அவிநாசியில் 'பர்ரி' பேரிச்சை நடவு

விற்பனை வாய்ப்பு அதிகமுள்ள பர்ரி ரக பேரிச்சை, அவிநாசி அருகே 3 ஏக்கர் பரப்பளவில் நடவு செய்யப்பட்டுள்ளது. இந்த ரக பேரிச்சை மரங்களை தோட்டக்கலைத் துறை மூலம் மாவட்டத்தின் பிறபகுதிகளிலும் நடவு செய்ய திருப்பூரில் நடைபெற்ற விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டத்தில் இப் பேரிச்சை பழங்கள் அறிமுகம் செய்யப்பட்டன.

வளைகுடா நாடுகளிலும், இந்தியாவில் குஜராத், ராஜஸ்தான் உள்ளிட்ட பகுதிகளிலும் அதிகளவில் பேரிச்சை சாகுபடி செய்யப்படுகிறது. அப் பகுதிகளில் உலர்ந்த பேரிச்சை பழங்களே உற்பத்தி செய்யப்பட்டு வரும் நிலையில், தமிழகத்தில் முதன்முறையாக “பர்ரி’ என்ற புதிய பேரிச்சை ரகங்கள் திருப்பூர் மாவட்டத்தில் நடவு செய்யப்பட்டுள்ளன.

அவிநாசி தாலுகா வஞ்சிபாளையத்தில் சுமார் 3 ஏக்கர் பரப்பளவில் நடவு செய்யப்பட்டுள்ள இப் பேரிச்சை மரங்கள் மூலம், ஆண்டுக்கு ரூ.15 ஆயிரம் வரை வருமானம் பெற முடியும் என்கிறார் அதன் உரிமையாளர் முருகவேல்.

இதுகுறித்து மேலும் அவர் கூறுகையில், இங்கிலாந்தில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டு திசு வளர்ப்பு முறையில் உற்பத்தி செய்யப்பட்ட இந்த ரக பேரிச்சை மரங்களை அதிகளவில் நோய் தாக்குவதில்லை. சரியான இடைவெளியுடன் ஒரு ஏக்கரில் சுமார் 70 மரங்கள் நடவு செய்ய முடியும். நடவு செய்த 3 ஆண்டுகளில் அறுவடைக்குத் தயாராகும் இப் பேரிச்சை மரங்கள் மூலம் முதலாண்டில் 25 முதல் 30 கிலோ வரையிலும், அடுத்து வரும் ஆண்டுகளில் 30 முதல் 200 கிலோ வரையிலும் விளைச்சல் கிடைக்கும்.

புரோட்டீன், கால்சியம், பொட்டாசியம் என மனித உடலுக்குத் தேவையான சத்துகள் நிறைந்துள்ள இப் பேரிச்சைப் பழ மரங்களுக்கு தென்னையை விட அதிக தண்ணீர் தேவைப்படுகிறது. இருப்பினும், நுகர்வோர் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்று வரும் இந்த ரக பேரிச்சைப் பழங்களால் அதிக லாபம் பெற முடியும் என்றார்.

திருப்பூரில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற மாவட்ட விவசாயிகள் குறை தீர்க்கும் கூட்டத்தில், ஆட்சியர் சி.சமயமூர்த்தியிடம் இப் பேரிச்சை பழங்களின் சிறப்புகள் குறித்து அவர் விளக்கினார். மேலும், தோட்டக்கலைத் துறை மூலம் இந்த ரக பேரிச்சை மரங்களை மாவட்டத்தின் பிறபகுதிகளிலும் நடவு செய்யவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் முருகவேல் வலியுறுத்தினர்.

வஞ்சிபாளையத்தில் பர்ரி ரக பேரிச்சை மரங்கள் நடவு செய்யப்பட்டுள்ள பகுதியை தோட்டக்கலைத் துறை சார்பில் ஆய்வு செய்து, மாவட்டத்தின் பிறபகுதி விவசாய நிலங்களிலும் இப் பேரிச்சைகளை நடவு செய்வது குறித்து ஆலோசிக்கப்படும் என்றார் ஆட்சியர்.

4 thoughts on “அவிநாசியில் 'பர்ரி' பேரிச்சை நடவு

 1. மகசூல் ஆர்.குமரேசன்
  பட்டையைக் கிளப்பும் ‘பர்ரி’ பேரீச்சை…

  ஏக்கருக்கு ரூ.10 லட்சம்…ஐந்து ஆண்டுகளில் வகையான வருமானம் ..!

  பாசன வசதியிருந்தால்தான்…பழுதில்லாத பலன் !

  ‘தமிழ்நாட்டுச் சூழ்நிலையில் பேரீட்சைப் பயிர் வளருமா..?’ என்ற சந்தேகம் பல ஆண்டுகளாக விவசாயிகளிடம் நீடித்து வருகிறது. இது தொடர்பாக, நவம்பர் 25, 2007 தேதியிட்ட பசுமை விகடன் இதழில், பேரீட்சை சாகுபடியில் பெருத்த லாபமா..? என்ற தலைப்பில் ஒரு கட்டுரை வெளியிட்டிருந்தோம். வேளாண் பல்கலைக்கழக துணைவேந்தர் உட்பட பல தரப்பினரின் கருத்துக்களையும் அதில் பதிவு செய்திருந்தோம்.

  குலைகுலையாய் காய்த்து குலுங்கும் பேரீட்சை…
  நிறைவாக… ‘இரண்டு, மூன்று ஆண்டுகளாகத்தான் தமிழகத்தில் பரவலாக பேரீட்சை சாகுபடிச் செய்யத் தொடங்கியுள்ளனர். ஐந்து ஆண்டுகள் போனால்தான் நிலைமையை கணிக்க முடியும். அதுவரை காத்திருப்பதுதான் உத்தமம்’ என்று குறிப்பிட்டிருந்தோம்.

  இந்நிலையில், நம்மைத் தொடர்பு கொண்ட திண்டுக்கல், முள்ளிப்பாடி பகுதியைச் சேர்ந்த அன்பழகன், ”என்னுடைய தோட்டத்தில் நடவு செய்த மூன்று ஆண்டுகளில், அனைத்து மரங்களிலும் பேரீட்சை காய்த்து குலுங்குகிறது” என்ற தகவலைச் சொன்னார்.

  ‘எப்படி இருக்கிறது அவருடைய பேரீட்சை விவசாயம்?’ என்பதைத் தெரிந்து கொள்வதற்காக அவருடைய தோட்டத்துக்குச் சென்றோம். காய்கள் குலை, குலையாக காய்த்து தொங்கிக் கொண்டிருந்தன, அங்கிருந்த பேரீட்சை மரங்களில். அதையெல்லாம் சுட்டிக்காட்டியபடியே ஆரம்பித்த அன்பழகன், “அமெரிக்காவுல கம்ப்யூட்டர் இன்ஜினீயரா வேலை பார்த்துக்கிட்டிருந்த ஆள் நான். ‘சொந்த ஊருக்கு போய் விவசாயம் செய்யணும்’கிற எண்ணம் உள்ளுக்குள்ள ஓடிக்கிட்டே இருந்துச்சு. வேலை விஷயமா அடிக்கடி வளைகுடா நாடுகளுக்குப் போவேன். அவங்க செய்துகிட்டிருக்கற பேரீட்சை விவசாயத்தைப் பார்க்கும்போது, இதை நம்ம ஊருல செய்தா எப்படி இருக்கும்?னு யோசிப்பேன். கடைசியில அதை நிறைவேத்தறதுக்காகவே, வேலையை விட்டுட்டு இந்தியாவுக்கு வந்துட்டேன்” என்று முன்னுரை கொடுத்த அன்பழகன், பேரீட்சைத் தோட்டத்தை உருவாக்கிய கதைக்குள் புகுந்தார்.

  நாத்து 3,500!

  ”நம்ம ஊரு சூழ்நிலைக்கு ஏற்ற ரகம் என்ன..? அதோட நாற்று எங்க கிடைக்கும்னு பல இடங்கள்ல அலைஞ்சி, திரிஞ்சதுல… குஜராத் மாநிலத்தைச் சேர்ந்த பேரீட்சை விஞ்ஞானி, நவீன்பாய் சௌதாகர் அறிமுகம் கிடைச்சுது. அவரோட ஆலோசனைப்படி ‘பர்ரி’ ரக பேரீட்சையை, குஜராத்துல இருந்து வாங்கிட்டு வந்து, 12 ஏக்கர்ல சாகுபடி செஞ்சேன். இது திசு வளர்ப்பு நாத்துங்கிறதால, ஒரு நாத்தோட விலை 3,500 ரூபாய். மொத்தம் 700 நாத்துகளை, வாங்கிட்டு வந்து நடவு செஞ்சி மூணு வருஷம் ஆச்சு. 12 ஏக்கர்ல 616 மரம் இருக்கு. அதுல 500 மரம் பாளை போட்டு, இந்த வருஷம் காய்ச்சிருக்கு.

  இந்த மூணு வருஷத்துல இதுக்காக ரொம்பவே மெனக்கெட்டிருக்கேன். ஒவ்வொரு விஷயத்தைத் தெரிஞ்சிக்கவும் லட்சக்கணக்குல பணத்தை செலவு செஞ்சிருக்கேன். ஒரு விவசாயியா நான் கஷ்டப்பட்டு, காசு செலவு செஞ்சு தெரிஞ்சுகிட்ட எல்லா விஷயங்களையும், மத்த விவசாயிகளுக்கு இலவசமாவே சொல்லித் தர தயாரா இருக்கேன்” என்று ஆர்வத்தோடு சொன்னார்.

  பதப்படுத்த வேண்டாம்..! அப்படியே சாப்பிடலாம்…!

  அருகில் நின்றிருந்த தோட்ட மேலாளர் சரவணன், “வழக்கமா, மத்த பழங்கள் மாதிரி பேரீட்சம் பழத்தை மரத்திலிருந்து பறிச்சு அப்படியே சாப்பிட முடியாது. அதை உலர வைச்சு, பதப்படுத்தின பிறகுதான் சாப்பிட முடியும். ஆனா, இந்த பர்ரி வகை பேரீட்சையை மரத்திலிருந்து பறிச்சு அப்படியே சாப்பிடலாம். மத்த விளைபொருள்கள் மாதிரியே அறுவடை செஞ்சி அப்படியே விக்கலாம்” என்று சொல்லிவிட்டு, சாகுபடி முறைகளை ஒவ்வொன்றாக அடுக்கினார்… பள்ளிக்கூட பாடமாக!

  நிச்சயம் தேவை நீர்…!

  தமிழகத்தில் மலைப் பகுதிகளைத் தவிர, மற்ற அனைத்து பகுதிகளுக்கும் ஏற்றது பர்ரி ரக பேரீட்சை. மணல் கலந்த, ஆறடி ஆழத்துக்கு மண்கண்டம் உள்ள அனைத்து மண்ணிலும் இது நன்கு வளரும். வடிகால் வசதி மிக அவசியம். ‘பேரீட்சை, பாலைவனத்தில் வளரும் மரம்தானே… இதற்கு அதிக தண்ணீர் தேவைப்படாது’ என்ற ஒரு கருத்து இருக்கிறது. ஆனால், அது தவறு. பாலைவனத்திலும் தண்ணீர் தேங்கி இருக்கும் சோலைவனங்கள் இருக்கின்றன. அதாவது, குட்டை போல ஆங்காங்கே தண்ணீர் தேங்கி நிற்கும். இவற்றின் கரைகளில்தான் பேரீட்சை விளையும். உப்பு தண்ணீரில்கூட நன்றாக வளரும். ஆனால், தண்ணீர் வசதி இல்லாத, மானாவாரி நிலங்களில் பேரீட்சையைக் கட்டாயம் பயிரிடக்கூடாது.

  ஏக்கருக்கு 50 மரம்…!

  இந்தப் பயிருக்கு அதிக நிழல் இருக்கக்கூடாது. இதன் மட்டைகள் கீழ் நோக்கி தொங்காமல் நேராக இருக்கும். அதனால் 27 அடி அல்லது 30 அடி இடைவெளியில்தான் நாற்றுகளை நடவேண்டும். இப்படி நடும்போது ஏக்கருக்கு அதிகபட்சம் 50 நாற்றுகள் தேவைப்படும். பர்ரி ரகத்தில் திசு வளர்ப்பு நாற்றுகளும் இருக்கின்றன. விதை மூலமாக உற்பத்தி செய்யப்படும் நாற்றுகளும் இருக்கின்றன. விதை மூலமாக உற்பத்தி செய்யப்படும் மரத்தில் கிடைக்கும் பழம், கொஞ்சம் துவர்ப்புத் தன்மையோடு இருப்பதால், அத்தகையப் பழங்களுக்கு குறைவான விலைதான் கிடைக்கும். அதோடு ஆண் மரம், பெண் மரங்களை நாற்றுப் பருவத்தில் கண்டுபிடிப்பதும் கஷ்டம். ஆனால், திசு வளர்ப்பு நாற்றுகளில் ஆண், பெண் நாற்று என்பது ஆரம்பத்திலேயே தெளிவாக தெரிந்துவிடும். அத்தோடு, இப்படி உருவாக்கப்படும் மரங்களில் கிடைக்கும் பழங்கள் சுவையாக இருப்பதால், அதிக விலையும் கிடைக்கும். பொதுவாக 100 பெண் மரங்களுக்கு, ஐந்து ஆண் மரங்கள் இருப்பது போல் பார்த்து கொள்ள வேண்டும்.

  நாளன்றுக்கு 300 லிட்டர் நீர்!

  நாற்றைத் தேர்வு செய்யும்போது, குறைந்தபட்சம் 5 இலைகள் உள்ள செழிப்பான நாற்றுகளாக பார்த்து தேர்வு செய்ய வேண்டும். தென்னை போல மூன்றடிக்கு மூன்றடி குழி எடுத்து, குழிக்கு 10 கிலோ ஊட்டமேற்றிய தொழுவுரம் போட்டு, நாற்றை நட்டு மேல்மண்ணைக் கொண்டு குழியை மூடவேண்டும். நடவு செய்த பின் இரண்டு மாதம் வரை நாற்றில் நேரடியாக வெயில் படாதவாறு, நிழல் வலை அல்லது பனை மட்டையை வைத்து நாற்றைச் சுற்றிக் கட்டிவிட வேண்டும்.

  முதல் ஒரு வருடம் வரை தினமும் ஒரு செடிக்கு 25 லிட்டர் தண்ணீரும், 2-ம் வருடம் 50 லிட்டர் தண்ணீரும், 3-ம் வருடம் 100 லிட்டர் தண்ணீரும் கொடுக்க வேண்டும். 10 வயதுக்கு பிறகு, ஒரு மரத்துக்கு தினமும் 300 லிட்டர் தண்ணீர் கொடுக்க வேண்டும். பேரீட்சையை பொறுத்தவரை சொட்டுநீர்ப் பாசனம்தான் சிறந்தது.

  40 டிகிரியிலும் நன்றாக வளரும்…!

  தண்ணீர் கொடுக்காவிட்டாலும் இந்த மரம் உயிரோடு இருக்கும். ஆனால், மகசூல் கிடைக்காது. இந்த ரக மரங்கள், அதிகபட்சமாக 54 டிகிரி செல்சியஸ், குறைந்தபட்சம் மைனஸ் 7 டிகிரி செல்சியஸ் வரைக்கும் தாங்கும் திறன் உடையவை. குறிப்பாக, 34 முதல் 40 டிகிரி வரை வெப்பநிலை உள்ள இடங்களில் அருமையாக வளரும். நடவு செய்த இரண்டரை ஆண்டுகளில் அல்லது மூன்றாவது ஆண்டு தொடக்கத்தில் பூ எடுக்கும். பேரீட்சையில் ஆண் மரம் ஜனவரி மாதம் தொடங்கி, பிப்ரவரி வரை பூக்கும். பெண் மரம் பிப்ரவரி இறுதியிலிருந்து ஏப்ரல் வரை பூக்கும். இந்தக் கால நிலை மாறுபாட்டால் இயற்கையாக மகரந்தச் சேர்க்கை நடைபெறுவதில் சிக்கல்கள் ஏற்படும். இது மகசூலை பாதிக்கும். அதனால், ஆண்பூக்கள் பூக்கும்போது, பாளை வெடித்தவுடன் பூவை வெட்டி, அதிலுள்ள மஞ்சள் நிற மகரந்தத் தூளை உதிர்த்து ஒரு பாட்டிலில் சேகரித்து வைத்துக் கொள்ள வேண்டும். இது நமது அறை வெப்பநிலையில் நான்கு மாதம் வரை கெடாமல் இருக்கும். குளிர்சாதனப் பெட்டியில் உள்ள ‘ஃப்ரீசரில்’ வைத்தால் ஒரு வருடம் வரை கெடாமல் இருக்கும்.

  பெண் மரங்களில் பாளை வெடித்ததிலிருந்து இரண்டு முதல் நான்கு நாட்கள் வரை மகரந்தச் சேர்க்கைக்கு உகந்த நேரம். சேமித்து வைத்திருக்கும் ஆண் மகரந்தத் தூளை இந்த நேரத்தில் பெண் மரங்களின் பாளையில் சேர்க்க வேண்டும். அதாவது, ஒரு மடங்கு ஆண் மகரந்தத் தூள், 20 மடங்கு மைதா மாவு இரண்டையும் கலந்து கொள்ள வேண்டும். இதை நீளமான குழாய் பொருத்தப்பட்ட டப்பாவில் கொட்டி, பெண் பூவில் தெளித்துவிட வேண்டும் (பார்க்க, படம்). இப்படி மகரந்தச் சேர்க்கை செய்தால்தான் அனைத்து பூவும் பிஞ்சாக மாறும். இதன் குலை தென்னை மாதிரி கீழ் நோக்கி வராமல், மேல் நோக்கி போகும். அதனால், பூ எடுத்த ஒரு மாதத்தில் குலையை மட்டையோடு சேர்த்து வளைத்துக் கட்டி விடவேண்டும்.

  மரத்துக்கு 100 கிலோ!

  குலையின் நுனிப்பகுதியில் உள்ள கிளைகள் மிகவும் மெல்லியதாக இருக்கும். காய் பிடித்தவுடன் பாரம் தாங்காமல் அவை ஒடிந்து விழுந்து விடும். அதனால் முன்னெச்சரிக்கையாக நுனியில் 6 செ.மீ. தூரத்துக்கு வெட்டி விடவேண்டும். அதேபோல குலையில் உள்ள கிளைகள் அதிக நெருக்கத்துடன் இல்லாமல், பரவலாக இருப்பது போல் கலைத்து விட்டால்… காய்கள் பெருத்து, அதிக மகசூல் கிடைக்கும். போதுமான இடைவெளி இருந்தால் ஒவ்வொரு பழமும் 10 முதல் 15 கிராம் வரை எடை இருக்கும். சிறிய மரங்களில் ஒரு மரத்துக்கு அதிகபட்சமாக 10 பாளைகள் கிடைக்கும். காய்கள் ஓரளவு திரட்சியாக வந்தவுடன், பிளாஸ்டிக் பையைக் கொண்டு குலையை மூடி பாதுகாக்க வேண்டும். குலையிலுள்ள அனைத்து காய்களும் மஞ்சள் நிறத்துக்கு மாறி, ஓரிரு காய்கள் கனிந்த நிலைதான் அறுவடை நேரத்துக்கான அறிகுறி. பெரிய மரங்களில் அதிகபட்சம் 30 பாளைகள் வரை வெடிக்கும்.

  பூ எடுத்ததிலிருந்து 5 முதல் 6 மாதத்தில் குலையை அறுவடை செய்யலாம். மூன்றாவது வருடத்தில் ஒரு மரத்தில் 25 முதல் 30 கிலோ மகசூல் கிடைக்கும். நான்காவது வருடத்தில் 50 முதல் 60 கிலோவும், ஐந்தாவது வருடத்தில் 80 முதல் 100 கிலோ வரையும் கிடைக்கும். அதற்கடுத்தடுத்த ஆண்டுகளில் மகசூல் அதிகரித்துக் கொண்டே போகும். ஒரு மரத்தின் வயது குறைந்தபட்சம் 65. அதன் 45-ம் வயதில் மகசூல் கொஞ்சம் கொஞ்சமாக குறைய ஆரம்பிக்கும்.

  முதல் வருடம் ஒவ்வொரு செடிக்கும் 50 கிராம் நைட்ரஜன், 50 கிராம் பாஸ்பரஸ், 50 கிராம் பொட்டாசியம் சத்துக்களை ஆறு மாதத்துக்கு ஒருமுறைக் கொடுக்க வேண்டும். தொடர்ந்து ஒவ்வொரு வருடமும் இந்த அளவில் 100 கிராமை அதிகரித்துக் கொண்டே போக வேண்டும். 10-ம் வருடம் ஒவ்வொரு மரத்துக்கும் ஒரு கிலோ அளவில் மேலே உள்ள சத்துக்களைக் கொடுக்க வேண்டும். அதேபோல முதல் வருடத்தில் மூன்று மாதங்களுக்கு ஒருமுறை செடிக்கு 5 கிலோ தொழுவுரமும், 3-ம் வருடம் ஆறு மாதத்துக்கு ஒரு முறை செடிக்கு 10 கிலோ தொழுவுரமும் கொடுக்க வேண்டும். அறுவடை முடிந்த பிறகும் ஒவ்வொரு மரத்துக்கும் 5 கிலோ தொழுவுரம் இட வேண்டும்.

  மரத்திலிருந்து பச்சை மட்டைகளை வெட்டக்கூடாது. கடைசி மட்டை நுனிப்பகுதியிலிருந்து கொஞ்சம் கொஞ்சமா காய்ந்து கொண்டே வரும். அப்படி காய்ந்த மட்டைகளை, மரத்தை ஒட்டி வெட்டாமல், ஒரு அடி தள்ளி வெட்டி எடுக்க வேண்டும். மரத்தில் கூர்மையான ஆணியைப் போன்ற முட்கள் அதிகமா இருக்கும். இதனால் பழங்கள் அதிகம் திருடு போகாது. பர்ரி ரகத்தில் அதன் ஆயுளில் 18-க்கும் மேற்பட்ட பக்கக் கன்றுகள் கிடைக்கும். இந்தக் கன்றுகள் முளைத்ததிலிருந்து இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு, தனியே பிரித்து நடவு செய்துகொள்ளலாம்.

  ஒரு ஏக்கரில் ஆண்டுக்கு 10 லட்சம்!

  தென்னைக்கு வரும் அனைத்து நோய்களும் பேரீட்சையையும் தாக்கும். காண்டாமிருக வண்டு மற்றும் சிகப்பு கூன்வண்டு தாக்குதல் அதிகம் இருக்கும். காண்டாமிருக வண்டு தாக்கிய மரத்தில் குருத்து வெளியே தள்ளி இருக்கும். அந்த இடத்தில் கம்பியால் குத்தி வண்டை வெளியே எடுத்துப் போடவேண்டும். பின் உள்ளே மருந்தை வைத்து ஓட்டையை சிமெண்ட் வைத்து மூடவேண்டும்.

  சிகப்பு கூன்வண்டு தாக்கிய மரத்தின் அருகில் போனாலே ஒருவித வாசனை வரும். அதை வைத்தே வண்டு உள்ளே இருப்பதைத் தெரிந்து கொள்ளலாம். மரத்தின் அடியில் மட்டை வெளியே தள்ளி இருக்கும். அந்த மட்டையைக் கையால் இழுத்தாலே கையோடு வந்து விடும். உள்ளே போன வண்டு நூற்றுக்கணக்கான முட்டைகளை வைத்து விடும். இதை வளர விட்டால் மரத்தைக் காப்பாற்ற முடியாது. அதனால் பாதிக்கப்பட்ட இடத்தில் மட்டையை எடுத்துவிட்டு, வண்டு, புழு எல்லாவற்றையும் முடிந்த அளவு வெளியே எடுத்துவிட்டு ஊசி மூலம் மருந்தை உள்ளே செலுத்தலாம். 15 நாட்களுக்கு ஒரு முறை வேரில் மருந்தை செலுத்துவதன் மூலமும் இதைக் கட்டுப்படுத்தலாம். இதையெல்லாம்விட மரத்தைச் சுற்றி வேப்பம் பிண்ணாக்கைப் போட்டு வைத்தும், ஆங்காங்கே கவர்ச்சிப் பொறிகளைத் தொங்க விட்டும் சிவப்பு கூன்வண்டுகளைக் கட்டுப்படுத்தலாம்.

  சாகுபடி பாடத்தை சரவணன் நடத்தி முடிக்க, மறுபடியும் நம்மிடம் பேசிய அன்பழகன், “பராமரிப்பு மட்டும் சரியா இருந்தா… ஒரு ஏக்கர்ல, அஞ்சாம் வருஷத்துல இருந்து நல்ல வருவாய் கிடைக்கும். எட்டு முதல் பத்து லட்ச ரூபாய் வரைக்கும் வருஷம்தோறும் வருமானம் பார்க்கலாம்.

  பர்ரி பேரீட்சையைப் பொறுத்தவரை ஆரம்ப கட்ட செலவு ஏக்கருக்கு 3 முதல் 5 லட்சம் வரை ஆகும். ஆனா, மூணாவது வருஷத்துல முதல் அறுவடையிலயே இந்தப் பணத்தை எடுத்துடலாம். பிறகு, பராமரிப்பு மட்டும் செஞ்சிட்டு இருந்தாலே போதும். வேறெந்த வெள்ளாமையிலயும் இந்த வருமானத்தைப் பாக்க முடியாது. இந்த ரக நாத்து குஜராத்ல இருக்கற தனியார் ஆய்வுக் கூடங்கள்ல கிடைக்குது” என்றவர்,

  ”பேரீட்சையைப் பொறுத்தவரைக்கும் பெருசா ரசாயன உரமெல்லாம் தேவையில்ல. இருந்தாலும், முதல் தடவையா இதைப் பயிர் செஞ்சதால 75% இயற்கை, 25% செயற்கைனு கலந்துதான் செஞ்சிருக்கேன். இன்னும் ரெண்டு வருஷத்துல இதை முழுமையான இயற்கை விவசாயப் பண்ணையா மாத்திடுவேன்” என்று இயற்கை ஆராதனையோடு முடித்தார்.

  தொடர்புக்கு,
  அன்பழகன், அலைபேசி: 96003-21911.
  சரவணன், அலைபேசி: 98423-10876.

  கொட்டிக் கிடக்கும் விற்பனை வாய்ப்பு….!
  உலக பேரீட்சை உற்பத்தியில் 36% இந்தியச் சந்தையில்தான் விற்பனை செய்யப்படுகிறது. அதே நேரத்தில் உள்நாட்டு உற்பத்தி இன்னும் ஒரு சதவிகித அளவைக்கூட எட்டவில்லை. இதனால் பேரீட்சைக்கான சந்தை இங்கே பிரகாசமாக இருக்கிறது. பிஞ்சு முதல் சாப்பிடும் பழம் வரை ஆறு நிலைகளாக பேரீட்சை பிரிக்கப்படுகிறது. 5 வாரம் உள்ள பிஞ்சு… ஹபாபோக்; 6 முதல் 18 வார வயதுடைய

  பச்சைக்காய்… கிம்ரி;

  19 முதல் 23 வார மஞ்சள் நிற பழம்… கலால்; 24 முதல் 27 வாரத்தில் கனிந்த பழுப்பு நிற பழம்… ரூட்டாப்; 28-ம் வாரத்தில்… தாமர்; அதற்கு மேல் பதப்படுத்தப்பட்டு சந்தையில் கிடைப்பது சுரா… இப்படி ஆறு நிலைகளாகப் பிரித்து அழைக்கப்படுகிறது.

  இதில் நாம் தற்போது பெருமளவில் பயன்படுத்துவது ரூட்டாப் நிலையில் உள்ள பழங்களைத்தான். ஆனால், மூன்றாவது நிலையான கலால் நிலையிலே மரத்திலிருந்து பறித்தவுடன் சாப்பிடலாம் என்பதுதான் பர்ரி ரகத்திலுள்ள தனிச் சிறப்பு. பர்ரி என்றால், அரபு மொழியில் பெரியது என்று அர்த்தமாம். பெரிய காய்களுடன் கூடிய பேரீட்சை என்பதால், இப்படி அழைக்கப்படுகிறது. இதன் தாயகம் ஈராக். ஜோர்டான் நாட்டில் இந்த பர்ரி ரகப் பேரீட்சையை ‘கோல்டன் டேட்ஸ்’ என்று அழைக்கிறார்கள். இதை அறுவடை செய்து 10 நாள் வரை இருப்பு வைக்கலாம். குளிர்சாதனப் பெட்டியில் வைத்தால் ஒரு வருடம் வரை கெடாமல் இருக்கும்.

  பேரீட்சை நாற்று இங்கே கிடைக்கும்?
  குஜராத் மாநிலத்தில் உள்ள வேளாண் பல்கலைக்கழகத்தில் பேரீட்சை ஆராய்ச்சி நிலையம் செயல்பட்டு வருகிறது. இங்கு இந்தியச் சூழலுக்கு ஏற்ற வகையில் புதிய ரக பேரீட்சை ரகங்கள் உருவாக்கப்படுகின்றன. விவசாயிகளுக்குத் தேவையான பேரீட்சைக் கன்றுகள் இங்கு கிடைக்கும்.
  தொடர்புக்கு:
  Date palm Research Station of Gujarat Agricultural University, Port road, Mundra-370422, Kachchh(Dist), Gujarat, Phone:02838-22185

  படங்கள் : வீ. சிவகுமார்

 2. Hello Mr.மகசூல் ஆர்.குமரேசன்
  really lot of thanks for your valuable article. Really i am now planning to do cultivate the dates palm after i read your article.

  thanks
  Babu

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s