நாற்று நடவு மூலம் துவரை சாகுபடி

துவரை நம் மாநிலத்தின் முக்கியமான பயிர். அதிகமான அளவில் பயிரிடப்பட்டாலும் பழமையான விவசாயம் மற்றும் பூச்சிகளின் தாக்கத்தால் விவசாயிகள் பல இன்னல்களுக்கும் ஆளாகின்றனர். இதைத் தடுக்க நாற்று முறை விவசாயம் கைகொடுக்கும். வம்பன்2, வம்பன்3 ஆகிய இரகங்கள் அதிக விளைச்சலும் மலட்டு தேமல் நோய்க்கு எதிர்ப்புத் தன்மையும் கொண்டது. இந்த இரகங்கள் 1999 மற்றும் 2005 ஆகிய ஆண்டுகளில் வம்பன் பயிறுவகை ஆராய்ச்சி மையத்திலிருந்து தமிழ்நாடு வேளாண் பல்கலைக் கழகத்தால் வெளியிடப்பட்டுள்ளது.

சாகுபடி அட்டவணை

இரகம் வயது பருவம்
வம்பன்2 180 ஜூன்-ஜூலை (ஆடிப்பட்டம்)
வம்பன்2 110~120 ஜூன்-ஜூலை (ஆடிப்பட்டம்), செப்டம்பர்-அக்டோபர் (புரட்டாசிப் பட்டம்), பிப்ரவரி மார்ச் (மாசிப்பட்டம்)

எல்லா மண் வகைகளும் ஏற்றதே.

நாற்றங்கால்
துவரையில் நாற்று நடவு கோடை உழவிற்குப் பிறகு ஆரம்பமாகிறது. பயிர் அறுவடைக்குப் பின்பு மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களில் இரண்டு முதல் மூன்று முறை உழவு செய்வதன் மூலம் பயிர்களைத் தாக்கக் கூடிய பூச்சிகள், நுண்ணுயிர்கள் மற்றும் நிரந்தரமான களைகளை சூரிய வெப்பத்திற்கு உட்படுத்தி அழிக்கலாம். மேலும் இதனால் மண் மற்றும் மழை நீர் சேமிக்கப் படுகிறது. நீரின் ஊடுருவும் திறன் அதிகரிக்கிறது. நாற்று நடவிற்கு மூன்று வாரத்திற்கு முன்பு மக்கிய தொழு உரம் ஒரு ஏக்கருக்கு 5 டன் வீதம் அல்லது மண்புழு உரம் ஏக்கருக்கு 2.5 டன் என்னும் விகிதத்தில் இடவேண்டும். இதன் மூலம் நிலத்தின் நீர் சேமிக்கும் திறன் மற்றும் நுண்ணுயிரிகளின் எண்ணிக்கை அதிகரிக்கப்படுகிறது.

விதை அளவீடு
ஒரு ஏக்கருக்கு – 2.5 கிலோ விதை

விதை நேர்த்தி
ஒரு லிட்டர் நீரில் 20 கிராம் கால்சியம் குளோரைடு கலந்து கரைசலை தயார் செய்க
ஒரு கிலோ விதையை ஒரு லிட்டர் கரைசலில் ஒரு மணிநேரம் ஊறவைத்து பின் நிழலில் ஏழு மணிநேரல் உலர்த்துக
பின் வெல்லக் கரைசலில் 100 கிராம் ரைசோபியம், 100 கிராம் பாஸ்போ பாக்டீரியா, 4 கிராம் டிரைக்கோடெர்மா கலந்த கலவையை ஒரு கிலோ விதையுடன் கலந்து உலர்த்தவும்

நாற்று தயார் செய்யும் முறை
6க்கு 4 இஞ்ச் அளவும் 200 மைக்ரான் தடிமன் உள்ள பாலிதீன் பைகள் அல்லது ஒரு மிமீ தடிமன் அளவும் 1.5 இஞ்ச் அளவுள்ள குழித்தட்டுக்களைத் தேர்வு செய்யவும்
சம அளவிலான மண், மணல் மற்றும் தொழு உரம் அல்லது மண்புழு உரம் கலவையை பைகளில் அல்லது குழிகளில் நிரப்பவும்.

ஒரு பை அல்லது குழியில் 2 விதைகளை ஊன்றி நீரிட்டு நிழலில் நிரப்பவும்

முளைப்பு வந்த பிறகு நாற்றுக்களை பாதி வெயில் படுமாறு வைத்து கடினப்படுத்தவும்

25~30 நாட்களில் நடவுக்குத் தயாராகிவிடும்.

இதன் நன்மைகள் என்ன?

 • வாளிப்பான நாற்றுக்கள்
 • விதை மூலம் பரவும் நோய்கள் கட்டுப்படுத்தப்படுகின்றன
 • தழை மற்றும் மணிச்சத்து இடும் அளவு குறைகிறது
 • உயிர் உர நேர்த்தி செய்வதனால் மண் வளம் கூடுகிறது
 • அதிக முளைப்புத் திறன்
 • சீரான நாற்று வளர்ச்சி
 • வறட்சி தாங்கும் திறன்

நடவு செய்யும் முறை
நன்கு உழுது நிலத்தைத் தயார் செய்யவும். நீண்ட காலப் பயிறுக்கு 5க்கு 3 அடியும் குறுகிய காலப் பயிருக்கு 3க்க 2 அடியும் இடைவெளிவிட்ட அரை சதுர அடி குழி எடுக்கவும்.

கடினப்படுத்தப்பட்ட நாற்றுக்களை நடவுக்குப் பயன்படுத்தவும்
இறவையில் ஒரு ஏக்கருக்கு 10:20:10:8 தழை:மணி:சாம்பல்:கந்தக சத்தை அடியுரமாக இடவும். யூரியா 22 கிலோ, சூப்பர் 125 கிலோ, பொட்டாஷ் 17 கிலோ மற்றும் ஜிப்சம் 44 கிலோ

டிஏபி கரைசல்
ஒரு ஏக்கருக்குத் தேவையான 2 சத டிஏபி கரைசலைத் தயாரிக்க 4 கிலோ டிஏபி உரத்தை 20 லிட்டர் தண்ணீரில் ஓர் இரவு ஊற வைக்கவும்.
அதிலிருந்து தெளித்த கரைசலை 188 லிட்டர் நீரில் கலந்து காலை அல்லது மாலை வேளையில் இலையில் நன்கு படும்படி பூக்கும் பருவத்தில் ஒரு முறையும் மீண்டும் 15 நாட்கள் இடைவெளியில் ஒரு முறையும் கை தெளிப்பான் கொண்டு தெளிக்கலாம்.
பயிறு வகைப் பயிர்களில் முக்கிய குறைபாடு என்னவென்றால் பூக்கள் மற்றும் பிஞ்சுகள் பெருமளவில் உதிர்ந்துவிடும். இதைத் தவிர்க்க துவரை போன்ற பயிறு வகைக்கு 40 பிபிஎம் நாப்தலின் அசிட்டிக் அமிலம் (பிளானோபிக்ஸ்) என்ற மருந்து 45 மில்லியை 200 லிட்டர் நீரில் கலந்து பூக்க ஆரம்பிக்கும் போது ஒரு முறையும் பின்னர் 15~20 நாட்களில் மறுமுறையும் தெளிக்கலாம்.

களை பராமரிப்பு
பெண்டி மெதாலின் களைக்கொல்லி ஏக்கருக்கு 800 மில்லி அல்லது புளுகுளோரலின் ஏக்கருக்கு 600 மில்லி வீதம் விதைக்கு மூன்று நாட்களுக்குள் ஈரம் உள்ளபோது தெளிக்கவும். பின்பு 30வது நாளில் கைக்களை எடுக்கவும்

துவரையில் ஒருங்கிணைந்த காய்ப்புழு நிர்வாகம்

 • எதிர்ப்புத் திறன் மிகுந்த வம்பன்2, வம்பன்3 இரகங்களைப் பயிரிடுதல்
 • பயிர் தாங்கிகளை அமைத்தல்
 • பச்சைப் புழுக்கான இனக்கவர்ச்சிப் பொறிகளை வைத்தல் (ஏக்கருக்கு 5)
 • முட்டை மற்றும் புழுக்களைக் கையால் பொறுக்கி அழித்தல்
 • வேப்பங்கொட்டைச் சாறு 5 சதம் தெளித்தல்
 • பச்சைக் காய்ப் புழுக்களைக் கட்டுப்படுத்த என்பிவி நச்சுயிரியை ஏக்கருக்கு 200 புழு சமன் என்ற அளவில் தெளித்தல்
 • பூக்கும் தருணத்தில் 50 சதம் எண்டோசல்பான் (ஒரு லிட்டர் தண்ணீருக்கு 2 மில்லி) அல்லது குளோர்பைரிபாஸ் (2 மிலி/லிட்டர்) தெளித்தல்

நோய் நிர்வாகம்
வேரழுகல் மற்றும் வாடல் நோய்
கார்பெனாசியம் (2 கி/கி) டிரைக்கோடெர்மா விரிடி (4 கி/கி) அல்லது சூடோமோனாஸ் புளோரசன்ஸ் (10 கி/கி) விதை நேர்த்தி செய்து விதைக்கவேண்டும்

துவரையில் மலட்டுத் தேமல் தாக்கப்பட்ட செடிகளைப் பிடுங்கி அழிக்கவும்
ஏக்கருக்கு 200 மிலி மானோகுரோட்டோபாஸ் தெளிக்கவும்

நன்மைகள்
100 சத பயிர் பாதுகாப்பு
ஏக்கருக்கு 2.5 கிலோ விதை போதுமானது
கடினப்படுத்தப்பட்ட விதை மற்றும் நாற்று துரிதமாக வேர் வளர்ச்சி அடையவும் வறட்சியைத் தாங்கவும் வழிவகை செய்கிறது.
தரமான நாற்றுக்களை தகுத்த இடைவெளியில் நடுவதால் அதிக மகசூல் கிடைக்கிறது
மானாவாரியில் மழை வந்தபின் நடுவதற்கு உகந்தது.
முதல் களை எடுப்பு தவிர்க்கப்படுகிறது

தொழில் நுட்பத்தின் நன்மைகள்
சரியான நேரத்தில் மழை பெய்யாவிட்டாலும் மே மாதத்தில் நடவு செய்யலாம்
பருவத்திற்கு முன்பாக நடுவதால் காய்துளைப்பான் தாக்குதல் தவிர்க்கப்படுகிறது.
வேர் ஆழமாகச் செல்வதால் வறட்சியைத் தாங்குகிறது
பயிர்களுக்கு இடையே போதுமான இடைவெளி இருப்பதால் பூச்சிக்கொல்லி மருந்து அடிப்பது எளிது
சிறு மற்றும் குறு விவசாயிகளுக்கு ஏற்றது
போதுமான இடைவெளி, காற்று, மண் ஈரப்பதம் மற்றும் ஊட்டச்சத்துக்கள் கிடைக்கிறது

பக்கக் கிளைகள் மற்றும் தாவர வளர்ச்சி நன்றாக உள்ளதால் காய் மற்றும் விதைபிடிப்புத் திறன் அதிகமாக உள்ளது

கடைபிடிக்க வேண்டியது என்ன?
நாற்றங்காலில் உள்ள நாற்றுக்களுக்கு தினசரி நீர் பாய்ச்சுதல்
ஜூன் மாதம் இரண்டாவது வார மழை நாட்கள் விதைப்பதற்க ஏற்றவை
நடவு வயலுக்கு நாற்றினைக் கொண்டு செல்லும்போது ஈரத்துணியினால் மூடி எடுத்துச் செல்லவேண்டும்
ஒவ்வொரு செடிக்கும் மண் அணைக்க வேண்டும்.
பயிருக்கு இடையில் உழவு செய்வதன் மூலம் நீர் பற்றாக்குறையினால் ஏற்படும் வெடிப்புகளைத் தவிர்க்கலாம்

தவிர்க்கவேண்டியவை என்ன?
அதிக அளவு நீர் ஆபத்து
செடியினை வளைக்கவோ உரிக்கவோ கூடாது

அறுவடை
80 சத காய்கள் நன்கு முற்றியதும் காய்களை அறுவடை செய்யவேண்டும். ஓரிடு நாட்கள் கழித்து காய்களை நன்கு வெயிலில் காய வைத்த பயிறைப் பிரித்தெடுத்து சுத்தம் செய்து பயன்படுத்த வேண்டும். ஏக்கருக்கு 450 முதல் 550 கிலோ வரை கிடைக்கும்

நவீன வேளாண்மை தகவல் – சீ.ராஜா ஜோஸ்லீன், ம. இரகுபதி, கிரீடு வேளாண் அறிவியல் மையம் அரியலூர். 04331 – 260 335

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s