கு முன்பு 12 லிட்டர் தண்ணீரில், 2 லிட்டர் புளித்த மோரைக் கலந்து தெளிக்க வேண்டும்.

அடியுரத்துக்கு பசுந்தாள்!

நாற்றங்கால் தயாரிப்புக்கு 20 நாட்கள் முன்பாகவே, 70 சென்ட் நிலத்தை சாகுபடிக்காக தயாரிக்க ஆரம்பித்துவிட வேண்டும். ஒரு உழவு செய்து 10 கிலோ சணப்பு, 10 கிலோ தக்கைப்பூண்டு ஆகியவற்றைக் கலந்து விதைக்க வேண்டும். 40-ம் நாளில் பூவெடுக்கும். அதன் பிறகு, மடக்கி மூன்று சால் உழவு செய்து, சேறாக மாற்றி பரம்படிக்க வேண்டும். 100 கிலோ கனஜீவாமிர்தம், 20 கிலோ வேப்பம் பிண்ணாக்கு, 10 கிலோ ஆமணக்குப் பிண்ணாக்கு ஆகியவற்றை நிலத்தில் பரவலாக இட வேண்டும். பிறகு, அரையடிக்கு ஒரு குத்து வீதம், குத்துக்கு இரண்டு, மூன்று நாற்றுகளாக நடவு செய்ய வேண்டும். தொடர்ந்து வாரம் இருமுறை பாசனம் செய்ய வேண்டும். வாரம் ஒரு முறை 25 லிட்டர் அமுதக்கரைசலை பாசன நீரில் கலந்துவிட வேண்டும்.

ஊட்டத்துக்கு பஞ்சகவ்யா!

நடவு செய்த 20-ம் நாள் களை எடுத்து, மறுநாள் 10 கிலோ வேப்பம் பிண்ணாக்கு, 10 கிலோ ஆமணக்குப் பிண்ணாக்கு இரண்டையும் கலந்து வயலில் தூவ வேண்டும். பிறகு, 60 லிட்டர் தண்ணீரில் 12 லிட்டர் பஞ்சகவ்யாவைக் கலந்து வயல் முழுவதும் தெளிக்க வேண்டும். 35-ம் நாளில் களை எடுத்து, மறுநாள் இதேபோல பிண்ணாக்குக் கலவையை இட்டு, பஞ்சகவ்யாவைத் தெளிக்க வேண்டும். இயற்கை முறையில் சாகுபடி செய்யும்போது பூச்சிகள், நோய்கள் தாக்குவதில்லை. கதிர் பிடித்த பிறகு 65 லிட்டர் தண்ணீரில், 6 லிட்டர் தேமோர்க் கரைசலைக் கலந்து தெளிக்க வேண்டும்.

ஆடுதுறை-36 ரகம்… 90 நாளில் கதிர் பிடித்து, 105-ம் நாளுக்கு மேல் முற்றி, 115-ம் நாளில் அறுவடைக்குத் தயாராகி விடும். பவானி பொன்னி ரகம்… 110-ம் நாளில் கதிர் பிடித்து, 125-ம் நாளில் முற்ற ஆரம்பித்து, 135-ம் நாளில் அறுவடைக்குத் தயாராகி விடும்.’

70 சென்டில் 25 மூட்டை!

நிறைவாக மகசூல் மற்றும் வருமானம் பற்றிப் பேச ஆரம்பித்த சரவணன், ”இரண்டு ரகத்துலயுமே ஒவ்வொரு தூர்லயும் இருபத்தஞ்சுல இருந்து முப்பது சிம்பு வரை இருந்துச்சு. ஒவ்வொரு சிம்புலயும் இருநூறுல இருந்து இருநூத்தி இருபது மணிகள் இருந்துச்சு. ஆடுதுறை-36 ரகத்தை அறுவடை பண்ணினப்போ பத்து மூட்டை

(76 கிலோ மூட்டை) கிடைச்சுது. பவானி பொன்னியில 15 மூட்டை கிடைச்சுது.

அரிசியா அரைச்சா… ஒரு மூட்டை நெல்லுக்கு நாப்பத்தஞ்சுல இருந்து அம்பது கிலோ வரை அரிசி கிடைக்கும். சராசரியா 47 கிலோனு வெச்சிக்கிட்டா… ஆடுதுறை-36 ரகத்துல 470 கிலோ அரிசியும், பவானி பொன்னியில 700 கிலோ அரிசியும் கிடைக்கும். அரிசி தயாரிக்கறதுக்கு பணம் கொடுக்கறதில்ல. அதுக்குப் பதிலா தவிட்டை எடுத்துக்குவாங்க. ஆடுதுறை-36 ரக அரிசி கிலோ 30 ரூபாய்க்கும், பவானி பொன்னி கிலோ 50 ரூபாய்க்கும் விலை போகும். அந்தக் கணக்குல பாத்தா, ரெண்டு அரிசி மூலமா 49 ஆயிரத்து 100 ரூபாய் வருமானம் கிடைக்கும். எல்லா செலவும் போக 36 ஆயிரம் ரூபாய் வரை லாபமா கிடைக்கும்”

தொடர்புக்கு
சரவணன்,
அலைபேசி (செல்போன்): 94436-24010

காப்புரிமை பசுமை விகடன் – http://www.vikatan.com/article.php?mid=8&sid=309&aid=11346

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s