செம்மை கரும்பு சாகுபடி – குறைந்த செலவு – அதிக லாபம்

உலக அளவில் பிரேஸிலுக்கு அடுத்தபடியாக, கரும்பு உற்பத்தியில் இந்தியா 2-வது இடம் வகிக்கிறது. இந்தியாவில் 571 சர்க்கரை ஆலைகள் உள்ளன.

குறிப்பாக, தமிழகத்தில் ஹெக்டேருக்கு சராசரியாக 106 டன் கரும்பு உற்பத்தி செய்யப்படுகிறது. இந்தியாவின் மொத்த சர்க்கரை உற்பத்தியில் தமிழகத்தின் பங்களிப்பு 10 சதவீதம்.

கடந்த 10 ஆண்டுகளில் கரும்பு விவசாயம் பெரும் ஏற்ற இறக்கங்களைச் சந்தித்து வருகிறது. தமிழகத்திலும் கரும்பு உற்பத்தி ஆண்டுக்கு ஆண்டு ஏற்ற இறக்கங்களைக் கொண்டதாக மாறிவிட்டது.

எனவே, கரும்பு உற்பத்தியை பெருக்குவதில், சாகுபடி செலவைக் குறைப்பதில், அதிக கவனம் செலுத்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டு இருக்கிறது.  எனவே செம்மை நெல் சாகுபடியைப் போல், செம்மைக் கரும்பு சாகுபடி முறை, விவசாயிகளுக்கு வேளாண் விஞ்ஞானிகளால் பரிந்துரைக்கப் படுகிறது.

கரும்பு சாகுபடியில் புதிய அணுகுமுறையான, செம்மைக் கரும்பு சாகுபடி மூலம்  நீர் சேமிப்பு, விளைச்சல் அதிகரிப்பு அம்சங்கள் அதிகரிக்கிறது. குறைந்த விதை நாற்றைப் பயன்படுத்தி, குறைந்த தண்ணீரில், சரியான ஊட்டச்சத்து அளித்து, சரியான பயிர் பராமரிப்பையும் பயன்படுத்தி, அதிக மகசூல் பெறமுடியும் என்கிறார்கள் வேளாண் விஞ்ஞானிகள்.

கரும்பு விதைக் கரணைகள் மூலம் புதிய கரும்பை உற்பத்தி செய்வதற்குப் பதில், கரும்பில் உள்ள விதைப் பருக்கள் சீவல்களைக் கொண்டு பாலித்தீன் பைகள் அல்லது பிளாஸ்டிக் டிரேக்களில் நாற்றங்கால் தயாரித்து, பின்னர் வயலில் நடவு செய்யும் முறை அறிமுகப்படுத்தப்படுகிறது.

7 முதல் 9 மாதங்கள் முதிர்ந்த கரும்பில் இருந்து விதைப் பருக்களின் சீவல்கள் வெட்டுக் கருவிகள் மூலம் வெட்டி எடுக்கப்படுகிறது. இதற்கான  இயந்திரங்கள் பயன்பாட்டுக்கு வந்துவிட்டன. விதை நேர்த்தியும் செய்யப்பட வேண்டும். 25 முதல் 35 நாள்கள் ஆன நாற்றுகள் வயல்களில் நடப்படும்.   நடவு செய்யும்போது வரிசைக்கு 5 அடி இடைவெளியும், நாற்றுக்கு நாற்று 2 அடி இடைவெளியும் விட்டு நடவு செய்யப்பட வேண்டும். இதன்மூலம் ஊடுபயிர் செய்தல், இயந்திரம் மூலம்  களையெடுத்தல், அறுவடை போன்ற பணிகளும் எளிதாகிறது.

ஊடுபயிராக 3 மாதங்கள் வரை தட்டைப் பயறு, கொண்டைக் கடலை, உருளைக் கிழங்கு, கோதுமை, தர்பூசணி, போன்றவற்றைப் பயிரிடலாம். ஊடுபயிர்கள் கரும்பு வளர்ச்சிக்கும் உதவுகின்றன. விதைக் கரணைகள் மூலம் புதிய கரும்பை உற்பத்தி செய்ய, ஏக்கருக்கு 4 டன்கள் வரை கரும்பு தேவைப்படுகிறது. ஆனால் செம்மைக் கரும்பு சாகுபடியில் 500 கிலோ (5 ஆயிரம் விதைச் சீவல்கள்) போதும்.

தேவையான அளவுக்கு மட்டும் ஈரப்பதம் இருக்கும் வகையில் நீர்ப்பாசனம், இயற்கை உரங்களைப் பயன்படுத்துதல், பராமரிப்புக்கு போதிய முக்கியத்துவம் அளித்தல், பயிருக்கு  நல்ல காற்றோட்டம், சூரிய வெளிச்சம் ஆகியவற்றை அதிகரித்தல் மூலம் சாகுபடி காலத்தையும், செலவை குறைக்கவும், மகசூலை அதிகரிக்க முடியும் என்கிறார்கள்  வேளாண் விஞ்ஞானிகள்.

இதுகுறித்து நெல்லிக்குப்பம் சர்க்கரை ஆலை அதிகாரி ஒருவர் கூறுகையில், செம்மைக் கரும்பு சாகுபடி மூலம், சாகுபடிச் செலவைக் குறைக்க முடியும். ஒரே மாதிரியான, தரமான கரும்பு நாற்றுகளை விவசாயிகளுக்கு வழங்க முடியும்.

இதனால் உற்பத்தி அதிகரிக்கும். நாற்று தயாரிக்க விவசாயிகளுக்குப் பயிற்சி அளித்து வருகிறோம். 4 இடங்களில் விளக்கப் பண்ணைகளும் அமைத்து இருக்கிறோம். கரும்பு நாற்றுகளை பிளாஸ்டிக் டிரேக்களில் வளர்க்கிறோம் என்றார்.

இதுகுறித்து நெல்லிக்குப்பம் அருகே எய்தனூரைச் சேர்ந்த விவசாயி நிரஞ்சன் கூறுகையில், செம்மை கரும்பு சாகுபடி குறித்து ஆந்திர மாநிலத்திலும், தஞ்சை மாவட்டம் காட்டுத் தோட்டத்திலும் பயிற்சி பெற்றேன். நான், எய்தனூரில் 12 ஏக்கரில் செம்மைக் கரும்பு சாகுபடி முறையில் கரும்பு உற்பத்தி செய்ய திட்டமிட்டு இருக்கிறேன்.

செம்மைக் கரும்பு சாகுபடி மூலம் சாகுபடிச் செலவு குறைவு, ஊடுபயிர் செய்யலாம். தண்ணீர் செலவு குறைவு. மகசூல் அதிகரிக்கிறது போன்ற விவரங்களை ஆந்திர மாநில விவசாயிகள் மூலம் நேரடியாகத் தெரிந்து கொண்டேன். இந்தியா முழுவதும் செம்மைக் கரும்பு சாகுபடி முறை அறிமுகப்படுத்தப்பட்டு வருகிறது என்றார்.

தகவல் – தினமணி கடலூர்.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s