கரும்பு சாகுபடியில் வறட்சி நிர்வாகம்

கரும்பு

கரும்பு

தண்ணீர் பற்றாக்குறையை சமாளிக்க முதலில் மண்ணிலிருந்து நீர் ஆவியாகி விரயமாவதை தடுக்க வேண்டும். இதற்கு கரும்பு சோகைகளை பயன்படுத்தலாம். கரும்பு சோகை ஒரு எக்டரிலிருந்து 10 டன் வரை கிடைக்கும். இதை மக்கவைத்து இயற்கை உரமாக பயன்படுத்தலாம். அல்லது அப்படியே கரும்பு நட்ட பார்கள் மேல் சீராக பரப்பி வைக்கலாம். இதனால் நீர் ஆவியாகி விரயமாவது தடுக்கப்படும். மேலும் கரும்பு சோகைகளை பார்களின் மேல் பரப்புவதால் களைகள் வளர்வதும் கட்டுப் படுத்தப்படும். மேலும் கரும்பு சோகை மக்கி எருவாகவும் மாறி மண் வளத்தை பெருக்கும். கரும்பிற்கு பார் கட்டும்பொழுது சோகைகளையும் சேர்த்து அணைத்துக்கொடுப்பதால் வளரும் கரும்பிற்கு ஒரு அங்கக உரமாக பயன்படும். கரும்பு சோகைகளை இரு பார்களுக்கு இடையிலேயும் பரப்பலாம். இந்த முறையில் முலை வரும் கரும்பை மூடி சேதப் படுத்தாமல் கவனமாக செய்ய வேண்டும்.

தண்ணீர் பற்றாக்குறையை சமாளிக்க பயிர் வளர்ச்சி ஊக்கிகளில் கரணை நேர்த்தி செய்யலாம். அதாவது கரணைகளை நடவு செய்வதற்கு முன்னால் எத்ரல் வளர்ச்சி ஊக்கி 200 பிபிஎம் என்றால் பார்ட்ஸ் பெர் மில்லியன் அதாவது பத்து லட்சத்தில் ஒரு பங்கு என்று அர்த்தம். 200 பிபிஎம் எத்ரல் தயாரிக்க, 200 மில்லி மருந்தை 400 லிட்டர் தண்ணீரில் கலந்து கரணைகளை ஒரு மணி நேரம் ஊறவைத்து நடவுசெய்யலாம். இதனால் நல்ல முளைப்பு திறனும் வறட்சியைத் தாங்கும் தன்மையும் உண்டாகும். மேலும் எத்ரல் கரணை நேர்த்தி செய்வதால் அதிக தூர்கள் விட்டு மகசூல் அதிகரிக்கும். வறட்சி தாங்கும் தன்மையை அதிகரிக்க நீர்த்த சுண்ணாம்பு நீரையும் பயன்படுத்தலாம். இதற்கு 80 கிலோ நீர்த்த சுண்ணாம்பை 400 லிட்டர் தண்ணீரில் கலந்து கரணைகளை ஊறவைத்து நடலாம். இதனால் வறட்சி தாங்கும் தன்மை அதிகரிக்கும்.

கரணைகளை நடும்பொழுது 30 செ.மீ. ஆழக்கால் அமைத்து நடவு செய்வதன் மூலம் வறட்சி தாங்கும் தன்மையை அதிகரிக்கலாம். ஆழக்கால் நடவு முறையில் கரணைகளின் வேர்கள் நன்கு ஊடுருவி பாய்ந்து நிலத்தடி நீரை உறிஞ்சுவதால் வறட்சியை சமாளிக்கும் திறன் பெறும். மேலும் கரும்பு வளர்ந்த பின் காற்றில் சாய்வதையும் வெகுவாக குறைக்க இயலும். ஆழக்கால் நடவு முறையில் தற்போது சில மாற்றங்கள் செய்யப்பட்டு குழி நடவு முறை பரிசீலிக்கப்பட்டு வருகிறது.

தண்ணீர் பற்றாக்குறையின் போது பயிர்கள் பூமியிலிருந்து ஊட்டச்சத்துக்களை உறிஞ்ச இயலாத சூழ்நிலை ஏற்படும். இதை தவிர்க்க யூரியா 2.5 சத கரைசலை கோடையில் இலை வழியாக தெளிக்கலாம். இத்துடன் பொட்டாஷ் 2.5 சத கரைசலையும் சேர்த்து தெளிப்பதால் வறட்சியை தாங்கி வளரும். இதற்கு 12.5 கிலோ யூரியா மற்றும் 12.5 கிலோ பொட்டாஷை 500 லிட்டர் தண்ணீரில் கலந்து ஒரு எக்டர் கரும்புக்கு இலை வழியாக தெளிக்கலாம்.

இந்த முறையினை ஒரு மாத இடைவெளியில் கோடை காலங்களில் செய்வதால் பயிர் பட்டுப்போகாமல் ஊக்கமுடன் வளர உதவும். பொட்டாஷ் இலை வழியாக கொடுப்பதால், நீர் இலை துளிகள் வழியே நீராவி போக்காக வெளியேறி விரயமாவதை குறைக்க உதவும். இத்துடன் கோடை காலங்களில் ஒரு பார் விட்டு நீர் பாய்ச்சுவதால் ஒரு முறை நீர் பாசனத்திற்கு தேவையான தண்ணீரை பாதியாக குறைக்க முடியும். அடுத்த முறை தண்ணீர் பாய்ச்சும்போது ஏற்கனவே விட்டுப்போன பார்களுக்கு நீர் பாய்ச்ச வேண்டும்.

சமீப காலமாக நீர் மேலாண்மையில் ஏற்பட்டுள்ள முன்னேற்றத்தின்படி சொட்டுநீர் பாசனம் ஆகியவற்றையும் பின்பற்றலாம். சொட்டுநீர் பாசனத்தால் கரும்பிற்கு தேவையான தண்ணீரின் அளவை பாதியாக குறைக்க இயலும் என்று கண்டறியப் பட்டுள்ளது. இதனால் தண்ணீரை சிக்கனமாக பயன் படுத்துவது அல்லாமல் விளைச்சலும் எந்த விதத்திலும் பாதிக்கப்படாது. சொட்டு நீர்பாசனம் செய்யும் பொழுது கரும்பிற்கு தேவையான உரச் சத்துக்களையும் பாசன நீர் வழியே கொடுக்க இயலும். இந்த முறைதான் பெர்டிகேஷன் என்று அழைக்கப்படுகிறது.

இதனால் ஒரு எக்டருக்கு 175 முதல் 200 டன் வரை கரும்பு விளைச்சல் அதிகரிக்கும். இது சாதாரண முறையில் கிடைக்கக்கூடிய விளைச்சலை விட 70லிருந்து 90 டன்கள் அதிகமாகும். சுமார் 25 லிருந்து 50 விழுக்காடு பாசன நீரை சேமிக்கலாம். இதன் மூலம் கரும்பு பயிரிடும் நிலப்பரப்பை அதிகரிக்கலாம். சொட்டுநீர் மற்றும் பெர்டிகேஷன் முறையில் நீர்பாசனம், உரச்செலவு மற்றும் களை நிர்வாகத்திற்கு தேவையான செலவினங்களை பாதி குறைக்க இயலும். இந்த முறையில் சாதாரண முறையில் கரும்பு சாகுபடியில் கிடைக்கும், எக்டருக்கு ரூ.58,000 லாபத்தைவிட சொட்டுநீர் பாசனம் மற்றும் பெர்டிகேஷன் மூலம் எக்டருக்கு ரூ.75,000 வரை நிகர லாபம் பெறலாம். இத்துடன் வறட்சியை சமாளிக்க தாங்கி வளரும் சிறந்த ரகங்களை தேர்வு செய்ய வேண்டும். இத்துடன் சிபாரிசு செய்யப்படும் வறட்சி நிர்வாக முறைகளை கடைபிடித்தால் விளைச்சல் பாதிக்காமல் அதிக வருவாயை பெறலாம்.

டாக்டர் கொ.பாலகிருஷ்ணன், பேராசிரியர் தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகம்
மண்டல வேளாண்மை ஆராய்ச்சி நிலையம், அருப்புக்கோட்டை.

தினமலர் செய்தி

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s