விழுப்புரம் விவசாயக் கண்காட்சி

விழுப்புரத்தில் தற்போது நடைபெற்றுக் கொண்டிருக்கிற விவசாயக் கண்காட்சி Agri Tec Expo 2010 பற்றி ஏற்கனவே தகவலைப் பிரசுரித்திருந்தோம். நண்பர்கள் சிலரும் ஆர்வம் தெரிவித்திருந்தார்கள்.

இன்று அந்த நிகழ்விற்கு செல்லும் வாய்ப்பு கிடைத்தது. தனியார் நிறுவனத்தார் ஏற்பாடு செய்த கூடல் என்பதால் பரவலாக விளம்பரம் செய்யப்பட்டு இருந்தது. முழுக்க முழுக்க விவசாயக் கருவிகளில் நிறுவன வர்த்தக மேம்பாட்டிற்கு உதவுகிற செயல் என்றாலும் பல நிறுவனத்தைச் சேர்ந்தவர்களை ஒரே இடத்தில் சந்தித்து அவர்தம் கருவிகளைப் பார்க்கும் வாய்ப்பினை ஏற்படுத்தியதற்காக அந்த நிறுவனத்திற்கு நாம் நன்றி சொல்ல வேண்டும்.

விவசாய நவீன நுட்பம் அல்லது பயிரிடும் முறை குறித்து கருத்தரங்கம் நடந்ததாகத் தகவல் இல்லை.

கனரகக் கருவிகள்:

கருவிகள், விதைகள், புத்தகங்கள் போன்றவை எல்லாம் இருக்கும் என்று விளம்பரம் செய்திருந்தார்கள். பெரும்பாலும் டிராக்டர் மற்றும் பவர் டில்லர் விற்பனையாளர்கள், பம்பு செட்டு நிறுவனத்தினர் அரங்கங்களை ஆக்கிரமித்திருந்தனர்.  புதிய கண்டுபிடிப்புகள் பிரம்மிக்க வைத்தன. நாற்று நடும் கருவி, கலை வெட்டி அமுக்கும் கருவி போன்றவை கிட்டத்தட்ட அனைவரிடமும் இருந்தது. டிராக்டர்களிலும் புதுமை, ஸ்டைல் பற்றி முன்னிறுத்தினார்கள். டிராக்டர் மற்றும் பவர் டில்லர் பக்கம் முன்பதிவு ஓடுவதைக் காணமுடிந்தது.

வீடர் கருவிகளைப் பற்றி பதிவுகளில் எழுதியிருக்கிறோம். அவற்றின் வகைகளை நேரில் பார்க்க முடிந்தது. மஞ்சள் கரும்பு நெல் என்று பயிர்களுக்கு ஏற்றவாறு தினுசு தினுசாக இறக்கியிருந்தார்கள். சிறிய விவசாயிகளுக்குக் கைகளுக்கு எட்டாதவை. டிராக்டருடன் இணைந்த கரும்பு களை வெட்டும் கருவியைப் பற்றிய விளக்கப்படம் அறுமையானதாக இருந்தது.

இலகு ரகக் கருவிகள்:

புதிதாகக் கண்டுபிடிப்புகளைக் கொண்டுவருபவர்கள் அதைப் பற்றிய அசைபட (வீடியோ) விளக்கக் காட்சிகளைக் கொண்டு வருவது நல்லது. சில விற்பனையாளர்கள் செய்திருந்தனர். சிலர் செய்யவில்லை. அவர்கள் விளக்குவதைக் கேட்பதை விட படக்காட்சிகள் எளிதில் விளங்க வைத்துவிடுவதோடு, சந்தேகங்களை உடனுக்குடன் நிவர்த்தி செய்து கொள்ள முடிகிறது. குறிப்பாக நெல்லுக்கான வீடர் கருவி, தழை அமுக்கி – மண் கிளறும் எந்திரம் – சிறிய மண் சமப்படுத்தும் இயந்திரம் என்று பல்வகைப் பயன்களைக் கொண்ட ஒரு கருவியை கும்பகோணத்திலிருந்த வந்த ஒரு நபர் வைத்திருந்தார்.

அவரே செங்கல் செய்வதற்கு ஒரு எந்திரத்தை வைத்திருந்தார்.

நடந்து கொண்டே நெற்பயிரை அறுக்கும் எந்திரம் ஒன்றை இன்னொரு நிறுவனத்தார் வைத்திருந்தனர். அதுவும் வந்தோரை கவர்ந்தது.

பாசனக் கருவிகள்

மோட்டார் பம்பு, நீர் மூழ்கி, போர்வெல் பம்பு நிறுவனத்தார் துளையிட்ட குழாய்களுடன் வருகை புரிந்திருந்தார்கள். இடத்திற்கு இடம் நகர்த்தக் கூடிய சிறிய ரக மோட்டார் கவனத்தைக் கவர்ந்தது.

சொட்டு நீர்பாசனம் பற்றிய ஸ்டால்கள் இடம் பெற்று இருந்தன. கோவை எல்ஜி நிறுவனத்தாரின் விளக்கம் சிறப்பானதாக இருந்தது.

பூச்சி மருந்து தெளிப்பான்கள்

1400 முதல் 50000 வரை கருவிகள் இங்கே வைத்திருந்தார்கள். கைத்தெளிப்பான் முதல் விசைத்தெளிப்பான்கள் வரை.

உரம்

நான் பெரிதாக எதிர்பார்த்தது இயற்கை உரங்கள். தனிப்பட்ட முறையில் எனக்கு இது ஏமாற்றம். தவிற எந்திரம் சம்பந்தப்பட்டது என்பதால் இயற்கை உரங்கள் தயாரிப்பு பற்றிய கூடங்கள் ஒன்று கூட இல்லை.  ஓரிருவர் மட்டும் சில கூடங்களில் அமர்ந்து கல்சல்டன்சி செய்து கொண்டிருந்தார்கள். அந்தக் கூடங்களிலும் இயற்கை உரங்கள் பற்றிய ஊக்குவிப்பு பிரசுரங்கள் ஏதும் காணப்படவில்லை. விவசாயிகள் மாறனும் மாறனும்னு சொல்லிட்டு இருந்திட்டு, இது பொன்ற வாய்ப்புகளை கோட்டை விட்டால் எப்படி? மற்றபடி இரசாயண உரங்கள் இருந்தன. தென்னம்பிள்ளைகளை விற்பனை செய்து கொண்டு கூடவே அதற்கான மருந்தினையும் விற்றுக் கொண்டிருந்தார்கள்.

புத்தகங்கள்

பல்வேறு தலைப்புகளில் பல புத்தகங்கள் கொண்ட கூடம் ஒன்று இயங்கியது.

அரசு தோட்டக்கலையும் ஒரு கூடத்தை ஆக்கிரமித்திருந்தது. ஆனால் பெயருக்கு. ரெண்டு புடலங்காய் ரெண்டு பாவக்காய் மட்டும் நாலு பிட் நோட்டீசுகளை தகவல் பலகையில் ஒட்டிக்கொண்டு இருந்தார்கள். நீங்கள்தானே இந்தத் துறைக்கே தலைமை ஏற்கிறீர்கள். ஒரு ஆர்வமுள்ள பங்களிப்பு வேண்டாமா. நவீன விவசாயம், உரம் மற்றும் மண் மேலாண்மை என்று எத்தணையோ விசியங்கள் இருக்கும்போது, வியாபாரம் விடுத்து நீங்களாவது விவசாயிகளுக்கு விபரம் தந்திருக்கலாம் அல்லவா.

எதிர்பார்த்த அளவு விபரம் தராவிட்டாலும் (அல்லது நாம் சேகரிக்காவிட்டாலும்) விழுப்புரம் மற்றும் சுத்துபத்து கிராம விவசாயிகளுக்கு இது ஒரு நல்ல நிகழ்வு. இது போன்ற நிகழ்வுகள் இன்னும் மேம்படுத்தப்பட்டு அனைத்து நகரங்களிலும் அடிக்கடி நடக்க வேண்டும்.

3 thoughts on “விழுப்புரம் விவசாயக் கண்காட்சி

  1. Pingback: செய்தித் தொகுப்பு « வேளாண் செய்திகள்

    • வருகைக்கும் கருத்துரை எடுத்துக் கொள்ள நேரம் எடுத்துக் கொண்டமைக்கும் மிக்க நன்றி.

Leave a comment