அவசர சாகுபடிக்கு சேற்றில் நெல்லினை நேரிடை விதைப்பு செய்தல்

மதுரை பகுதியில் நெல்லினை நாற்றுவிடாமல் இருப்பவர்கள் உடனே சேற்றினில் நேரிடையாக விதைக்கலாம். ஆடுதுறை 43, ஆடுதுறை 45, ஆடுதுறை 36 மற்றும் ஜே 13 நெல் ரகங்களை அவைகளின் விதைகளை முளைகட்டி சேற்றில் நேரிடையாக விதையுங்கள்.

தொழில்நுட்பம்:

நிலம் தயாரிப்பு:

விதைப்பு செய்ய இருக்கும் நிலத்திற்கு தவறாமல் வழக்கமாக இடக்கூடிய இயற்கை உரங்களான பசுந்தழை உரம் அல்லது கலவை உரம் அல்லது தொழு உரம் இட்டு நிலத்தை நன்கு உழுது சேற்றினைக் காய்ப்பதமாக ஒரு வாரம் விட்டுவைக்க வேண்டும். சேற்றில் அதிகம் தண்ணீர் வைக்காமல் இருக்க வேண்டும். இம்மாதிரி விடும்போது களைச்செடிகள் அனைத்தும் முளைத்துவிடும். உடனே வயலுக்கு நீர் கட்டி உழுதோமானால் நேரிடை விதைப்புப் பயிரில் களைச்செடிகளின் ஆரம்பகால வீரியத் தாக்குதலை கட்டுப்படுத்த இயலும்.

அடியுரம் மணிச்சத்து மட்டும்:

நேரிடை விதைப்புப் பயிருக்கு அடியுரமாக மணிச்சத்து கொடுக்கக்கூடிய ரசாயன உரமான சூப்பர் பாஸ்பேட் உரத்தை மட்டும் இட்டால் போதும். 20 கிலோ மணிச்சத்து கொடுக்க ஏக்கருக்கு கடைசி உழவின்போது 135 கிலோ சூப்பர் பாஸ்பேட் இடவேண்டும். நிலத்தை உழுது பரம்படித்து ஏக்கருக்கு பொடி செய்யப்பட்ட பன்னிரண்டரை கிலோ ஜிங்க் சல்பேட்டினை மணலுடன் கலந்துவயலில் தூவ வேண்டும். தழைச்சத்து ரசாயன உரங்களை இடாமல் இருக்கும்போது களைச்செடிகள் வீரியமாக வளருவதற்கு வழி இல்லை.

சமப்படுத்தி பாத்தி அமைத்தல்:

சேறு செய்த நிலத்தை மேடு பள்ளம் இல்லாமல் ஒரே சீராக சமன்செய்ய வேண்டும். விவசாயிகளுக்கு இப்பணியைச் செய்வதில் கடும் சிரமமாக இருக்கும். அவர்கள் மன தைரியத்தை வரவழைத்துக் கொண்டு நம்பிக்கையோடு உழைத்து நிலத்தை நன்கு சமப்படுத்த வேண்டும். பிறகு 10-12 அடி அகலப் பாத்திகள் உண்டாக்க வேண்டும். இரண்டு பாத்திகளுக்கு இடையே ஒரு அடி அகலத்தில் ஒரு சர்வே கல்லினை கயிறு கட்டி இழுக்க வேண்டும். இது இரண்டு பாத்திகளுக்கு இடையில் ஒரு சிறிய வடிகால் வாய்க்காலினை உண்டாக்கித்தரும். இது பாத்தியிலிருந்து நீரினை வடிக்க உதவும்.

மூன்றாங்கொம்பு விதை விதைத்தல்:

நிலத்தில் களைச்செடிகள் முளைப்பதற்கு முன் நெல் நாற்று முளைக்க வேண்டும். இதற்கு மூன்றாங்கொம்பு விதை விதைக்க வேண்டும். ஒரு ஏக்கருக்கு விதையளவு 30 முதல் 35 கிலோ வரை தேவைப்படும். விதையினை விதைக்கும் முன் பாத்தியில் 3-5 செ.மீ. ஆழம் உள்ளபடி நீரினை வைத்துக்கொண்டு வடிகால் கால்வாயில் நின்றுகொண்டு (இரண்டு பாத்திகளுக்கு இடையில் உள்ள பகுதியில்) முளைகட்டி விதையினை பாத்தியில் ஒரே சீராகத் தூவ வேண்டும். பிறகு பாத்தியில் ஒரு செ.மீ. ஆழம் உள்ளபடி நீரினை வைத்துக்கொண்டு அதிகமாக உள்ள நீரினை வடித்துவிட வேண்டும். இம்மாதிரியான செயல், விதைகள் பழுதில்லாமல் முளைக்க வழி செய்கின்றது. பாத்தியில் நீர் வற்றிப் போகாமல் கவனித்துக் கொள்ள வேண்டும்.

விதைத்த 7-ம் நாள் சாட்டர்ன் களைக்கொல்லி:

நேரிடை விதைப்பு செய்த வயலில் களைகளை அகற்ற தையோபென்கார்ப் எனக்கூடிய (சாட்டர்ன்) களைக்கொல்லி, நல்ல பலனைத் தருகின்றது. இந்தக் களைக்கொல்லி களைச்செடிகளை அழிக்கின்றது. ஆனால் நெல் பயிருக்கு தீங்கு விளைவிப்பதில்லை. விதை விதைத்த ஏழாம் நாள் வயலில் 2 செ.மீ. ஆழம் நீர் வைத்துக் கொண்டு களைக்கொல்லி மணல் கலவையை தூவ வேண்டும். 800 மி.லி. சாட்டர்ன் திரவத்தினை 25 கிலோ ஆற்று மணலுடன் கலந்து வயலில் சீராக தூவி விடவேண்டும். களைக்கொல்லி இட்ட வயலில் நீர் ஒரு வாரம் வடியாமல் இருக்க வேண்டும்.

பயிரைக் கலைத்தல், வெற்றிடம் நிரப்புதல்:

நேரிடை விதைப்பு செய்த வயலில் விதைத்த 20 அல்லது 25ம் நாள் அடர்த்தியாக வளர்ந்துள்ள பயிரினைக் கலைத்துவிட வேண்டும். இதுசமயம் பயிர் எண்ணிக்கையை மனதில் வைத்துக்கொண்டு பயிரினைக் கலைக்க வேண்டும். குறிப்பிட்ட அளவு நெல் பயிரை விடாமல் அடர்த்தியாக விட்டால் நெல் கதிர்கள் வாளிப்பாக வராமல் நீளம் குறைந்துவிடும். கலைத்து எடுத்த பயிர்களை வெற்றிடங்களை நிரப்புவதற்கு வைத்துக்கொள்ள வேண்டும். வயலில் வெற்றிடங்களை நிரப்பும் சமயம் தேவைப்படின் ஒன்று அல்லது இரண்டு கைக்களை எடுத்துவிடலாம்.

தழைச்சத்து, சாம்பல்சத்து ரசாயன உரங்கள் இடுதல்:

ஏக்கருக்கு

  • 40 கிலோ தழைச்சத்து (88 கிலோ யூரியா),
  • 20 கிலோ சாம்பல் சத்து (33.33 கிலோ மூரியேட் ஆப் பொட்டாஷ்)

இவைகளைக் கீழ்க்கண்டபடி இடவேண்டும்.

  • விதைத்த 15ம் நாள் 30 கிலோ யூரியாவுடன் 6 கிலோ வேப்பம் புண்ணாக்கு கலந்து இடவேண்டும்.
  • விதைத்த 30ம் நாள் 29 கிலோ யூரியாவுடன் 17 கிலோ மூரியேட் ஆப் பொட்டாஷ் கலந்து இடவேண்டும்.
  • விதைத்த 45ம் நாள் 29 கிலோ யூரியாவுடன் 17 கிலோ மூரியேட் ஆப் பொட்டாஷ் கலந்து இடவேண்டும்.

குறிப்பு: ரசாயன உரங்களை இடும் முன் வயலில் உள்ள நீரினை வடித்துவிட்டு உரமிட வேண்டும். பின்னால் பாசனம் செய்யலாம்.

பாசன நிர்வாகம்:

நடவுப்பயிரைப் போலவே பாசன நிர்வாகம் செய்ய வேண்டும். ஆனால் நடவுப் பயிரில் சற்று வறட்சி ஏற்பட்டாலும் களைத்தொல்லை அதிகமாகாது. நேரிடை விதைப்புப் பயிரில் பயிர் தூர் கட்டிவளர்ந்துவயலில் நிழல் தரும் வரை வறட்சி ஏற்படாமல் வயலில் தண்ணீர் இருந்து கொண்டிருக்க வேண்டும். இதுசமயம் தண்ணீர் இல்லாத நிலை ஏற்பட்டால் களை மண்டிவிடும். நேரிடை விதைப்புப் பயிரை கவனமாக செய்தால் பயிரின் வயது குறையும். நல்ல மகசூலும் லாபமும் கிட்டும்.

-எஸ்.எஸ்.நாகராஜன்

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s