இலவச மின் மோட்டார்களால் மின் சேமிப்பு சாத்தியமா?

இலவச மின் மோட்டார்கள் வழங்க ஒதுக்கப்பட்ட நிதி எவ்வளவு, ஒரே தவணையில் அனைத்துப் பழைய மோட்டார்களும் மாற்றப்படுமா, எத்தனை குதிரைசக்தித் திறன் கொண்ட மின் மோட்டார் வழங்கப்படும் என்ற உறுதியான அறிவிப்பு இல்லாததால், தமிழக முதல்வர் அறிவித்துள்ள மின் மோட்டார் வழங்கும் திட்டத்தால் 20 சதம் மின் சேமிப்பு சாத்தியமா என்ற கேள்வி எழுகிறது.

தமிழ்நாட்டில் நீர்ப் பாசன வசதி செய்யப்பட்ட மொத்த வேளாண் பரப்பு 30 லட்சம் ஹெக்டேர். இதில் 15 முதல் 20 லட்சம் ஹெக்டேர் நிலங்கள் நிலத்தடி நீர்ப் பாசனத்தை நம்பியே உள்ளன. தமிழகத்தில் உள்ள 19 லட்சம் மின் இணைப்பு பெற்ற பம்பு செட்டுகளில், 15 லட்சம் சிறு, குறு விவசாயிகளுடையவை.

குழாய் உள்ளிட்ட இதர சாதனங்களுடன் ஐ.எஸ்.ஓ. தரச்சான்று பெற்ற ஏழரை குதிரைசக்தித் திறன் கொண்ட புதிய நீர்மூழ்கி மோட்டாரின் விலை ரூ. 40,000. மோட்டார் மட்டும் ரூ. 25,000-லிருந்து ரூ. 30,000 வரையிலான விலையில் கிடைக்கும். இதுவே கம்ப்ரசர் மோட்டார் என்றால் ரூ. 28,000 தொடக்க விலையாகிறது.

எனவே, சராசரியாக புதிய மின் மோட்டாரின் விலை ரூ. 30,000 என்று வைத்துக் கொண்டால், தமிழகத்திலுள்ள 15 லட்சம் சிறு, குறு விவசாயிகளுக்கும் மோட்டார் வழங்க ரூ. 4,500 கோடி ஒதுக்க வேண்டும்.

அடுத்து, மோட்டார்களை எப்படி வழங்கப் போகிறார்கள் என்பதும் மின் சேமிப்புக்கு முக்கியமானது. இலவச எரிவாயு இணைப்பு, இலவச வண்ணத் தொலைகாட்சிப் பெட்டி, கான்கிரீட் வீடுகள் கட்டித் தருதல் போன்ற திட்டங்கள் தவணை அடிப்படையில்தான் நிறைவேற்றப்பட்டு வருகின்றன.

21 லட்சம் குடிசை வீடுகளை கான்கிரீட் வீடுகளாக மாற்ற, முதல் தவணையாக 3 லட்சம் வீடுகளுக்கு ரூ. 1,800 கோடி ஒதுக்கப்பட்டு, மீதமுள்ளவை ஆறு ஆண்டுகளில் கட்டி முடிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுவிட்டது.

அதன்படி, உதாரணமாக ஆண்டுக்கு ஒரு லட்சம் அல்லது மூன்று லட்சம் மோட்டார்கள் வழங்குவோம் என்றில்லாமல், ஒட்டுமொத்தமாக பழைய மோட்டார்கள் அனைத்துக்கும் பதிலாக புதிய மோட்டார்களை ஒரே தவணையில் பொருத்தினால்தான் மின் சேமிப்பு சாத்தியமாகும். எனவே, தேர்தலுக்கு முன்பாக ஒரே தவணையில் மின் மோட்டார்கள் வழங்கப்படுமா?

காவிரி டெல்டா மாவட்டங்களில் நீர் மூழ்கி மின் மோட்டார்கள்தான் பயன்பாட்டில் உள்ளன. ஈரோடு, சேலம், நாமக்கல் பகுதிகளில் கிணற்றுப் பாசனத்துக்கு கம்ப்ரசர் மோட்டார்கள் பயன்படுத்தப்படுகின்றன.

இதுகுறித்து மின் வாரிய அதிகாரி ஒருவர் கூறியது:

விவசாயிகள் ஐந்து முதல் ஏழரை குதிரைசக்தித் திறன் கொண்ட மின் மோட்டார்களைத்தான் பயன்படுத்த வேண்டும். அதன் அடிப்படையில், உதாரணமாக மாவட்டம் முழுவதற்கும் விவசாயத்துக்கு மட்டும் 500 கிலோ மெகாவாட் மின்சாரம் செலவாகும் என்று ஒதுக்கீடு செய்வோம்.

ஆனால், பல விவசாயிகள் 15 முதல் 25 குதிரைசக்தித் திறன் கொண்ட மின் மோட்டார்களை பயன்படுத்தி நீரை ஊறிஞ்சுவதால், ஒதுக்கீட்டைவிட அதிக மெகாவாட் மின்சாரம் இழுக்கப்பட்டு மின் இழப்பு அதிகரிக்கிறது.

அரசு ஏழரை குதிரைசக்தித் திறன் கொண்ட மின் மோட்டார் கொடுத்தாலும், பெரும்பாலான விவசாயிகள் அதைப் பயன்படுத்தாமல் அதிக குதிரைசக்தித் திறன் கொண்ட மின் மோட்டார்களைத்தான் உபயோகிக்க வாய்ப்புள்ளது. ஏனெனில், நிலத்தடி நீர்மட்டம் குறைந்து கொண்டே வருகிறது.

எனவே, இலவசமாக புதிய மின் மோட்டார்களை கொடுப்பதனால் மட்டும் மின் சேமிப்பு சாத்தியமாகிவிடாது என்கிறார் அந்த அதிகாரி.

காவிரி டெல்டா மாவட்ட விவசாய சங்கங்களின் கூட்டமைப்பு பொதுச் செயலர் ஆறுபாதி கல்யாணம் கூறியது:

நெல், கரும்பு, தென்னை, வாழை தவிர இதர காய்கறி தோட்டக்கலைப் பயிர்கள், பருப்பு பயிர்கள் பயிரிட்டால் இலவச மின்சாரம் கிடையாது என்றும், அவ்வாறு பயன்படுத்திய விவசாயிகள் மீது மின் திருட்டு குற்ற வழக்கு பதிவு செய்யப்பட்டு வருகிறது. இது இலவச மின்சாரத்தை படிப்படியாக குறைக்க அரசு கையாளும் தந்திரமாகத் தெரிகிறது.

மீன் வளர்ப்பு உள்ளிட்ட ஒருங்கிணைந்த கலப்பு பண்ணையத்துக்கு வழங்கப்படும் மின்சாரத்தை பயிர்களின் அடிப்படையில் பாகுபடுத்தாமல், வேளாண்மை உற்பத்தி மின்சாரம் என்று வழங்க அரசை வலியுறுத்தியும் நடவடிக்கை இல்லை. பயிர்ப் பாகுபாடு கூடாது என்பது போல, சிறு, குறு விவசாயிகள் என்ற பாகுபாடும் கூடாது.  பயிர்ப் பாகுபாடு அடிப்படையில் இலவச மின்சாரத்தை பறித்துக் கொண்டு இலவச மின் மோட்டார், அதுவும் குறைந்த திறன்கொண்ட மின் மோட்டார்கள் வழங்குவதில் விவசாயிகளுக்கு நன்மையில்லை. மின் சேமிப்பும் சாத்தியமாகாது என்றார் கல்யாணம்.

தமிழக மக்கள் கவனத்தை திசை திருப்பும் கண்துடைப்பு அறிவிப்பாக இல்லாமல்,  விவசாயிகளுக்கும், மின் சேமிப்புக்கும் வாய்ப்பளிக்கும் திட்டமாக மின் மோட்டார்கள் வழங்கும் திட்டம் நிறைவேற்றப்பட வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பு.

தினமணி கட்டுரை – த. முருகானந்தம்

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s