கம்பம் பள்ளத்தாக்கு பகுதியில் முதல்போக நெல் சாகுபடி

கம்பம் பள்ளத்தாக்கு பகுதியில் நெற்பயிருக்கு முதல் களையெடுக்கப்பட்டு இரண்டாவது களையெடுக்க இருக்கின்றனர். விவசாயிகள் நெல் நடவினை வரிசையில் செய்துள்ளதோடு பயிர் வரிசைக்கு வரிசை 25 செ.மீ. இடைவெளி விட்டுள்ளனர்.  விவசாயிகள் உடனே தங்கள் பயிரில் கோனோ களைக்கருவியை உபயோகிக்கலாம். கருவி கொண்டு குறுக்கும் நெடுக்குமாக பயன்படுத்த வேண்டும். இவ்வாறு செய்யும்போது சுமார் ஒரு டன் அளவிற்கு களைகள் மண்ணில் அமுக்கப்பட்டு பசுந்தாள் உரமாக மாற்றப்படுகிறது. மண்ணில் காற்றோட்டம் ஏற்பட்டு வேர் வளர்ச்சி அதிகரிக்கும்.

பாசன நீர் அதிகமாக இருக்கின்றதே என்று நினைத்து நீரினை வீணாக்கிவிடக்கூடாது. பாசனம் செய்யும்போது காய்ச்சலும் இருக்க வேண்டும். பாய்ச்சலும் இருக்க வேண்டும். இதனால் மண்ணில் நுண் உயிர்களின் வளர்ச்சி அதிகரித்து, அதோடு காற்றோட்டமும் அதிகரித்து பயிர் நன்கு தூர் கட்டிவிடும். தூர்கள் செழிப்பாக வளர்ந்து பயிர் பசுமையாக வரும்போது பூச்சி, நோய்கள் தாக்கக்கூடும். இதுசமயம் முதல் தாக்குதல் இலை சுருட்டுப்புழுவினால் ஏற்படும். எடுத்த எடுப்பில் ரசாயன பூச்சிக்கொல்லியை அடிக்காமல் வேம்பு மருந்துகள் 200 மில்லி அல்லது வேப்பங்கொட்டை சாறு 5 சதவீதம் இட்டு இதில் ஒட்டும் திரவம் சேர்த்து பயிர்மேல் தெளிக்கலாம். இந்த அளவு கரைசல் தயாரிக்க 10 கிலோ வேப்பங்கொட்டையை இடித்து அதனை 20 லிட்டர் நீரில் ஊறவைத்து உபயோகத்திற்கு எடுத்துக்கொள்ளலாம். இதனை கைத்தெளிப்பான் கொண்டு 20 டேங்குகளில் பயிர்மேல் தெளிக்கலாம். இந்த சிகிச்சைக்கு பலன் கிட்டாவிட்டால் மானோகுரோட்டோபாஸ் 400 மி.லி. அல்லது குளோர்பைரிபாஸ் 500 மி.லி. ஒரு ஏக்கருக்கு தெளிக்கலாம். உயிரியல் முறையில் பூச்சியை கட்டுப்படுத்த டிரைகோகிரம்மா கைலோனிஸ் என்ற முட்டை ஒட்டுண்ணியை ஏக்கருக்கு 40,000 என்ற அளவில் வயலில் தாய் அந்துப்பூச்சிகளின் நடமாட்டம் தெரிந்தவுடன், உடனேயே விடவேண்டும். பேசில்லஸ் துரிஞ்சியன்சிஸ் என்ற பேக்டீரியா நுண்ணுயிரியை ஏக்கருக்கு 400 கிராம் என்ற அளவில் புழுக்களின் சேதம் பொருளாதார சேத நிலையைத் தாண்டும்பொழுது தெளிக்க வேண்டும். இதற்கு தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழக விஞ்ஞானிகள் மேற்கண்ட உயிரியல் முறையில் அதிக பாண்டித்யம் பெற்றவர்கள். அவர்கள் விவசாயிகளுக்கு உதவுவதற்கு சாகுபடி பருவங்களில் தயாராக இருக்கின்றனர். விவசாயிகள் விஞ்ஞானிகளை அணுகி உதவி பெற்றால் மிகக் குறைந்த செலவில் பிரச்னையைத் தீர்த்துக்கொள்ள முடியும். முதல்போக நெல் அறுவடையில் கிடைக்கும் நெல்மணிகள் சவரன்போல் இருக்க வேண்டும். அப்போதுதான் நெல்லுக்கு நல்ல விலை கிடைக்கும். நெல்மணிகளின் தரத்தை பாதிக்கும் வியாதிகளைக் கட்டுப்படுத்த எடிபன்பாஸ் 200 மி.லி. மாங்கோசெப் 400 கிராம், தாமிர ஆக்சிகுளோரைடு 500 கிராம் இவற்றில் ஏதாவது ஒரு பூஞ்சாணக் கொல்லியை 200 லிட்டரில் கலந்து பயிரின் மேல் நன்கு நனையும் படி தெளிக்க வேண்டும்.

மேற்கண்ட முறைகளில் அமோக மகசூலும் கணிசமான லாபமும் கிடைக்கும்.  கம்பம் பள்ளத்தாக்கில் இருக்கும் நிலையைவிட வைகை  பாசன நிலங்கள் வேறு சூழ்நிலையில் உள்ளன. இப்பகுதியில் சுமார் 45 சதவிகித அளவு நிலங்கள் உழவு செய்யப்பட்டு அப்படியே விடப்பட்டுள்ளது. விவசாயிகள் இதுகுறித்து மனக்கவலை கொள்ள வேண்டாம். வெகு சீக்கிரத்தில் இப்பகுதிகளுக்கு மழையினால் பாசன நீர் வரும். அதோடு இப்பட்டத்தில் குறுகிய கால ரகமாகிய ஜே-13 மதுரை பகுதியில் விவசாயிகளுக்கு நல்ல விளைவுகளை ஏற்படுத்தித்தரும். அதனால் விவசாயிகள் நம்பிக்கையோடு இருக்கவும். ஜே-13 சாகுபடியில் பிரபல வல்லுனரான எ.எஸ்.தர்மராஜன் விவசாயிகளுக்கு நம்பிக்கைஊட்டுகிறார்.

எ.எஸ்.தர்மராஜன், விலாசம்: 4/34, மெயின்ரோடு, கருப்பாயூரணி, மதுரை-625 020

தினமலர் தகவல் : எஸ்.எஸ்.நாகராஜன்.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s